கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

நெஞ்சம் மறப்பதில்லை - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விமர்சனம்

டார்க் ஹியூமரை முயன்றவகையிலும் செல்வாவிற்கு ஓரளவிற்கு வெற்றியே.

ல நூற்றாண்டுப் பழைய கதையை செல்வராகவன் தன் ஸ்டைலில் தர முயன்றிருக்கும் படமே இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை.’

சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி முதலாளியின் மகளைக் கரம்பிடித்து அதன்வழி கோடிக்கணக்கான சொத்துகளுக்கு ஏகபோக வாரிசாகிறார் எஸ்.ஜே. சூர்யா. நோயாளி மனைவி, தேமேவெனப் போகும் வேலை, கடமைக்குப் பணிபுரியும் ஊழியர்கள் என சலிப்புத் தட்டும் அவர் வாழ்க்கையில் நுழைகிறார் ரெஜினா. தன் மகனைப் பார்த்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ரெஜினாமீது மையல் (அவர் விளக்கத்தின்படி) கொள்கிறார். அதற்கு ரெஜினா இணங்கிவராமல் போக, அவர்மீது கூட்டுப் பாலியல் வன்முறை ஏவப்படுகிறது. அதில் பலியாகும் ரெஜினா பேயாக மாறி, கயவர்களை தண்டிப்பதே மீதிக்கதை.

நெஞ்சம் மறப்பதில்லை - சினிமா விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே அதிகம். அது திரையிலும் நன்றாகவே எடுபடுகிறது. ஆனால் முதல் சில நிமிடங்கள் சுவாரசியமாக இருக்கும் அவரின் உடல்மொழி, போகப் போக அலுப்பூட்டுகிறது. அதுவும் சிவாஜியின் மேனரிசத்தை அடிக்கடி வெளிக்கொண்டுவருவது அதீத செயற்கைத்தனம். கோபம், அழுகை என இரண்டே உணர்ச்சிகளில் அடங்கிப்போகிறார் ரெஜினா. நந்திதாவின் கதாபாத்திர வரைவில் இருக்கும் குழப்பமே அவரை நம்மால் ரசிக்கமுடியாமல்போவதன் காரணம்.

பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் யுவன். வழக்கமாய் செல்வாவின் கூட்டணியில் ஒர்க் அவுட்டாகும் அவருடைய மேஜிக் இதிலும் சூப்பராக வெளிப்பட்டிருக்கிறது. யூகிக்கக்கூடிய திரைக்கதையை கேமரா போலவே தோளில் சுமந்து முடிந்தவரை வித்தியாசம் காட்ட முற்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா.

நெஞ்சம் மறப்பதில்லை - சினிமா விமர்சனம்

நன்மைக்கும் தீமைக்குமான கதையில் செல்வராகவனின் டச் தெரியும் இடங்கள் ரசிக்கவைக்கின்றன. சின்னச் சின்னக் காட்சிகளின் வழி தொடங்கி க்ளைமாக்ஸில் சாத்தானின் மொத்த உருவகமாக எஸ்.ஜே.சூர்யாவும் தேவதையின் மொத்த உருவகமாக ரெஜினாவும் மாறி நிற்பது எழுத்தாளராக செல்வாவின் வெற்றி. ஆனால் அந்தச் சண்டைக்காட்சி மொத்த வியப்பையும் அதே பங்களாத் தோட்டத்தில் புதைத்துவிடுகிறது.

டார்க் ஹியூமரை முயன்றவகையிலும் செல்வாவிற்கு ஓரளவிற்கு வெற்றியே. ஆனால் பாலியல் வன்முறை போன்ற சீரியஸ் பிரச்னையைச் சிரிப்பாக அணுக முற்படுவதுதான் மிகப்பெரிய உறுத்தல்.

படமாக ஒன்றுசேராமல் தனித்தனிக் காட்சிகளாகவே இருப்பதும், நன்மைக்கும் தீமைக்கும் நடுவே நம்மை முடிவெடுக்க விடாத குழப்பமும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைப் பகுதி பகுதியாகவே நினைவுகொள்ளச் செய்கின்றன. ட்ரீட்மென்ட்டை இன்னமும் கொஞ்சம் சீரியஸாகச் செய்திருக்கலாம் செல்வா!