திரைக்கடல் - உங்கள் கனவுகளையும் யாரோ கண்காணிக்கிறார்கள்.. | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (05/07/2013)

கடைசி தொடர்பு:16:53 (05/07/2013)

திரைக்கடல் - உங்கள் கனவுகளையும் யாரோ கண்காணிக்கிறார்கள்..

‘உங்கள் தொலைபேசி உரையாடல்களை நாங்கள் ஒருபோதும் ஒட்டுக் கேட்கவில்லை,  அந்த தொலைபேசிதான் ஒட்டுக் கேட்கும் மைக்காக பயன்படுத்தப்பட்டது’ – PHILIP K. DICK நாவல் ஒன்றில்.

அதிகாரத்தின் விழிகள்.. விஷமத்தனமானவை.  விஷம் தோய்ந்தவை.  அவை உங்கள் படுக்கை அறைக்குள்ளும் நுழையும்.  உங்கள் கனவுகளைக்கூட விடாது.   உற்றுப் பார்த்து கண்காணிக்கும்.

ஒரு நகைச்சுவைத் துணுக்குக்கு சிறைத்தண்டனை,  உள்ளதைச் சொன்னால் வீடு தேடி வரும் ஆட்டோ, சமூக வலைத்தளத்தின் பதிவுக்கு பெண்ணென்றும் பாராமல் அள்ளிக்கொண்டு போக காத்திருக்கும்  போலீஸ்.. இவை ஒரு ஜனநாயக நாட்டில் நிகழும்போது, கம்யூனிச ஆட்சி நடக்கும் இரும்புத்திரை நாடுகளில் என்னென்ன நடக்கும் ?

கோர்பசேவின் மறுசீரமைப்புக்குமுன்னால்.. பெர்லின் சுவர் உடைபடாமல் இரண்டு ஜெர்மனிகள் இருந்த போது.. கம்யூனிச நாடான கிழக்கு ஜெர்மனியில் அதிகாரத்தின் கரங்கள் அடுத்தவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய இரக்கமற்ற விளையாட்டைச் சொல்லும் ஜெர்மானியத் திரைப்படம் THE LIVES OF OTHERS.

சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலின், ஒரு பிரஸ் மீட்டில்.. தன் ராணுவத்தினரின் கட்டுக்கோப்பை உலகிற்கு உணர்த்த, தன் அருகிருந்த ராணுவ அதிகாரிகளில் ஒருவரை கூட்டம் நடக்கும்ஆறாவது மாடியிலிருந்து குதிக்கச் சொல்லி உத்தரவிட்டார்.  அடுத்த வினாடியே அந்த அதிகாரியும் மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து குதித்து உயிரை விட்டார்.  அடுத்து இன்னொருஅதிகாரியையும் அதையே செய்யச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் பதறிப் போய் “நாங்கள் நம்புகிறோம்.. தயவுசெய்து குதிக்க வேண்டாம்” என்று கோரஸாகக் கத்த அந்த அதிகாரியோ “ஸ்டாலினிடம் வேலை பார்ப்பதற்கு நிம்மதியாக செத்துப் போகலாம்” என்று சொல்லியபடி சந்தோஷமாக ஓடிப்போய் குதித்தார்.  இது சர்வ நிச்சயமாக சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு  ஜோக்.. புனையப்பட்ட கற்பனை.  ஆனால் மாடியிலிருந்து குதித்த அதிகாரிகளின் மனநிலையில்தான் அன்று பலரும் இருந்தனர் என்பது கற்பனையல்ல. அப்படிப்பட்ட ஒரு அதிகாரியின் கதை என்று THE LIVES OF OTHERS படத்தைச் சொல்லலாம்.  இதயம் இரும்பாகி அரசு இயந்திரத்தின் அங்கமாக மாறிவிட்ட  அதிகாரிகளில், மனசாட்சி விழித்துக் கொண்ட ஒரு மனிதனின் கதை இது.

1984.. கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் படைப்பிலக்கியவாதிகள்,  கலைஞர்கள் நிறைய பேருக்கு அப்போதைய ஆட்சியின் மீதும் அதிகாரத்தில் இருந்தோர் மீதும் அதிருப்தி நிலவிய காலகட்டம். அப்படிப்பட்ட அதிருப்தியாளர்களை களையெடுக்கச் சொல்லி அரசின் உளவுத்துறையான ஸ்டேசி முடுக்கிவிடப்படுகிறது.  ஸ்டேசியின் சந்தேகக் கண்கள் அத்தனை கலைஞர்களையும் நிழலாய் பின் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

அந்த ஸ்டேசி அமைப்பின் தலைவர் குரூபிட்ஸ்.  அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளில் ஒருவர் வெய்ஸ்லர்.  வெய்ஸ்லர்  50 வயது ஆசாமி.  பேச்சுலர்.  குடும்பம் கிடையாது.   தனிக்கட்டை.  மனிதர் இன்னொரு நரசிம்மராவ்.  சிரிப்பென்றால் என்னவென்றே தெரியாத உதடுகள்.  கம்யூனிசம், தேசம், விசுவாசம் இதை மட்டுமே சுவாசிப்பவர்.

படத்தின் துவக்கத்தில் உளவு நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்களுக்கு ஒரு கைதியை விசாரிக்கும் கலையைக் கற்றுக் கொடுக்கிறார் வெய்ஸ்லர். “தூங்கவே விடக்கூடாது. நாள்கணக்கில்,  வாரக்கணக்கில் ஒரே கேள்வியை விடாமல் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.  பைத்தியம் பிடித்து விடும் நிலையில் கைதி உண்மையைச் சொல்லி விடுவான்”. லட்டியின்றி ரத்தமின்றி உண்மை.

ஸ்டேசி தலைவர் குரூபிட்ஸ், வெய்ஸ்லரை அழைத்துக் கொண்டு ஒரு நாடகம் பார்க்கச் செல்கிறார்.  சுரண்டப்படும் தொழிலாளர்கள் கிளர்ந்து எழும் எழுச்சி மிகும் நாடகம்.  எவ்வித உணர்ச்சியுமின்றி அதே இறுகிய முகத்துடன் நாடகத்தைப் பார்க்கிறார் வெய்ஸ்லர்.  அந்நாடகத்தை எழுதி இயக்கியவன் ட்ரேமேன்.  அறிவுஜீவி.  நாட்டின் கலாச்சார சொத்து.  நாயகியாக நடித்தவள் மரியா.  அவள் ட்ரேமேனின் மனம் கவர்ந்த நாயகியும் கூட.  இருவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர்.  விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.  நாடகம் பார்க்க மாண்புமிகு மினிஸ்டர் கெம்பும் வந்திருக்கின்றார்.  நாடகம் முடிந்ததும் தன்னைப் போன்ற ஒரு நாடக இயக்குனர் ஜெஸ்க்கா மீது அரசு விதித்திருக்கும் தடையை மறு பரிசீலனை செய்யச்சொல்லி கெம்பிடம் ட்ரேமேன் வேண்டுகிறான்.  தலையாட்டுகிற மினிஸ்டர் கெம்ப் அப்புறமாய் ஸ்டேசி தலைவரை அழைத்து ட்ரேமேனையும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுச் செல்கிறார்.

கண்காணிக்கும்  வேலை வெய்ஸ்லருக்கு தரப்படுகிறது.  மறுநாளே வெய்ஸ்லர் தன் பரிவாரத்துடன் ட்ரேமேனின் குடியிருப்புக்கு வருகிறான்.  ட்ரேமேன் வெளியே போன சமயமாக பார்த்து அவன் வீட்டிற்குள் நுழைந்து வீடு முழுக்க ஒட்டுக் கேட்கும் கருவிகளை சுவரில் புதைத்து விட்டு, எதிரே இருக்கிற இன்னொரு குடியிருப்பு மாடியின் ரகசிய அறைக்குள் போய் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அமர்ந்து கொள்கிறார்.  ட்ரேமேன் இப்போது ஸ்டேசியின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து விட்டான்.  இனி அவன் மூச்சு விட்டாலும், தும்மினாலும் அதுவெய்ஸ்லருக்கு கேட்கும்.  எதிரே இருக்கும் தட்டச்சில் அதை வெய்ஸ்லர் டைப் செய்வார்,  அரசுக்கு அனுப்பி வைப்பார்.

வெய்ஸ்லர் இரவு பகல் 24 மணி நேரமும்  ட்ரேமேனை ஒட்டுக் கேட்கிறார்.  கேட்கக் கேட்க அவருக்குள் ஏதோ மலர்கிறது.  ட்ரேமேன் போன்றோர் பக்கம் இருக்கும் நியாயமும் அவர்களின்அறச்சீற்றமும்  புரிய ஆரம்பிக்கிறது.  வெய்ஸ்லர் மனதளவில் ட்ரேமேனை நேசிக்கவே ஆரம்பித்து விடுகிறார்.  ஆனால் அதே இறுக்கமான எந்த உணர்ச்சியும் காட்டாத முகத்துடனேயே திரிகிறார்.  ஒரு விலைமகளைப் புணர்ந்து விட்டு மறுநாள் ஒட்டுக் கேட்க வரும் வெய்ஸ்லர்,  ட்ரேமேனின்  வீட்டுக்குள் நுழைந்து.. உடல்களோடு ஆத்மாக்களும் காதலுடன் சங்கமித்த ட்ரேமேனின் படுக்கையை ஆசையுடன் தடவிப் பார்க்கிறார்.  அங்கிருக்கும் பிரக்டின் புத்தகமொன்றை எடுத்துச் சென்று ஓய்வாக வாசிக்க ஆரம்பிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வெய்ஸ்லருக்கு  ட்ரேமேனின் காதலியான மரியாவை மினிஸ்டர் கெம்ப் தன் அதிகாரத்தைக் காட்டி. மிரட்டி தேவைப்பட்ட போதெல்லாம் அனுபவித்து வருவது தெரியவருகிறது.  மினிஸ்டருக்கு ட்ரேமேன் மீது பொறாமை. எதாவது காரணம் காட்டி, பழி போட்டு, ட்ரேமேனை களையெடுத்துவிட வேண்டும்.  அதற்குத்தான் இந்த கண்காணிப்பு ஆபரேஷன்.

ஒரு சின்ன தந்திரம் செய்து மரியா மினிஸ்டர் கெம்பிடம் அகப்பட்டிருப்பதை ட்ரேமேனுக்கு உணர்த்தி விடுகிறார் வெய்ஸ்லர்.  “நான் இதிலிருந்து மீள முடியாது,  உனக்காகத்தான் இதைச்செய்கிறேன்,  நான் படுக்க மறுத்தால் கெம்ப் உன்னை அழித்து விடுவான்” என்று ட்ரேமேனிடம் சொல்லி அழுகிறாள் மரியா.

அரசால் தடை செய்யப்பட்ட மூத்த நாடக ஆசிரியர் ஜெஸ்கா தற்கொலை செய்து கொள்கிறார்.  ஆனால் அது நிஜமாகவே தற்கொலையா ? சமீப காலமாய் இது போன்ற தற்கொலைகள்அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  உண்மையான சித்திரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.  இந்த முடிவுக்கு வருகின்றனர் ட்ரேமேனும் அவன் நண்பர்களும்.  

மேற்கு ஜெர்மனி பத்திரிகை ஒன்றில் இது விஷயமாய் கட்டுரை எழுதி பிரசுரம் செய்ய வேண்டுமென முடிவாகிறது.  இதைக்கூட பயந்தபடியே ஒரு பூங்காவில் அமர்ந்துதான் பேசுகின்றனர்.  ட்ரேமேன் வீடும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டு இருக்குமென  சந்தேகம் அவர்களுக்கு.  சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ள ஒரு திட்டம் போடுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு எழுத்தாளர் எல்லைதாண்டி வெளியேறப் போவதாய் ட்ரேமேன் வீட்டில் அமர்ந்து பேசுகின்றனர்.  இதன்படி தப்பிச் செல்லும் எழுத்தாளனைப் பிடிக்க போலீஸ் எல்லையில் காத்திருந்தால் வீடு ஒட்டுக்கேட்கப்படுவதாய் அர்த்தம்.  அத்தனையும் ஒரு எழுத்து விடாமல் ஒட்டுக் கேட்டுவிடும் வெய்ஸ்லர் தப்பிச் செல்லும் கலைஞன் மீது அனுதாபம் கொண்டு தகவலை மேலிடத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட ட்ரேமேன் வீடு கண்காணிப்பில் இல்லை என்று கலைஞர்கள்  அனைவரும் முடிவுக்கு வருகின்றனர்.

கட்டுரை டைப் செய்ய புது டைப்ரைட்டர் தேவைப்படுகிறது.  கிழக்கு ஜெர்மனியில் அனைத்து டைப்ரைட்டர்களும் அரசாங்கத்தால் பதிவு செய்யப் பட்டவை.  அதை பயன்படுத்தினால் மாட்டிக்கொள்வோமென வெளிநாட்டு டைப்ரைட்டரை திருட்டுத்தனமாய் கொண்டு வந்து ட்ரேமேன் அதில் கட்டுரையை டைப் செய்கிறான்.  தன் வீட்டு ஹாலின் தாழ்வார மரப்பலகை அடியே அதைமறைத்தும் வைக்கிறான்.  அப்படி ஒரு நாள் அதை மறைக்கும் போது அதை மரியா பார்த்து விடுகிறாள்.

தற்கொலைகளுக்கு பின்னால் இருக்கும் அடக்குமுறை அரசியலை அம்பலப்படுத்துகிற ட்ரேமேனின் கட்டுரை, பெயர் வெளியிட பயப்படும் எழுத்தாளர் என்கிற குறிப்புடன் மேற்கு ஜெர்மனி பத்திரிகையில் வெளியாகிறது.

உலக அரங்கில் தேசத்திற்கு அவப்பெயர் வந்து விட்டது.  ஸ்டேசி என்ன தூங்கிக் கொண்டு இருக்கிறதா என அரசு எந்திரம் ஸ்டேசி மீது பாய்கிறது. ட்ரேமேன்தான் அந்த கட்டுரையை எழுதியிருக்க வேண்டும் என்று ஸ்டேசியின் தலைவர் உறுதியாகச் சொல்ல வெய்ஸ்லர், ட்ரேமேன் அந்த காரியத்தை செய்யவில்லை என்று மறுக்கிறார். நம்பிக்கை இல்லாமல் ட்ரேமேன் வீடு சோதனை இடப்படுகிறது.  ஆனால் தடயம் எதுவும் கிடைக்கவில்லை.   

மறுநாள் ஸ்டேசி தலைவர் குரூபிட்ஸ் மரியாவை கைது செய்கிறார்.  அவர் மேற்பார்வையில் மரியாவை விசாரிக்கும் பொறுப்பு வெய்ஸ்லருக்கு.  மரியா. ட்ரேமேனை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்று பதைபதைக்கிறார் வெய்ஸ்லர்.  ஆனால் விசாரணையை ஸ்டேசி தலைவர் கண்கொத்திப் பாம்பாய் கண்காணிப்பதில் வெய்ஸ்லரால் எதுவும் செய்ய முடியாது போகிறது. தன் வழக்கமான பாணியில் வெய்ஸ்லர் விசாரிக்க மரியா இறுதியில் சோர்ந்து போய் உண்மையை ஒத்துக்கொள்கிறாள்.  “ஆமாம்,, ட்ரேமேன்தான் அந்த கட்டுரையை எழுதினார்.” எழுத உபயோகித்த டைப்ரைட்டர் இருக்குமிடத்தையும் சொல்லி விடுகிறாள்.

குரூபிட்ஸ், ட்ரேமேனை கையும் களவுமாக பிடிக்க விரைகிறார்.  ஆனால் மரியா குறிப்பிட்ட இடத்தில் டைப்ரைட்டர் இல்லை.  ட்ரேமேனைக் காப்பாற்றுவதற்கு வெய்ஸ்லர் முந்திக்கொண்டார்.  டைப்ரைட்டரை அவர்  எடுத்துக் கொண்டு போய்விட்டார்.  ட்ரேமேனைக் காட்டிக் கொடுத்து விட்ட குற்ற உணர்வு உந்தித்தள்ள  மரியா சாலையில் வரும் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

குரூபிட்ஸ், வெய்ஸ்லர் கட்சி மாறி விட்டதை யூகித்து விடுகிறார்.   “இதன் பலனை நீ அனுபவிப்பாய்” என்று கறுவிவிட்டு செல்கிறார். எதிர்பார்த்தபடியே வெய்ஸ்லரின் பதவி பறிபோகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் வரலாறு மாறுகிறது.  கோர்ப்பசேவ் ரஷ்ய அதிபரானதும்  எல்லாம்  தலைகீழாகிறது.  பெர்லின் சுவர் உடைபட்டு ஜெர்மனி ஒன்றாகிறது.  கம்யூனிசம் காலாவதியாகிப்போன ஜெர்மனியில் ஒரு டிராமாவில் ட்ரேமேனும் முன்னாள் மினிஸ்டர் கெம்ப்பும் சந்தித்துக் கொள்கின்றனர்.  “ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை ? உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்” என்று மினிஸ்டர் ஆதங்கப்பட்டுக்கொள்ள  “அப்போது எல்லோரையும் உளவு பார்த்து கண்காணித்தீர்கள்.  ஏன் என்னை மட்டும் விட்டு விட்டீர்கள்?” என்று கெம்பிடம் கேட்கிறான் ட்ரேமேன்.  சற்று நேரம் அவனையே மௌனமாக பார்க்கும் கெம்ப்.. “மற்ற எல்லோரையும் விட அதிகம் கண்காணிக்கபட்டது நீதான்,  24 மணி நேரமும் நீ எங்கள் பார்வையில்தான் இருந்தாய்,  உன் வீட்டுச் சுவர்கள் ஒன்று பாக்கி இல்லாமல்  அத்தனையிலும் ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்தி வைத்திருந்தோம்”.

ட்ரேமேன் தன் வீட்டுக்கு ஓடுகிறான். சுவர்களை நோண்ட மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மைக்குகள் வெளிப்பட, தான் கண்காணிக்கப்பட்ட உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைகிறான்.  அவன் அதிர்ச்சிக்கு காரணம்.. ‘அவ்வளவு கண்காணிக்கப்பட்டும் ஏன் தான் மாட்டிக் கொள்ளவில்லை? நிச்சயமாக தன்னை கண்காணித்தவரின் கருணையால்தான்  தப்பிப் பிழைத்திருக்கிறோம், யார் அந்த அதிகாரி?’.

ட்ரேமேன் ஆவணக் காப்பகம் சென்று தகவல் திரட்டுகிறான்.  அந்த அதிகாரி யாரெனத் தெரிகிறது.  அவரின் அடையாள எண் - HGW XX/7, பெயர் வெய்ஸ்லர்.  உடனே வெய்ஸ்லரைத் தேடிப்போகிறான் ட்ரேமேன்,  பதவி இறக்கம் செய்யப்பட்ட வெய்ஸ்லர் ஒரு தபால் ஆபிஸில் தபால்களை சார்ட்அவுட் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு தன்னால்தான் அவருக்கு இந்த கதி என்கிற குற்ற உணர்ச்சியால் அவரை சந்திக்காமலேயே திரும்பி வந்து விடுகிறான்.

இரண்டு ஆண்டுகள் கழித்து.. வெய்ஸ்லர் வீடு வீடாக தபால் பட்டுவாடா செய்து கொண்டு வருகிறார். அதே மிடுக்கான நடை, உணர்ச்சியைக் காட்டாத முகம்.  ஒரு புத்தகக்கடை வாசலில் காணப்படும் பெரிய போஸ்ட்டர் மீது அவர் பார்வை சென்று நிலைக்கிறது.  ட்ரேமேன் எழுதிய புதிய புத்தகம் பற்றி சொல்கிற போஸ்டர் அது.  வெய்ஸ்லர் கடையினுள் சென்று அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்க, அந்த புத்தகம் வெய்ஸ்லரின் அடையாள எண்  HGW XX/7க்கு சமர்ப்பணம் செய்யப்பட்டு இருக்கிறது. புத்தகக்கடைக்காரன்  “புத்தகத்தை கிப்ட் பேக் செய்யனுமா ?,, யாருக்காவது பரிசளிக்க போகிறீர்களா?” என்று கேட்க வெய்ஸ்லர் முகத்தில் முதன்முதலாக சிறு புன்னகை.  “இல்லை..  இது எனக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகம்” என்கிறார்.

வெய்ஸ்லர், ட்ரேமேனை உளவு பார்க்கத் துவங்கி அவருடைய மனசாட்சி விழித்துக் கொள்ள ஆரம்பித்த தருணத்தில் ஒரு நாள்.. அவர் ஒட்டுக் கேட்கும் அறைக்குச் செல்லும் லிப்ட்டில் அவருடன் 5 வயது சிறுவன் வருவான். கையில் ஒரு பந்தை தட்டியபடி வரும்  அச்சிறுவன் அவரைப் பார்த்து பயந்தபடி கேட்பான்.  “நீங்கள் ஸ்டேசியை சேர்ந்தவரா?” வெய்ஸ்லர் பதிலேதும் சொல்லாமல்சிறுவனைப் பார்க்க “ஸ்டேசி அப்பாவிகளைக் கொல்கிறதாம்,  சித்ரவதை செய்கிறதாம்”.  வெய்ஸ்லர் கோபத்தில் முகம் சிவந்து “யார்   சொன்னது?”  சிறுவன் தயங்கிய படியே “என் அப்பா”என்கிறான்,  “பெயர் என்ன?”   என்று அதிகாரத் தோரணையில் வெளிப்படும் வெய்ஸ்லரின் குரல் உடனே மாறி குழைந்து. “பெயர்.. உன் கையிலிருக்கும் பந்தின் பெயரைக் கேட்டேன்” என்பார்,  “பந்துக்குக் கூட பெயர் இருக்குமா என்ன?” என்று அந்த சிறுவன் லிப்ட்டை விட்டு வெளியேறிச் செல்வான்.  மறக்க முடியாத காட்சி இது.

படத்தின் மிகப் பெரிய பலம் வெய்ஸ்லராக நடித்த Ulrich Mühe.. அப்படியொரு நடிப்பில்லாத நடிப்பு.  மனிதர் அந்த பாத்திரத்தில் வாழ்ந்து விட்டார்.  புழங்கித்தோய்ந்த வார்த்தைதான்.  ஆனாலும் சொல்ல வேறு வார்த்தை இல்லை.

2006ல் சிறந்த வெளிநாட்டு  படத்துக்கான ஆஸ்கார் விருது இப்படத்திற்கு கிடைத்தது.  இதன் இயக்குனர்  Florian Henckel von Donnersmarck.

Schinler's list-ல் வரும் ஷின்ட்லருக்கும் வெய்ஸ்லருக்கும் நிறைய ஒற்றுமை. ஒரே வேற்றுமை..  ஷின்ட்லர்  நிஜம்..  வெய்ஸ்லர் கற்பனை.

படத்தின் TRAILER : https://www.youtube.com/watch?v=FppW5ml4vdw

- ருபேந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்