திரைக்கடல் - நீங்கள் நல்லவரா கெட்டவரா? | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (20/05/2013)

கடைசி தொடர்பு:15:34 (20/05/2013)

திரைக்கடல் - நீங்கள் நல்லவரா கெட்டவரா?

'ஒரு மனிதன் பிறந்தவுடன் அவனுக்கு வாழ்வில் மூன்று பாதைகள் வகுக்கப்படுகின்றன.  முதல் பாதையில் அவனை ஓநாய்கள் கொல்லும்.  மற்றொன்றில் ஓநாய்களை அவன் கொல்வான்.  கடைசிப் பாதையில் அவனை அவனே கொன்றுவிடுவான்' - ஆண்டன் செகாவ்.

நிலைக்கண்ணாடியில் முகம் பார்க்கும்போது அதில் தோன்றும் நம் உருவம் நம்மைப் பார்த்து பேசினால் அது மனசாட்சி.  ஒவ்வொரு குற்றத்தின் முடிவிலும் முடிச்சு போட்டு கெக்கொலி கொட்டிச் சிரித்தால் சந்தேகமே வேண்டாம்.. அதுவும் மனசாட்சிதான்.  தாஸ்தாவேஸ்கியின் கரமசோவ் சகோதரர்களில் ஒருவனான டிமிட்ரிக்கோ நல்ல உறக்கத்தில் மனசாட்சி விழித்துக் கொண்டது. அவன்சொகுசாக தூங்க யாரோ தலையணை வைத்த செயலே அவன் மனசாட்சியை உசுப்பிவிட போதுமானதாக இருந்தது.    

ஆனால் மனசாட்சி என்றைக்கும் உறங்கியதில்லை.  அது எந்நேரமும் நம்மை கண்கொட்டாமல் விழித்துப் பார்த்தபடி இருக்கும் மிருகம்.  நம்மை உற்று நோக்கியபடி இருக்கும் ரகசிய உளவாளி.  ஒரு நாள் இல்லை ஒரு நாள் அது நம்மை கொன்று நம் ரத்தத்தை ருசிபார்ப்பது நிச்சயம்.

மனசாட்சியுடனான யுத்தம் மற்றவர்களுக்கு எப்படியோ.. குற்றநிகழ்வுகள் தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு அது மிகவும் சவாலானது.  உதாரணத்திற்கு.. ஒரு பாலியல் சீண்டல் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, முன்னர் அதே குற்றத்தை செய்தவர் என்றால் அவர் மனசாட்சி அவரை எவ்வளவு உறுத்தும்?

துருக்கி இயக்குனர் நூரி பில்கே செய்லானின் திரைப்படத்தில், ஒரு கொலை வழக்கை விசாரிக்கிற வக்கீலும் டாக்டரும் இப்படிப்பட்ட மனசாட்சியின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.  படம்  ONCE UPON A TIME IN ANATOLIA.

இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய மிக நீளமான இப்படம் மெள்ள  இருள்கவியும் ஓர் அந்திப்பொழுதில் துவங்குகிறது.  துருக்கி நாட்டின் மத்திய அனடோலிய பகுதியில் நகரை விட்டுக் கிளம்பும் மூன்று போலிஸ் வாகனங்கள் மலையடிவார காட்டுப்பகுதியை நோக்கிச் செல்கின்றன.  போலிஸ் உயரதிகாரி நாசி, வழக்கை ஆவணப்படுத்த வேண்டிய அரசு வக்கீல்,  போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய டாக்டர் இவர்களுடன் இன்னும் சில போலீசாரும் பிணத்தை தோண்டி எடுக்க சில கூலியாட்களும் அந்தவாகனங்களில் இருகின்றனர்.  இவர்களைத்  தவிர இன்னும் இரண்டு முக்கிய நபர்கள் கேனான், மனநிலை பிறழ்ந்த அவனது சகோதரன் அவர்களுடன் பயணம் செய்கின்றனர்.  இருவரும் அவர்கள் நண்பன் ஒருவனை அடித்து கொலை செய்து ஊருக்கு ஒதுக்குப்புறமாய் எங்கோ புதைத்துவிட்டார்கள்.  பிணத்தை புதைத்த இடத்தை  அவர்கள் காட்ட வேண்டும்.  அப்படி காட்டுகிற இடத்தில் தோண்டி பிணத்தை எடுத்து விட்டால் போகிற வேலை முடிந்து விடும்.

ஆனால் அவ்வேலை எளிதில் முடிவதாய்  இல்லை.  கேனானுக்கு பிணத்தை புதைத்த இடம் மறந்து போய்விட்டது.  படுபாவி..  அப்போது நல்ல போதையில் இருந்திருக்கிறான்.  ஆனால் மங்கலாய் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.  புதைத்த இடத்தில் ஒரு நீரூற்றின் சலசல சத்தம் காதில் விழுந்தது. ஒரு குட்டையான ஒற்றை மரம் கண்ணில்பட்டது. இந்த அடையாளத்தை வைத்து கொண்டு வழியெல்லாம் வண்டியை நிறுத்தி தேடுகின்றனர்.  இந்த இடத்தில் தான்... இல்லை இந்த இடம் இல்லை..  என்று கேனான் இழுத்தடிக்க போலிஸ் அதிகாரிக்கு இரத்தக் கொதிப்பு எகிறுகிறது.  அவனை அடிக்கப் பாய்கிறார். அவனுக்கு சிகரெட்  தரவரும் வக்கீலையும்  தடுக்கிறார்.

வழியில் ஒரு கிராமத்தில் ஊர்த்தலைவர் வீட்டில் சற்று நேரம் தங்கி உணவு உண்டு ஒய்வு எடுக்கின்றனர்.  கொலை செய்யப்பட்டவன் மனைவிக்கும் எனக்கும் ரகசிய உறவு உண்டு.  இப்போது இருக்கும் அவள் பையன் எனக்குப் பிறந்தவன் தான் என்று கேனான் சொன்னதாக போலிஸ் அதிகாரி டாக்டரிடமும் வக்கீலிடமும் சொல்கிறார்.  கேனான் சொல்வதை எவ்வளவு தூரம் நம்புவது என்கிற தயக்கம் அவர்களுக்கு.  ஒரு வழியாக அதிகாலையில் கேனான் குறிப்பிட்ட நீரூற்றையும் ஒற்றை மரத்தையும் பார்த்து விடுகிறனர்.  பிணம் புதைக்கப்பட்ட இடம் தெரிந்து விடுகிறது.  பிணத்தை தோண்டி எடுத்து நகரத்திற்கு திரும்புகின்றனர்.  மருத்துவமனை முன்பாக செத்துப் போனவனின் மனைவியும் அவள் மகனும் நிற்கின்றனர்.  மகன் கேனானை கல்கொண்டு அடிக்க.. கேனானோ வாய்விட்டு அழுகிறான்.  போஸ்ட் மார்ட்டத்தில் செத்தவன் உயிரோடு புதைக்கப்பட்டது தெரியவர டாக்டர் அந்த உண்மையை ரிப்போர்ட்டில் குறிப்பிடாமல் மறைத்து விடுகிறார். போஸ்ட்மார்ட்டம் நடக்கும் அறைக்கு எதிரே செத்தவன் மனைவி ஹீல்ஸ் சூவை ஆட்டியபடி அமர்ந்து இருக்கிறாள்.  வீடு திரும்பும் வழியில் செத்தவன் மகன் கால்பந்து மைதானத்தில் இருந்து தன் முன்னால் வந்து விழும் பந்தை எடுத்து திரும்பி மைதானத்துக்குள் வீசுகிறான்.

படத்தில் கொலைக்கான காரணம் தெளிவாக சொல்லப்படவில்லை.  கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து, பார்வையாளனே  மீதித் திரைக்கதையை எழுதிக்கொள்ள வேண்டியிருகிறது.  கள்ளக்காதல்.. பெண்தகராறுதான் கொலைக்காண காரணம் என்பதற்கு ஊர்த்தலைவர் வீட்டில் கேனான் சொன்னதாக போலிஸ் அதிகாரி சொல்லும் ஒரு வரிச் சரடுதான் நமக்கு உதவுகிறது.

கேனான் செய்த கொலை இரண்டாம் பட்சம்தான்.  பிணத்தை தோண்டி எடுக்கப் போன அந்த டாக்டரையும் வக்கீலையும் அவர்களின் மனசாட்சி இரக்கமின்றி இம்சிப்பதுதான் படத்தின் மையம்.  அதைத்தான் இயக்குனர் படம் முழுக்க சித்தரிக்கிறார்.

டாக்டருக்கு கல்யாணம் ஆகி டைவர்சும் ஆகிவிட்டது.  அந்த நள்ளிரவில் உணவு பரிமாறும் ஊர்த்தலைவரின் பெண்ணின் அழகு அவரைப் படுத்துகிறது. வக்கீலோ தான் எவ்வளவு கேவலமானவன் என்று வெளிப்படையாகவே ஒத்துக்  கொள்கிறார். .அந்த இரவில் வக்கீல் டாக்டருக்கு ஒரு கதை  சொல்கிறார்.  'ரொம்ப நாள் முன்பு அனடோலியாவில் ஒரு வசீகரமான பெண் இருந்தாள்.  அவள் கர்ப்பம் தரித்தபோது தன்  மரண தேதியை ஆருடம் சொன்னாள்.  அவள் வாக்கு பலித்தது.  சொன்ன தேதியில் அவள் இறந்து போனாள்'.  இது வக்கீல் சொன்ன கதை.  'சாத்தியமே இல்லை; யாரும் நினைத்தபோது மரணத்தை வரவழைத்துக் கொள்ள முடியாது' இது டாக்டரின் வாதம்.  'இல்லை.. சொன்ன தேதியில் ஹார்ட் அட்டாக் வந்து அவள் இறந்து போனாள்'.  ' ஹார்ட் அட்டாக் தானாக வராது; குறிப்பிட்ட மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வர வாய்ப்பு உண்டு'  என்று அந்த மாத்திரையின் பெயரை டாக்டர் சொல்ல.  ' அது என் மாமனார் உபயோகித்த மாத்திரைதான்' என்கிற வக்கீல் உண்மையை ஒத்துக் கொள்கிறார்.  'சொன்னது கதை இல்லை; நிஜம். இறந்தவள் என் மனைவிதான்.  அவள் தற்கொலைதான் செய்து கொண்டாள்.  அதற்குக் காரணம் எனக்கு இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பு.  நான் கையும் களவுமாக பிடிப்பட்டபோது அவள் கர்ப்பஸ்திரி.  கொடுத்த  வாக்குப்படி குழந்தையை பெற்று கொடுத்துவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டாள்'.

படத்தில் இரண்டே இரண்டு பெண் பாத்திரங்கள்தான்.  வரும் நேரமும் சில மணித்துளிகளே.  ஆனால்  படம் முழுக்க முழுக்க பெண்களைப் பற்றியே பேசுகிறது.  பெண்களின் புத்திசாலித்தனமான  காய் நகர்த்தலில் ஆண்கள் வெறும் விளையாட்டு பொம்மைகள் என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த படமும் வேறு வண்ணம் பூசிக்கொள்கிறது.  

நூரி பில்கே செய்லான் இப்படம் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.  ”திரைப்பட ரசிகர்களிடம் என்ன ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் தொட்டதற்கு எல்லாம் ஏன், எதற்கு, எப்படி என்று காரணம் கேட்கிறார்கள்.  நம்முடைய நிஜ வாழ்கை அப்படியா இருக்கிறது?  நமது நெருங்கிய நண்பன் என்ன நினைக்கிறான் என்று கூட நம்மால் தெரிந்து கொள்ளமுடியவில்லை.  சினிமாவில் மட்டும் இதை ஏன் எதிர்பார்க்கிறோம்?”.  அவர் சொன்னது போல நம்முடைய நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை.  நிறைய விசயங்களை நம்முடைய கற்பனைக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர்.

2011 கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம்  GRAND PRIX பரிசைப் பெற்றது. ' நான் என்றும் காதலிக்கும் என் அழகான தனிமையான நாட்டிற்கு'  என்று இப்பரிசை சமர்ப்பணம் செய்தார் நூரி பில்கே செய்லான்.

படத்தின் trailer : https://www.youtube.com/watch?v=jJOFUsO_N20

-ருபேந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்