மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 2

அர்ஜுன் - ரஜினிகாந்த்
News
அர்ஜுன் - ரஜினிகாந்த்

அந்த யோசனை என்ன?

சினிமாப் பயணத்தில் ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தேன். விநியோகஸ்தரான நாங்கள் தயாரிப்பாளர் ஆகலாம் என முடிவெடுக்கி றோம். நானும், திருச்சி ஏரியா டிஸ்ட்ரிபியூட்டரான நண்பர் கலைப்புலி சேகரனும், இன்னொரு விநியோகஸ்தரான பி.சூரியும் தயாரிப்பாளர் என்ற முறையில், மகேந்திரன் சாரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த மதுக்கூர் கண்ணன், சக்தி சுப்ரமணியத்திடம் தயாரிப்பாளர்களாகப் பேசுகிறோம். ‘`எங்களுக்கு ஒரு படம் தயாரிக்கலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. சேகரனிடம் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையை இயக்கித்தரமுடியுமா?” எனக் கேட்டோம். இருவரும் ஒப்புக்கொண்டார்கள். நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி, கதை விவாதங்கள் முடித்து, பூஜை போட்டு 1985-ல் ‘யார்’ படத்தைத் தொடங்கினோம்.

அர்ஜுன் - ரஜினிகாந்த்
அர்ஜுன் - ரஜினிகாந்த்

டிஸ்ட்ரிபியூட்டராக இருந்து தயாரிப்பாளரான எங்களுக்கு ஹீரோ அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடவில்லை. முதலில் எங்கள் படத்தில் நடிக்கவைக்க மோகனைப் போய்ப் பார்த்தோம். ஆனால், டேட்ஸ் இல்லாததால் அவரால் நடிக்க முடியவில்லை. அடுத்தது விஜயகாந்த் சாரைப் போய்ப் பார்த்தோம். அப்போது அவர் ‘ஊமை விழிகள் ’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ‘சார் இந்தப் படத்துக்கு நான் முழுக்க நைட் கால்ஷீட் கொடுத்துட்டேன். அதனால நீங்க சொல்ற நாள்களில், என்னால நடிக்கவரமுடியாது. இந்தப்படம் முடிச்சிடுங்க. அடுத்த படம் நாம நிச்சயமா சேர்ந்து பண்ணலாம்’ என்கிறார். அடுத்து பிரபுவைப் பார்க்கலாம் எனப் போகிறோம். அப்போது அவர் கிண்டியில் ‘ராஜரிஷி’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். குதிரைமேல் அமர்ந்துகொண்டே ‘சார், நீங்க என்னைப் பார்த்து எந்த பிரயோஜனமும் இல்ல. டேட்ஸ் எல்லாம் என் மேனேஜர் மோகன்தாஸுக்குத்தான் தெரியும். அவரைப் போய்ப் பாருங்க’ என்கிறார். ஆனால், மோகன்தாஸ் `இங்க வாங்க... அங்க வாங்க’ என்று இழுத்து விடுகிறாரே தவிர எதுவுமே நடக்கவில்லை. பிறகு ராஜேஷைப் பார்க்கப்போனோம். ராஜேஷின் தம்பி இந்தப் படத்தில் ஒரு உதவி இயக்குநர். அப்போதுதான் ராஜேஷுக்கு ‘சிறை’ படம் ரிலீஸ் ஆகி பேயோட்டம் ஓடியிருக்கிறது. இந்தப்படத்தின் வெற்றியால் ராஜேஷ் ஒரு கெத்தோடு எங்களிடம் பேசுகிறார்.

உண்மைகள் சொல்வேன்! - 2

கதையை நாங்கள் சொல்லி முடித்தபிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் அவர் பாரதிராஜா சார் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார். ‘நான் 800-க்கு மேல ஹாலிவுட் படங்கள் பார்த்திருக்கேன். அப்படியே நடந்துகிட்டே அரை மணி நேரத்துல 10 படத்துக்கான கதை, திரைக்கதையைச் சொல்லுவேன்’னு சொல்லிவிட்டு, சக்தியையும், கண்ணனையும் பார்த்து ‘நீங்க பாரதிராஜா சார் கிட்ட போய் ஒரு படம் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணிட்டு வாங்க’ என்கிறார். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு கஷ்டமாகிவிட்டது. ‘இவங்கதான் இயக்குநர்கள், இதுதான் கதை, இதில் நடிக்கமுடியுமான்னு கேட்க வந்திருக்கோம். இவர் என்னடான்னா, நம்ம இயக்குநர்களையே போய் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்துட்டு வாங்கன்னு சொல்றாரே’ என வருத்தம் அடைந்தேன். உடனே சக்தியையும் கண்ணனையும் எழுப்பி, ‘இனிமே இங்க செட்டாகாது’ எனக் கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். பிறகு சிவகுமார் சாரைப் பார்க்க முயற்சிகள் செய்தேன். ஆனால், கடைசிவரை அவருடைய மேனேஜர் எங்களை சிவகுமார் சாரைப் பார்க்க விடவில்லை.

படம் உதவி: ஞானம்
படம் உதவி: ஞானம்

அந்தநேரத்துல்தான் ஏஎல்எஸ் நிறுவனத்தில் டெலிபோன் ஆபரேட்டராக வேலை பார்த்த கோவை மணி (இப்போது தயாரிப்பாளராக இருக்கிறார்) என்னை வந்து பார்த்தார். ‘அண்ணா, நீங்க ஹீரோ தேடிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். அர்ஜுன்னு ஒருத்தர் இப்ப ‘நன்றி’ன்னு ஒரு படம் பண்ணியிருக்கார். ரெண்டு, மூணு படங்கள் பண்ணியிருக்கார். உங்க படத்துக்கு நல்லாருப்பார். அவர் டேட் இருக்கு... வாங்கிக்கோங்க’ என அர்ஜுனின் புகைப்படங்களைக் காட்டினார். நாங்கள் தேடிப்போய்ப் பார்த்த நடிகர்கள் எல்லோரும் புறக்கணித்த கோபத்தால் உடனடியாக நாங்கள் அர்ஜுனையும் நளினியையும் புக் செய்துவிட்டோம்.

க்ளைமாக்ஸில் ஒரு சீன். தெய்வசக்திக்கும் தீயசக்திக்கும் சண்டை நடக்கும். ‘தீயசக்தியை ஒழிக்கணும், தெய்வசக்தி நிலைக்கணும்னா அவங்கவங்க இஷ்ட தெய்வங்களை வணங்கணும்’னு சொல்லு வாங்க. கோயில், சர்ச், மசூதின்னு எல்லா இடங் களிலும் பூஜைகள் நடக்கும். இந்த சீன்ல எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஐபி சாமி கும்பிடுற மாதிரியிருந்தா படத்துக்கு அது பெரிய ப்ளஸ்ஸா இருக்கும்னு ஒரு யோசனை. அப்போது என் மனதுக்குள் வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவரை அணுகினோம்.

`யார்’ படத்தில்
`யார்’ படத்தில்

“நான் உங்களுக்கு டேட் தரேன். ஆனா, நான் சொல்ற கண்டிஷனை நீங்க நிறைவேத்துவேன்னு உறுதி கொடுத்தால்தான் நடிப்பேன்’’ என்றார் ரஜினி. ‘‘எக்காரணம் கொண்டும் என் பேரை பட விளம்பரத்துல போடக்கூடாது. நான் இந்தப் படத்தில் நடிச்சிருக்கேன்னு போஸ்டர் ஒட்டக் கூடாது’’ எனச் சொல்லிவிட்டு டேட் கொடுத்தார்.

ஷூட்டிங்கிற்கு அவர் வீட்டுக்கே வரச் சொல்லிவிட்டார். வீட்டில் யாருமே இல்லை. ஒரே அமைதி. அவர் வீட்டு மின்சாரத்தையே ஷூட்டிங்கிற்குப் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். அவர் வீட்டின் பூஜை அறையிலேயே ராகவேந்திரரை வணங்குவதுபோல எடுத்தோம். அப்போது அவர் என்ன வேண்டியிருப்பார்? ‘`எல்லோரும் நல்லா இருக்கணும். இந்தப் படதோட தயாரிப்பாளர் நல்லாருக்கணும். இந்தப்படம் நல்லா ஓடணும்’னு வேண்டியிருப்பார். அந்த வேண்டுதலும், ஆசீர்வாதமும்தான் இதுவரைக்கும் என்னைத் தயாரிப்பாளரா நிற்கவைத்திருக்கிறது என நான் முழுமையாக நம்புகிறேன்.

படம் எடுத்து முடித்துவிட்டோம். படத்தில் ஏகப்பட்ட ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள். அப்போது கிராபிக்ஸ் எல்லாம் கிடையாது. முதல் படம் என்பதால் படம் தரமாக இருக்கவேண்டும் என ஏகப்பட்ட செலவுகள் செய்தோம். அப்போதெல்லாம் 10 லட்சத்தில்தான் இந்தமாதிரியான மீடியம் பட்ஜெட் படங்கள் எடுப்பார்கள். ஆனால், ‘யார்’ படத்தின் பட்ஜெட் கைமீறிப் போய்க்கொண்டேயிருந்தது. மொத்தமாக 32 லட்சம் செலவாகிவிட்டது. நாங்கள் திட்டமிட்டதைவிட 22 லட்சம் அதிகம். என்னிடம் இருந்த எல்லாப் படங்களின் நெகட்டிவ்வையும் விற்கவேண்டிய சூழல். ‘வெள்ளிவிழா’, ‘இரு கோடுகள்’, `ஒளி விளக்கு ‘ , ‘குங்குமம்’, ‘பல்லாண்டு வாழ்க’ என எல்லாவற்றையும் விற்று நிராயுதபாணியாக, ஒரு ஆர்வத்தில், வெற்றிபெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கையில் படத்தை ரிலீஸ் செய்யத் தயாரானேன்.

சினிமா இண்டஸ்ட்ரி முழுக்க ஒரே கேலி, கிண்டல் பேச்சுகள். ‘10 லட்ச ரூபாய்ல படத்தை எடுக்கத்தெரியாம, 32 லட்சத்துல எடுத்திருக்கானுங்க பாரு’ என என் காதுபடவே பேசுகிறார்கள். ஒருவர் ‘டப்பா தட்டுறவன்(டின்) எதுக்கு சினிமா எடுக்க வந்தே?’ என என் முகத்துக்கு நேராகவே சொன்னார். ஆனால், நான் சோர்ந்துபோகவில்லை. படத்துக்கு என்னவெல்லாம் பப்ளிசிட்டி செய்யமுடியுமோ அனைத்தையும் செய்தேன்.

ரிலீஸ் செய்துவிட்டு முதல் நாள் தியேட்டரில் போய் நிற்கிறோம், முதல் ஷோ முடிந்து கூட்டம் அலறியடித்துக்கொண்டு ஓடிவருகிறது. ‘பேய்ப்படம்... பேய்ப்படம்’ எனக் கூச்சல்போட்டு டிக்கெட் வாங்க க்யூவில் நிற்கிற கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு வெளியே ஓடுகிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை.

திக்பிரமை பிடித்ததுபோல இருந்தது. போட்ட காசு என்ன ஆகுமோ என்ற கவலை ஒருபக்கம். ஆனால், அதைவிட அத்தனை பேர் முன்னாடி சாதித்துக்காட்ட வேண்டுமே என்ற ஆவேசம்தான் மனதில் இருந்தது.

அப்போதுதான் அந்த யோசனை வந்தது...!

உண்மைகள் சொல்வேன்! - 2

- வெளியிடுவோம்...