திரைக்கடல் - ஒரு கிரிமினல் உருவாகிறான்.. | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (05/07/2013)

கடைசி தொடர்பு:16:41 (05/07/2013)

திரைக்கடல் - ஒரு கிரிமினல் உருவாகிறான்..

'ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம். ஆனால் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' - நீதியியலின் அடிப்படைக் கோட்பாடு.

காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் நாளிதழ்களில் ரத்த வாசனை வீசுகிறது. குற்றங்கள் மலிந்து விட்டன.  குற்றவாளிகள் பெருகி விட்டனர். நகரமே பெரிய சிறைச்சாலையாக மாறி வருகிறது.  முகத்தை மூடியபடி சிலர், இறுக்கம் ததும்பும் முகத்துடன் சிலர், எதுவுமே நிகழாதது போல் சிலர்.. இப்படி விதவிதமான குற்றமுகங்களை நாம் தினந்தோறும் கடந்து போகிறோம்.  இதில் சில நிரபராதிகளும் இருக்கக்கூடும் என்கிற உண்மை நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

வெளி உலகத்திடமிருந்தும், உறவுகளிடம் இருந்தும் குற்றவாளிகளை தனிமைப்படுத்துகிற சிறைச்சாலைகளின் அடிப்படை நோக்கம்.. அவர்களைத் திருத்தி, பண்படுத்தி, மனிதர்களாக மாற்றுவது.  சிறைச்சாலை அப்படி எத்தனை பேரை புனிதனாக்கியது, புத்தனாக்கியது என்கிற புள்ளி விவரத்தைத் தேடினால்.. ஒரு புள்ளியாவது தேறுமா என்பது சந்தேகமே.  ஏனென்றால் சிறைச்சாலைகளின் லட்சணம் அப்படி இருக்கிறது.

ஒரு நல்லவனையும் கெட்டவனாக மாற்றி விடுகிற சூழல்இன்று சிறைச் சாலையில் நிலவுகிறது.  அரைகுறை குற்றவாளிகள் வெளியே வரும் போது பூரணத்துவம்.. நிபுணத்துவம் பெற்றுவிடுகிறார்கள்.  அப்படி உள்ளே சென்ற அப்பாவி ஒருவன் கைதேர்ந்த கிரிமினலாக வெளியே வருவதை வெகு யதார்த்தமாக.. உண்மைக்கு வெகு அருகில் சென்று படம்பிடித்து காட்டுகிறது ஒரு பிரெஞ்சுப் படம்.  படத்தின் பெயர் A PROPHET.

மாலிக்.. 20 வயது இளைஞன்.  எழுதப் படிக்கத் தெரியாதவன். அராபிய-கார்சியன் தம்பதிக்கு பிறந்தவன். பிரெஞ்சு குடிமகன்.  போலீசைத் தாக்கிய குற்றத்திற்காக 6 வருடம் விதிக்கப்பட்டு ஜெயிலுக்கு வருகிறான்.

ஜெயில் கைதிகளுக்கு இடையே இரண்டு பிரிவு.  கார்சியன்ஸ் எனப்படும் பிரெஞ்சு பூர்விக கைதிகள் ஒரு பிரிவு.  முஸ்லிம் கைதிகள் இன்னொரு பிரிவு. இரண்டுக்கும் ஆகாது.  அடிதடி.. பகை.  கார்சியன்ஸ் குற்றவாளிகளை கையில் வைத்துக் கொண்டு சீசர் என்பவன் அங்கு பெரிய ராஜ்ஜியமே நடத்துகிறான்.  சிறைக் கைதிகளின் டானாக உலா வருகிறான்.  சீசருக்கு போலீசின் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை செல்வாக்கு.

மாலிக் கார்சியனா? அராபியனா? இரண்டிலும் சேர்க்க முடியாது.  சீசர் அவனை அடித்து உதைத்து எதிரணியின் ஒரு முக்கியமான தலையான ரேஹாப் என்பவனை கொல்லச் சொல்கிறான்.  மாலிக் சீசருக்கு கீழ்ப்படிய மறுத்து சிறை அதிகாரிகளிடம் புகார் செய்கிறான். அடுத்த நிமிஷமே தகவல் சீசருக்கு போய், மாலிக்  மறுபடியும் அவனிடம் உதைபடுகிறான்.  சீசரின் செல்வாக்கு புரிகிறது. உயிரோடு இருக்க வேண்டுமானால்  சீசர் சொன்னதை செய்தாக வேண்டும்.  அதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கிறது.

ரேஹாப் மாலிக்கை ஹோமோசெக்ஸ்க்கு கட்டாயப்படுத்துகிறான்.  வாயில் பிளேடை அடக்கி மறைத்து எடுத்துக் கொண்டு சென்று நேரம் பார்த்து ரேஹாபின் கழுத்தை அறுத்து அவனை தீர்த்து கட்டி விடவேண்டும்.  சீசரின் ஆட்கள் மாலிக்குக்கு அதற்கானப் பயிற்சியை தருகின்றனர்.  திட்டமிட்டபடி மாலிக் ரேஹாபின் கதையை முடிக்கிறான்.

மாலிக் இப்போது சீசரின் செல்லப் பிள்ளையாகிறான்.  முன்னைவிட சொகுசான அறை கிடைக்கிறது.  கட்டில், டிவி என்று சகல வசதிகளும் கொண்ட அறை.  போதை வஸ்துகளுக்கும் பஞ்சமில்லை.  அனுபவிக்க பெண்களும் கிடைக்கின்றனர்.  இந்நிலையில் மாலிக்குக்கு அதே சிறையில் ரியாத் எனும் முஸ்லிம் நண்பன் கிடைக்கிறான்.  அவன் வற்புறுத்தலால் மாலிக் சிறைப் பள்ளிக் கூடத்தில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிறான்.  அந்த ரியாத் ஒரு கேன்சர் நோயாளி.  அந்த காரணத்திற்காகவே ரியாத்துக்கு விடுதலை கிடைத்துவிடுகிறது.

ஒருநாள் அந்த சிறைச் சாலையில் உள்ள பெரும்பாலான கார்சியன்ஸ் குற்றவாளிகள் நகரில் உள்ள வேறு சிறைக்கு மாற்றப்பட,  சீசருக்கு இனி மாலிக்தான் எல்லாம் என ஆகிறது.  அவனை பரோலில் போகச் சொல்லி ஒரு குறிப்பிட்ட வேலையை ஒப்படைக்கிறான் சீசர்.  வெளியே போய் மேலும் மேலும் தப்பு செய்யாதே என்கிறார் மாலிக்கின் லாயர்.  சீசரோ பரோலில் போகச் சொல்லி உதைக்கிறான்.  மாலிக் மறுபடியும் சீசருக்கு கட்டுப்படுகிறான்.  

பரோலில் செல்பவன் சீசரின் அசைன்மெண்டை முடித்துவிட்டு எதிரணி கொடுத்த வேலையையும் பக்காவாக முடிக்கிறான்.  25 கிலோ போதைப் பொருளை கைமாற்றி  வெளியே இருக்கும் நண்பன் ரியாத்திடம் ஒப்படைத்துவிட்டு பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்புகிறான்.            

மாலிக் தனக்கு மட்டும் விசுவாசமாக  இல்லாமல் எதிரணிக்கும் வேலை செய்வது சீசருக்கு தெரிந்து விடுகிறது.  தொலைத்து விடுவேன் என்று மறுபடியும் மாலிக்கை அடித்து உதைத்து மிரட்டுகிறான்.  மாலிக்கிடம் இப்போது முன்போல் மரண பயம் இல்லை.  'சந்தர்ப்பம் வரட்டும்.. மகனே! உன்னை சங்கறுத்து விட்டுத்தான் அடுத்த வேலை' என்று சீசரை முறைத்தபடி நகர்கிறான்.

இப்ராஹிம் என்கிற இத்தாலிய மாஃபியா  தலைவனுக்கும் சீசருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு. அதை சரி செய்ய, தன்னுடைய ஏஜென்ட் என்று மாலிக்கை  வெளியே அனுப்பி வைக்கிறான் சீசர்.

மாலிக்கும் இப்ராஹிமும் சந்திக்கின்றனர் 'நீதானே எங்கள் ரேஹாபை கொன்றவன்' என இப்ராகிம் ஓடுகிற  காரில் துப்பாக்கியை எடுத்து மாலிக்கின் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்துகிறான்.  பாதையோர 'மான்கள் ஜாக்கிரதை' போர்டை  பார்த்து விடும் மாலிக்குக்கு நேற்றைய கனவு ஞாபகம் வருகிறது.  'காரை நிறுத்தச் சொல்.. மான்கள் மோதி கார் விபத்துக்குள்ளாகி கவிழ்வது போல் நேற்று ஒரு  கனவு கண்டேன்' என்று பதறுகிறான் மாலிக்.  அடுத்த நிமிடம் அந்த அசம்பாவிதமும் நிகழ்ந்து விட, இப்ராஹிம் அவனை அதிசியமாகப்  பார்க்கிறான்.  நெற்றிப்பொட்டில் வைத்த துப்பாக்கியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு 'சீசருடன் நான் உறவை முறித்துக் கொள்கிறேன்.  இனி நீதான் என் புதிய கூட்டாளி'  என்று இப்ராஹிம் ஒரு துரோக ஒப்பந்தம் போடுகிறான்.  மாலிக்கும் அதற்கு சம்மதிக்கிறான்.  

இன்னும் ஒரு முறை பரோலில் சென்று  ரியாதின் உதவியுடன் இரண்டு பேரை போட்டுத் தள்ளுகிறான் மாலிக்.  'அடுத்த முறை அனேகமாய் நாம் சந்திக்க மாட்டோம்.  என் கேன்சர் என்னை  கொண்டு போய் விடும்' என்கிற நண்பனைப் பார்த்து கண்ணீர் விடுகிறான் மாலிக்.

சிறையில் இப்போது சீசரைச் சுற்றி பெரிதாய் ஆட்கள் இல்லை.  அவனுடைய ஆட்டம் ஏறக்குறைய முடிந்து விட்டது.  அவனால் வளர்த்து விடப்பட்ட மாலிக் எதிரணியில் பெரிய தலைனாக உருவெடுத்து விட்டான்.  பழைய நினைப்பில் சீசர் அவனை அதிகாரம் செய்து மிரட்டப் போக.. மாலிக்கின் ஆட்கள் அவனை  அடித்து விரட்டி  அவமானப்படுத்துகின்றனர்.  6 வருட சிறைத் தண்டனை முடிந்து மாலிக் வெளியே வருகிறான்.  ஒரு அப்பாவியாய்.. அனாதையாய் ஜெயிலுக்குள் வந்தவனை இப்போது வரவேற்கவும்,  தலைவன் என கொண்டாடவும் வெளியே ஒரு கூட்டம் காத்திருக்கிறது.   

மகாநதி,  விருமாண்டி போன்ற நம் தமிழ் படங்களிலிருந்து  LA GRANDE ILLUSION,  THE SHAWSHANK REDEMPION, CARANDIRU போன்ற பிறமொழிப் படங்கள் வரை சிறைச்சாலை அவலங்களைச் சித்தரித்த படங்கள் ஏராளம்.  அந்த வரிசையில் A PROPHETஒரு அப்பாவி இளைஞனை  ஜெயில் அரசியல் பெரிய குற்றவாளியாக மாற்றிவிடுவதை நம் கன்னத்தில் ஓங்கி அறைகிற மாதிரி சொல்கிறது.

JACQUES AUDIARD இப்படத்தின் இயக்குனர்.  2009 கேன்ஸ் திரைப்பட விழாவில் MICHEAL HANAKEவின்  A WHITE RIBBON படத்துடன் மோதி இப்படம் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

படத்தின் TRAILER: http://www.youtube.com/watch?v=l69ARbQt-Ko

- ருபேந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close