Published:Updated:

52 புதுமுகங்கள்..வழுக்கைத் தலைப் பிரச்னை பேசும் படம்.. இன்னும் என்னென்ன? #RegionalMovies

பா.ஜான்ஸன்
52 புதுமுகங்கள்..வழுக்கைத் தலைப் பிரச்னை பேசும் படம்.. இன்னும் என்னென்ன?  #RegionalMovies
52 புதுமுகங்கள்..வழுக்கைத் தலைப் பிரச்னை பேசும் படம்.. இன்னும் என்னென்ன? #RegionalMovies

இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஜானர். 52 புதுமுகங்களை வைத்து தயாராகியிருக்கும் படம், வழுக்கைத் தலைப் பிரச்சனையால் அவதிப்படும் ஒருவனின் கதை, மகளை இங்கிலிஷ் மீடியத்தில் சேர்க்க நடக்கும் முயற்சிகள் வைத்து ஒரு படம், இதனுடன் பிஜு மேனன் நடிக்கும் இயல்பான படம் என சுவாரஸ்ய களங்களில் நம்மை மகிழ்விக்க தயாராக இருக்கிறது. அதைப் பற்றிய அறிமுகங்கள் கீழே;

ஹிமாலயத்திலே கஷ்மாலன் :

'அங்கமாலி டைரீஸ்' படம் போல மீண்டும் புதுமுகங்களோடு களம் இறங்கியிருக்கிறது 'ஹிமாலயத்திலே கஷ்மாலன்' படக் குழு. 52 புதுமுகங்களுடன் தயாராகியிருக்கும் இப்படத்தை அபிராம் சுரேஷ் உன்னிதன் இயக்கியிருக்கிறார். படத்தின் டேக் லைனே, 'நிறைய முட்டாள்களின் கதை' என்பது தான். ஒருவன் பிரச்னையில் மாட்டிக் கொள்ள, நண்பர்கள் மூன்று பேர் அவனைக் காப்பாற்றுகிறார்கள். அதனால் ஏற்படும் சில பாதிப்புகள் பலரை பிரச்னையில் மாட்டிவிடுகிறது என்பது தான் ப்ளாட். மே மாதம் படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.

ரக்‌ஷதிகாரி பைஜு :

'வெள்ளிமூங்கா', 'லீலா', 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என பிஜு மேனனின் படத்தேர்வு எப்போதும் வித்தியாசமாக இருக்கும். இந்த முறையும் அப்படித்தான். பாசனத் துறை ஊழியரான பைஜு ரோலில் நடித்திருக்கிறார் பிஜு. தினமும் அவன் பயணிப்பதும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் என எளிமையான விஷயம்தான் படத்தின் கதை. மோகன் லால் நடித்த 'போட்டோகிராஃபர்' படத்தை இயக்கிய ராஜன் பிரமோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் ஏப்ரல் 21ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஒன்டு மொட்டேயா கதே :

மலையாளம் போல கன்னடத்திலும் இயல்பு சினிமாக்கள் தயாராக ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இந்த டிரெய்லர் பக்கா உதாரணம். 'லூசியா', 'யூ-டேர்ன்' படங்களை இயக்கிய பவன் குமார் தயாரித்திருக்கும் படம் 'ஒன்டு மொட்டேயா கதே'. வழுக்கைத் தலை கொண்ட ஒரு கன்னட லெக்சரர், தன் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். அவரின் வழுக்கைத் தலை காரணமாக பெண் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. கூடவே கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் வருகிறது. உண்மையான அன்பைத் தேடிப் புறப்படும் அவரின் பயணம்தான் படம். படத்தின் கதை எழுதி இயக்கி தானே நடித்தும் இருக்கிறார் ராஜ் பி ஷெட்டி. நியூயார்கில் நடக்கும் திரைப்பட விழாவில் மே 6ம் தேதி வெளியாகிறது படம். அதைத் தொடர்ந்து தியேட்டரிலோ, வீடியோ ஆன் டிமாண்ட் வழியாகவோ படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஹிந்தி மீடியம் :

'பியார் கி சைட் எஃபக்ட்ஸ்', 'ஷாதி கி சைட் எஃபக்ட்ஸ்' படங்களை இயக்கிய சகேத் சௌத்ரியின் அடுத்த படம் 'ஹிந்தி மீடியம்'. சாந்தினி சௌக்கில் வசிக்கும் மிடில் கிளாஸ் தம்பதி இர்ஃபான் கான் - சபா. தங்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக டெல்லியின் எலைட் பகுதிக்குச் செல்கிறார்கள். வசதியான வாழ்க்கைக்காக அவர்கள் செய்யும் முயற்சிகளும், தங்கள் மகளுக்கு இங்கிலிஷ் மீடியம் ஸ்கூலில் அட்மிஷன் வாங்கும் முயற்சிகளுமாக நீள்கிறது படத்தின் கதை. படம் மே 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

இவை தவிர இந்த வாரம் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகும் 'நூர்', ரவீணா டான்டன் நடித்திருக்கும் 'மாட்ர்', ஜாக்கிசான் நடித்திருக்கும் 'ரெயில்ரோட் டைகர்ஸ்' ஆகிய படங்களும் சுவாரஸ்யத்துக்கு எந்தக் குறையும் வைக்காது. இது போல நீங்கள் எதிர்பார்க்கும் படங்களை கமெண்ட் செய்யலாமே பாஸ்!

பா.ஜான்ஸன்