திரைக்கடல் - பக்கத்து வீட்டுச் சிறுமி பாய்ந்து உங்கள் கழுத்தைக் கடித்தால்... | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (12/06/2013)

கடைசி தொடர்பு:15:23 (12/06/2013)

திரைக்கடல் - பக்கத்து வீட்டுச் சிறுமி பாய்ந்து உங்கள் கழுத்தைக் கடித்தால்...

பக்கத்து வீட்டு.. பைங்கிளி என்று சொல்லக் கூடாது.  12 வயது சிறுமி, Uncle.. அல்லது Aunty என்று உங்களை விளித்து.. கையில் இருக்கும் பென்சிலையும் பிளேடையும்  நீட்டினால் ஹெல்ப் செய்வீர்கள்தானே?. அப்படி பென்சில் சீவும் சமயத்தில் பிளேடு உங்கள் கையை அறுத்து ரத்தம் கொட்டினால், அந்தச் சிறுமி பதறிப் போய் ‘ஸாரி.. எனக்கு உதவப் போய்த்தான் உங்களுக்கு இப்படி ஆயிற்று' என்று உருகுவாள்தானே.. அவள் அப்படி உருகவும் உருகாமல்,  ஒரு வார்த்தை ஸாரியும் சொல்லாமல், சரேல் எனப் பாய்ந்து சொட்டிய ரத்தத்தை ஆசைதீர சப்புக் கொட்டி நக்கிவிட்டு அப்படியே எழுந்து உங்கள் கழுத்தையும் ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்தால்... உங்களுக்கு எப்படி இருக்கும்?.  இந்தக் காட்சி படத்தில் இல்லை.  ஆனால் இதை விட பயங்கரமான உயிர் உறைய வைக்கும் காட்சிகளுடன் ஒரு வேம்பயர் ( Vampire ) படம் வந்திருகிறது. ஸ்பானிஷ் மொழிப் படம் 'LET THE RIGHT ONE IN'.

1981. கிழக்கு ஸ்டாக்ஹோமில் ஒரு சிறு குடியிருப்பு.  மனித நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படும் பிரதேசம் அது. எப்போதும் கடும் குளிர்.  பாதையை மூடிக் கிடக்கும் பனிக்கட்டிகள்.  

ஒரு நள்ளிரவில் அங்கு இருக்கும் ஒரு ஃபிளாட்டுக்கு புதிதாய் குடிவருகிறான் 50 வயதான ஹகான்.  அவனுடன் ஒரு 12 வயதுச் சிறுமி. லக்கேஜுகளை வீட்டுக்குள் இறக்கி வைத்துவிட்டு ஹகான் முதல் காரியமாக வெளிச்சம் வர வாகான கண்ணாடி ஜன்னல்களை பெரிய பெரிய அட்டைகளை செருகி மறைக்கிறான்.

ஹகான் குடிவந்த வீடிற்கு அடுத்த வீட்டில் ஒரு சிறுவன்.. வயது சுமார் 12.   பெயர் ஆஸ்கார்.  அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விவாகரத்தாகி அவன் இப்போது அவன் அம்மாவிடம் இருக்கிறான்.  தினமும் பள்ளிக்குச் செல்கிறான்.  தன்  பாதுகாப்புக்கு எப்போதும் தன்னுடன் ஒரு கத்தியை வைத்திருக்கிறான்.  ஆனால் அடிப்படையில் அவன் ஒரு  பயந்தாங்கொள்ளி.  வகுப்பில் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அவனை கிண்டல் செய்தாலோ, அடித்தாலோ எதிர்க்க தைரியம் இல்லாதவன்.

ஓர் இரவு தன் வீட்டெதிரே உள்ள மைதானத்தில், அடுத்த வீட்டு  சிறுமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்  போய் விசாரிக்கிறான். "அடுத்த வீட்டில் இருக்கிறாய், உன்னைப் பார்த்ததே இல்லை. உன் பெயர் என்ன?". "ஏலி".  "நாம் நண்பர்களாக இருப்போமா". "இல்லை அது முடியாது".  முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள் ஏலி.

ஹகானிடம்  பிரத்தியேகமாய் வடிவமைக்கப்பட்ட ஒரு சூட்கேஸ் இருக்கிறது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் கேன்,  மிக நீளமான ஒரு கத்தி, மயக்கம் வரவழைக்கும் ஸ்ப்ரே பாட்டில்.. இவை மூன்றும் அதில் அடக்கம். ஊரே உறங்கும் இரவு  நேரத்தில் ஹகான் அந்த சூட்கேசுடன்  வெளியே கிளம்புகிறான்.  ஆள் நடமாட்டமில்லாத சவுக்கு தோப்பில் பதுங்கிக் காத்திருக்கிறான்.  அவன் காத்திருப்பு வீண்போகவில்லை.  அவ்வேளையில் அவ்வழியே ஒருவன் வர.. மணி கேட்பவன் போல் அவனை நெருங்கி  அவன் முகத்தில் ஸ்ப்ரேவை அடித்து, அவன் மயங்கி சரிந்ததும் கொண்டுவந்த கயிற்றில் கட்டி அங்கிருக்கும் மரத்தில் தலைகீழாய் அவனைத் தொங்க விட்டு,  கத்தியால் அவன் மார்பு நரம்பை வெட்டி பெருகிக் கொட்டும் ரத்தத்தை அப்படியே சூடாக  பிளாஸ்டிக் கேனில் சேகரிக்கிறான் ஹகான்.  அதற்குள் யாரோ அங்கு வர பாதி ரத்தத்தில் ஓடிப் போய் விடுகிறான்.

இன்னொரு நாள் இரவு.  தான் முன்பு ஏலியைப் பார்த்த அதே மைதானத்தில் ஆஸ்கார் மீண்டும் அவளைச் சந்திக்கிறான்.  அவன் கையில் இருக்கும் க்யூபை ஏலி வாங்கிப் பார்த்து அச்சிரியப்பட்டு விசாரிக்க.. அவன் அதை அவளுக்கே பரிசாக கொடுத்து விடுகிறான்.  ஆஸ்கார் தன்னிடம் இருக்கும் சில சாக்லேட்களை ஏலியிடம் நீட்ட அவள் வேண்டாமென மறுக்கிறாள்.  ஆனால் ஆஸ்கார் விடாது வற்புறுத்த, ஏலி அந்த சாக்லேட்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு பிறகு முடியாமல் வாந்தி எடுக்கிறாள்.    இருவர் வீட்டுக்கு இடையேயும் ஒரே ஒரு சுவர்.  சுவரில் மோர்ஸின் தந்தி பாஷையில் கட்.. கட்.. கடா... என்று தட்டி இருவரும் பேசிக் கொள்ளும் அளவு அவர்கள் நட்பு விரிவடைகிறது.

இன்னொரு இரவில் பாரில் இருந்து திரும்பும் ஒருவன் பாலத்தின் அடியிலிருந்து ஒரு தீனமான குரல் வருவதைக்  கேட்டு நிற்கிறான். "ஐயா.. என்க்கு உடம்புக்கு  முடியவில்லை.. என்னை என் வீட்டுக்கு தூக்கிச் செல்லுங்கள்". நின்றவன் பரிதாபப்பட்டு நெருங்கி சுருண்டு கிடப்பவளை கைகளில் தூக்கிக் கொண்டு நடக்க.. அவளோ கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கழுத்தைக் கடித்து ரத்தம் குடிக்க..அவன் போராடிச் சரிகிறான்.  

செத்துப்போனவனை ஓரமாய் தள்ளிவிட்டு எழுந்து தன் வீட்டை நோக்கி நடக்கும் ஏலியின் வாயெல்லாம் ரத்தம். "நான்தான் உனக்கு தேவையான ரத்தம் கொண்டுவந்து தருகிறேனே.. நீ ஏன் இப்படி ஆபத்தான காரியத்தில் இறங்குகிறாய்" என்று ஏலியைக்  கடிந்து கொள்கிறான் ஹகான்.  

அடுத்தடுத்த சந்திப்புகளில் ஆஸ்கார் ஏலியிடம்  தன் வகுப்புத் தோழர்கள் தன்னை கிண்டல் செய்வதையும் அடித்து இம்சிப்பதையும் சொல்ல "நீ ஏன் கோழையாக  இருகிறாய்? அவர்களுக்குத் திருப்பி கொடு"  என்று அவனுக்கு தைரியமூட்டுகிறாள்  ஏலி.  அது நன்றாகவே வேலை செய்கிறது.  வெளியூர் பிக்னிக் செல்லும் இடத்தில் ஆஸ்கார் தன்னை வம்புக்கு இழுக்கும் ஒரு சிறுவனை செமத்தியாக உதைத்து விடுகிறான்.  வாலாட்டியவன் காது கிழிந்து ரத்தம் கொட்டுகிறது.  "உன்னால் நான் வீரனாகி விட்டேன்" என்று ஏலிக்கு நன்றி சொல்கிறான் ஆஸ்கார்.  

ஏலிக்கு ரத்தம் பிடிப்பதற்காக ஒரு கல்லூரி மாணவனை குறிவைத்து  ஹாஸ்டலுக்குள் நுழைகிற ஹகான் வந்த காரியம் முடிவதற்குள்  வசமாக மாட்டிக்கொள்கிறான்.  தான் யாரென தெரிந்து விடக் கூடாதென்பதற்காக அங்கிருக்கும் அமிலத்தை தன்  முகத்தில் ஊற்றிக் கொள்கிறான்.  முகம் சிதைந்து போய் விட்ட ஹகானை போலிஸ் கைது செய்து சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கிறது.  மறுநாள் இரவு  ஏலி அவன் இருக்கும் நான்காவது மாடிக்கு சரசரவென பைப்பை பிடித்து ஏறி பின்பக்க ஜன்னல் வழியாக குதித்து அவனை வந்து சந்திக்கிறாள்.  அமிலம் ஊற்றி சிதைந்து போன அந்த முகத்தை பார்க்கிறாள் ஏலி.  ஹகான் எதுவும் பேசாமல் தான் வளர்த்த அந்த சிறுமியின் முகத்தை கைகளால் ஏந்தி தன் கழுத்தில் புதைத்து தன் ரத்தத்தை அவள் பருக கொடுத்து கடைசி தடவையாய் அவள் பசி  தீர்த்து உயிரற்ற சடலமாய் நான்காவது மாடியிலிருந்து கீழே  விழுகிறான்.

ஒரு தடவை இரவு ஏலியுடன் ஊர் சுற்றும் ஆஸ்கார்  "நீ என் கேர்ள்ஃபிரண்டாக இருக்க வேண்டும்" என வேண்டிக்கொள்ள... "நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்றும் கேர்ள் இல்லை" என்கிறாள் ஏலி.  உடனே ஆஸ்கார் தான் எப்போதும் வைத்திருக்கும் கத்தியால் தன் கையை கீறிக்கொள்ள ரத்தம் கொட்டுகிறது.  "வா... உன் ரத்தமும் என் ரத்தமும் ஒன்றாக கலக்கட்டும். நம் நட்பு பலப்படும்" என்கிறான்.  அப்படி செய்வது அந்த ஊர் வழக்கம் போல..  ரத்த வாசனை ஏலியை கிளர்ச்சி அடைய வைக்கிறது.  அதோடு அவளுக்கு நல்ல பசி வேறு.  ஆஸ்காரின் கையிலிருந்து சொட்டும் ரத்தத்தை தரையில் படர்ந்து நக்கி ருசிப் பார்த்து எழுகிறாள்.  நடந்ததை நம்ப முடியாமல் திகைத்து பார்த்தபடி இருக்கும் ஆஸ்காரிடம் "போ.. போய்விடு இங்கிருந்து. என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதே. நான் நேசிக்கும் உன்னை கொன்று உன் ரத்தத்தை குடிக்க நான் விரும்பவில்லை.  தயவு செய்து ஓடிப் போய்விடு'" என்று ஏலி கெஞ்சுகிறாள்.  "நீ ரத்தம் குடிக்கும் வேம்பயரா" என்று ஆஸ்கார் அதிர்ந்து போய் நிக்க... அவனை விட்டு ஓடிப்போய் விடும் ஏலி ஒரு மரத்தின் மீதேறி பதுங்கிக் கொள்கிறாள்.

ஆஸ்காரின் ஒரு துளி ரத்தம் அவள் பசியைக் கிளறிவிட்டது.  அவள் யாருடைய ரத்தத்தையாவது குடித்தே ஆக வேண்டும்.  

வெர்ஜினியா தன் காதலனுடன் ஊடல் கொண்டு  அவனுடன் சண்டைப் போட்டு அவ்வழியே தனியே வர,  மரத்தில் இருக்கும் ஏலி அவள் மீது பாய்ந்து அவளைக் கீழே தள்ளி அவள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க துவங்க.. பின்னாலேயே வந்துவிடும் வெர்ஜினியாவின்  காதலன் ஏலியை காலால் எட்டி உதைத்து தள்ளி, வெர்ஜினியாவை காப்பாற்றிக் கொண்டு போகிறான்.

கழுத்தில் கடிபட்ட காயத்திற்கு கட்டுப் போட்டு படுத்திருக்கும் வெர்ஜினியா உணர்கிறாள். 'நான் நானாக இல்லை. அந்தச் சிறுமி கடித்ததில் எனக்கு ஏதோ நேர்ந்து விட்டது. என் இயல்பு நிலை மாறிக்கொண்டு வருகிறது. தாகத்திற்கு தண்ணீர் அல்ல, ரத்தம் குடிக்க வேண்டும் போல இருக்கிறதே'.

அடுத்த நாள் காலை.. அவள் படுத்திருக்கும் அறை ஜன்னலை ஹாஸ்பிட்டல் பணியாள் வந்து திறக்க.. பாய்ந்து வரும் சூரிய வெளிச்சம் பட்டு பஸ்பமாக எரிந்து சாம்பலாகி விடுகிறாள் வேம்பயர் ஆகிவிட்ட  வெர்ஜினியா.  

அவள் காதலன் ஆத்திரத்துடன் ஏலியைக் கொல்ல கையில் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைகிறான்.  ஏலியை சந்திக்க ஏற்கனவே அங்கு வந்திருக்கும் ஆஸ்கார் அவனைப் பார்த்து பதுங்கிக் கொள்கிறான்.  பாத்டப்பில் பல போர்வைகளுக்கு அடியில் பத்திரமாக  உறங்கும் ஏலியைக் கொல்ல முற்படும் வெர்ஜெனியாவின்  காதலனை ஆஸ்கார் பாய்ந்து  தடுக்கிறான். விழித்துக் கொள்ளும் ஏலி தன்னைக் கொல்ல வந்தவன் கழுத்தைக் குதறி அவனைக் கொன்று விடுகிறாள்.

ஆஸ்காரால் காது கிழிந்து போன பையன் இன்னும் மூன்று பேரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, ஆஸ்கார் பயிற்சி எடுக்கும் நீச்சல் குளத்திற்கு வருகிறான்.  வந்தவர்களில் ஒருவன் தண்ணீரில் இருக்கும் ஆஸ்காரின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து மூன்று நிமிடங்கள் மூச்சடைத்து  தண்ணீரிலேயே கிட என்று அவன் தலையை தண்ணீருக்குள் அழுத்துகிறான்.  ஆஸ்கார் கைகால் உதைத்து உயிருக்கு போராடுகிறான்.  அவ்வளவுதான்.. அவன் கதை முடிந்தது என்கிற கட்டத்தில் அவன்  தலையை நீருக்குள் அழுத்தியவன் கையும் தலையும் துண்டாகி தண்ணீருக்குள் விழுகிறான். போன உயிர் திரும்பி வந்து ஆஸ்கார் தண்ணீருக்கு மேல் வர அத்தனை பேரையும் கொன்று போட்டிருக்கிறாள் ஏலி.

தொலைதூரம் செல்லும் ரயில் ஒன்றில் ஆஸ்கார் அமர்ந்து எங்கோ போய் கொண்டு இருக்கிறான்.  அவன் சீட்டுக்கு அடியே பெட்டியில் மறைந்து படுத்திருக்கிறாள் ஏலி.  இருவரும் கட்.. கடா தந்தி பாஷையில் பேசிக் கொண்டே செல்ல படம் முடிகிறது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வேம்பயர் படங்கள் வந்திருகின்றன. KLAUS KINSKI  முதல் TOM CRUISE வரை நிறைய பேரை ஆட்டிப் படைத்திருகிறது வேம்பயர் மோகம்.  சமீபத்தில் வெளியான TWILIGHT சீரீஸ் நூறு கோடி டாலருக்கு மேல் லாபம் பார்த்திருகிறது.  அத்தனை வேம்பயர் படங்களிருந்தும் வித்தியாசப்பட்டு வேறு கலரில் வந்திருகிறது இந்த  'LET THE RIGHT ONE IN'.

12 வயதுச் சிறுமி வேம்பயராக வருகிறாள் என்கிற வித்தியாசம் மட்டுமல்ல..  கதை, காட்சியமைப்பு, சொல்லிய விதம் எல்லாவற்றிலுமே நிறைய வித்தியாசங்கள்.  நீச்சல் குளத்தில் ஏலி நான்கு பேரை கொல்வது மட்டுமே கொஞ்சம் சினிமாத்தனம்.  வழக்கமான இது போன்ற படங்களின் இலக்கணத்தை  உணர்ந்தே மீறியிருக்கிறார் இயக்குனர்.  உதாரணத்திற்கு வாய்ச்சவடால் மாதிரி இசைச்சவடால் நிகழ்த்தி பயமுறுத்தவே இல்லை. ஏன்.. படம் முழுக்க பின்னணி இசையே இல்லை என்று சொல்லலாம்.  இது போன்ற படங்கள் பொதுவாக இதயத் துடிப்பை எகிற வைக்கும்.  இப்படமோ இதயத்தை நெகிழ்த்தி, கூடவே பயமுறுத்தி அழகான கவிதையாய் வந்திருக்கிறது.  இயக்குனர் THOMAS ALFREDSON  ஸ்வீடன் நாட்டுக்காரர்.

இப்படத்தின் வெற்றி இப்படத்தின் டெக்னீசியன்களுக்கு 'TINKER  TAILOR SOLDIER SPY ' பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. 2008ல் வெளியான 'LET THE RIGHT ONE IN' அடுத்த வருடமே 'LET ME  IN'  என ஹாலிவுட்டில் ரீமேக் ஆனது.

படத்தின் TRAILER : http://www.youtube.com/watch?v=ICp4g9p_rgo

 - ருபேந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்