நம்மூர் நயன்தாரா முதல் பாலிவுட் அனுஷ்கா ஷர்மா வரை... ஹீரோயின் டூ புரொடியூசர் பட்டியல்!

ஹீரோக்களைத் தொடர்ந்து, ஹீரோயின்கள் பலரும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் முனைப்பில் இருக்கிறார்கள். பலர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இயங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் இது!

நம்மூர் நயன்தாரா முதல் பாலிவுட் அனுஷ்கா ஷர்மா வரை... ஹீரோயின் டூ புரொடியூசர் பட்டியல்!

ரு படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனாலும், ஃபிளாப் ஆனாலும் லாபமடைவதும் பாதிக்கப்படுவதும் தயாரிப்பாளர்கள்தான். சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு பல சவால்கள் இருக்கின்றன. இன்னொரு தயாரிப்பாளரின் படத்தில் பல நிர்பந்தத்தோடு நடிப்பதற்குப் பதில் நாமே படத்தைத் தயாரிக்கலாமே எனப் பல ஹீரோக்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளனர். தொடர்ந்து, ஹீரோயின்கள் பலரும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி ஹீரோயினாக இருந்து தயாரிப்பாளர் ஆனவர்களின் பட்டியல் இது!

அனுஷ்கா ஷர்மா : 
 

அனுஷ்கா ஷர்மா

2008-ஆம் ஆண்டில் 'ரப்னே பனா தி ஜோடி' மூலம் முதல் படத்திலேயே ஷாரூக் கானுக்கு ஜோடியாக அறிமுகமானவர், அனுஷ்கா ஷர்மா. வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கும் இவர், அமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் எனப் பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். பிறகு, தான் நடித்த 'NH 10' படத்தின் மூலமாக 'கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். பின், 'ஃபில்லெளரி', 'பரி' எனத் தன்னை மையப்படுத்திய கதைகளை மட்டும் தயாரித்து வருகிறார், அனுஷ்கா ஷர்மா.  

பிரியங்கா சோப்ரா :

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, தற்போது யுனிசெஃப் அமைப்பின் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், ஹாலிவுட் படங்களிலும், அமேரிக்க சீரிஸ்களிலும் பிஸியாக இருக்கும் இவருக்கு மராத்தி, அஸாமி படங்கள் மீது ஆர்வம் அதிகம். 'பர்பிள் பெப்பில்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி மராத்தி, அஸாமி, போஜ்பூரி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இதுவரை ஒன்பது படங்களைத் தயாரித்துள்ளார். 

தீபிகா படுகோன் : 

தீபிகா படுகோன்

கன்னடப் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார், தீபிகா படுகோன். பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் தீபிகா, கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அந்தக் கேரக்டரில் பொருத்தமாக நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் தலைக்காட்டி வரும் தீபிகாவுக்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்க வேண்டும் என்பதில் ஆசை. அதனால், அதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். 

நயன்தாரா :

நயந்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறு பட்ஜெட் படங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். 'அறம்' படமே நயன்தாரா தயாரித்ததுதான் என்ற செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தானே ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து நல்ல கதைகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். 

ஸ்ருதி ஹாசன் : 

ஹீரோயின் ஸ்ருதி ஹாசன்

பாடகி, நடிகை, இசையமைப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஸ்ருதி ஹாசனுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. வித்யுத் ஜம்வாலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 'லென்ஸ்' படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் இராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் 'தி மஸ்கிட்டோ பிலாஸபி' என்ற படத்தைத் தனது 'இஸிட்ரோ மீடியா' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடவிருக்கிறார். இதே நிறுவனத்திற்காக ஸ்ருதி கூடிய விரைவில் ஒரு படத்தைத் தயாரித்து நடிக்கவிருக்கிறார்.   

காஜல் அகர்வால் : 

காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு எனப் பிஸியாக இருந்த காஜல் அகர்வாலுக்கும் இப்போது சரியான பட வாய்ப்புகள் இல்லை. 'குயின்' ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சினிமாவைத் தவிர்த்து, சொந்தமாக பிஸினஸ் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்த காஜலுக்கு, இப்போது தயாரிப்பில் ஆர்வம் வந்திருக்கிறது. இதனால், தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரிக்கவும் இருக்கிறார்.

நஸ்ரியா :

நஸ்ரியா

தமிழிலும் மலையாளத்திலும் 'சார்மிங்' பெண்ணாக இருந்து ரசிகர்களைக் கவர்ந்த நஸ்ரியா, ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பிற்குப் பை பை சொன்னார். சிறிய இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருப்பவர், அஞ்சலி மேனன் இயக்கத்தில் 'கூடே' என்ற படத்தில் நடித்து வருகிறார். தவிர, தன் கணவர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் 'வரதன்' என்ற படத்தையும், அறிமுக இயக்குநர் ஒருவரின் 'கும்பலங்கி நைட்ஸ்' என்ற படத்தையும் தயாரிக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!