Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திரைக்கடல் : DJANGO UNCHAINED - ஜாங்கோ அன்செயிண்ட்

மரபாகிவிட்ட படைப்பை மாற்றி கட்டுடைத்து மறு உருவாக்கம் செய்கின்றனர் இலக்கியவாதிகள். புதுமைப்பித்தனின் ' சாப விமோச்சனம் ', எம்.வி.வெங்கட்ராமின் ' நித்தியகன்னி ', ஜெயமோகனின் ' பதுமை ' சில உதாரணங்கள்.

சினிமாவிலும் இந்த மறுஉருவாக்கம் நடைபெறுகிறது. ஜேம்ஸ் பாண்டை சாம் மெண்டெசும், பேட்மேனை க்றிஸ்டோபர் நோலனும் ரிப்பேர் செய்தனர். இந்த தடவை குவிண்டின் டாரண்டினோவின் முறை. இவர் கை வைத்திருப்பது கௌ பாய் ' ஜாங்கோ'வை.

ஒரு முறை இயக்குனர் ஸ்டான்லி குயுபிரிக் (Stanley Kubrick) “அகிரா குரோசவவுக்கு நிகரான இயக்குனர்” என செர்ஜியோ லியோனியை குறிப்பிட்டார். செர்ஜியோ லியோனி அகிரா குரோசவவை வெகுவாக பாதித்தவர்.

' Fistful of Dollars ' , ' For A Few Dollars More ' மற்றும் ' The Good , The Bad And The Ugly ' இம்மூன்று படங்களுமே வசூலை வாரிக்குவித்த செர்ஜியோ லியோனியின் வெற்றிப் படங்கள். இந்த மூன்றுமே ' Western ' படங்கள் தான்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியை நோக்கி குடிபெயர்ந்த மக்களின் வாழ்கை, கலாச்சாரம், வரலாறு என western படங்களுக்கு ஒரு கறாரான இலக்கணம் இருந்தாலும், ’கௌபாய் ஜாங்கோ’ டைப் படங்கள் என்றால் எளிதில் புரியும். அந்த வகையில் 1903ல் Ediwn S. Porter எடுத்த 12 நிமிட கருப்பு வெள்ளை மௌனப் படமான 'The Great Train robbery' தான் உலகின் முதல் Western படம்.

ரசிகர்களில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத காட்சிகள்.. சூரியன் சுட்டெரிக்கும் பரந்த புல்வெளிகள், கொலை கொள்ளைக்கு அஞ்சாத கொடியவர்கள், ஊர்க் காவலர்களான மார்ஷல்கள், தலையில் தொப்பியுடனும், இடுப்பில் துப்பாக்கியுடனும் குதிரையில் திரியும் கிழிந்த ஜீன்ஸ் நாயகன்... இத்துடன் பாயும் குதிரைகள், பறக்கும் தோட்டாக்கள், மது விடுதிகள், சிரித்து மயக்கும் மங்கைகள், கிட்டாரின் ரீங்காரம்.. இப்படி ஒரு மண் புழுதி மனிதர்களின் வாழ்கையென என பெரும் கனவாய் விரிபவை western படங்கள்.

Clint Eastwood இதுபோன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். பிறகு படங்களை இயக்கவும் செய்தார். அவர் இயக்கிய Unforgiven படம் அது வரை இருந்த western படங்களின் பிம்பத்தை உடைத்தெறிந்து சிறந்த படமென ஆஸ்கர் விருதையும் வென்றது.

2009ல் Inglorious Basterdsசை இயக்கிய கையோடு குவிண்டின் டாரண்டினோ ஜாங்கோவுக்கு புது வண்ணமும் ஆன்மாவும் சேர்த்து Django Unchained எடுத்திருக்கிறார். இது ஒரிஜினல் திரைக்கதைக்கான 2013 ஆஸ்கரை வென்றிருகிறது. Western படவரலாற்றில் முதல் கறுப்பின ஜாங்கோ. நடித்திருப்பவர் ஜேமி ஃபாக்ஸ் .

இசையமைப்பாளர் என்னியோ மாரிகோனேவின் ஒரு பாடலும் இரண்டு இசைக்கோர்வைகளும் இப்படத்தில் வருகிறது. 84 வயதாகும் மாரிகோனே காலத்திற்கேற்ப கற்பனா சக்தியுடன் இன்றும் இசையமைத்து வருவது ஆச்சர்யம்.

Django Unchained-ன் கதை 1858ன் ஓல்ட் வெஸ்டில் நிகழ்கிறது. நாயகன் ஜாங்கோ கறுப்பின அடிமைக் கூட்டத்தில் ஒருவனாய் காடு மலையெனத் திரிகிறான். அவனுடைய ஆண்டைகள் ஸ்பெக் சகோதரர்கள் எனப்படுகிற இரு வெள்ளைக்கார வியாபாரிகள். ஜாங்கோவின் மனைவி ப்ரூம்ஹில்டா கால்வின் கேண்டியிடம் அடிமையாக இருக்கிறாள். அடிமை வாழ்வின் ரணம், வலி, கண்ணீருடன் கழியும் ஜாங்கோவின் பயணத்தில் ஒரு சின்ன வெளிச்சம் வருகிறது.

ஜெர்மனி மருத்துவர் கிங் சல்ட்ஸ், ஸ்பெக் சகோதரர்களை சந்தித்து விலைக்கு ஒரு அடிமை வேண்டும் என்கிறான். அங்கு ஏற்படும் தகராறில் கிங் ஸ்பெக் சகோதரர்களை போட்டுத் தள்ள, கறுப்பின அடிமைகளுக்கு 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என ஆனந்த விடுதலை. 75 டாலர்களுக்கு ப்ரிட்டில் சகோதரர்களை காட்டி கொடுக்கிறேன் என்று ஜாங்கோ கிங்குடன் சேர்ந்து கொள்கிறான்.

கிங் ஒரு பௌன்டி ஹன்டர்( Bounty Hunter). அதாவது, பிரபல குற்றவாளிகளை உயிருடனோ பிணமாகவோ ஒப்படைத்து அரசாங்கத்திடம் பணம் வாங்கிக் கொள்பவன். ஜாங்கோவின் உதவியுடன் கிங் ப்ரிட்டில் சகோதரர்களைக் கொன்றதும் வாக்களித்தபடி ஜாங்கோவுக்கு பணமும் விடுதலையும் தருகிறான். இதற்கிடையில் கிங்கை ஒரு நண்பனாய் பாவித்து நேசித்து ஜாங்கோ தானும் அவனுடன் சேர்ந்து ஒரு பௌன்டி ஹன்டர் ஆகிவிடுகிறான்.

அரசாங்கம் தேடும் வெள்ளை குற்றவாளிகளை ஜாங்கோவும் கிங்கும் வரிசையாக கொன்று குவிக்க. ' கு க்ளக்ஸ் கிளான் ' குரூப் கொலைவெறியுடன் கிளம்புகிறது. இந்த ’கு க்ளக்ஸ் கிளான்’ கறுப்பர்களை எதிர்க்கும் ஓரு வெள்ளைக் கூட்டம். D.W.Griffith ' A Birth of a Nation ' படத்தில் கு க்ளக்ஸ் கிளானை கதாநாயகர்கள் ஆகவும் கறுப்பர்களை வில்லன்களாகவும் காட்டி விமர்சனத்துக்கு ஆளானார். ’கு க்ளக்ஸ் கிளான்’ தங்கள் குல வழக்கப்படி மூச்சு விடவும் வசதியில்லாத சாக்குப் பைகளால் முகத்தை மூடி சண்டை போடும் காட்சி சட்டையரின் உச்சம்.

கு க்ளக்ஸ் கிளானை சாமர்த்தியமாக வீழ்த்தி விட்டு கிங்கும் ஜாங்கோவும் மிஸ்ஸிஸிபி வருகின்றனர். கால்வின் கேண்டியிடம் இருந்து ஜாங்கோவின் மனைவி ப்ரூம்ஹில்டாவை மீட்க திட்டம் தயாராகிறது. கறுப்பின எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாசை ரசிக்கும் கால்வின் ஒரு கறுப்பனின் மண்டையோட்டை குரங்கின் மண்டையோட்டோடு ஒப்பிட்டு கறுப்பர்கள் அடிமைகளாக இருக்கத்தான் லாயக்கு என்கிறான். கிங் வந்திருக்கும் நோக்கம் கால்வினுக்கு தெரிந்து விட, மூளும் சண்டையில் கிங் கால்வினை கொல்கிறான். கால்வின் ஆட்கள் கிங்கை கொல்கின்றனர். மீதி இருப்பவர்களை ஜாங்கோ கொன்று ஸ்டீபன் பிடித்து செல்லும் ப்ரூம்ஹில்டாவை மீட்கிறான்.

இனி அடிமை வாழ்வு இல்லை. ஜாங்கோ இப்போது சுதந்திரன். மனைவி ப்ரூம்ஹில்டாவுடன் புது வாழ்க்கையை நோக்கி குதிரையில் புறப்பட்டு செல்ல படம் முடிகிறது.

வில்லன் கால்வினாக Leonardo Dicaprio, வேலைக்காரன் ஸ்டீபனாக Samuel L. Jackson, கிங்காக Christop Waltz மூவரும் சும்மா பேச்சுக்காக இல்லை, நிஜமாகவே போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.

இதில் நடித்ததற்கு BAFTA, GOLDEN GLOBE, OSCAR, என மூன்று விருதுகளையும் ஒரு சேரத் தட்டியிருக்கிறார் Christop Waltz.

படத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள். கறுப்பர்களை இழிவுபடுத்தி ஏராளமான வசனங்கள். படத்தின் கதைக்கும் சம்பவத்திற்கும் தேவைப்பட்டது என்று டாரன்டினோ விளக்கம் சொன்னாலும் குற்றம் குற்றமே என்கின்றனர் உலக சினிமா நக்கீரர்கள்.

அமெரிக்க ஆப்ரிக்க இயக்குனர் Spike Lee’யோ கறுப்பின மக்களின் கண்ணீர்-கம்-போராட்ட வாழ்க்கையை பொழுதுபோக்கு மசாலா படமாக தரம்தாழ்த்தி விட்டார் டாரண்டினோ என்று குமுறுகிறார். இரண்டாம் உலகப் போரின் அவலத்தை காமெடிப் படமாக எடுத்தால் நியாயமாக இருக்குமா என்பது அவர் கேள்வி.

அத்தனை விமர்சனங்களையும் கடந்து அற்புதமான நடிப்பு , தேர்ந்த திரைக்கதை . தனித்துவம் மிளிரும் காட்சியமைப்பு இவை மூலம் ஜாங்கோவை புதிய கான்வாஸில் வரைந்து அழகு பார்த்திருகிறார் டாரண்டினோ.

படத்தின் trailer : http://www.youtube.com/watch?v=eUdM9vrCbow

- ருபேந்தர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்