Published:Updated:

``ஜோஃப்ரியின் பாசாங்கு, டிரியனின் நம்பிக்கை, ஒயிட் வாக்கர்ஸ் படை...'' - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்: அத்தியாயம் 5

தார்மிக் லீ
``ஜோஃப்ரியின் பாசாங்கு, டிரியனின் நம்பிக்கை, ஒயிட் வாக்கர்ஸ் படை...'' - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்: அத்தியாயம் 5
``ஜோஃப்ரியின் பாசாங்கு, டிரியனின் நம்பிக்கை, ஒயிட் வாக்கர்ஸ் படை...'' - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்: அத்தியாயம் 5

சென்ற அத்தியாயத்தில் ஸ்டானிஸ் பராத்தியனின் அறிமுகம் தொடங்கி, கிங்ஸ் லேண்டிங்க் நோக்கிப் போர் தொடுத்தது வரை பார்த்தோம். ஸ்டானிஸ் பராத்தியன் அவருடைய கொடி பறக்கும் கப்பலோடும், போர் முழக்கத்தோடும் கிங்ஸ் லேண்டிங்கைக் கைப்பற்ற ஆக்ரோஷமாக வந்துகொண்டிருந்த சமயத்தில், ஒரே ஒரு கப்பல் மட்டும் கிங்ஸ் லேண்டிங்கில் இருந்து வந்துகொண்டிருந்தது. அது என்ன என்பதில் ஆரம்பித்து, மற்றவர்களின் கதையையும், கேம் ஆஃப் த்ரோன்ஸ் இரண்டாம் சீஸனின் முடிவையும் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

டிரியன், ஹேண்ட் ஆஃப் கிங்காகப் பதவியேற்ற பின் அரசவையைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருப்பார். அப்போது செர்சி லானிஸ்டர் 'Napalm' என்ற கெமிக்கலைப் பயன்படுத்தி வெடிகுண்டு மருந்துகளைத் தயாரித்துக்கொண்டிருப்பது தெரியவரும். ரகசியமாக அதிகளவில் தயாராகிக்கொண்டிருக்கும் அந்த வெடிமருந்துகளைப் பார்க்கும் டிரியன், ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிடுவார். இதை இப்போது சொல்லக் காரணம் இருக்கிறது. ஸ்டானிஸின் கப்பல்கள், கிங்ஸ் லேண்டிங்கை நோக்கிப் போருக்கு வந்துகொண்டிருந்தபோது, டிரியன் சார்பாக கிங்ஸ் லேண்டிங்கிலிருந்து ஒரேயொரு கப்பல் மட்டும் வந்துகொண்டிருப்பதைச் சொன்னேன் அல்லவா... அந்தக் கப்பல் முழுவதும் அந்தப் பச்சை நிற வெடிமருந்துகளால் நிரப்பட்டிருக்கும். ஸ்டானிஸ் பராத்தியனின் கப்பல்கள் கிங்ஸ் லேண்டிங்கை நெருங்கியவுடன் ஒரு விநாடியில் அனுப்பிய வெடிமருந்தைக் கப்பலோடு வெடிக்கவைத்துவிடுவார், டிரியன். 

இதனால் கோபமடையும் ஸ்டானிஸ், மேலும் வீரர்களை கிங்ஸ் லேண்டிங் நுழைவு வாயிலுக்கு அருகே அனுப்பிவைப்பார். டிரியனோ வெடிமருந்துகள் அனுப்பியதைத் தொடர்ந்து, அம்பு மழைகளை ஸ்டானிஸ் போர் வீரர்கள்மேல் பொழியச் செய்வார். இருப்பினும் அனைத்தையும் சமாளித்து கிங்ஸ் லேண்டிங்கிற்குள் நுழைந்துவிடுவார்கள், ஸ்டானிஸின் போர் வீரர்கள். கட்டுக்கட்டாக வரும் ஸ்டானிஸின் போர் வீரர்களை எதிர்த்துப் போர் வீரன் ஹவுண்ட், லென்சல் லானிஸ்டர், டிரியன் லானிஸ்டர், ப்ரான் என அனைத்துப் போர் வீரர்களும் சண்டையிட்டுக்கொண்டிருப்பார்கள். நடுநடுவே சண்டையிடுவதுபோல் ஜோஃப்ரி பராத்தியன் மிகுந்த பாதுகாப்போடு பாசாங்கு காட்டிக்கொண்டிருப்பார். ஜோஃப்ரி போர்க்களத்தில் இருப்பது தெரியவர, உடனே அவரது இடத்துக்கு அழைத்து வரச்சொல்லி அவரது சகோதரர் லென்சஸ் லானிஸ்டரிடம் உத்தரவிடுவார், செர்சி லானிஸ்டர். போர்க்களத்தில் ஆண்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்க, பெண்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள். தான் இருக்கும் இந்த இடத்திலேயே ஜோஃப்ரி பராத்தியனும் இருக்கவேண்டும் என்று நினைப்பார், செர்சி லானிஸ்டர். 

மீண்டும் போர்க்களத்துக்கு வருவோம். கொஞ்சக் கொஞ்சமாக ஸ்டானிஸ் பராத்தியனின் போர் வீரர்கள் கிங்ஸ் லேண்டிற்குள் நெருங்க, டிரியனின் படைபலம் மெல்ல அவர்களது நம்பிக்கையை இழந்து தோற்றுவிடும் பயத்தில் ஆழ்ந்திருக்கும். ஆனால், நம்முடைய டிரியன்தான் பேச்சில் கில்லியாச்சே?! வீரர்களின் நரம்புகளெல்லாம் மீண்டும் புடைக்கும் அளவுக்குத் தனது பேச்சால் நம்பிக்கையை விதைப்பார். அந்த வெறியோடு, ஸ்டானிஸ் பராத்தியன் வீரர்களுடன் மீண்டும் சண்டையிடத் தொடங்குவார்கள். இருப்பினும் டிரியன் லானிஸ்டருக்குப் பலத்த அடி விழும். அந்த சமயத்தில், கிங்ஸ் லேண்டிங்கில் கால் பதிக்கும் டைவின் லானிஸ்டர், முழுப் போரிலும் தானே சண்டையிட்டதுபோல் பாசாங்கு செய்து அடித்தவர்களையே அடித்துக்கொண்டிருப்பார். ஒரு வழியாக டிரியன் லானிஸ்டரும் போரில் வென்றுவிடுவார். இது நமக்குத் தெரியும். வாங்கிய அடியில் டிரியன் மயங்கிவிட, முழு வெற்றியையும் டைவின் லானிஸ்டர் கொண்டாடிக்கொண்டிருப்பார். எப்படியோ முழுப் போரும் முடிந்துவிடும். 

மறுபக்கம் ஜான் ஸ்நோ, ஒயில்டுலிங்ஸ் இனத்தைச் சேர்ந்த இக்ரிட் என்பவரைச் சிறைபிடித்துப் பயணப்படும்போது, 'ஒயில்டுலிங்ஸின் நிஜமுகம் இதுதான். நீங்கள் எங்களைத் தவறாக புரிந்துவைத்துள்ளீர்கள்' எனத் தன் இன மக்களைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார், இக்ரிட். அந்தப் பயணத்தின்போது ஒயில்டுலிங்ஸிடம், ஜான் ஸ்நோ மாட்டிக்கொள்வார். வின்டர்ஃபெல் இனி நம்முடையதுதான் என்று தியோன் க்ரேஜாய் நினைத்துக்கொண்டிருக்க, ஐயர்ன் ஐலாண்டில் இருந்து பயணப்பட்டு வரும் தியோனின் அக்கா யாரா க்ரேஜாய், 'நீ செய்வது முட்டாள்தனம்' என்று தியோனைத் திட்டி, 'உன்னை நீ நிரூபிக்க வேண்டுமென்றால், அறிவுப்பூர்வமான விஷயங்களைச் செய்யவேண்டும். இப்போ நீ செய்தது முட்டாள்தனம். சீக்கிரம் நீ ஐயர்ன் ஐலாண்டுக்கு வா' என்று திட்டிச் சென்றுவிடுவார். 

முன்பு, காட்டலின் ஸ்டார்க் ப்ரையின் டார்த் என்பவரின் உதவி கேட்டிருப்பார் அல்லவா... அதை வெளிப்படுத்தும் நேரம் ப்ரையின் டார்த்துக்கு வந்திருக்கும். ஸ்டார்க் குடும்பத்திடம் ஜேமி லானிஸ்டர் மாட்டியிருப்பதை முன்பு கூறியிருந்தேன். அவரை விடுவித்து, கிங்ஸ் லேண்டிங்கில் இருக்கும் சான்ஸா ஸ்டார்க்கையும், ஆர்யா ஸ்டார்க்கையும் மீட்க நினைப்பார், கேட்லின் ஸ்டார்க். ஆனால், ஆர்யா அங்கிருந்து தப்பித்ததும், சான்ஸாவின் மனநிலையும் கேட்லினுக்குத் தெரியாது. ஜேமி லானிஸ்டரை கிங்ஸ் லேண்டிங்கில் ஒப்படைக்கும்படி, ப்ரையின் டார்த்துக்கு உத்தரவிட்டிருப்பார், கேட்லின் ஸ்டார்க். அதன்படி, இவரும் கிங்ஸ் லேண்டிங்கிற்கு பயணத்தைத் தொடங்குவார். அதோடு நெட் ஸ்டார்க்கின் மரணத்துக்குப் பலி தீர்க்க, ஃப்ரே குடும்பத்திடம் உதவி கேட்டிருப்பார். 'நாங்கள் உதவவேண்டுமென்றால், எனக்கிருக்கும் பல பெண் குழந்தைகளில் யாரையாவது ராப் ஸ்டார்க் திருமணம் செய்துகொள்ளவேண்டும்' என்ற நிபந்தனை சொல்வார் ஃப்ரே குடும்பத்தின் தலைவர், வால்டர் ஃப்ரே. அதற்கு ஒப்புக்கொள்வார், கேட்லின். ஆனால், ராப் ஸ்டாரக் டலிசா என்பவரிடம் காதல் வயப்பட்டிருப்பார். 

வெஸ்டிரோஸில் இப்படியாக நடந்துகொண்டிருக்கும். எஸ்ஸோஸில் கார்த் மக்களின் உதவி கேட்டுச் சென்றிருக்கும் டினிரேயஸ் டார்கேரியனின் டிராகன்களைக் கைபற்றி, அவரிடம் தன்னைத் திருமணம் செய்துகொண்டால்தான் டிராகன்களைத் தருவோம் என்ற மிரட்டலை முன் வைப்பார், அந்த ஊரின் அரசர். அந்தச் சமயத்தில் அவருக்குப் பாதகம் இல்லாமல் சில சமாளிப்புகளைச் செய்துகொண்டிருப்பார். மறுபக்கம், ஆர்யா ஸ்டார்க்கிற்கு ஏற்பட்ட சிக்கல்களால் முன்பு பயணித்துக்கொண்டிருந்த ஜெண்ட்ரியிடம் விலகி, இவருக்கு அறிமுகமான ஜேக்கன் என்பவரிடம் பயணிக்க ஆரம்பிப்பார். வழியில் அவர் பேசுவதைக் கேட்ட பின், ஆர்யா அவருக்கு உதவும்படி ஜேக்கனிடம் கேட்பார். பிறகுதான் 'Faceless' எனும் அமைப்பிருப்பது ஆர்யாவுக்குத் தெரியவரும். ஆர்யா அடுத்ததாக என்ன செய்யவிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு முன், இந்த அமைப்பைப் பற்றிப் பார்த்துவிடலாம். 

இந்த அமைப்பில் சேரவும், தன்னை 'Faceless'ஆக மாற்றிக்கொள்ளவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இவர்கள் தங்களைத் தானே 'கல்ட்' ரக அமைப்பு என்று சொல்லிக்கொள்வார்கள். மேலும், கொலை செய்வது பாதிக்கப்படுபவர்களுக்குக் கொடுக்கும் சுதந்திரம் என்றும் சொல்லிக்கொள்வார்கள். இந்த அமைப்பு, பிராவோஸ் எனும் இடத்திலிருந்து வந்தது. இவர்களின் கொலை முறை எப்படி, பயிற்சிகள் எப்படி, ஆர்யா ஸ்டார்க் எப்படி இவர்களோடு இணைவார்... போன்ற விஷயங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம். 

இப்போது கதைக்குள் வருவோம். யாருக்கும் தெரியாமல் ஜேமி லானிஸ்டரை விடுதலை செய்ததையடுத்து கோபப்படும் ராப் ஸ்டார்க், இதைக் காரணமாக வைத்துத் தனது அம்மா கேட்லின் ஸ்டார்க்கின் பேச்சை மீறி, காதலித்த டலிசாவைத் திருமணம் செய்துகொள்வார். மறுபக்கம், பீட்டர் பெய்லிஷ் ஓர் அரசியல் திருமணத்தைச் செய்துவைக்கத் திட்டமிடுவார். அது என்னவென்றால், ரென்லி பராத்தியன் இறந்ததையடுத்து டைரல் குடும்பத்தைச் சேர்ந்த மார்கேரி டைரலை, ஜோஃப்ரி பராத்தியனுக்குத் திருமணம் செய்துவைத்தால் டைரல் குடும்பத்தின் ஆதரவு கிங்ஸ் லேண்டிங்கிற்குக் கிடைக்கும் என்று பரிந்துரைப்பார். மார்கேரி அழகில் வசப்படும் ஜோஃப்ரியும், இதற்கு ஒப்புக்கொள்வார். 'எப்படியோ நாம் தப்பித்துவிட்டோம்' என்று சான்ஸா ஸ்டார்க் சந்தோஷத்தில் இருப்பார். 

இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், டிரியன் லானிஸ்டருக்கு நடந்தது அனைத்தும் தெரியவரும். டிரியன் தன்னுடைய ஹேண்ட் ஆஃப் கிங் பதவி பறிபோனது, தன் தந்தை டைவின் லானிஸ்டர் புதிய ஹேண்ட் ஆஃப் கிங்காகப் பதவியேற்றது, இவர் படைத் தளபதியாகப் பதவியேற்ற ப்ரான்னைப் பதவி விலக்கியது போன்ற அனைத்தும் டிரியனுக்குத் தெரிந்தவுடன், இவ்வளவு கஷ்டப்பட்டு போரிட்டும், மக்கள் என்னை மறந்துவிட்டார்களே என அழுதுகொண்டிருப்பார். மறுபக்கம், வின்டர்ஃபெல்லில் இருந்து தப்பித்த ப்ரான் ஸ்டார்க், பாதுகாவலர்கள் ஓஷோ, ஹோடோர், இளைய சகோதரர் ரிக்கன் ஸ்டார்க் மீண்டும் வீடு திரும்பிடுவார்கள். ஆனால், தியோன் ஏற்படுத்திய சில குழப்பத்தால் மொத்த வின்டர்ஃபெல்லும் அலங்கோலம் ஆகியிருக்கும். ஸ்டார்க் குடும்பத்திற்கு முக்கியப் பாதுகாவலராகவும், ஆலோகராகவும் மெய்ஸ்டர் லூவின் என்பவர் பணியாற்றி வருவார். தியோன் ஏற்படுத்திய குழப்பத்தில் அவர் மரணநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்.

இந்தப் பக்கம் எஸ்ஸோஸில் தனது டிராகன்களைச் சிறைபிடித்த இடத்தைக் கண்டுபிடிக்கும் டினேரியஸ் டார்கேரியன், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்திற்குச் சென்று டிராகன்களைச் சிறைபிடித்த வார்லாக்கைக் கொன்று, டிராகன்களையும் மீட்டுவிடுவார். கூடவே, கார்த் அரசனைச் சிறையிலடைத்து, அந்த ஊர் மக்களையும் தன்வசப்படுத்துவார். மறுபக்கம் ஒரு மாபெரும் டிவிஸ்ட்! முதல் சீஸனில் மூன்றே மூன்று ஒயிட்வாக்கர்கள் வந்ததைப் பார்த்திருப்போம், இரண்டாவது சீஸன் இறுதியில் ஒரு படையே தளபதி ஒயிட்வாக்கரோடு வந்துகொண்டிருக்கும். வரும் ஒயிட்வாக்கர்கள் என்னவெல்லாம் செய்ய இருக்கிறது... அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்!

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...

தார்மிக் லீ