திரைக்கடல் - திரையரங்கில் ஒரு கொலை | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (14/05/2013)

கடைசி தொடர்பு:14:09 (14/05/2013)

திரைக்கடல் - திரையரங்கில் ஒரு கொலை

" நீங்கள்  திரையரங்கத்தின் இருக்கையில் இருப்பதை மறக்கச் செய்வதே உண்மையான சினிமா " - ரோமன் போலன்ஸ்கி

ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து நிற்பதை படம் பிடித்திருந்தனர் லூமியர் சகோதரர்கள்.  கருப்பு வெள்ளையில் வெறும் 50 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய மௌனப் படமான அதுதான் உலகின் முதல் சலனப் படம்.  1895 டிசம்பர் 28 பாரிசில் அதைத் திரையிட்டபோது பார்த்தவர்களில் பலர் அலறித் தெறித்து ஓடினார்கள்.  தங்களை நோக்கி வந்த ரயில் தங்கள் மீது மோதிவிடாமல் இருக்க உயிர் பிழைக்க ஓடிய ஓட்டம் அது.  

நிழலை நிஜமென்று நம்பிய ஆதி சினிமா ரசிகனின் மயக்கம் ஒரு நூற்றாண்டு கடந்து இன்றும் தொடர்கிறது.  EXORCIST பேயைப் பார்த்து தியேட்டரிலேயே அவன் ஆவி பிரிகிறது. JURASSIC PARKன் டைனோசர்கள்  எவரையோ துரத்த இவனுக்கோ இதய துடிப்பு எகிறுகிறது.  அம்மன் படம் ஓடும் தியட்டர்களில் பெண்மணிகளுக்கு சாமி வந்து விடுகிறது.  

இத்தனைக்கும் திரைப்படம் இன்று எவ்வித ரகசியமும் அற்று திறந்த புத்தகமாய் பிறந்த மேனியாய் இருக்கிறது. அதன்உருவாக்கம், தொழில்நுட்பம், நுணுக்கம், நடிக நடிகையர்களின் அந்தரங்கம் அனைத்தும் கடைநிலை ரசிகனுக்கும் இன்று அத்துபடி.  ' யாரிடமும் உதவியாளனாக இருந்ததில்லை; எவரிடமும் தொழில் கற்றுக்கொள்ளவில்லை' என்று நிறைய முதல்பட  இயக்குனர்கள் பேட்டியில் பெருமைப்படுகின்றனர்.  விட்டால் ஒவ்வொரு ரசிகனும் தன்  திரைப்படத்தை தானே எடுத்து first copy தயார் பண்ணி தந்துவிடுவான்.  இப்படி அம்பலப்பட்ட  பிறகும் சினிமாவின் வசீகரம் துளிக்கூட குறையாமல் இருப்பதுதான் ஆச்சர்யம்.  இன்றைக்கும் ரசிகனை இருக்கை நுனிக்கு தள்ளவும், சிரிக்க வைக்கவும், கேவி அழ வைக்கவும் சினிமாவால் முடிகிறது.

சினிமா பார்ப்பது மனிதவாழ்வின் தவிர்க்கமுடியாத  அங்கமாக.. நியதியாக ஆகிவிட்டது.  அதனால்தான்  எல்லா நாட்டிலும் அரசாங்கமே முன்னின்று  திரைப்பட விழாவை நடத்துகிறது.  நம்மூர் மாரியம்மன் கோவில் திருவிழா போல திரைப்பட விழாவும் கலாச்சார அடையாளமாகிவிட்டது.  

இப்படி 1946ல் துவங்கிய பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழா அதன் 60ஆம் ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி ஒரு சிறப்பு திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது.  அந்தப் படத்தின் பெயர்  TO EACH HIS OWN CINEMA .

'சினிமாவின் மீது கொண்ட அடங்காத காதலின் அடையாளமாக ' என்கிற முன்மொழிதலுடன் தொடங்குகிற இப்படம். உலகெங்கும் 5 கண்டங்களின் 25 நாடுகளின் முக்கியமான 36 இயக்குனர்கள் இயக்கிய 34 குறும்படங்களின் தொகுப்பு ஆகும். ஒவ்வொன்றும் மூன்றுநிமிடம் மட்டுமே ஓடக்கூடிய படங்கள்.  அனைத்து படங்களுக்கும் ஒரே கருப்பொருள்  'ரசிகனுக்கும் திரைப்பட அரங்கிற்குமான உறவும்நெருக்கமும்'.

MOVIE NIGHT - சீனாவின் ஐந்தாம் தலைமுறை இயக்குனர்  ZHANG YIMOவின் படைப்பு. நகரத்திற்கு அப்பால் விரிந்து கிடக்கும்எல்லையில்லா பாலைவனப் பெருவெளியில்  அமைந்திருக்கும் அந்த ஊருக்கு மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு ட்ரக்கில்  இருவர் வந்துசேர்கின்றனர். அந்த ஊர் மக்களுக்கு சினிமா காட்டுவதற்காக வந்திருப்பவர்கள் அவர்கள். தேவதூதர்களே வந்ததுபோல் ஊர்மக்களிடையே உற்சாகம்.  ஒரு சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த ட்ரக்கின் பின்னாலேயே சுற்றித் திரிகிறான்.  சினிமா காட்ட வந்திருக்கும்  இருவரையும் தன்  ஓயாத கேள்விகளால் நச்சரிக்கிறான்.  எப்போது படம் போடுவார்கள், இன்னும் எவ்வளவு நேரம்ஆகும், ஏன் இன்று பார்த்து பொழுது நீண்டு கொண்டே போகிறது.. இப்படியாக தவிக்கிறான்.  வந்தவர்கள் வெள்ளைத் துணியை ஸ்க்ரீனாக கட்டி, சவுண்ட் ஸ்பீக்கர்களைப்  பொரூத்த சிறுவன் ஒவ்வொன்றையும் அதிசயமாக வாய் பிளந்து பார்கிறான்.  மாலை நெருங்கஒட்டு மொத்த ஊரும் கூடிவந்து சினிமா பார்க்க உட்காந்து விடுகிறது.  எல்லோரும் இருட்டுவதற்காக திரையின் முன் அமர்திருகின்றனர்.  இருள் வருகிற நேரம் சினிமா ஓட்ட வந்தவர்களுக்கு பசி வந்து விடுகிறது.  சாப்பிடப் போய் விடுகின்றனர்.   ஊர் மக்களோ அவர்கள்சாப்பிட்டு முடித்து வருவதற்காக காத்திருக்கின்றனர்.  ஒரு வழியாக அவர்களும் வந்து  ப்ரொஜெக்டரை இயக்க, அத்தனை பேரும் கைதட்டி, விசிலடித்து, உற்சாகக் கூச்சலிட... திரையில் சினிமா ஓட  ஆரம்பிக்கிறது.  அனைவரும் படத்தை ரசித்துப்  பார்க்க எல்லோர்க்கும் முன்னால் வந்து இடம் பிடித்து அமர்ந்து விட்ட அந்த சுட்டிச் சிறுவனோ அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.

டென்மார்க் இயக்குனர்  LARS VON  TRIERன் படம் OCCUPATIONS.  கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தியேட்டரில் ஓடும் படத்தை அனைவரும் அமைதியாகப்  பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  ஒருவன் மட்டும் படத்தைப்  பார்க்காமல் பக்கத்து சீட் நபரிடம்தொணதொணத்து பேசி அவரைப் படம் பார்க்க விடாமல் கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறான்.  தான் ஒரு தொழிலதிபர்; சினிமாவெல்லாம்ஒரு தொழிலே கிடையாது; ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய பணம் பார்க்கலாம்.. இப்படி பிளேடு போடுபவன் தொடர்ந்து 'உங்கள்தொழில் என்ன' என்று பக்கத்துக்கு சீட்காரரைக் கேட்க, அவரோ  'கொலைசெய்வது' என்கிறார்.  'ஜோக் அடிக்காதீங்க சார்' என்று இவன் சிரிக்க, பக்கத்துக்கு சீட்காரர் ஒரு சுத்தியலால் இவன் மண்டையில் ஒரு போடு போட  அடுத்த  நிமிஷமே ஆள் காலி. அருகில் இருப்பவர்கள் அதிர்ந்து போக கொலை  செய்தவரோ  ஒன்றுமே  நேராதது போல் இப்போது படத்தை நிம்மதியாக  பார்க்கத் தொடங்குகிறார்.   பக்கத்து சீட் கொலைகாரர்  வேறு யாரும் அல்ல.. இயக்குனர் LARS VON TRIER தான்.!

47  YEARS LATER - இது எகிப்தின் YOUSSEF CHAHINEன் படம். 1960 கேன்ஸ் திரைப்பட விழாவில் தன் படத்தை திரையிட்டு முடித்திருக்கும் அந்த இளம் இயக்குனருக்கு பெருத்த ஏமாற்றம். படத்தைப் பற்றி வந்தது எல்லாம் எதிர்மறையான விமர்சனங்கள்.  'ஒருத்தருக்கும் படம் பிடிக்கவில்லை.. நாளை தெருவில்  நடமாடவே முடியாது' என்று படத்தில் நடித்த நடிகையே நொந்து கொள்கிறாள்.  ”47 வருடங்கள் கழித்து..” என்கிற எழுத்துக்கள் திரையில் தோன்ற இப்போது மீண்டும் கேன்ஸ் திரைபட விழா.  சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட மேடையேறி அந்த விருதை வாங்குவது வேறு யாரும் அல்ல.. 47 வருடங்களுக்கு முன்னால் தோற்றுப் போன அதே இயக்குனர்.  விருது வாங்கிய கையேடு அவன் பேசுகிறான்.. "இந்தத் தருணத்திற்காக 47 வருடங்கள் காத்திருந்தேன்;  இன்னும் ஒரு 47வருடங்கள் போராட வேண்டி இருந்தாலும் அதற்கும்  நான் தயாராகவே இருந்தேன்".

IN THE DARK -  இது ரஷ்ய இயக்குனர் ANDREI KONSALAVESKIன் படம். FEDRICO FELLINI இயக்கிய க்ளாசிக்குகளில் ஒன்றான ' 8 ½ '  ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருகிறது.  தியேட்டரில் படம் பார்க்க வந்திருப்பது ஒரே ஒரு காதல் ஜோடி மட்டுமே.  காதலர்களைத்  தவிர திரையரங்கில் இருக்கும் இன்னொரு நபர் தியேட்டர் டிக்கெட் கவுன்ட்டருக்கு பொறுப்பாளரான  50வயதுப்  பெண்மணி.  காதல்ஜோடிக்கோ படம் முக்கியமில்லை. படம் பார்ப்பதில் எவ்வித ஈடுபாடும் இல்லை. முத்தமிட்டபடி அவர்கள் ஈடுபடும் காரியங்கள் வேறு.  வந்த வேலை முடிந்து அவர்கள் கிளம்பிப்  போய்விட, மிச்சமிருக்கும் அந்த டிக்கெட் கவுன்ட்டர் நிர்வாகி தான் ஏற்கனவே பல முறைபார்த்துவிட்ட அந்தக்  காவியத்தை இப்பொழுதும் தன்னை மறந்தவளாக தொடந்து பார்த்துக்கொண்டிருகிறாள்.

அமெரிக்க இயக்குனர்கள் ETHAN, JOEL COHEN இருவரும் சகோதரர்கள்.  இவர்கள் இயக்கி இருக்கும் படம் ’ WORLD CINEMA ‘.   ஒரு நகரத்தில் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறான் ஒருவன்.  பார்க்க ஊர் நாட்டான் போல் இருக்கிறான். ஏதோ வேலையாக நகரத்திற்குவந்தவன். கிடைத்த இடைவெளியில் பொழுதை ஓட்ட படம் பார்க்க வந்திருக்கிறான்.  அந்த தியேட்டரில் இரண்டு படங்கள் ஓடுகின்றன. ஒன்று பிரெஞ்சு இயக்குனர் JEAN RENIORன்  மாஸ்டர்பீசான  ’THE RULES OF GAME’ படம். இன்னொன்று NOORI BILGE CEYLANன் ஜனரஞ்சகமான காதல் படம். கலைப்படம்..கமர்சியல் படம் இதுவல்ல அவனுக்கு முக்கியம்.  'இரண்டில் எதில் குதிரைகள் வரும்' இதுதான் அவனுடைய ஆர்வமான விசாரணை. டிக்கெட் விற்பவனோ திருதிருவென விழிக்கிறான். கடைசியில் கிராமத்தான் அவனாகவேமுடிவெடுத்து NOORI BILGE CEYLANன் படத்தை தேர்வு செய்கிறான். படத்தை பார்த்து விட்டு மறக்காமல் டிக்கெட் கொடுத்தவனைதேடிப் பிடித்து 'படம் அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை; ஒரு தடவை பார்க்கலாம்' என்று சொல்லி விட்டுப் போகிறான்.  தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவன் தினம்தினம் சந்திக்கும் இதுபோன்ற விதவிதமான மனிதர்கள், அவர்களின் வினோத ரசனை இவற்றை இந்தப் படம்பேசுகிறது.

ZHANXIOU VILLAGE - சீன இயக்குனர் KEN CHAIGEன் படம்.  சான்சூய் கிராமத்தில் இருக்கும் சிறு தியேட்டருக்கு ஒருவரும் இல்லாதசமயம் பார்த்து அங்கு வரும் சிறுவர்கள் அவர்களாகவே ப்ரொஜெக்டரை இயக்கி ஒரு படத்தை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.  அது சார்லிசாப்ளின் நடித்த படம்.  சாப்ளின் செய்யும் குறும்புகளில் அவர்களுக்கு உலகமே மறந்து போய் விடுகிறது.  அந்த  சமயம் பார்த்து கரென்ட்கட்டாகி விடுகிறது.  தேவைதானே கண்டுபிடிப்புகளின் தாய்.  மூளை பயங்கரமாக வேலை செய்ய... ஐடியா கிடைக்க.. ப்ரொஜெக்டரை ஒருவன் சைக்கிளுடன் இணைத்து பெடலை வேகமாக மிதித்து சுழற்றி டைனமோ மூலம் கரென்ட் எடுத்து படத்தை தொடர்ந்து ஓட்டிப் பார்க்கின்றனர். அப்போது திடீரென தியேட்டரின் பணியாள் வந்து  விடுகிறான்.  அனைவரையும் திட்டி விரட்டி  அடிக்கிறான்.  ஆனால்  ஒரே ஒரு சிறுவன் மட்டும் படம் ஓடும்  ஸ்க்ரீனுக்கு எதிராக அமர்ந்து இன்னும் படத்தை பார்த்தபடி அமர்ந்திருக்கிறான்.  அவன்அருகே சென்று பார்த்தால்தான் தெரிகிறது.. அந்த சிறுவன் பார்வையற்றவன்.   'ஐயா..நான் மீதிப் படத்தையும் பார்க்க என்னைஅனுமதிக்க வேண்டும்' என்று கெஞ்சுகிறான்.  படம் இங்கே முடியவில்லை.  அந்த சிறுவன் வளர்ந்து பெரியவனாகி தன்  கைத்தடியால்தரையை தட்டி ஒரு தியேட்டருக்குள் முதல் ஆளாக நுழைந்து அவனுடைய இருக்கையில் அமர்வதுதான் இந்த காவியத்தின் முடிவு.

THE LAST DATING SHOW - இது  BILLY AUGUSTன் படம். டேட்டிங் கிளம்பும்  காதலர்கள் ஒரு  சினிமாவுக்கு செல்கின்றனர்.  தியேட்டரில் ஓடுவது டேனிஷ் மொழிப் படம்.  காதலிக்கு படம் புரியவில்லை.  காதலன் படம் பார்த்து கதை சொல்ல... அவர்களை சுற்றியிருக்கும் மூன்றுஇளைஞர்கள்  ஆட்சேபனைக் குரல் எழுப்புகின்றனர். காதலன் தியேட்டர் மேனேஜரிடம் புகார் சொல்லப் போக.. மேனேஜர் அந்த மூன்றுபேரையும் கண்டித்து வெளியேற்றுகிறார். அவர்கள் காதலர்களை முறைத்தபடியே போகின்றனர்.  சற்று நேரத்தில் “தலை வலிக்கிறது படம்பார்த்தது போதும், கிளம்பலாம்“ என்று காதலி சொல்ல காதலன் அவளை அழைத்து கொண்டு வெளியே வருகிறான்.  “பாத்ரூம் போய்விட்டுவந்து விடுகிறேன்“ என்று காதலன் அவளைத்  தனிமையில் விட்டுவிட்டு போக, காத்திருந்த அந்த மூன்று இளைஞர்களும் அவளைநெருங்குகின்றனர்.  திரும்பி வரும் காதலனுக்கு அதிர்ச்சி. காதலியைக்  காணோம்.  பதறியடித்து தேட ப்ரொஜெக்டர் ரூமுக்குள்  அந்தமூன்று பெரும் அவளை இழுத்து கொண்டுபோவது தெரிந்து அவளை மீட்க ஓடுகிறான். அங்கே  அந்த மூன்று பேரும்  அவளுக்கு  அங்கிருந்து படத்தைக் காட்டி கதையை விளக்கிச்  சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

TAKESHI KITANOவின் படம் ONE FINE DAY. இன்றும் கிராமத்து டூரிங் டாக்கீஸ்களில் திரைப்படம் பார்ப்பது எவ்வளவு கடுமையானஅனுபவமாக இருக்கிறது என்பதையும் அதையும் தாண்டி ரசிகர்கள்  படம் பார்க்க காட்டும் ஆர்வத்தையும்   விவரிக்கிறது.

WHERE IS MY ROMEO - தியேட்டரில் ரோமியோ ஜுலியட் படம் ஓடுகிறது,  ரோமியோ சாகும் காட்சியில் தங்கள்காதலனையும் நிறைவேறாத  காதலையும் நினைத்து எல்லா வயது பெண்களும் அழுகிறார்கள்.

DIARY OF A CINEMA GOERல்  ஒரு ரசிகன் தன்  வாழ்வின் மிக முக்கியமான தருணங்களை பல சினிமாக்களோடு தொடர்புபடுத்திநினைவுகூர்கிறான். ( "மகாநதி  ரிலீசப்ப மகேஷ் என் வயித்துல 8 மாச குழந்த"... "மச்சான்.. பேசாம நானும் 'சூது கவ்வும்' போயிருக்கலாம்..போயிருந்தா ஜோதி வீட்டு ஜிம்மி என்னை  கவ்வியிருக்காது"..  இப்படி நாம் பேசுவதில்லையா?).

AT THE SUICIDE OF THE LAST JEW IN THE WORLD IN THE LAST CINEMA IN THE WORLD - டைட்டிலை படிக்கவே மூன்று நிமிடங்கள்ஆகும். இந்தப் படத்தில் உலகின் கடைசி யூதன் தன்  தற்கொலையை தானே  படமாகியிருக்க.. அப்படம்  தியேட்டரில் பார்க்கப்படுகிறது.  யூதர்களை மனிதகுலம் நடத்திய விதத்தை நம் மனசாட்சியைப் பிடித்து உலுக்குகிற விதமாக இந்த படம்  விமர்சிக்கிறது.

34 மூன்று நிமிடப் படங்கள்... அனைத்தும் திரையரங்கம் என்ற ஒரே கருப்பொருளை கொண்டிருந்தாலும் ஒரு படம்கூட அலுப்பூட்டவில்லை.  ஒன்று போல் மற்றது  இல்லை.  34 அல்ல 34 லட்சம் படங்கள் சாத்தியம் என்கிற கற்பனையின் எல்லையின்மையை  இப்படம்  சொல்லாமல் சொல்கிறது.  கூடவே  நமக்கு மட்டும்  கதைப் பஞ்சம் எப்படி வந்தது என்கிற கவலையும் வருகிறது.

உலகெங்கும் வாழும் மனிதர்கள் இடையே கலாச்சார வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது.. அனைவருக்கும் சினிமா பிடித்திருகிறது. சினிமாவை உலகப் பொது மதம் என்று தாராளமாக சொல்லலாம். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகனுக்கு தியேட்டர்தான் குடியிருந்த கோயில்.  அந்த ரசிகனையும்.. அவன் கோயிலான திரையரங்கையும்  கொண்டாடி  கௌரவப்படுத்தியிருகிறது கேன்ஸின் இந்த திரைப்படம் TO EACH HIS OWN CINEMA.   

படத்தின் TRAILER : https://www.youtube.com/watch?v=m8M4r8Uw9vs

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close