
WEB SERIES
கதை என்னன்னா?
சூப்பர்ஹீரோக்களாக வாழ்ந்து, பின்னர் பிரிந்த சகோதரர்களும் சகோதரிகளும், வளர்ப்புத் தந்தையின் மறைவால் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். அரங்கேறும் உலகப் பேரழிவைத் தடுக்க முடியாமல் இறந்த காலத்துக்கு டைம் டிராவல் செய்து தப்பியோடும் அவர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பதை விவரிக்கிறது நெட்ஃபிளிக்ஸின் ‘The Umbrella Academy’ சீசன் 2.
நம்பர்களை மட்டுமே பெயராக வைத்து அவர்களுக்குள் இருக்கும் சூப்பர்ஹீரோ ஆற்றல்களை ஒருங்கிணைத்து ‘அவெஞ்சர்ஸ்’ போல ஒரு சூப்பர்ஹீரோ டீமாக இருக்கிறது இந்தப் படை. 2019-ம் வருடத்தில் உலகுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க முடியாமல் இறந்தகாலத்துக்கு அவர்களை அழைத்துச்செல்லும் சகோதரன், தனித்தனியே அவர்களை 1960-களின் வெவ்வேறு காலகட்டத்தில் இறக்கிவிடுகிறான். 1963-ல் அதிபர் கென்னடியின் கொலைக்குப் பின் அணு ஆயுதப் போரால் பேரழிவு ஏற்படவிருப்பதை முன்னரே தெரிந்துகொள்பவர்கள், இந்த முறையேனும் ஒன்றிணைந்து உலகைக் காத்தார்களா என்பதே கதை.
பின்கதை
மார்வெல், DC காமிக்ஸ் படங்கள்தான் ஹாலிவுட்டை ஆட்சி செய்கின்றன. ஆனால், இந்த இரண்டு பெருநிறுவனங்களைத் தாண்டி இன்னும் சில நிறுவனங்கள் பல நல்ல படங்களையும் கதைகளையும் திரையுலகுக்கு அளித்துள்ளன. அப்படி ஒன்றான டார்க் காமிக்ஸ் என்ற நிறுவனத்தின் ‘தி அம்ப்ரெல்லா அகாடமி’ எனும் காமிக்ஸைத்தான் வெப் சீரிஸாக மாற்றியிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். ‘ஹெல்பாய்’, ‘தி மாஸ்க்’, ‘300’ (தமிழில் ‘300 பருத்தி வீரர்கள்’), ‘சின் சிட்டி’ போன்றவை டார்க் காமிக்ஸ் வெளியிட்டவைதான்.
ப்ளஸ்
1960-களில் நிகழும் அலிசனின் பின்கதை சொல்லும் அமெரிக்க நிறவெறிக் கொடூரம், வான்யா-சிஸ்ஸி இருவருக்குமான தன்பால் ஈர்ப்பு குறித்து அக்காலகட்டத்திலேயே சொல்லும் துணிச்சல், 13 வயதுச் சிறுவனின் உடலுக்குள் 50+ வயதான ஒருவர் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ஐடன் கல்லகெரின் அட்டகாசமான நடிப்பு (இவருக்கு நிஜத்திலும் 16 வயதுதான்), கென்னடி மரணத்தைத் தடுத்து நிறுத்துவேன் என நம்பர் 2 எனும் டியகோ செய்யும் அலம்பல்கள், போலி சாமியராக செட்டிலாகும் க்ளாஸ் எனும் நம்பர் 4-ம் அவருடன் பேயாக வரும் சகோதரன் பென் எனும் நம்பர் 6-ம் செய்யும் காமெடி அலப்பறைகள், தெளிவான திரைக்கதை ஆகியவை இதன் பலங்கள்.

யாரெல்லாம் பார்க்கலாம்?
14+ | சூப்பர்ஹீரோன்னாலும்
வன்முறை இருக்கே!
டோன்ட் மிஸ் லிஸ்ட்!
‘எக்ஸ்-மென்’ படத்தொடர் | ‘லீஜியன்’ டிவி சீரிஸ் | ‘பேக் டு தி ஃப்யூச்சர்’ டிரைலாஜி
மைனஸ்
டைம் டிராவல் என்றதும் ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ போல குழப்பமான டைம் டிராவல் தியரியை வைத்து முறுக்கு சுற்றாமல், ‘பேக் டு தி ஃப்யூச்சர்’ காலத்து எளிமையான நேர விளையாட்டைக் கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால், அதனால்தானோ என்னவோ, ஒருசில இடங்களில் லாஜிக் பல்லிளிக்கிறது. கென்னடியைக் கொல்வதில் தன் தந்தைக்குப் பங்கு இருக்கிறது எனக் கண்டறியும் நம்பர் 5, அதே கொலையில் தன் பங்கும் இருக்கிறது என்பதை மறைப்பது/மறப்பது ஏன் என்பதை விளக்கியிருக்கலாம். சென்ற சீசனில் நம்மை அழுதே கடுப்பேற்றிய லூத்தர் எனும் நம்பர் 1 இந்த சீஸனில் காமெடிக்குத் தாவியது நல்ல மாற்றம்தான் என்றாலும் சீரியஸ் காட்சிகளையும் சிரித்தே காலி செய்வது என்ன லாஜிக்கோ! லிலாவாக வரும் ரிது ஆர்யாவின் நடிப்பு டாப் க்ளாஸ் என்றாலும் அவரின் பாத்திரப் படைப்பிலும் பின்கதையிலும் இன்னும் பலம் சேர்த்திருக்கலாம்.