திரைக்கடல் - ஏழு பெட்டிகளில் என்ன... பணமா ? பிணமா ? | திரைக்கடல், 7 Boxes

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (31/05/2013)

கடைசி தொடர்பு:14:38 (31/05/2013)

திரைக்கடல் - ஏழு பெட்டிகளில் என்ன... பணமா ? பிணமா ?

பாரிஸில் லூமியர் சகோதரர்கள் முதல் சினிமாவை ஓட்டி, பல்ப் கண்டுபிடித்த எடிசனுக்கே பல்ப் கொடுத்திருந்த துவக்க காலத்தில் சினிமா காசு பார்க்கும் சமாச்சாரமாகத்தான் இருந்தது.  பின்னாளில்தான் அதில் கலையும் கொலையும் வந்து சேர்ந்தது.

கலைப்படம் என்கிற வார்த்தைக்கு நம் சினிமா லெஜன்ட்கள் கொடுக்கும் கலப்படமான விளக்கங்களைக் கேட்டால் நிச்சயம் மண்டை காய்ந்து போகும்.  விநாடிக்கு 24 ஃபிரேமா... 240 ஃபிரேமா.. என மயங்க வைத்த  நம் முன்னாள் தூர்தர்ஷன் சினிமாக்களை தூரமாக வைத்து விட்டு இன்றைய CHILDREN OF HEAVEN, THE CYCLIST போன்ற ஈரானியப் படங்களை கலைப்படம் என்று புரிந்து கொண்டால்.. ஒரு நாட்டில் ஆதி முதல் அந்தம் வரை எடுக்கப்பட்ட அத்தனை படங்களுமே கலைப்படங்கள்தான். அந்த நாடு பராகுவே.!

பராகுவே.. உலகக் கால்பந்து திருவிழா சமயத்தில் உச்சரிக்கப்படும் பெயர்.  அந்த நாட்டில் 1950 தொடங்கி இன்று வரை 150க்கும் குறைவான படங்களே எடுக்கப்பட்டிருக்கின்றன. அத்தனையும் கலைப்படங்கள்.  அந்த நாட்டில்  இப்போது முதல்முறையாக ஒரு கொலைப்படம் வந்து 100 கோடிக்கும் மேல் கல்லா கட்டி, சினிமா ரசனையில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது.   இனிமேல் நாமும் இது போன்ற சினிமாவையே எடுத்தால் என்ன என்று அந்த ஊர் இயக்குநர்களை யோசிக்க வைத்திருக்கிறது அந்த படம்.  அதன் பெயர் 7 BOXES.. ஏழு பெட்டிகள்.

படத்தின் கதை முழுக்க முழுக்க பராகுவேயின் தலைநகரான அசஸ்கியானில் இருக்கும் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் நடக்கிறது.  சுற்றுலா பயணிகள், உள்ளுர் வணிகர்கள், மாஃபியா கும்பல்கள் என 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் சூப்பர் மார்கெட். நம்மூர் பர்மா பஜாரை சற்றே ஞாபகப்படுத்தும் அந்த மார்க்கெட்டில் கஞ்சாத்தூள் முதல் கடவுள் துகள் வரை அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.  அம்மா கூட கிடைப்பாள்.  அம்மா என்பது அந்த ஊரில் பிரபலமான போதைப் பொருள்.  அதனாலேயே அந்த மார்க்கெட்டில் எப்பொழுதும் போலீஸ்  தொந்தரவு.  முணுக்கென்றால் ரெய்டுக்கு போலீஸ் வந்து இறங்கிவிடும்.   

மார்க்கெட்டிலோ  ‘அதையெல்லாம் பார்த்தா தொழில்பண்ண முடியுமா. அவங்க எப்பவுமே அப்படித்தான் பாஸ்' வியாபாரிகள்.  சட்டத்தை போட்டால் அதில் ஓட்டையைப் போட்டு ஆட்டையை போடுகிற மாதிரி போலீசிலிருந்து தப்பிக்க புதுப்புதுடெக்னிக்கை கையாளுவார்கள்.

மழைவாசனை போல் போலீஸ் வாசனையை முன் கூட்டியே உணர்ந்து சரக்குகளை தள்ளுவண்டியில் வைத்து போர்ட்டரிடம் தள்ளிவிடுவார்கள்.  போர்ட்டரோ நல்ல பிள்ளை போல் தள்ளு வண்டியுடன் மார்க்கெட்டில் சுற்றித் திரிந்துவிட்டு போலீஸ் போனதும் சரக்குகளை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அதற்கான கமிஷனை வாங்கிக் கொள்வான்.

அந்தப் போர்ட்டர்களில் ஒருவன் ஜிம், மொட்டையன்.  அன்று அவன் வேலைக்கு வரவில்லை.  அதனால் அவனுடைய வேலை 18 வயது விக்டருக்கு  போகிறது .  அவனுடைய தள்ளுவண்டியில் ஏழு பெட்டிகளை வைத்து தள்ளியபடி பாவலா காட்டி போலீஸ் போனதும் அந்த பெட்டிகளை திரும்பக் கொண்டு வந்து ஒப்படைக்கவேண்டும்.  அதற்கென அவனுக்கு ஒரு செல்போன் கொடுக்கப்படுகிறது.  செல்போனில் அவனை கூப்பிட்டதும் வந்து பெட்டியை கொடுத்து விட வேண்டும்.  இந்தவேலைக்கு சன்மானம் 100 டாலர்கள்.

இவன் இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று விக்டரைப் பார்த்து தயங்குகிற முதலாளி, பிறகு ஒத்துக் கொள்கிறான். விக்டருக்கும் தயக்கம்.  ஏழு பெட்டிகளில் என்ன வில்லங்கமோ?  ஆனால் அவனுக்கு அந்த 100 டாலர்கள் தேவைப்படுகிறது.  அதை வைத்து அவன் அதிநவீன கேமரா கொண்ட செல்போன் ஒன்று வாங்க வேண்டும்.  அதில் தன்னை விதவிதமாக படம் எடுத்து அந்த படங்களை ஹாலிவுட்டுக்கு அனுப்பி அர்னால்ட் மாதிரி ஒரு ACTION HERO ஆகி விட வேண்டும். 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக'  தன் முகம் தெரிய வேண்டும்..

சூப்பர் மார்க்கெட்டின் கண்காணிப்பு கேமரா முன் நின்று, அப்படியும் இப்படியுமாக போஸ் கொடுத்து அதை அங்கிருக்கும் டிவியில் பார்த்துரசிக்கும் விக்டர், அகில உலக சூப்பர் ஸ்டாராக தன் முகத்தைப் பார்த்து விட துடித்துக் கொண்டிருக்கிறான்.  அதற்கு அந்த 100 டாலர்  வேண்டும். அதனால் அந்த ஏழு பெட்டிகளையும் வாங்கிக் கொள்கிறான்.

இங்கிருந்து ஏழு பெட்டிகளின் கதையும்.. அந்தப் பெட்டிகளின் பயணமும் துவங்கி.. துரத்தல்கள், டுமீல் டுமீல் வேட்டுச் சத்தங்கள், இருக்கைநுனி விறுவிறுப்புகள் என பதைபதைக்கும் நிமிடங்களாய் படம் நகர்கிறது.  ஏழு பெட்டிகளும் இருப்பதென்னவோ தள்ளுவண்டியில்தான். திரைக்கதையோ புல்லட் ரயில் வேகத்தில்.

மொட்டையன் ஜிம். போட்ட லீவை கேன்சல் பண்ணிவிட்டு வேலைக்கு வந்து விடுகிறான்.  கடை முதலாளி அவன் வேலையை விக்டரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறான்.  ‘வட போச்சே' அதனாலென்ன.. விக்டரிடம் பெட்டியை வாங்கிக் கொள்.  வேலையை முடித்து பணத்தை வாங்கிக் கொள் என்று முதலாளி சொல்லிவிட.. ஜிம் விக்டரைத் தேடிப் போக, விக்டர் அவன் கண்ணில் படாமல் போக்குக்காட்டி ஓடி வடையைக் காப்பாற்றிக் கொள்கிறான்.

கடை முதலாளியிடம் திரும்பி வரும் ஜிம்முக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..  ஏழு பெட்டிகள் நிறைய பணம் இருப்பது போல முதலாளியின் அரைகுறைப் பேச்சு ஜிம் காதில் விழ.. விக்டரிடமிருக்கும் பெட்டிகளை அடித்துக்கொண்டு எங்காவது வெளியூர் போய் பெரிய பெட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து, இன்னும் சில கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு விக்டரைத் துரத்துகிறான்.  விக்டருக்கு 100 டாலர் வேண்டும்.  ஜிம்முக்கு 100 கோடி டாலர் வேண்டும்.

ஏழு பெட்டிகளையும் தள்ளுவண்டியில் வைத்து சூப்பர் மார்க்கெட்டை சுற்றுகிற பணியில் விக்டருடன் அவன் காதலி லிசியும் இணைந்து கொள்கிறாள்.  எப்போதும் போல் சூப்பர் மார்க்கெட்டுக்கு சோதனை போட வரும் போலீசிடமிருந்து விக்டர் சாகசம் செய்து தப்பிக்கிறான்.   அப்படிப்பட்டவனிடம் ஒரு பெட்டியை அபேஸ் செய்துகொண்டு ஓடி விடுகிறான் உள்ளுர்த் திருடனான இன்னொரு சாகசக்காரன்.  எல்லாம் உன்னால்தான் என்று லிசியைத் திட்டிவிட்டு திருட்டுப் போன பெட்டியை மீட்க ஓடிப்போய், முடியாமல் திரும்பி வருகிறான் விக்டர்.  சரி..  அப்படி அந்தப் பெட்டிகளில் என்னதான் இருக்கிறது என்று திறந்து பார்க்க.. முதல் பெட்டியிலேயே ஒரு பெண்ணின் தலை இருப்பதைப் பார்த்து விக்டருக்கு தலை தொங்கி நாக்கு தள்ளிவிடுகிறது.

பெட்டிக்குள் இருக்கும் பெண் தலையின் முன்கதை என்ன?

ஒரு பணக்கார மாப்பிள்ளை.. வேலைவெட்டிக்குச் செல்லாத டம்மிபீஸ்.. தன் மனைவியை தானே கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்து, கடத்தல்காரன் போல மாமனாரை பிளாக்மெயில் செய்து 100 கோடியை கறந்து விடுகிறான்.  இவனுக்கு கூட்டாளிகள் சூப்பர் மார்க்கெட்டில் கறி பதனிடும் பேக்டரி வைத்திருக்கும் முதலாளி தாமஸ் மற்றும் அந்த முதலாளியிடம் வேலை பார்க்கும் அடியாள் ஜான்.  கடத்தப்பட்ட மனைவியை அடைத்து வைத்திருப்பது அந்த ஜானின் வீட்டில்தான்.  அவளோ கட்டியிருந்த கயிற்றை அறுத்து கண்ணாடி ஜன்னலை உடைத்து கைநரம்பு கிழிந்து ரத்தம் சிந்தி தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்கிறாள்.

மாப்பிள்ளையும், கறிக்கடை முதலாளியும் போனில் கோட் வேர்டில்தான் பேசிக்கொள்வார்கள்.  அவர்கள் பாஷையில் 'தக்காளி' என்றால் கடத்தப்பட்ட மனைவி.  'உருளைக்கிழங்கு' என்றால் 100 கோடிபணம்.  பணத்தை மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடு.. இதை எப்படிச் சொல்ல வேண்டும்?  'உருளைக்கிழங்கை மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடு.  ஆனால் மாப்பிள்ளை மறந்துபோய் ‘தக்காளி'யை மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடு. ஏழு பெட்டிகளில் வைத்து அனுப்பிவிடு' என்று சொல்லி போனை  வைத்து விடுகிறான்.  'தக்காளி'யான மனைவியை ஏழு பெட்டிகளில் எப்படி அனுப்ப முடியும்.  ஆனால் கறிக்கடைக்காரனுக்கு இதெல்லாம் சாதாரணமாச்சே.  மனைவியை 70 துண்டுகளாக வெட்டி பெட்டிக்கு பத்து வீதம் ஏழு பெட்டிகளில் வைத்து மார்க்கெட்டுக்கு அனுப்பி விட்டான்.  அந்த ஏழு பெட்டிகள்தான் இப்போது விக்டரின் கையில்.  மன்னிக்கவும் கணக்கு தப்பு. இப்போது ஏழு இல்லை ஆறு.  

விக்டருக்கு ஒரு அக்கா.  அந்த அக்காவுக்கு ஒரு தோழி.  அந்த தோழி கறிக்கடை முதலாளி அடியாள் ஜானின் காதலி.  தற்சமயம் கர்ப்பிணியாக இருக்கும் அவளுக்கு திடீரென இடுப்புவலி எடுக்க.. விக்டரின் அக்கா அவளை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறாள். அவள் இடுப்புவலிக்கு காரணமான ஜானிடம் விஷயத்தை சொல்வதற்காக அவன் வீட்டுக்கு வர, உள்ளே உடைந்த கண்ணாடி.. சிந்திய ரத்தம்.. சிதறிக்கிடக்கும் பெட்டியில் பேக் பண்ணாத எலும்புத்துண்டு இவற்றைப்பார்த்து வீலென அலறி, விரைந்து ஓடி போலீசிடம் சொல்ல. போலீஸ் இப்போது சூப்பர் மார்க்கெட்டை நோக்கி.

படத்தின் இறுதிக்கட்டம்.  ஒத்தப்பைசா கூட வேண்டாம். உன் பெட்டிகளை நீயேவெச்சுக்க வாத்யாரே.. என பெட்டிகளை ஒப்படைக்க விக்டர் கடைக்கு வருகிறான். அவனிடமிருந்து பெட்டிகளைப் பிடுங்கிக்கொண்டு போக ஜிம்மும் தன் கூட்டாளிகளுடன் கடைக்கு வருகிறான்.  கடைக்கு போலீசும் வருகிறது.  கடைக்குள்ளே 'பெட்டியில் பணத்தை அனுப்பச் சொன்னால் பொண்டாட்டி பிணத்தை அனுப்பி இருக்கியே' என்று மாப்பிள்ளை கறிக்கடைக்காரனை கசாப்புப் பண்ணிக்கொண்டிருக்கிறான்.  கடை வாசலில் விக்டரிடம் இருக்கும் பெட்டிகளை ஜிம் பிடுங்கிக்கொள்ள அதைப் பிடுங்க வரும் போலீசில் சிலரை ஜிம் தன் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறான்.  விக்டரை கவசமாகப்  பயன்படுத்தி எஸ்கேப் ஆகப் பார்க்கும் ஜிம்மை போலீஸ் போட்டுத் தள்ளி விக்டரை காப்பாற்ற கதை சுபமாய் முடிகிறது.

லேசான காயங்களுடன் அங்கங்கே கட்டுப்போட்டு ஹாஸ்பிட்டலில் விக்டர் படுத்திருக்கிறான்.   ஏழு பெட்டிகளில் பிணம் இருந்த மேட்டரை செய்தி வாசிக்கும்பெண்மணி டிவியில் புன்னகையுடன் சொல்ல அப்போது போடப்படும் கிளிப்பிங்கில் அட.. நம்ம விக்டர்.. போலீசிடம் இருந்து தப்ப ஜிம் அவனை துப்பாக்கி முனையில்பிடித்து வைத்து மிரட்டும் காட்சி.  கடைசியில் விக்டரின் கனவு நனவாகி விட்டது.  உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வந்தே விட்டான்.

ஒரு கலைப்படம் எடுப்பதற்குத்  தேவையானதை விடவும்  குறைந்த பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு, எல்லோருக்கும் பிடித்துமிருக்கிற இப்படம், பலரையும் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது.  இனி பராகுவேயில் கலைப்படங்களுக்கு பதில் இப்படிப்பட்ட கொலைப்படங்கள்தான் வருமோ.. இது பராகுவே சினிமாவுக்கு நல்லதில்லையே என்றுவிமர்சகர்கள் விசனத்தில் இருக்கின்றனர்.

இந்த ’ஏழு பெட்டி’களில் எல்லாப் பெட்டிகளிலுமே மசாலா என்று புறம்தள்ளி விட முடியாது.  அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கும் எளிய மனிதர்கள்.. இயல்பான சம்பவங்கள்.. நேர்த்தியான திரைக்கதை என்று நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறது இப்படம்.  அதனால்தான் இதை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் என்றுசொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Juan Carlos Maneglia, Tana Schembori தம்பதியினர் இப்படத்தை இயக்கி இருக்கின்றனர்.  அவர்களுக்கு இது முதல் படம். பராகுவேவிற்கு முதல் மசாலாப்படம்.  

‘கலைப்படம் கமர்ஷியல்படம் என்கிற பாகுபாடெல்லாம் எதற்கு... நல்லபடம் மோசமானபடம் இது போதுமே'  என்று  INGMAR BERGMAN ஒரு முறை குறிப்பிட்டார். அந்த எளிமையான சூத்திரத்தின்படி 7 Boxes ஒரு நல்ல படம்தான்.

படத்தின் TRAILER : http://www.youtube.com/watch?v=AfNos-RT0Kc

- ருபேந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்