பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்ட மலேசிய நிகழ்ச்சிகள் தொடர்பாக சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பட்டிமன்றம் நடத்துவதற்காக மலேசியா சென்ற லியோனி தலைமையிலான டீம் அங்கு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கவில்லையென்றும், இதனால் நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடையே கடும் வாக்குவாதம் லியோனி முன்னிலையிலேயே நடந்ததென்றும், ஒருகட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிலேயே சிலர் லியோனியைக் குற்றம் சொல்ல, லியோனிக்கும் அவர்களுக்குமே கூட சண்டை வந்து அது போலீஸ் புகார் வரை சென்றதாகவும், அந்த வீடியோக்கள் சொல்கின்றன.
உண்மையில் என்ன நடந்தது என சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விசாரித்தோம்.
`மலேசிய நாட்டின் சில நகரங்களில் ஏப்ரல் கடைசி வாரம் தொடங்கி மே முதல் தேதி வரை தொடர்ந்து லியோனியின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கொரோனாவால சில ஆண்டுகள் அவருடைய நிகழ்ச்சிகள் அங்க நடக்காததால் இந்த முறை டிக்கெட்டுகள்லாம் சில நாட்கள் முன்னதாகவே முழுமையாக விற்கப்பட்டுவிட்டது.
பொதுவாகவே லியோனியின் நகைச்சுவைப் பேச்சுக்கு ரசிகர் கூட்டம் அதிகமா இருக்கும். இந்த முறையும் மலேசிய மக்கள் நிகழ்ச்சியைப் பார்க்க ரொம்பவே ஆர்வமா இருந்தாங்க.
நான்கு நாள் நிகழ்ச்சின்னு திட்டமிட்டு மலேசியா வந்திருந்தாங்க லியோனி தலைமையிலான டீம். முதல் மூன்று நாட்கள் மூணு இடங்கள்ல எவ்விதப் பிரச்னையும் இல்லாம நிகழ்ச்சி நடந்திடுச்சு. நான்காவது நாள் பினாங்கில் நடந்த நிகழ்ச்சியிலதான் பிரச்னை.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்கத் திரண்டிருந்த சூழல்ல நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கல. அதுக்கான காரணமும் பார்வையாளர்களுக்கு முறையாத் தெரிவிக்கப்படாமலே இருந்ததால அரங்கத்துல ஒரே கூச்சல் குழப்பம்.
மூணு மணி நேரத்துக்கு மேலாகியும் லியோனி தலைமையிலான டீம் அங்க வராததால பார்வையாளர்கள்ல கொஞ்சம் பேர் ‘எங்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படணும், இல்லாட்டி சட்ட நடவடிக்கை எடுப்போம்' என கத்திட்டு அரங்கத்துல இருந்து வெளியேறிப் போயிட்டாங்க.
அதுக்குப் பிறகு அரங்கத்துக்கு வந்த லியோனி டீமுடன் மிச்சமிருந்த பார்வையாளர்கள்ல சிலர் கடுமையா வாக்குவாதம் செய்ததும் நடந்தது. அதுக்குப் பிறகு இருந்த ஆடியன்ஸை வச்சு ஒருவழியா நிகழ்ச்சியை நடத்தி முடிச்சுட்டுப் போனாங்க’’ என்கின்றனர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நெருக்கமான சிலர்.

சம்பந்தப்பட்ட இடத்துக்கு லியோனி வரத் தாமதமானதன் காரணமாகப் பரவிய சில தகவல்கள்தான் லியோனி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம். அதாவது குறிப்பிட்ட நேரம் முன்கூட்டியே தெரிந்தும், அது குறித்துக் கவனம் செலுத்தாமல் ஹோட்டலில் ஓய்வெடுத்தார் லியோனி என்கிற தகவல்தான் அது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தமிழ்நாடு வரை பரவ, உடனடியாக நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் மலேசிய மீடியாவை அழைத்து ஒரு விளக்கத்தையும் தந்திருக்கிறார்கள்.
மழை, அதைத் தொடர்ந்து நிகழ்ந்த போக்குவரத்து நெருக்கடி காரணமாகவே நிகழ்ச்சி தாமதமானதாகவும், கூட்டத்தில் ஒரு சிலரே இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதாகவும், நிகழ்ச்சியைப் பார்க்காமல் திரும்பிச் சென்றவர்களுக்கு டிக்கெட் பணத்தைத் திரும்பத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்கிறது அந்த விளக்கம்.
இது குறித்துக் கேட்கலாமென நாம் லியோனியையே தொடர்பு கொண்டோம்.
நமது அழைப்பை எடுத்த அவரது மனைவி, ’அது ஒரு சாதாரண சின்ன விஷயம்ங்க. நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்து முடிஞ்சிடுச்சு. கொஞ்சம் பேர் இதை எதுக்குப் பெரிசாக்குறாங்கன்னே தெரியலை. அவரு இப்ப தூங்கிட்டிருக்கார். அதுவும் போக இந்த விஷயத்துல பேசறதுக்கு இனிமே ஒண்ணுமில்ல’ என முடித்துக் கொண்டார்.