திரைக்கடல் - 'நீங்கள் ஜானைப் பார்த்தீர்களா?' | திரைக்கடல், RED DOG

வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (04/06/2013)

கடைசி தொடர்பு:17:04 (04/06/2013)

திரைக்கடல் - 'நீங்கள் ஜானைப் பார்த்தீர்களா?'

'நான் மனிதர்களைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்கிறேனோ, அவ்வளவு என் நாயைக் காதலிக்கத் தொடங்குகிறேன்'. - மார்க் ட்வைன்.

1970 வாக்கில் நீங்கள் ஆஸ்திரேலியா பக்கம் போயிருந்தால் ஒரு வேளை உங்களைப் பார்த்தும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கலாம்.  ‘நீங்கள் ஜானைப் பார்த்தீர்களா?’.  இந்த கேள்வி அன்று அந்நாட்டின் ஒரு பிரலபத்தின் கேள்வி.  அந்த பிரபலம் மிஸ்டர் ரெட் டாக்.

'நாயே! பீட்டரைக் கவனி’.. என்றார் எஜமான்.  நாய் என்றால் பீட்டர்.  பீட்டர் என்றால் நாய்.  இது எப்பொழுதோ படித்தகவிதை.  சிலருக்கு அவர்கள் வளர்க்கும் நாயை ‘நாய்’ என்று சொல்லி விட்டால் கோபம் வந்துவிடும்.  அவ்வளவு நாய்ப்பாசம்.  நாய் மீது கோடிக்கணக்கில் சொத்தெழுதி வைத்துவிட்டுச் செத்துப் போகின்றவர்கள் நிறைய பேர்  இருக்கிறார்கள்.  நாய் மீதுஇவ்வளவு பாசமா ? என்று ஆச்சரியப்படுகிறவர்களுக்கு இன்னொரு கவிதை.  ‘பறவை பற்றி பார்த்தவனுக்கு என்ன தெரியும். பறவையாகிப் பார்த்தால்தான் தெரியும்’ அதுபோல் நாய் வளர்த்துப் பார்த்தால்தான் தெரியும்.  அப்படி வளர்க்காதவர்களையும் நாய்கள் மீது காதலாகிக் கசிந்துருக வைக்க நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

‘ராமு’வில் ஜெமினிகணேசனை ஆற்று வெள்ளத்தில் நீந்திக் காப்பாற்றும் நாய், ‘செல்வி’யில் காதலனோடு மரத்தைச் சுற்றி டுயட் பாடும் நாய், 101 டால்மேஷன்ஸ்சில் வில்லியின் ஓவர்கோட் ஆகாமல் ஓடி ஒளியும் நாய்கள்.. இவை  அத்தனையும் கற்பனையில் சிருஷ்டிக்கப்பட்டவை.  ஆனால் நிஜமாக வாழ்ந்து, கண் முன்னே ரத்தமும் எலும்புமாக நடமாடித் திரிந்து ஆஸ்திரேலியாவின் சரித்திரத்திலும் இடம் பிடித்துவிட்ட ஒரு நாயின் உண்மைக் கதையை படமாக எடுத்து இருக்கிறார்கள்.  அந்த நாயின் பெயர் ‘ரெட் டாக்’.  படத்தின் பெயரும் அதுதான்.  அந்த ரெட் டாக்கின் கேள்விதான் ‘ஜானைப் பார்த்தீர்களா?’

1979.  தெற்கு ஆஸ்திரேலியாவின் டாம்பியர் பகுதியில் இருக்கும் ஒரு மதுவிடுதி.  நள்ளிரவு.  ஓட்டி வந்த டிரக்கை நிறுத்திவிட்டு விடுதிக்குள் நுழையும் தாமஸ்க்கு அதிர்ச்சி.  ஐந்தாறு பேர் யாரையோ கொலை செய்யும் முனைப்புடன் முன்னேறிச் செல்ல, தாமஸ் பாயந்தோடிப் போய் அவர்களைத் தடுக்கிறான்.  பிறகுதான் உண்மை தெரிகிறது.  அவர்கள் கொல்ல முயன்றது ஒரு நாயை.  அதுவும் கருணைக்கொலை.  விஷ ஜுரம் வந்து வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் நாய் அது.  தாமஸ் அந்த நாயைப் பற்றி விசாரிக்க.. அது சாதாரண நாயில்லை.  ஆஸ்திரேலியாவின் பிரபலமான நாய் என்றுஅவர்கள் அந்த நாயின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றனர்.  ” 10 வருடங்களுக்கு முன் மனிதர்கள் மனிதர்களாகவும் நாய்கள் நாய்களாகவும் இருந்த போது..” என்று தொடங்குகிறது அவர்கள் சொல்லும் அந்த கதை.

10 வருடங்களுக்கு முன்.. டாம்பியர் ஆளில்லா பாலைவனப்பகுதி.  ஆனால் அங்கு இரும்புத்  தாதுப்பொருள் இருப்பது தெரிய வந்துஒரு இரும்புக் கம்பெனி அங்கு உடனே ஒரு பட்டறையைப் போட.. வேலை செய்ய ஆட்கள் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் டாம்பியருக்கு படையெடுக்கின்றனர்.  இப்போது ஆள் நடமாட்டம் அதிகமாகிவிட டாம்பியரில் பார் வசதியுடன் கூடியஹோட்டல் ஒன்றை திறக்க  ஜாக்  தன் மனைவியுடன் காரில் புறப்பட்டு வருகிறான்.  வழியில் ஒரு செந்நாய் ரோட்டை மறித்துக் கொண்டு வழிவிடாமல் நிற்கிறது.  ஜாக்கும் அவன் மனைவியும் காரிலிருந்து இறங்கி நாயை விரட்டப் போக அதுவோ ஜம்பமாக ஓடி வந்து அவர்கள் காருக்குள் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.  வேறு வழியில்லாமல் அவர்கள் அந்த நாயுடன் டாம்பியர் வந்து சேர்கின்றனர்.  இப்படித்தான் ரெட் டாக் டாம்பியருக்கு வந்து சேர்ந்தது.

இரும்புக் கம்பெனியில் வேலை பார்க்கும் வேநோவிற்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம்.  எவனாவது அகப்பட்டால் காதில் ரத்தம் வரும்வரை அவன் ஊர் அருமை பெருமை சொல்லி அந்த ஆளை ஒரு வழி பண்ணி விடுவான்.  எங்கள் ஊர் மண் அழகு, பெண்அழகு, மட்டை அழகு, குட்டை அழகு.. என்பவனை போட்டுத் தள்ளிவிடலாம் போல் வெறி வரும்.  ஒரு கட்டத்தில் அப்படி நிகழ்ந்தும் விடுகிறது.  இன்னொரு தடவை உன் ஊர் பற்றி பேசினால் பரலோகம் போய் விடுவாய் என நாலு உதை கொடுத்துஅவனை எச்சரிக்கின்றனர் அவன் நண்பர்கள்.  ஆனால் வேநோவிற்கோ அவன் ஊர்ப் பெருமை பேசாவிட்டால் மண்டைவெடித்து விடும்.  இப்போது அவனுக்கு உற்ற தோழனாய் அவன் அருகே வந்து அமர்ந்து, எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் அவனுடைய ஊர்ப்புராணம் கேட்கிறது ரெட் டாக். ”நான் சொல்வதை நன்கு கவனிக்கிறாய். உனக்கு நல்ல எதிர்காலம்இருக்கிறது” என்று அதைத் தட்டிக் கொடுத்து பாராட்டுகிறான் வேநோ.  இவனைப் போலவே இன்னொருத்தன் ரெட் டாக்கை கட்டிப்பிடித்து கொஞ்ச.. ”அது என்னுடைய நாய். நீ ஏன் அதைக் கொஞ்சுகிறாய்?” என்று அவனிடம் சண்டைக்கு போகிறான் வேநோ.  ரெட் டாக்கோ யாரையும் தன் எஜமானாக ஏற்றுக் கொள்ளாமல் எல்லோர்க்கும் பொது சொத்தாகவே திரிந்துகொண்டு இருக்கிறது.

பொதுவாக நாம்தான் நமக்கான நாயைத் தேர்ந்தெடுத்து அதற்கு எஜமான் ஆவோம்.  ஆனால் ரெட் டாக்கோ தனக்கான எஜமானை தானே தேர்வு செய்து கொண்டது.  அவன்தான் ஜான்.  அமெரிக்கன்.  அந்த இரும்புக் கம்பெனிக்கு பஸ் டிரைவராக வருகிறான்.  இருவருக்குமான காதல் வழக்கம்போல் ஒரு மோதலிலேயே துவங்குகிறது.  தன்னுடைய பஸ்ஸில் அனுமதியின்றி உரிமையுடன் ஏறி அமர்ந்து கொள்ளும் ரெட் டாக்கை கோபமாக திட்டி விரட்டி அடிக்கிறான் ஜான்.  அடுத்து அது அவன் பைக்கில் ஏறி அமர்ந்து கொள்ள அப்போதும் விரட்டுகிறான்.  ஒரு நாள் இரும்புக் கம்பெனி தொழிலாளர்கள் ரெட் டாக்கை ஐந்து நிமிடத்தில் அரைக் கிலோ அல்வாவைச் சாப்பிடு.. பத்து நிமிடத்தில் ஒரு முழுக்கறிக் கோழியை உயிரோடு முழுங்கு என்று இம்சை செய்து அதன் மீது பெட் கட்ட, ஜான் அதை தட்டிக் கேட்கிறான்.  அது பெரிய சண்டையில் முடிகிறது.

மறுநாள் பஸ்ஸிற்கு வெளியே அவன் அனுமதிக்காக காத்து நிற்கிற ரெட் டாக்கை முதல் தடவையாக பஸ்ஸில் ஏறிக்கொள்ள அனுமதிக்கிறான் ஜான்.  அந்த கனம் ரெட் டாக் அவனைத் தன் எஜமானாக வரித்துக் கொள்கிறது.

இரும்பு கம்பனி வேலைக்கு நான்சி என்கிற பேரழகி வருகிறாள். பஸ்ஸில் ரெட் டாக் அருகில்  அமர யாருக்கும் அனுமதி இல்லை.  ஆனால் நான்சி அது தெரியாமல் அமர்ந்து விட, ரெட் டாக் அவளை அமர விடாமல் தள்ளிவிடப் பார்க்கிறது.  நான்சி அத்தனை பேர் முன்னால் ரெட் டாக்கை  'நீயெல்லாம் படித்தவனா? நாகரீகமானவனா? நாயின் பெயரையே கெடுத்துவிடுவாய் போல இருக்கிறதே' என்று கன்னாபின்னாவென திட்ட ரெட் டாக் நான்சிக்கு அடங்கிப் போய் விடுகிறது.

நான்சியின் அடுத்த வீட்டில் ஒரு பூனை இருக்கிறது.  அது ரெட் கேட்.  அதன் எஜமான் ஒரு சிடுமூஞ்சி கிழவன்.  நான்சியின் ரெட் டாக்கை அந்த சிடுமூஞ்சி ஒரு நாள்  தன் துப்பாக்கியால் சுட்டு விடுகிறான்.  ஜானும், வேநோவும் ரெட் டாக்கை ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர்.  அங்கிருக்கும் ஒரு நர்சைப் பார்த்ததும் வேநோவுக்கு காதல் பற்றிக் கொள்கிறது.  தன்  காதலியை கவர் பண்ண உடம்பு குணமான பின்னும் ரெட் டாக்கை அந்த பரிசோதனை இந்த பரிசோதனை என்று வேநோ  ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு வருகிறான்.  ஆக மொத்தத்தில் எங்களூர் பெண் போல வருமா என்றிருந்த வேநோ  இந்த ஊர்ப் பெண்ணை கட்டிக்கொண்டு கடைசியில் வாயே திறக்கமுடியாமல் போக காரணமாகிவிடுகிறது ரெட் டாக்.

இன்னொரு தொழிலாளி.. ஒரு விபத்தில் தன் மனைவியையும் மகனையும் பறிகொடுத்தவன்.  அந்த சோகத்தில் கடலில் சுறா வாயில் மாட்டி சாக இருந்தவனை ரெட் டாக் சாகசம் செய்து காப்பாற்றுகிறது.

எஜமான் ஜானுக்கும் அழகி நான்சிக்கும் இடையே காதல் மலர்கிறது.  சிவ பூஜை நாயாக ரெட் டாக்குடன் உல்லாசமாக ஊர்சுற்றி திரிபவர்கள் ஒருநாள் கல்யாணம் செய்து கொள்வதென முடிவெடுக்கின்றனர்.  அதற்கு மறுநாள்  ஜான் கம்பெனி வேலைக்கு வரவில்லை.  நான்சிக்கு போன் பண்ணினால்  காலையிலேயே வேலைக்கு கிளம்பி போய் விட்டானே என்கிறாள்.  நண்பர்கள் ஜானைத்  தேடிச் செல்கிறானர்.  பைக்கில் புறப்பட்டு போன ஜான் ரோட்டில் அடிபட்டு செத்துப்போய் கிடக்கிறான். ஜானின் இறுதி சடங்கு முடிகிறது. ரெட் டாக்கை  காணோம்.  " காத்திரு.. வந்துவிடுகிறேன்" என்று கடைசியாய் ஜான் அதனிடம் சொல்லிவிட்டுப் போன இடத்தில், அவன் நிச்சயம் வந்துவிடுவான் என மூன்று நாட்களாக உட்கார்ந்து கொண்டிருகிறது.

நாலாவது நாள் ரெட் டாக் ஒரு முடிவு எடுக்கிறது.  ஜான் வராவிட்டால் என்ன.. ஜானைத் தேடி தான் போவதென.  ரெட் டாக் தன் பயணத்தை தொடங்குகிறது.  அதனிடம் ஒரே ஒரு கேள்வி.  'நீங்கள் ஜானைப்  பார்தீர்களா?'.   இந்தக் கேள்வியுடன் அது ஆஸ்திரேலியா  முழுக்க அலைந்து திரிகிறது.  வழியில் தான் பார்க்கிற நபர்கள் மட்டுமன்றி, ஒவ்வொருவராய் தேடிச்சென்றும் தன் கேள்வியுடன் அவர்கள் முகம் பார்த்து நிற்கிறது. ஒருவரையும் அது விடுவதாக இல்லை.  ஆனால் யாரிடமும் அதன் கேள்விக்கான பதில் இல்லை.  ஷாப்பிங் மால், காய்கறி மார்கெட், சினிமா தியேட்டர், ரயில் நிலையம், துறைமுகம், மலையுச்சி, பாலைவனம்.. இப்படி எல்லா இடங்களிலும் ஜானைத் தேடி  அலைந்து கொண்டே இருக்கிறது ரெட் டாக்.

ஆஸ்திரேலியா முழுவதும் அதன்  கதை பரவுகிறது.  ரெட் டாக்கை  அங்கே பார்த்தேன்.. இங்கே பார்த்தேன் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.   பஸ், லாரி, டிராம் வண்டி, ரயில் இவற்றில் ஏறி பயணம் போன ரெட் டாக். கடைசியாக கப்பல் ஏறி ஜப்பானுக்கும் போய் ஜானைத் தேடிவிட்டு ஒரு நாள் டாம்பியர் வந்து சேர்கிறது.  வந்து சேர்ந்த ரெட் டாக்கிற்கு விஷஜுரம்.  அதைக்  கொல்ல எங்கள் யாருக்கும் மனமில்லை என்று ரெட் டாக்கின் கதையை சொல்லி முடிக்கின்றனர்.  

விடிந்து பார்த்தால் படுத்திருந்த ரெட் டாக்கை காணோம்.  இத்தனை வருசங்களாய் அது யாரைத் தேடி அலைந்ததோ  அந்த ஜானுடைய கல்லறைக்கு போய் உயிர் விட்டிருக்கிறது ரெட் டாக்.  ஊர் கூடித் திரண்டு வந்து ரெட் டாக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றது.  ரெட் டாக்கை வருடி கொடுக்கும் நான்சி 'கடைசியாக நீ ஜானைப் பார்த்து விட்டாய்' என்கிறாள்.  ஒரு வருடம் கழித்து கதை கேட்ட தாமஸ் மறுபடியும் டாம்பியருக்கு வருகிறான்.  நான்சிக்கு ரெட் டாக் போலவே இன்னொரு நாயை பரிசளிக்கிறான்.  டாம்பியார் மக்கள் ரெட் டாகிற்கு பெரிய சிலை எழுப்புகின்றனர்.

ரெட் டாக்கின் கதை LOUIS de BERNIERES என்கிற  பிரிட்டிஷ் எழுத்தாளரால் நாவலாக எழுதப்பட்டு பிறகு படமாக்கப்பட்டது.  இதன் இயக்குனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த KRIV STENDERS.  படம் நெடுக இழையோடும் மெல்லிய நகைச்சுவை,  தேர்ந்த இசை, தெளிவான ஒளிப்பதிவு.. இவை படம் அலுப்பின்றி நகர துணை நிற்கின்றன.  ரெட் டாக்காக நடித்திருப்பது  ஆஸ்திரேலிய கெல்பி வகையைச் சேர்ந்த நாய் கோகோ. 2011 லாஸ் ஏன்ஜல்ஸ் திரைப்பட விழாவில் கோகோவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ரெட் டாக்காக நடித்த கோகோ 'மச்சானப் பார்த்தீங்களா' என்று கூட கேமராவைப் பார்த்திருக்கலாம்.  ஆனால் பார்வையாளன் கண் கலங்கியபடி  படத்தை பார்த்ததற்குக் காரணம் இருக்கிறது.  தன்  மீது அன்பு காட்டி தனக்கென உருகி உயிர்விடும் ஒரு ஜீவன் நாய்களுக்கு  மட்டும் அல்ல.. நமக்கும் தேவைப்படுகிறது!

படத்தின் TRAILER : http://www.youtube.com/watch?v=GTExiWzvJlo

- ருபேந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்