`அனாடமி ஆஃப் எ....?!' - கௌதம் மேனனின் வைரல் வெப் சீரிஸ்

இது முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனோட பரிணாம வளர்ச்சி. நிச்சயமா இதுபோல ஒரு கதாபாத்திரத்தை வாழ்நாள்ல எல்லாரும் பார்த்திருப்போம். ஒவ்வோர் ஆணுக்கும் அவனையே பார்ப்பதுபோல இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ரொம்பப் பரிச்சயமான ஆண் நபரைப் பார்ப்பதுபோல உணரவைக்கும்.

`அனாடமி ஆஃப் எ....?!' - கௌதம் மேனனின் வைரல் வெப் சீரிஸ்

கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் வர்ணிக்கப்படும் கதாபாத்திரங்கள் யாவும் நுனி நாக்கில் ஆங்கிலம் தவழும்படி இருந்தாலும், தனது `ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூடியூப் பக்கத்தில் `கூவ', `உளவிறவு', `போதை கோதை' இப்படி தமிழ்ப்பெயர்களைத் தேடித் தேடி வைத்து நம்மை தமிழ் அகராதியைப் புரட்டிப்பார்க்கவைத்தவர். இனி மலையாள அகராதியையும் புரட்டச் செய்யப்போகிறார். `அனாடமி (Anatomy) ஆஃப் எ காமுகன்' எனும் வெப் சீரிஸ் மூலம், மலையாளத்திலும் தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளார் கெளதம் மேனன்.

கௌதம்

தற்போதுள்ள தலைமுறையினருக்கு, சமூகவலைதளம் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாகிவிட்டது. தங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதிலிருந்து, தேவையான பொருள்களை வாங்குவது வரையில் அனைத்தும் வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதில் முக்கியமான ஒன்று, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். `சுடுநீர் போடுவது எப்படி?' என்பது முதல் `தலைமுடி சிக்கலை எப்படி வலிக்காமல் எடுப்பது?' என்பது வரை காணொளிகளின் அலப்பறைகள் எண்ணிலடங்காதவை. அந்த வரிசையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது `வெப் சீரிஸ்'. 

தொலைக்காட்சி சீரியல்களுக்கே பெரும் டஃப் கொடுத்துக்கொண்டிருக்கின்றன இந்த வெப் சீரிஸ்கள். ஒவ்வொரு வாரமும் பல ஃபன் சமாசாரங்களைக்கொண்டிருக்கும் இவை, மக்களை அதிகம் ஈர்த்துள்ளன. சர்வதேச அளவில் தொடங்கி, தற்போது இந்தியாவிலும் பலரால் வரவேற்கப்பட்டிருக்கின்றன. திரைத்துறையில் ஆர்வமுள்ள ஏராளமான திறமையாளர்களுக்கு இதன் மூலமாக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. நடிப்பு, இயக்கம், வசனம், இசை, பாடல் இப்படி ஏகப்பட்ட வித்தியாசப் படைப்புகள் நாளுக்குநாள் வலைதளங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் `அனாடமி ஆஃப் எ காமுகன்' வெப் சீரிஸின் இயக்குநர் அமல் தம்பியிடம் பேசினேன்...

``இதுக்கு முன்னாடி படங்கள் ஏதாவது இயக்கியிருக்கீங்களா?"

``சொந்த ஊரு கேரளானாலும் படிச்சதுலாம் சென்னையிலதான். 2014-ல சர்வதேசத் திரைப்பட விழாவுல நான் இயக்கிய `I am 22' குறும்படத்தை வெளியிட்டேன். எல்லோராலும் அதிகம் பேசப்பட்ட படமா அது இருந்துச்சு. அதுக்கு அப்புறம் இயக்குநர் ரசு ரஞ்சித் இயக்கத்துல கூடியசீக்கிரம் ரிலீஸ் ஆகப்போற `தீதும் நன்றும்' படத்துல இணை இயக்குநரா வேலைபார்த்திருக்கேன். இப்போ இந்த வெப் சீரிஸ்." 

Making of Anatomy of Kaamukan

``கௌதம் மேனனுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் எப்படியிருந்தது?"

``குறும்படங்களோட ட்ரெண்டு போய் இப்போ வெப் சீரிஸ் ட்ரெண்ட் வந்தாச்சு. கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்ல. அதனால, வெப் சீரிஸுக்கு ஏத்த ஸ்க்ரிப்ட் தயார்செஞ்சோம். அப்போதான் நண்பர் ஒருவர் மூலமா கவுதம் சாரோட அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட எங்களோட முழு வேலைப்பாடுகளையும் காட்டினோம். அதெல்லாம் பார்த்துட்டு ரொம்பவே சந்தோஷமாகிட்டார். பண்ணலாம்னு சொன்னதும் நாங்களும் உற்சாகமாகிட்டோம். இப்படித்தான் எங்களோட பயணம் ஆரம்பிச்சுது."

Amal Thamby``அதென்ன `அனாடமி ஆஃப் எ காமுகன்'?"

``இது முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனோட பரிணாம வளர்ச்சி. நிச்சயமா இதுபோல ஒரு கதாபாத்திரத்தை வாழ்நாள்ல எல்லாரும் பார்த்திருப்போம். ஒவ்வோர் ஆணுக்கும் அவனையே பார்ப்பதுபோல இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ரொம்பப் பரிச்சயமான ஆண் நபரைப் பார்ப்பதுபோல உணரவைக்கும். `இவ்வளவு ஈகோ ஒருத்தருக்குக் கூடாது'னு முன்பாதியில சொன்னா, `இவ்வளவு பாசக்காரப் பையனா!'னு பின்பாதியில சொல்லவைக்கும். பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஜூலை 20-ல இருந்து உங்களைத் தேடி வரப்போறான். இது 10 நிமிட எபிசோடுதான். அதுமட்டுமில்ல, இது ஒரு Non-Linear சப்ஜெக்ட்டும்கூட" என்றார் அமல் தம்பி.

சமீபகாலமாக வித்தியாசம் மட்டுமின்றி ட்ரெண்டிங் படைப்புகளை யூடியூப் மூலமாகக் கொடுத்துக்கொண்டிருக்கும் கௌதம் மேனன், தற்போது மலையாள உலகத்தில் காலடி எடுத்துவைத்திருப்பது மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!