Published:Updated:

`ஒவ்வொரு வீட்லயும் நடக்கிற விஷயத்தைத்தான் பட்டிமன்றங்களில் பேசுறேன்' - பேச்சாளர் சாந்தாமணி!

வே.கிருஷ்ணவேணி
`ஒவ்வொரு வீட்லயும் நடக்கிற விஷயத்தைத்தான் பட்டிமன்றங்களில் பேசுறேன்' - பேச்சாளர் சாந்தாமணி!
`ஒவ்வொரு வீட்லயும் நடக்கிற விஷயத்தைத்தான் பட்டிமன்றங்களில் பேசுறேன்' - பேச்சாளர் சாந்தாமணி!

ட்டிமன்றங்களில் கொங்குத் தமிழால் பொளந்துகட்டுபவர், பேராசிரியை சாந்தாமணி. பொள்ளாச்சியில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றங்களில் இவரைப் பார்க்கலாம். தங்கள் வீட்டில் நடக்கும் விஷயத்தின் வழியே இன்றைய சமூகப் பிரச்னைகள் குறித்துப் பேசுபவர்களில் முக்கியமானவர். ஒரு மதிய இடைவேளையில் அவரிடம் பேசினோம். 

''நீங்கள் மேடைப் பேச்சாளரானது எப்போது?'' 

''இன்றுவரை மேடைகளில் தயக்கமில்லாமல் பேசுவதற்குக் காரணம், என் ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியை. நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, என் தோழி ஒருத்தி கவிதைப் போட்டிக்காக கவிதை எழுதினாள். ஆனால், அவளுக்கு மேடையேறி படிக்க அவ்வளவு தயக்கம். அதனால், அவளுடைய கவிதையை நான் மைக்ல வாசிச்சேன். அதைப் பார்த்த தமிழாசிரியை, ''நீ நல்லா வாசிக்கிறே. நீயே மேடைப் பேச்சுக்குத் தயாராகலாம்'னு சொன்னார். கூட இருந்த தோழிகளும் ஊக்கப்படுத்தினாங்க. பிறகு ஒவ்வொரு மேடைப் பேச்சுப் போட்டிகளுக்கும் என் பெயரைப் பரிந்துரைக்க, அப்படி ஆரம்பிச்சது. 12-ம் வகுப்பு வந்தபோது, கொஞ்சமும் தயக்கமில்லாமல் மேடைகளில் பேச ஆரம்பிச்சுட்டேன்.'' 

''கல்லூரிப் படிப்பை தமிழிலேயே முடிக்க மேடைப் பேச்சுதான் காரணமா?'' 

''நிச்சயமா! நான் எம்.ஏ, எம்.எடி, எம்.ஃபில் தமிழ் முடிச்சிருக்கேன். இந்தப் படிப்புக்காக நான் பட்ட பாடு இருக்கே. நான் பாலிடெக்னிக்தான் படிக்கணும்னு அப்பா ஒரே பிடிவாதமாக இருந்தார். தமிழ்க் கல்லூரியில்தான் படிப்பேன்னு நான் உறுதியாக நின்றேன். கல்லூரித் திறப்புக்கான நாளும் நெருங்கிட்டே இருந்துச்சு. 'இனிமேலும் அப்பாவின் பதிலுக்காகக் காத்திருந்தா எந்தக் கல்லூரியிலும் சேர முடியாது'னு தெரிஞ்சுப்போச்சு. அதனால், அப்பாகிட்ட சொல்லாமலே கோவை, பேரூரில் இருக்கும் ராமலிங்கனார் அடிகளார் கல்லூரியில் பி.ஏ. தமிழ்த் துறையில் சேர்ந்துட்டேன். அப்புறம்தான் அப்பாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.'' 

''கல்லூரி படிக்கும்போது உங்களை அடையாளம் காட்டிய பட்டிமன்ற பேச்சு எது?'' 

''குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த அந்தப் பட்டிமன்றத்தை மறக்க முடியாது. அதுதான் சாந்தாமணி என்கிற பெண்மணியைப் பலருக்கும் அடையாளம் காட்டுச்சு. 'உடனடியாக இணைக்கவேண்டியது சமுதாயமா, சமூக நிறுவனங்களா?' என்கிற தலைப்பு அது. அதில் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அந்தப் பட்டிமன்றத்தில் பேசவேண்டிய குருவம்மா என்கிறவர் திடீர்னு வரமுடியாத சூழல். குன்றக்குடி அடிகளாரே என் பெயரை பரிந்துரை செய்ய, உடனடியாகப் பேசணும். சட்டுனு நோட்ஸ் எடுத்துக்கிட்டு பேச ஆரம்பிச்சுட்டேன். இது நடந்தது 1981. அந்தப் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.'' 

''பிறகு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பேசி இருக்கீங்களா?'' 

''ஆமாம். அவர் தலைமையிலும், கீரன் அவர்கள் தலைமையிலும் நிறையப் பட்டிமன்றங்களில் பேசினேன். என் கல்லூரிப் பேராசிரியர்கள் பலரும் அவங்க பேசவேண்டிய இடங்களில் எல்லாம் என்னை அனுப்பி வாய்ப்பு கொடுத்தாங்க. அப்படி பல புதிய அனுபவங்கள் கிடைச்சது. நாற்றம்பாளையம் இளம் கீரனார் தலைமையில், புலவர் ஜானகி அவர்கள் தலைமையில் எனப் பேசியிருக்கேன். 1978-ல் பள்ளியில் ஆரம்பிச்சது, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியாச்சு.'' 

''நீங்கள் பேசும் பெரும்பாலான பட்டிமன்றங்களில், உங்கள் குடும்பத்தை தாக்குவதுபோல இருப்பது ஒரு டிரிக்கா?'' 

''டிரிக்‌ஸ் எதுவுமில்லை. நம் ஒவ்வொருவரின் வீட்டைப் பார்த்தாலே தெரியும். சமூகம் என்பது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பழக்கவழக்கங்கள் மாறுபடலாம். ஆனால், பிரச்னைகள் ஒரே மாதிரிதான் இருக்கும். என் வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களை எடுத்துச் சொல்லும்போது, பலருக்கு அவங்க வீட்டிலும் அது நடப்பதால் ஈஸியா புரியுது. நான் ஸ்கூலுக்குக் கிளம்பும்போது எப்படி அரக்கப்பரக்க போறேனோ, அப்படித்தான் பெரும்பாலான பெண்கள் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பறாங்க. கணவர், குழந்தைகள் என அவங்க தேவைகளைக் கவனிச்சுட்டு, சரியாகூட சாப்பிடாமல் வேலைக்கு ஓடும் பெண்கள் அதிகம். அதேபோல, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் பல விஷயங்களை நிறைவேற்றும் பொறுப்பும் பெண்களுக்கே வருது. அந்த விஷயங்களையே என் பேச்சில் எடுத்துச் சொல்றேன்.'' 

''உங்கள் மாமியார், கணவரை குறிப்பிட்டுப் பேசும்போது வீட்டில் கோவிச்சுக்க மாட்டாங்களா?'' 

''என் மாமியார் நான் பேசும் ஒவ்வொரு பட்டிமன்றத்துக்கும் உதவியாக இருப்பாங்க. இந்த பாயின்டைச் சேர்த்துக்கோ, இந்த இடத்தில் இப்படி பேசினால் நல்லா இருக்கும்னு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்காங்க. அவங்களை அதாவது மாமியார்களைத் திட்ட டிப்ஸ் கொடுக்கிறதே அவங்கதான். என் கணவரும் அப்படித்தான். நான் வெளியூரில் பேச போகும்போது டிக்கெட்ல ஆரம்பிச்சு எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்துச் செய்வார். சரியானப் புரிதல் இருந்தால் போதுங்க. வீட்டில் பிரச்னைகளுக்கு இடமே இருக்காது'' என்றார் சாந்தாமணி.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.