Published:Updated:

‘தீரன்’ சண்டைக்கே பயந்தா எப்படி? க்ளிஷே சினிமா சண்டைகள்!

ப.சூரியராஜ்
‘தீரன்’ சண்டைக்கே பயந்தா எப்படி? க்ளிஷே சினிமா சண்டைகள்!
‘தீரன்’ சண்டைக்கே பயந்தா எப்படி? க்ளிஷே சினிமா சண்டைகள்!

சின்னப்பா காலத்துல இருந்து சிவகார்த்திகேயன் காலம் வரைக்கும், எத்தனையோ சண்டைக் காட்சிகளை நாம பார்த்துருக்கோம். பார்த்து வெறியாகி துக்கடா பசங்களைப் பிடிச்சு தூக்கிப் போட்டு துவைச்சிருக்கோம். ராமராஜன், டி.ராஜேந்தர் அளவுக்கு சண்டை காட்சிகள்ல சாதித்த நடிகர்கள் தமிழ் சினிமாக்களில்... ஏன் ஆங்கில சினிமாக்களில் கூட யாரும் இல்லை! இப்படி சில ஆக்க்ஷன் ஜாக்சன்கள் நம்மிடம் இருந்தாலும், இன்னமும் சில சண்டைக் காட்சி கிராமர்களை நாம் விட்டபாடில்லை, அவை…

சண்டை காட்சிகள் பெரும்பாலும் ஹீரோவின் உதட்டோரம் தக்காளி சட்னி வடிந்ததும்தான் ஆரம்பிக்கும்.

ஹீரோவும் வில்லனும் பொறுப்பாக தான் உண்டு தன் ஃபைட் உண்டுன்னு சண்டை போட்டுட்டு இருப்பாங்க! ஹீரோயின் சம்பந்தமே இல்லாமல் சண்டையில் தன் அழகிய மூக்கை நுழைக்க, வில்லன் கடுப்பாகி ஹீரோயினை பிடித்து மொக்க தூணையோ, தேக்கு மர டேபிளையோ பார்த்து தள்ளி விடுவார். பிரேக் பிடிக்காத அரைபாடி லாரி புளியமரத்தை நோக்கிப் போகிறமாதிரி, வேகமா போய் அதில் முட்டி மோதி ஏற்பட்ட காயத்தை நம் கண்களுக்கு காண்பித்து கபால மோச்சம் அடைந்து விடுவார் ஹீரோயின்.

பத்து தெருவிற்கு அங்கிட்டு இருக்கும் பதுங்கு குழியில் அமர்ந்து கொண்டு பக்கோடா சாப்பிடும் வில்லன்களைக்கூட, சாப்பிடும் சத்தத்தை வைத்தே ஹீரோ நெற்றி பொட்டில் சுடுவார், ஆனால் அடியாட்கள், 10 அடி தூரத்தில் கேஸுவலா வரும் ஹீரோக்களை கையில் ஏ.கே 47 வைத்து கொண்டே சுட மாட்டேன் என அடம் பிடிப்பார்கள். அதுவும் சில ஹீரோக்கள் ஏதோ கேடயம் மாதிரி, துப்பாக்கி தாக்குதலிலுருந்து தப்பிக்க உள்ளங்கைகளை மூஞ்சிக்கு நேரா வெச்சிகிட்டே வருவதும் உண்டு.   

வில்லன்கள் பெரும்பாலும் கிளைமாக்ஸில் வெண்ணிற ஆடையில்தான் வருவார்கள். அப்போதுதான்  ஹீரோ வில்லனை சேற்றுல நனைச்சு, சாக்கடையில் முக்கி அடிச்சு, துவைச்சுக் காயப் போடுவது ரிஜிஸ்ட்டர் ஆகும். நல்லவேளை படம் கிளைமாக்ஸ்ல முடிஞ்சிடும்!

சில கிராமத்துப் படங்களில் முண்டா பனியனோடு திரியும் முரட்டு ஹீரோக்கள், அடியாட்களை பொங்கலுக்கு வெச்ச கூரைப்பூ மாதிரி வீட்டு ஓடுகளின் மீது வீசி எறிவார்கள்.சரத்குமார், ராஜ்கிரண் போன்ற சில டபுள் எக்செல் ஹீரோக்கள் அடியாட்களை அப்படியே தூக்கி எறியாமல் லேப்டாப் போன்று மடித்து எறிவார்கள். ஆத்தி பயந்து வருது!

அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, வில்லனோ அடியாளோ, ஹீரோவோட சட்டையில கை வைத்தால்  அன்னைக்கு நமக்கு சிக்ஸ்பேக்ஸ் தரிசனம்னு அர்த்தம்.

இன்னும் நம் ஹீரோக்களில் சிலர், தோட்டாவை தாம்பளத்தை வைத்து தடுப்பது, வெடிகுண்டை கேட்ச் பிடித்து மறுபடியும் எறிவது, கடப்பாரையை கைகளாலேயே நெளிப்பது, தோட்டாவை வாயிலே போட்டு துப்பியே வில்லனை போட்டு தள்ளுவது என இயற்பியலுக்கு புறம்பான சில வினோத யுக்திகளை கையாளுவார்கள்.. நோலன் நொந்துருவாப்ல மாப்ளேஸ்!

நாம் அடிக்கடி இதை பார்த்திருப்போம்... அடியாட்கள் சிலர் ஹீரோ முன்னர் தான் கத்துக்கிட்ட எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸை மொத்தமாக இறக்குவார்கள். அதை முழுவதும் சிரிச்சா போச்சு ரவுண்டு மாதிரி சிரிக்காமல் பார்த்து விட்டு ஹீரோ இறுதியாக அடியாளின் மூஞ்சியில் மொங்கு என குத்து விடுவார்.

கஷ்டப்பட்டு பிடிச்சிட்டு வந்த ஹீரோவை (ஏன்னா? தப்பிச்சு போன புலி கூட மாட்டிரும்.. ஆனா ஹீரோ, ரொம்பக் கஷ்டம்) பட்டுனு சுட்டு கொல்லாம, “ நீ சீக்கிரம் சாகக் கூடாது; துடிதுடிச்சு சாகணும். அப்புறம் உன் நண்பன் ஆக்ஸிடண்ல சாகல... நான்தான் கொன்னேன்” னு பிளாக் அண்டு ஓயிட்ல படம் காட்டி சுயநினைவு இல்லாமல் கிடந்த ஹீரோவை சுரண்டி விட்டு சுளுக்கெடுக்க வெச்சிடுவாய்ங்கே!

ஹீரோவும் வில்லனை சாமான்யத்துல கொல்ல மாட்டாரு ( அட! போங்கய்யா). “இனி மேலாவது மனுசனா வாழு” னு சொல்லிட்டு போற ஹீரோவை, சண்டை ஆரம்பிக்கும் போது கீழ விழுந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு ஹீரோவைக் கொல்ல ஓடி வருவார் வில்லன் . அப்போ, அவ்வளவு நாள் ஹீரோவை கெட்டவன்னு நினைச்சுகிட்டு இருந்த ஜீவன், அவர் நல்ல மனம் புரிந்து குறுக்கப் பாய்ஞ்சு உயிர்த் தியாகம் செய்யும். எத்தனை படத்துல..!

சண்டை ஊர் எல்லையில் இருக்கும் கோயிலுக்கு அருகில் நடந்தால், கண்டிப்பா வில்லனுக்கு சூரசம்ஹாரம்தான்னு வில்லனுக்கே தெரியும்.

இதெல்லாம் முடிஞ்சதும், படம் முழுவதும் பாந்தமா குணச் சித்திர வேடத்துல வந்த ஒருவர்... திடீர்னு போலீஸ் உடையில் “ஹேண்ட்ஸ் அப்” னு சொல்லிட்டு.. தோட்டாவை விட்டத்தப் பார்த்து சுட்டு வீணக்குவாப்ல. ட்விஸ்ட்டாமாம்.

ப.சூரியராஜ்

Just a tool-using animal