`பெற்றால்தான் பிள்ளையா? சீராட்டி வளர்த்தால்தான் அன்னையா?' - அன்புக்கு இலக்கணம் சொல்லும் இந்த வாசகத்துக்கு உதாரணம், வாணி ஜெயராம் - ரத்னா இருவருக்குமான பந்தம். மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் அன்புக்குப் பாத்திரமாக இருந்தவர் செய்தி வாசிப்பாளர் ரத்னா. வாணியின்மீது தாய்க்கும் மீறிய மதிப்பையும் நேசத்தையும் கொண்டிருந்தார் ரத்னா.

`நீ எது நான் எது
ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்...!'
கடந்த வாரம் வாணி ஜெயராம் மறைந்தபோது, அவர் பாடிய 'இலக்கணம் மாறுதோ' பாடல் வரிகளைக் குறிப்பிட்டு, அவருக்கும் தனக்குமான பந்தத்தை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் உருகி எழுதியிருந்தார் ரத்னா. ``வாணிம்மா உடனான பத்தாண்டுக்கால பழக்கத்தை விவரிக்க, எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது" என்று மருகுகிறார் இவர்.
``பத்து வருஷங்களுக்கு முன்பு. டாக்டர் கமலா செல்வராஜ் மேடம் வீட்டு கொலு நிகழ்ச்சியிலதான், வாணிம்மாவைச் சந்திச்சேன். `வாய்ப்பு கிடைச்சா ரத்னா வீட்டு கொலுவைப் போய்ப் பாருங்களேன்'னு வாணிம்மாகிட்ட கமலா மேடம் சொன்னாங்க. வாணிம்மாகிட்டேருந்து திடீர்னு ஒருநாள் அழைப்பு வந்துச்சு. தன் கணவர் ஜெயராம்ஜியுடன் என் வீட்டுக்கு வாணிம்மா வந்தாங்க. `இது கனவா.. நனவா?'ங்கிற அளவுக்கு திகைச்சுப் போனேன். வயசுலயும் திறமையிலயும் அவங்களோட உயரம் ரொம்ப பெரிசு. அவரை எப்படி அணுகிறதுனு தயங்கித் தயங்கித்தான் வாணிம்மாகிட்ட பழகினேன். அவங்க என்கிட்ட உரிமையா பழகியதுடன், அவரின் பர்சனல் கூட்டுக்குள் எனக்கும் இடம் கொடுத்தாங்க.

வானவில் பண்பாட்டு மையத்தின் செயல்பாடுகள்ல என்னால முடிஞ்ச வேலைகளைச் செய்வேன். வாணிம்மா, பாரதியார் மற்றும் விவேகானந்தர்மீது அதிக அன்பு கொண்டவர். வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பா, பாரதியின் பிறந்தநாள்ல நடக்கிற ஜதி பல்லக்கு சுமக்கிற நிகழ்வு பிரசித்தம். அந்த விழாவுக்கு அம்மாவைக் கூட்டிட்டுப்போறது, அந்த மையத்தின் சார்பா வாணிம்மாவுக்கு விருது கொடுத்ததுனு அவருடன் நெருங்கிப் பழக வாய்ப்புகள் கிடைச்சது. முக்கியமான சில நிகழ்ச்சிகளுக்கு அவங்க போறப்போ, `என்கூட நீயும் வர்றியா?’னு கேட்பாங்க. நானும் போவேன்" - ரசிகையாக வாணி ஜெயராமுடன் பழக ஆரம்பித்த ரத்னாவுக்கு, அவரின் 'குட் புக்'கில் நெருக்கமான இடம் கிடைத்திருக்கிறது.
``வாணிம்மா பிரைவசியை விரும்புற நபர். ஆனா, எல்லோரும் சுலபமா அணுகக்கூடிய சாமானியராதான் இருந்தாங்க. என்கிட்ட கொஞ்சம் நெருங்கிப் பழகினாங்க. தனக்குத் தோணும்போதெல்லாம் அவங்க வீட்டுக்கு என்னைக் கூப்பிடுவாங்க. தவிர, அவரைச் சந்திக்க தோணும்போதெல்லாம் நானும் அவரைப் பார்க்கப் போவேன். வாணிம்மாவுக்கு சமையல் வேலையில சிரமம் கொடுக்கக் கூடாதுனு, அவருக்குப் பிடிச்ச உணவுகளை வாங்கிட்டுப் போவேன். ஒண்ணா சாப்பிட்டுக்கிட்டே கதை பேசுவோம்.

அவங்க என் வீட்டுக்கு வர்றாங்கன்னா, `உங்களுக்கு என்ன டிஃபன் பண்ணட்டும்?'னு கேட்பேன். `மசால் தோசை பண்ணு. ஐ லவ் இட்’னு குழந்தையைப்போல சொல்வாங்க. அவருக்கு தோசைனா இஷ்டம். பட்டாணி சுண்டலையும் விரும்பிச் சாப்பிடுவாங்க.
என் வீட்டு கொலுவுல அவங்களுக்காக பட்டாணி சுண்டல் செய்வேன். பால் பாயசமும் அவருக்குப் பிடிக்கும். குழந்தைப் பருவத்துலேருந்து பாடகியா புகழ்பெற்றது வரை தன் வாழ்க்கைக் கதையை ஒவ்வோர் அத்தியாயமா வாணிம்மா எனக்குச் சொல்லியிருக்காங்க. வரலாற்று நாவலைக் கேட்கிற மாதிரி அவங்க பேச்சை ரசிச்சுக் கேட்பேன்.
இசைத்துறையில வாணிம்மாவை முன்னுக்குக் கொண்டுவர ஜெயராம்ஜி அரும் பாடுபட்டிருக்கார். `அவர் இல்லைனா நான் இல்லை’னு வாணிம்மா பலமுறை என்கிட்ட சொல்லியிருக்காங்க. செய்தி வாசிப்பாளரா என் தொழில் அனுபவங்களையும் ஆர்வமா கேட்பாங்க. ‘எவ்ளோ நேரத்துக்கு முன்பு செய்திகள் கிடைக்கும்? திடீர்னு ஒரு செய்தி வந்தா என்ன பண்ணுவே? பல வருஷமா கேமரா முன்னாடி வேலை செய்றதால சிரமம் இல்லையா? நீ உடுத்தியிருந்த புடவை நல்லாயிருந்துச்சு...’னு அவங்க கேள்விகளுக்குப் பதில் சொல்றதே சுவாரஸ்யமா இருக்கும்.

புடவையை செலெக்ட் பண்றதிலேருந்து, அதை உடுத்தி, பொருத்தமான நகையைப் பயன்படுத்துறதுவரை எல்லா செயலையும் நேர்த்தியா செய்வாங்க. வீட்டை அவ்ளோ அழகா பராமரிப்பாங்க. அவர் வீடு மியூசியம்போல இருக்கும். சில தினங்களுக்கு ஒருமுறை அவர்கிட்ட தவறாம போன்ல பேசிடுவேன். ‘பணியாளர் வந்தாங்களா? எல்லா வேலைகளும் சரியா முடிஞ்சுடுச்சா? பார்த்து ஜாக்கிரதையா இருங்க’னு வாணிம்மாகிட்ட சொல்வேன். ‘நான் பத்திரமாதான் இருக்கேன். நீ கவலைப்படாதே’னு சிரிச்சுகிட்டே சொல்வாங்க. அவரின் பேச்சு, பழக்கம், செயல்பாடுகள் எல்லாத்துலயும் பக்குவம் இருக்கும்" வாணியுடன் பழகிய நினைவுகளை அடுக்கும் ரத்னாவுக்கு, தன் குடும்பத்தில் ஒருவரைப் பறிகொடுத்த துக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது வாணியின் இழப்பு.
``வாணிம்மாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதும் அவருக்கு போன்ல வாழ்த்து சொன்னேன். ஜலதோஷம் மற்றும் தொண்டைவலியில பேச சிரமப்பட்டாங்க. 'அடுத்த வாரம் நேர்ல வந்து பார்க்கிறேன்மா'னு அவர்கிட்ட சொன்னேன். ஆனா, அதுக்குள்ள உயிரற்ற உடலா அவரைப் பார்த்தப்போ உடைஞ்சு போயிட்டேன். இறுதிச்சடங்குகள் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகும், அவர் கண்முன் நிற்கிற மாதிரியும், அவர் குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கிற மாதிரியான பிரமையும் அதிகமா இருந்துச்சு.

ஜெயராம்ஜி இருக்கும்வரை, ஒவ்வொரு வருஷமும் என் வீட்டு கொலுவுக்கு தன் கணவருடன் முதல்நாளே வாணிம்மா வந்துட்டுப் போயிடுவாங்க. ஜெயராம்ஜி தவறின பிறகு, கொலு நிகழ்வுக்குத் தனியா வந்தாங்க. ஒவ்வொரு வருஷமும் நான் வைக்கிற கொலு தீம் பத்தி ஆர்வமா கேட்பாங்க. வாணிம்மா இல்லாத கொலு நிகழ்வை இனி எப்படித் திட்டமிடப்போறேன்னு தெரியல. அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள்ல ஒருத்திதான் நான். ஆனா, அவங்க வாழ்க்கைக்குள் நான் நுழைஞ்சது, ஆத்மார்த்தமான பந்தமா எங்க உறவு மாறினது, தாய்க்கும் மீறிய அன்பை அவங்க என்மேல காட்டியதெல்லாம் எனக்கு வியப்பா இருக்கு. இதுக்கெல்லாம் கைம்மாறா வாணிம்மாவுக்கு நான் என்ன செஞ்சேன்?" என்று கலக்கத்துடன் கூறுகிறார் ரத்னா.