திரைக்கடல் - ஒன்றும் ஒன்றும் ஒன்று (1+1=1) | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (15/07/2013)

கடைசி தொடர்பு:09:04 (15/07/2013)

திரைக்கடல் - ஒன்றும் ஒன்றும் ஒன்று (1+1=1)

முடிவில் தோன்றி மறைந்தார் கடவுள்
வந்தது யார் கடவுள் என எழுந்தது பெரும் பிரளயம்
மூன்றது கலகம் வெந்து தணிந்தது உலகம். - யாரோ எழுதிய கவிதை.

நம் பாட்டி சொன்ன கதைகளில்,  தாத்தா காலத் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத ஒரு கான்செப்ட்: உடம்பு மச்சம் அல்லது  தழும்பு.  கிளைமாக்சில் அதை வைத்தே அடையாளம் காணப்பட்டு, பிரிந்தவர் சேர்ந்து கட்டித் தழுவி கண்ணீர் விட்டு சுபம் போடப்படும்.  இதே கான்செப்டில் 3 ஆண்டுகளுக்கு முன்னால் 2010லும் ஒரு படம் வந்தது.  யுத்தம், மதவெறிக்கு எதிரான ஓர் அரசியல் பார்வையை அழுத்தமாக முன்வைத்து உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியிலும் திகைப்பிலும் உறைய வைத்தது, அந்தப் படம்.  படத்தின் பெயர்  INCENDIES.  கனடாவில் தயாரான பிரெஞ்சு மொழிப் படம்.

உலகில் இதுவரை நிகழ்ந்த யுத்தங்கள்.. கலவரங்கள்.. உள்ளூர்ச் சண்டைகளின் பின்னணியில் பெரும்பாலும் மதவெறி இருக்கிறது.  இன்றும் அதன் ரத்தவெறி ஓயவில்லை.  நவால் மர்வான் என்கிற ஒரே ஒரு பெண்ணின் வாழ்கையைச் சொல்வதன் மூலம்  மதவெறியின் கோர முகத்தை முழுமையாக தோலுரித்திக் காட்டுகிறது INCENDIES திரைப்படம்.

கனடாவில் ஒரு லாயரிடம் 18 ஆண்டுகளாக செக்கரட்டரியாக வேலை பார்க்கும் நவால் மர்வான் என்கிற பெண்மணி சிலநாள் படுத்த படுக்கையாகக் கிடந்து  இறந்து போகிறாள்.  அவளுக்கு ஜீன் மர்வான் என்கிற பெண்ணும் சிமோன் மர்வான் என்கிற பையனும் இருக்கின்றனர்.  இருவரும் ட்வின்ஸ்.  20 வயது ஆகிறது.  இறந்து போன அவர்களின் அம்மா ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறாள்.  உயிலின் சாராம்சம் இதுதான்:  இரண்டு கடிதங்கள்.  ஒரு கடிதம் அவர்களின் அப்பாவுக்கு, இன்னொரு கடிதம் அவர்களின் அண்ணனுக்கு.  இந்த இரண்டு கடிதங்களையும் உரியவர்களிடம் சேர்க்க வேண்டும்.  இதில் சிக்கல் என்னவென்றால் தங்களுக்கு ஒரு அண்ணன் இருப்பதே இந்த நிமிஷம் வரை அவர்களுக்குத் தெரியாது.  அப்பாவைப் பற்றியோ அண்ணனைப் பற்றியோ செத்துப் போன அம்மா ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை.  பேசாமல் இரண்டு கடிதங்களையும் கிழித்துப் போட்டு விட்டு நம்முடைய வேலையைப் பார்ப்போம் என்கிறான் சிமோன்.  ஆனால் ஜீன் பிடிவாதமாக தந்தையையும் சகோதரனையும் கண்டுபிடித்தே தீருவேன் என்று புறப்படுகிறாள்.

இதில் இருந்து ஜீன் மர்வான்,  தன் தாய் பிறந்து வளர்ந்து  சிறிது காலம் பத்திரிகை நிருபராகப் பணியாற்றிய லெபனான் நாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு மனிதர்களை சந்தித்து தன் தாயின் கடந்த கால வாழ்வைப் பற்றியை தகவல்களைச் சேகரிக்கிறாள்.  இதனூடாக தாய் நவால் மர்வானின் வாழ்க்கைச் சரிதக் காட்சிகள் வரிசைக்கிரமமாக துண்டு துண்டாகக் காட்டப்படுகிறது.

நவால் மர்வானின் கதை இதுதான்:  லெபனானில் ஒரு ஆச்சார கிறிஸ்துவ குடும்பத்துப் பெண் நவால் மர்வான்.  இளவயதில் ஒருவனைக் காதலிக்கிறாள்.  அவன் ஒரு முஸ்லிம் அகதி.  நவால் காதலனுடன் ஊரை விட்டு ஓடப்பார்க்க, அவள் அண்ணன் குறுக்கிட்டு காதலனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான்.  அச்சமயம் நவால் முழுகாமல் இருக்கிறாள்.  சில மாதங்களில் அவளுக்கு குழந்தை பிறக்கிறது.  ஆண் குழந்தை.  நவாலின் பாட்டி அந்தக் குழந்தையின் வலது குதிகாலில் சூட்டுக் கோலால்  செங்குத்தாக மூன்று புள்ளிகள் இடுகிறாள்.  'எதிர்காலத்தில் நீ இவனை அடையாளம் கண்டுகொள்ள இது உனக்கு உதவும்' என்று சொல்லிவிட்டு அந்தக் குழந்தையை அங்கிருக்கும் ஒரு அநாதை இல்லத்தில் சேர்த்து விடுகிறாள்.  

நவால் பிறகு தன் கிராமத்திலிருந்து நகரிலிருக்கும் மாமா வீட்டுக்குப் போய்ச் சேர்கிறாள்.  இரண்டு வருடங்கள் பத்திரிகை நிருபராகப் பணிபுரிகிறாள். அவள் மனமெல்லாம் அநாதை இல்லத்தில் இருக்கும் அவள் மகன் மீதே இருக்கிறது.  கிறிஸ்துவ-முஸ்லிம் மோதல் பெரிதாகி உள்நாட்டு யுத்தமாக மாறுகிறது.  நவால் தன் குழந்தையைச் சேர்த்த அநாதை இல்லத்துக்கு ஓடுகிறாள்.  அதுவோ தீக்கிரையாகி இருக்கிறது.

அங்கிருந்து நகரத்திற்கு திரும்ப முற்படும் நவால், வண்டி வாகனம் ஏதும் கிடைக்காமல் நடந்தே வருபவள்...  முஸ்லிம்களை ஏற்றிக்கொண்டு வரும் ஒரு பஸ்ஸைப் பார்த்து தன் கழுத்தில் இருக்கும் சிலுவையைக் கழற்றி மறைத்துக் கொண்டு, தன்னை ஒரு முஸ்லிம் பெண் போல் காட்டிக்கொண்டு அதில்  ஏறிக்கொள்கிறாள்.  வழியில் கலவரக்காரர்கள் பஸ்ஸைத் தடுத்து நிறுத்தி பஸ் டிரைவரை சுட்டுக் கொன்றுவிட்டு, பஸ்ஸை பெட்ரோலால் குளிப்பாட்டி.. தீ வைக்கின்றனர்.   'நான் முஸ்லிம் இல்லை. கிறிஸ்துவப் பெண்.. இதோ என் சிலுவையைப் பாருங்கள்' என்று கத்துகிறாள் நவால்.  கலவரக்காரர்கள் அவளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கின்றனர்.  இன்னொரு முஸ்லிம் பெண்ணின் குழந்தையை தன்னுடைய குழந்தை என்று சொல்லி காப்பாற்றப் பார்க்கிறாள் நவால்.  ஆனால் அந்த குழந்தையோ கொழுந்துவிட்டு எரியும் பஸ்ஸை நோக்கி அம்மா என்று அலறியபடியே ஓட.. வெறியர்கள் ஈவிரக்கமின்றி அந்தக் குழந்தையையும் சுட்டுக் கொல்கின்றனர்.  

இந்தச் சம்பவம் நவாலை உலுக்கி விடுகிறது.  கிறிஸ்துவ தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுக்க முடிவெடுக்கிறாள்.  கிறிஸ்துவ தலைவர் ஒருவர் வீட்டில் அவர் மகனுக்கு பிரெஞ்சு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வேலையில் சேர்கிறாள்.  சமயம் பார்த்து ஒருநாள் அந்தத் தலைவரை தன் கைத்துப்பாகியால் சுட்டுக் கொல்கிறாள்.  பிறகு கைதாகி 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கேபர்ரயட் ஜெயிலில் அடைக்கப்படுகிறாள்.

கைதி நவால் எப்போதும் ஏதாவது ஒரு துயரப் பாடலை பாடியபடியே இருக்கிறாள்.  'பாடுகிற பெண்' என்கிற பட்டப்பெயரிலேயே அவளை அழைக்கவும்  செய்கிறார்கள்  அங்கிருப்போர்.  அந்த ஜெயிலுக்கு புதிதாக ஒரு அதிகாரி வருகிறான்.  அவன் பெயர் அபு தரேக்.  சித்திரவதை ஸ்பெஷலிஸ்ட்.  கைதிகளை விதவிதமாய் துன்புறுத்தி இன்பம் காண்பவன்.  பாடுகிற பெண் நவாலையும் அவன் விடுவதில்லை.  நவாலை அவன் கற்பழிக்கிறான்.  விளைவாக நவால் கருவுருகிறாள்.  இரட்டைக் குழந்தை பிறக்கிறது.  ஆண் ஒன்று, பெண் ஒன்று.  சிறைப் பணியாளர்கள் குழந்தைகளைக் கொன்றுவிட கொண்டு செல்கின்றனர்.  'கொல்ல வேண்டாம், குழந்தைகளை நானே வளர்க்கிறேன்' என பிரசவம் பார்த்த நர்ஸே குழந்தைகளை வாங்கிக் கொண்டு போகிறாள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நவால் தண்டனைக் காலம் முடிந்து  விடுதலை ஆகிறாள்.  நர்ஸ் நவாலின் குழந்தைகளை அவளிடமே ஒப்படைக்கிறாள்.  முஸ்லிம் போராளிகளுக்கு நவால் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக முஸ்லிம் பிரமுகர் சம்சுதீன் நவாலுக்கு கனடாவில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து அவளையும் அவளது இரண்டு குழந்தைகளையும் கனடாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

18 வருடங்கள் கழித்து... ஒருநாள் நீச்சல் குளத்தில்..  செங்குத்தான மூன்று வட்டப் புள்ளிகள் தென்படும் ஒரு வலது குதிகாலைப் பார்க்கிற வயதான நவால்,  தாய்ப்பாசம் உந்தித் தள்ள ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்து தான் பெற்ற மகனை கண்குளிரப் பார்க்கும் ஆர்வத்துடன் முன்பக்கம் சென்று அவன் முகம் பார்க்கிறாள்.  இந்த சம்பவம் நிகழ்ந்து பத்து நாட்களுக்குப் பிறகுதான் உயில் எழுதி விட்டு இறந்து போய்விடுகிறாள்.

மகள் ஜீன் மர்வால், தாயின் கடந்த காலத்தைத் தேடிப் புறப்பட்டவள்..  கேபர்ரயட் சிறை வரைக்கும் போய் தன் தாய்க்கு பிரசவம் பார்த்த நர்ஸையும் தேடிப்பிடித்து தன் தாய் அபு தரேக் என்பவனால் கற்பழிக்கப்பட்டததையும்,  தானும் சிமோனும் அவன் மூலம் பிறந்தவர்கள்தான் என்பதையும் கண்டுபிடிக்கிறாள்.  அத்தனை உண்மைகளையும் சிமோனுக்கு ஃபோன் போட்டு சொல்ல.. அவனும் புறப்பட்டு லெபனான் வந்து சேர்கிறான்.  ஆக மொத்தம் அப்பா யாரென தெரிந்து விட்டது.  இன்னொரு வேலை மிச்சமிருகிறது.  அது அவர்கள் சகோதரனைக் கண்டுபிடிப்பது.

அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தைதான் அவர்களின் சகோதரன்.  அந்த அநாதை இல்லம் தீக்கிரையாகிப் போனதில் அங்கிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று தேடிப்போக... கடைசியில் முஸ்லிம் பிரமுகர் சம்சுதீன்  அவர்களின் சகோதரன் பற்றிய தகவல்களைச் சொல்கிறார்:  மே மாதத்தில் அநாதை இல்லத்துக்கு வந்த ஒரே குழந்தை அவன்.  அவனுக்கு நிஹாத் என்று பெயரிடுகின்றனர்.  மே மாத நிஹாத்.  அநாதை இல்லம் தீக்கிரையானபோது அங்கிருந்து தப்பிப் பிழைத்த சில சிறுவர்களில் மே மாத நிஹாத்தும் ஒருவன்.  முஸ்லிம் போராளிகள் அவனுக்கு அடைக்கலம்  கொடுத்து எதிரிகளைக் குறிபார்த்துச் சுடுகிற.. ஒரு ஸ்நைப்பராக அவனை உருவாக்குகின்றனர்.  இளைஞன் நிஹாத் ஒரு முறை ஏழு கிறிஸ்துவ வீரர்களைச் சுட்டுக் கொன்று பிறகு ராணுவத்தால் பிடிபடுகிறான்.  அவர்கள் பதிலுக்கு அந்த மனித மிருகத்தை சுட்டுக் கொல்லாமல் கேபர்ரயட் ஜெயிலுக்கு சித்திரவதை அதிகாரியாக அனுப்பி வைக்கினறனர்.  அப்படி வருபவன் தன் பெயரை மாற்றிக் கொள்கிறான்.  மே மாத நிஹாத்தின் மாறிய பெயர் அபு தரேக்.  

தங்கள் சகோதரனைப் பற்றிய தகவல்களைக் கேட்ட... ஜீன், சிமோன் இருவரின் இதயங்களும் ஒரு நிமிடம் நின்று விடுகிறது.  தங்கள் தந்தை அபு தரேக்தான் அவர்களின் சகோதரனும் கூட என்கிற என்கிற அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.  சம்சுதீன் மூலம் அபு தரேக் இப்போது இருக்கிற இடமும்  தெரிய வருகிறது.  அபு தரேக்கும் கனடாவில் இப்போது பஸ் கிளீனராக ஒரு வேலையில் இருக்கிறான்.  ஜீன் மர்வான்,  சிமோன் மர்வான் இருவரும் அபு தரேக்கை தேடி வருகின்றனர்.  தாய் நவால் மர்வானுடைய இரண்டு கடிதங்களையும் அவனிடம் கொடுத்துவிட்டு..  அடுத்த வினாடி அங்கிருத்து ஓடிப்போய் விடுகின்றனர்.

அபு தரேக் முதல் கடிதத்தைப் பிரிக்கிறான்.  'இந்தக் கடிதத்தை உன்னிடம் சேர்த்தவர்கள் உன் பிள்ளைகள்.  உன் மூலம் எனக்குப் பிறந்த பிள்ளைகள். அவர்களுக்கு நீ யாரென்று தெரியும்..' என்று அவனால் கற்பழிக்கப்பட்ட அவன் பிள்ளைகளின் தாயாக அந்தக் கடிதத்தை அவனுக்கு எழுதியிருக்கிறாள் நவால்.  அபு தரேக் அடுத்த கடிதத்தைப் பிரிக்கிறான்.  தான் பெற்ற மகனுக்கு தாயான நவால் எழுதிய கடிதம் அது.  'அன்பு மகனே..  தொப்புள்கொடி அறுத்து என் அருகே நீ கிடந்தபோது, உன்னை நான் எவ்வளவு நேசித்தேனோ அதே போல் இப்பொழுதும் நேசிக்கிறேன்.  உன் மீது இந்தத் தாய் கொண்ட அன்பு என்றும் மாறாது..'  

நவால் மர்வானின் கல்லறையில் அபு தரேக் கண்ணீர் விட்டு அழும் அடுத்த காட்சியுடன் படம் முடிகிறது.  

படத்தின் இயக்குனர் Denis Villeneuve.  'SCORCHED' எனப்படும் பிரெஞ்சு நாடகத்தையே திரைப்படமாக மாற்றினார் Denis Villeneuve. அந்த ஆண்டின் கனடா நாட்டின் சிறந்த படமாக தேர்வான INCENDIES  அயல் நாட்டுச் சிறந்த பட ஆஸ்கார் விருதுப் போட்டியிலும் கடைசி வரை முன்னேறியது.    

படத்தின் TRAILER : http://www.youtube.com/watch?v=0nycksytL1A

ருபேந்தர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்