"கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே முடிவற்ற யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது. அவர்களின் யுத்தக்களம் மனிதனின் மனம்"
- ஃபியோதர் தாஸ்தாவஸ்கி
பைபிளின் மூன்றாம் அத்தியாயத்தில் பாம்பு வடிவ சாத்தான் சூழ்ச்சி செய்து, ஆதாம் ஏவாளை விலக்கப்பட்ட கனியை விரும்பி உண்ண வைப்பான். அன்று தொடங்கி இன்று வரை சாத்தான் மனிதனை ஆசை வார்த்தைகளால் மயக்கி தன் கைப்பாவையாக ஆடவைத்து கடவுளை ஜெயித்துக் கொண்டே வருகிறான். இந்த சாத்தான் வேறு யாருமல்ல. கடவுளின் 'தேவதைகள்' கூட்டத்தில் இருந்தவன். அவன் பெயர் லூசிஃபர். கடவுள் மீது வெறுப்பு கொண்டு வெளியேறியவன் .
சாத்தானை ஆதரிப்பவர்கள், வழிபடுபவர்கள் இன்றும் உண்டு. பிரபல பீட்டில்ஸ் பாடகர் ஜான் லெனானே அப்படிப்பட்டவர் என்கிற சந்தேகம் உண்டு. அது உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர்களுக்கு சாத்தான்தான் கடவுள் மாதிரி. END OF DAYS, CONSTANTINE இப்படி பல படங்களில் உலகத்தை அழிக்க சாத்தான் புறப்பட்டு விட்டதாய் கதை விட்டு கல்லா கட்டினார்கள்.
FAUST படத்தை அப்படிப்பட்ட சாத்தான் படங்களில் ஒன்றாக சேர்க்க முடியாது. இது வேறு ஜாதி.. வேறு ரகம். 2011 வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான தங்கச் சிங்கம் விருதினை வென்ற படம். இயக்குனர் - ரஷ்யாவின் அலெக்சாண்டர் சுகோரோ.
FAUSTன் கதை 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஜெர்மனியில் கர்ண பரம்பரைக் கதையாக சொல்லப்பட்டு வரும் ஒன்று ( நமக்கு கர்ண பரம்பரைக் கதை. அவர்களுக்கு ?! ). இந்தியாவுக்கு மகாபாரதம், கிரேக்கத்திற்கு இலியட் போல ஜெர்மனிக்கு இந்த FAUST.
1888ல் 'ஃபாஸ்டின் துயரக்கதை' என்று Goethe இரண்டு பாகங்கள் கொண்ட நாடகமாக எழுதினார். எண்ணற்ற முறை இது மேடையேற்றப்பட்டது. 1926ல் F.W.Murnav ஃபாஸ்ட்டை கருப்பு வெள்ளை படமாக எடுத்தார். இன்று வரை 50க்கும் மேற்பட்ட ஃபாஸ்ட்கள் வந்து விட்டன.
Goetheயின் 'ஃபாஸ்டின் துயரக்கதை' நாடகம், தாமஸ் மானின் 'டாக்டர் ஃபாஸ்ட்' நாவல் இரண்டையும் அடிப்படையாக வைத்து 75 ஆண்டுகளுக்கு மேலான ஃபாஸ்ட் படத்தை மறு உருவாக்கம் செய்திருக்கிறார் அலெக்சாண்டர் சுகோரோ.
ஜெர்மனிய தொன்ம கதையான ஃபாஸ்ட்டில் கடவுளுக்கும் சாத்தானுக்கும் சண்டை வருகிறது. தன் சக்தியை கடவுளுக்கு புரிய வைக்க சாத்தான் கடவுளுக்கு பிரியமானவனும் மேதாவிலாசம் மிக்கவனுமான ஃபாஸ்ட்டை சகல சுகபோகங்களையும் தருவதாக மயக்கி அவன் ஆன்மாவை எழுதி வாங்கி அடிமையாக்கி கொள்வான்.
சுகோரோ மூலக் கதையில் பெரிதாக மாற்றம் செய்துகொள்ளவில்லை. 19ஆம் நூற்றாண்டில் கதை நிகழ்கிறது. ஃபாஸ்ட் மனித உடற்கூறு மருத்துவ சாஸ்திரம் தெரிந்தவன். கூடவே மனித மனம், ஆன்மா பற்றிய தேடலும் உள்ளவன். அவன் பெயருக்குத்தான் மருத்துவன். ஆனால் கையில் காலனா இல்லை. வாட்டுகிற வறுமை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவனை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை.
ஃபாஸ்ட் ஒருமுறை மெசிடோபெலஸ் என்கிற அடகு கடைக்காரனை சந்திக்கிறான். மெசிடோபெலஸ் சாத்தானின் அடியாள்.. அல்லக்கை எனச் சந்தேகிக்கப்படுபவன். ஃபாஸ்ட் தனது மோதிரத்தை அவனிடம் அடகு வைக்க, மெசிடோபெலஸ் அது தங்கம் இல்லை; தகரம் என்று பணம் தர மறுக்கிறான். மாறாக அவனிடம் இருக்கும் விலைமதிப்பற்ற உன்னதமான பொருள் ஒன்றை தனக்கு எழுதி கொடுத்துவிடுமாறு கேட்கிறான். அதற்கு பதிலாக ஃபாஸ்டுக்கு அவன் விரும்பும் செல்வம் சுகபோகம் அனைத்தும் தருவதாக ஆசை காட்டுகிறான். ஃபாஸ்டிடம் அவன் கேட்ட பொருள் அவனுடைய ஆன்மா. தன் மீது நம்பிக்கை வருவதற்காக மெசிடோபெலஸ் கிண்ணம் நிறைய விஷத்தை ஊற்றி ஃபாஸ்டின் கண் எதிரிலேயே பருகுகிறான். விஷம் அவனை ஒன்றும் செய்வதில்லை.
ஃபாஸ்டுக்கு மெசிடோபெலஸ் மீது ஒரு வித ஆர்வமும் ஈர்ப்பும் வந்து விடுகிறது. அவனுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கிறான். மெசிடோபெலஸ் ஆட்டம் துவங்குகிறது. ஃபாஸ்டை தான் விரும்பிய வண்ணம் ஆட்டுவிக்கிறான்.
மார்கரெட் அந்த ஊரில் இருக்கும் பேரழகி. மெசிடோபெலஸ் திட்டம் போட்டு ஃபாஸ்ட், மார்கரெட் இருவரையும் சந்திக்க வைக்கிறான். மார்கரெட்டை பார்த்ததுமே ஃபாஸ்டுக்கு காதல் பற்றிக் கொள்கிறது. பிறப்பு, இறப்பு, மருத்துவம், மருந்து என்கிற அறிவுத் தேடலுடன் அலைந்த ஃபாஸ்டின் இப்போதைய ஒரே வேட்கை மார்கரெட்... மார்கரெட். அவளோ அவனுக்கு பிடிகொடுக்காமல் நழுவுகிறாள். ஊடே மெசிடோபெலஸ் உன் ஆன்மாவை எனக்கு எழுதிக்கொடு என்று ஃபாஸ்டை நச்சரித்தபடியே இருக்கிறான்.
ஒரு முறை ஒரு மது விடுதியில் நல்ல குடி போதையில் ஃபாஸ்ட் ஒருவனை கொன்று விடுகிறான். இதுவும் மெசிடோபெலஸின் திருவிளையாடலே. கொலையானவன் வேறு யாரும் அல்ல.. மார்கரெட்டின் அண்ணன். இந்த விஷயம் தெரியவர மார்கரெட் ஃபாஸ்டை வெறுத்தொதுக்கி விலகிச் செல்கிறாள். அவ்வளவுதான்.. ஃபாஸ்ட் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறான். மார்கரெட்டின் பிரிவை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவனுக்கு மார்கரெட் வேண்டும். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்.
இப்பொது அவனே மெசிடோபெலசை தேடிச் செல்கிறான். மார்கரெட்டை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மன்றாடுகிறான். இதுதான் சந்தர்ப்பமென மெசிடோபெலஸ் ஒப்பந்த பத்திரத்தை நீட்டுகிறான். சிறிதும் தயக்கமோ மறுப்போ இன்றி ஃபாஸ்ட் தன் ரத்தத்தால் அதில் கையெழுத்திடுகிறான். ஃபாஸ்ட் தன் ஆன்மாவை விற்று விட்டான். மெசிடோபெலஸ் ஃபாஸ்டை விலைக்கு வாங்கி விட்டான். இப்போது ஃபாஸ்ட் விரும்பிய மார்கரெட் அவனுக்கு முழுமையாக கிடைக்கிறாள். இனிமையாக கழிகிறது அந்த இரவு. மறுநாள் மெசிடோபெலஸ் ஃபாஸ்டை தன்னுடன் வருமாறு அழைக்கிறான். தன் கனவுக்கன்னி.. காதல்நாயகி மார்கரெட்டை விட்டு பிரிந்து வருவதாவது என ஃபாஸ்ட் மறுக்க மெசிடோபெலஸ் ஒப்பந்த பத்திரத்தை காட்டுகிறான். ஃபாஸ்ட்டுக்கு வேறு வழி இல்லை. அவனுடன் புறப்படுகிறான்.
மிக நீண்ட பயணம் அது. ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிகிறது. ஃபாஸ்ட்டுக்கு புரிந்து விட்டது. அது நரகம். ஆம்.. மார்கரெட் இல்லாத எந்த ஒரு இடமும் அவனுக்கு நரகம்தான். அந்த நரகத்தை விட்டு எப்படியாவது தப்பிச் சென்றாகவேண்டும். ஃபாஸ்ட் மெசிடோபெலசுடன் மோதுகிறான். இருவருக்குமிடையே உக்கிரமான யுத்தம். ஒரு கட்டத்தில் ஃபாஸ்ட் மெசிடோபெலசை அடித்து வீழ்த்தியும் விடுகிறான். ஆனால் அந்த இடத்திலிருந்து அவனால் தப்பிக்க முடிவதில்லை. காலம் முழுக்க அவன் அங்குதான் உழன்றாக வேண்டும். அதைத் தவிர ஃபாஸ்ட்டுக்கு வேறு வழி இல்லை.
ஃபாஸ்ட்டின் இயக்குனர் அலெக்சாண்டர் சுகோரோவின் 'RUSSIAN ARK' திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்று. முந்நூறு வருட ரஷ்ய சரித்திரத்தின் முக்கியமான நிகழ்வுகளைச் சொல்லும் அப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.
பதவியும் அதிகாரமும் தவறான கைகளில் மாட்டிக்கொள்ளும் போது விளையும் பேராபத்தை தன் நான்கு படங்கள் மூலம் சொல்ல ஆசைப்பட்டார் சுகோரோ. முதல் படம் 'MOLOCH' ஹிட்லரின் சர்வாதிகாரத்தையும் நாஜிகள் செய்த படுகொலைகளையும் கண்டித்து வெளிவந்த படம். இரண்டாவது படம் 'TAURUS' லெனினுக்கு பிறகு யாரென்ற பதவி சண்டை பற்றியது. மூன்றாவது படம் 'THE SUN' ஜப்பானிய அரசன் ஹிரோஹிடோவை பற்றியது.
இம்மூன்று படங்களும் நிஜ மனிதர்களையும் வரலாற்றையும் சொல்ல.. சம்மந்தமேயில்லாத ஃபாஸ்ட்டை இந்த வரிசையில் நான்கவதாகக் கொண்டு வந்து சேர்த்தார் சுகோரோ. கேட்டதற்கு.. “ ஃபாஸ்ட் சாத்தானிடம் ஆன்மாவை விற்றவன். மற்றவர்களும் அப்படித்தான் ” என்று நியாயப்படுத்தினார் சுகோரோ.
- ருபேந்தர்