Published:Updated:

நீ வருவாய் என #VikatanReview

விகடன் விமர்சனக்குழு

பார்த்திபன் போலவே நிறைய காதல் கதைகள் நம்ம ஊருல உண்டு...!

பிரீமியம் ஸ்டோரி

ண்ணை மட்டுமே வைத்து ஒரு காதல் கதை சொல்லியிருக்கிறார் விக்ரமனின் சீடர் இராஜகுமாரன் (வெறும் இராஜகுமாரன் என்றால் அடிக்க வருவார் போலிருக்கிறது. கிட்டத்தட்ட படத்தின் ஒவ்வொரு ரீலையும் குருவுக்கு அர்ப்பபணித்துக் கொண்டேயிருக்கிறார்).

ஆயிரம் பெண் பார்த்து அலுத்துப்போன அபூர்வ சிந்தாமணியான பார்த்திபன், வேலை மாற்றலாகிப் போன இடத்தில் தேவயானியைச் சந்திக்கிறார். சாப்பிட பொன்னாங்கண்ணி கீரை, குளிக்க வெந்நீர், தேய்த்துக் கொள்ள எண்ணெய் அரப்புப் பொடி என்று பார்த்திபனுக்கு சகலமும் கொடுத்து ‘கண்ணுக்கு கண்ணாக’ கவனித்துக்கொள்கிறார் தேவயானி. இதைக் காதலென்று நினைத்த பார்த்திபன், தேவயானியைப் பெண் கேட்டுப் போக.... அவரோ ‘நான் பாதுகாக்க நினைத்தது உங்களை அல்ல, உங்கள் கண்களைத்தான்... ஏனென்றால், அது விபத்தில் இறந்துபோன என் காதலன் அஜீத்தின் கண்கள்’ என்று குண்டைக் தூக்கிப் போடுகிறார்.

அஜித்குமார்
அஜித்குமார்

‘காதல் சேருவதோ பிரிவதோ இல்லை... வாழ்வது’ என்று சொல்லிவிட்டு, தேவயானியின் பாசத்துக்குரிய பழைய வாழ்க்கையையே தொடர்கிறார் பார்த்திபன்.

கல்யாணத்துக்காக காத்திருக்கும் முதல் காட்சியில் தொடங்கி காதலிக்காகக் காத்திருக்கும் கடைசி காட்சி வரை மென்மையான இளைஞனாக, புதியபாதையில் பார்த்திபன்! கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோவாக ரமேஷ்கண்ணாவுக்கு இதில் புரமோஷன் பலே கண்ணா! 

நீ வருவாய் என
நீ வருவாய் என

தேவயானியிடம் நடிப்போடு அழகும் கூடியிருக்கிறது. மென் சோகம் தேக்கிய முகத்தோடு தனது டிரேட் மார்க் காஸ்ட்யூமான புடவையில் ஜொலிக்கிறார். ‘ஜிமிக்கி பிடிச்சிருக்கா’... ‘மூக்குத்தி பிடிச்சிருக்கா’ என்று கண்ணாடி பார்த்தபடி அஜீத்திடம் கற்பனை உரையாடல் நிகழ்த்தி சொக்க வைக்கிறார்.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை ராஜாங்கம் செம தர்பார்! அவர் ஸ்டைலில் ஒரு பாட்டு மட்டும் படம் முழுக்கவும் ஒலிக்கிறது.

‘இதைப் பேச வைக்கும் படமாக்கிக் காட்டுகிறேன்’ என்று டைரக்டர் யாரிடமோ சாவல் விட்டு இருப்பார் போலிருக்கிறது. படம் நெடுக எதுகை மோனை உவமைகளுடன் காதலுக்கு வியாக்கியானம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அச்சாணி முறியவைக்கும் மயிலிறகு வசனங்கள்!

- விகடன் விமர்சனக்குழு

(19.09.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு