வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (06/03/2018)

கடைசி தொடர்பு:17:58 (06/03/2018)

''தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் உதவி தேவை, கந்துவட்டிக் கொடுமை அல்ல!" - இறுதி அத்தியாயம்

புல் > மான் > சிங்கம்... இப்படி ஒரு உணவுச்சங்கிலி போலத்தான் தமிழ்சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சிலரே இங்கே ஃபைனாஸ்சியர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் தொடரும் நிலை இருக்கும்வரை, கந்துவட்டி ஹீரோவா, வில்லனா என்று விவாதிக்கும் ஒரு நிலை நீடித்துக்கொண்டுதான் இருக்கும். 

தயாரிப்பாளர் ஒருவர், இந்தச் 'சங்கிலி'யில் சிக்கும் தயாரிப்பாளர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை விவரித்தார். "தயாரிப்பாளருக்கு  ஃபைனான்ஸ் கொடுத்த ஒருவர், ஏற்கெனவே தன்னிடம் கடன் வாங்கி நஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளரிடம் பணம்பெற, ஒரு பெரிய படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணச் சொல்வார். அதுக்குத் தேவையான பணத்தையும் சம்பந்தப்பட்ட ஃபைனான்ஸியரே கொடுப்பார். இப்போ, கடன் பெற்ற தயாரிப்பாளரின் நிலை எப்படி இருக்கும்? ஏற்கெனவே வாங்கிய கடன், புதிதாகப் பெற்ற கடன்... இதுக்கிடையில, அந்தத் தயாரிப்பாளருக்குப் பெரிய படத்தை வாங்கிக்கொடுத்த ஃபைனான்ஸியர், 'பிசினஸ் கமிஷன்' என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்வார். அந்தப் பெரிய படம் எவ்வளவு லாபமாக இருந்தாலும், அந்தத் தயாரிப்பாளருக்குக் கிடைக்கப்போவது பெற்ற கடனில் கணிசமான தொகை குறைவது மட்டுமே! 

உதாரணத்திற்கு, ஃபைனான்ஸியருக்குத் தரவேண்டிய 5 கோடி ரூபாய்க்குப் பதிலாக, புதிய படம் ஒன்றை வாங்கி ரிலீஸ் செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைத் தரச் சொல்கிறார், ஃபைனான்ஸியர். கடன் பெற்ற தயாரிப்பாளரும் எக்ஸ்ட்ரா 10 கோடி ரூபாயை ஃபைனான்ஸியரிடம் கடனாகப் பெற்றுக்கொண்டு, அந்தப் பெரிய படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார். கணிசமான லாபம் வருகிறது. ஆனால், அந்த லாபத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை, ஃபைனாஸியருக்கு 'கமிஷன்' என்ற பெயரில் சென்றுவிடுகிறது. மீதம் இருக்கும் தொகையை ஏற்கெனவே கொடுத்த கடன், புதிதாகப் பெற்ற கடன்... என எடுத்துக்கொள்வார், ஃபைனான்ஸியர். வரும் லாபத் தொகையால் ஏற்கெனவே இருந்த பழைய கடன் கழிக்கப்பட்டு, புதிய கடன் அந்தத் தயாரிப்பாளருக்கு உண்டாகியிருக்கும். சரி... இதில், வாங்கி ரிலீஸ் செய்த அல்லது கடனை அடைக்க ஒரு கடன் பெற்று படம் தயாரித்த அந்தத் தயாரிப்பாளருக்கு என்ன லாபம்? 'லைம்லைட்டில் இருக்கும் தயாரிப்பாளர்' என்ற பெயர் மட்டும்தான். இந்தப் பெயர் இருக்கும்பட்சத்தில், அந்தத் தயாரிப்பாளருக்கு மீண்டும் எளிமையாக ஃபைனான்ஸ் கிடைக்கும், படம் எடுப்பார், லாபம் சம்பாதித்தால் சந்தோஷமா இருப்பார்.

கந்துவட்டி தொடர் இறுதி அத்தியாயம்

ஆனால், இது எல்லாமே உருவாக்கும் படம் 'லாபமாக' இருந்தால் மட்டுமே! தோல்வி அடைந்தால், 'சிங்கம்' இடத்திற்கு உயர்ந்த தயாரிப்பாளர் மீண்டும் 'புல்' இடத்திற்கு வந்துவிடுவார். இந்தச் சங்கிலியை உடைக்கும் நிலையை உருவாக்கவேண்டியது தயாரிப்பாளர்கள் கையில் மட்டுமில்லை, நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படைப்பாளிகள்... என சினிமாவை முழுமூச்சாகக் கொண்டு வாழும் அனைவருக்குமே இருக்கிறது.

கியூப், யு.எஃப்.ஓ டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்திற்காக, 'திரைப்படங்களை வெளியிடமாட்டோம்' என ஸ்டிரைக் நடத்திப் போராடும் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளிடம் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லிப் பேசமாட்டார்கள். தியேட்டர் > சாட்டிலைட் ரைட்ஸ் > ஃபாரீன் ரைட்ஸ்... எனக் காலம் காலமாக நம்பிக்கொண்டிருக்கும் வியாபார சூழலைத் தாண்டி வெளியே வரமாட்டார்கள். குறைந்த பட்ஜெட், தரமான படம் என்ற முடிவுகளையெல்லாம் ஒருபோதும் எடுக்கமாட்டார்கள்... இப்படிப் பல பிரச்னைகளையும் கலையும்போதுதான், தமிழ்சினிமாவில், 'கந்துவட்டி ஹீரோவா, வில்லனா?' என்ற விவாதம் ஒழிந்து, 'கந்துவட்டி தேவையா, தேவையில்லையா?' என்ற விவாதம் தொடங்கும். 

அல்லது... முறைப்படுத்தப்பட்ட ஃபைனான்ஸ் சிஸ்டம் இங்கே வேண்டும். இதை மற்றொரு தயாரிப்பாளர் ஒருவர் தெளிவாக விளக்கினார். 'ஒரு கோடி ரூபாய்க்குப் படம் எடுக்கும் நிலை இருந்தால், அதில் பாதித் தொகையை ஃபைனான்ஸ் பெற்றுக்கொள்கிறோம். அந்தப் பணத்திற்கு வட்டி, வட்டிக்குமேல் வட்டி என்ற நிலையில்லாமல், நியாயமான தொகையை முன்கூட்டியே நிர்ணயித்துக்கொண்டு, 'ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தைத் திருப்பித் தரவேண்டும்' என்ற ஒப்பந்தத்தோடு, ஃபைனான்ஸ் பெறலாம். ஒரு திரைப்படம் பாதியில் நிற்கும்போது, கந்துவட்டிக்கான 'ஜெட் வேக'மும் பாதியில் நிற்க வேண்டும். அது இங்கே நடப்பதில்லை. இந்தக் கந்துவட்டிப் பிரச்னையை முழுமையாகத் தடுக்க ஒரேவழி, ஃபைனான்ஸ் என்பதை ஒரு வங்கி அமைப்புபோல செயல்படச் செய்து, சினிமாவில் அதை முறைப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக மாற்றுவதுதான். ஏனெனில், தயாரிப்பாளருக்கு ஃபைனான்ஸ் என்பது, 'உதவி'யாகத் தேவையே தவிர, 'கந்துவட்டி' கொடுமையாக அல்ல!" என்கிறார். 

கந்துவட்டி இறுதி அத்தியாயம்

இது, குறிப்பிட்ட ஒரு தயாரிப்பாளருக்கானது மட்டுமல்ல... ஒட்டுமொத்த சினிமா தயாரிப்பாளர்களுக்குமான தேவை. இத்தொடரில் இதுவரை பேசியவை என்னென்ன... குறும்படங்களையே வியாபாரமாக மாற்றிக்கொள்ளும் இணையச் சூழலில், திரைப்படங்களையும் அதற்காக உலகமெங்கும் இருக்கும் அனைத்துவிதமான சந்தைகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உருவாகும் ஒரு திரைப்படத்தை, சப் டைட்டிலிங் செய்து ஏதோ ஒரு வகையில் உலகின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். 'தரமான' திரைப்படங்களை உருவாக்கும்போது, உலகெங்கும் நடக்கும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி, அதற்கான அங்கீகாரத்தையும், படத்திற்கான வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும். பாலிவுட்டில் பயன்படுத்தப்படும் முன்கூட்டிய திட்டமிடலை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும்.

இப்படியாக, திரைப்பட உருவாக்கம், வியாபாரம், அங்கீகாரங்கள்... என அனைத்திலும் இருக்கும் 360 டிகிரி வாய்ப்புகளையும் தீவிரமாகப் பயன்படுத்தும்போது, ஃபைனான்ஸியர்கள் தேவையில்லை என்ற நிலை வரும். அதுவரை, 'தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் 'உதவி'யாகத் தேவையே தவிர, 'கந்துவட்டி' கொடுமையாக அல்ல!' என்ற வாதத்திற்கு, ஓர் ஆரோக்கியமான சூழலைக் கொடுக்க வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்