திரைக்கடல் -தேவை... மூன்று நாட்களில் ஐந்து ஆன்மாக்கள். | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (15/07/2013)

கடைசி தொடர்பு:09:13 (15/07/2013)

திரைக்கடல் -தேவை... மூன்று நாட்களில் ஐந்து ஆன்மாக்கள்.

'சில சமயம் அவனுக்கு,  அவனுடைய மொத்த வாழ்க்கையும் ஒரு கனவென்று தோன்றும்; அது யாருடைய கனவு என்றும்.. அதை அவர்கள் ரசிக்கிறார்களா என்றும் கூட...' - DOUGLAS ADAMSன் நாவல் ஒன்றில்.
 
எல்லோருக்கும் கதைகள் பிடிக்கும்.  கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.  அதற்காக அரைத்த கதையையே திரும்பத் திரும்ப கேட்க முடியுமா.  கதை சொல்லிகளுக்கு சவாலான காலம் இது.  'ஏழு கடல், ஏழு மலை தாண்டி எங்கோ மந்திரவாதியின் உயிர் சுமக்கும் பச்சைக்கிளிக்கு.. செல்போனில் ஒரு வினோதமான மெசேஜ் வந்தது..' இப்படி கதை சொல்ல வேண்டிய நிலைமை இன்று அவர்களுக்கு.  நார்னியா,  ஹாரி பாட்டர்,  டாய் ஸ்டோரி போன்றவை சிறுவர்களுக்கு என்றால்.. பெரியவர்கள் என்ன பாவப்பட்ட ஜீவன்களா?.  அவர்களுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறதே.  அதற்கு கதை சொல்ல வேண்டாமா?.. காதல், கல்யாணம்,  ரவுடி போலிஸ்,  சந்தானம் காமெடி என்று எத்தனை நாள் யதார்த்த வகைப் படங்களையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்.  பெரியவர்களுக்கும் ஃபேன்டசி கதைப் படம் வேண்டும்.  ஆனால் அதே நேரம் அது கலைப்படமாகவும் இருக்க வேண்டும். அப்படிபட்ட ஒரு படம் THE IMAGINARIUM OF DOCTOR PARNAUSSUS.  கற்பனையின் அத்தனை வாசல்களையும் திறந்து வைத்து இந்த படம் நமக்குக் காட்டும் உலகம்.. இரண்டு மணி நேரமும் அது வேறு உலகம்.
 
ஷீரடி சாய் பாபா படத்துடன் பஜன் ஒலிக்க.. சில சைக்கிள் வண்டிகள் அவ்வப்போது நம்மைக் கடந்து செல்கின்றன.  முன்பு இதே ஸ்டைலில் தென்படும்  இன்னும் கொஞ்சம் பெரிய வண்டிகளில் கணவன், மனைவி, குழந்தை, மச்சான் என ஒரு குடும்பமே இருக்கும்.  அவர்கள், மக்கள் கூடும் இடங்களில் தெருவையே அரங்கமாக்கி ஆடுவார்கள், பாடுவார்கள், நடிப்பார்கள், வித்தை காட்டுவார்கள்.  இவர்களைப் போலவே லண்டன் மாநகரில் ஒரு நாடகக்குழு. சைக்கிள் வண்டிக்கு பதிலாக பெரிய லாரி.  அதிலேயே நாடக ஸ்டேஜ்.   பார்ப்பதற்க்குத்தான் லாரி.  ஆனால் அதை இழுத்துச் செல்வது ஆரோக்கியமான இரு குதிரைகள்.  மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் அந்த லாரி நிற்கும்.  திரை விலகி நாடகம் ஆரம்பம் ஆகும்.  பார்வையாளர்கள் தட்டில் பைசா போடுவார்கள்.  கலெக்சன் முடிந்ததும் லாரி அடுத்த தெருவுக்கோ... அடுத்த ஊருக்கோ நகரும்.  நாடகக் குழுவுக்கு ஒரு பெயர் உண்டு.  THE IMAGINARIUM OF DOCTOR PARNAUSSAS.  நாடகக் குழுவில் மொத்தம் நான்கு பேர்.  ரொம்பவும் வயதான டாக்டர் பர்நாசஸ்,  அவரது 16 வயது பருவ மகள் வேலேன்டினா.  சித்திரக் குள்ளன் பெர்சி,  பபூன் ரோலில் கலக்கும் ஆண்டன்.  இந்த நால்வர் குழு ஒரு இடத்தில் லாரியை நிறுத்தி, திரையை விலக்க நாடகம் தொடங்குகிறது. அந்தரத்தில் மிதக்கிறார் சாமியார் வேடமிட்ட பர்நாசாஸ்.  பபூன் ஆண்டன், கட்டியங்காரனாகி அன்றைய நாடகம் பற்றிப் பேசுகிறான். இப்போது  பார்வையாளர்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கும் குடிகாரன் ஒருவன் மேடையேறி வேலன்டினாவை ஜொள் விட்டுத் துரத்த... வேலன்டினா அவனிடமிருந்து  தப்பிக்க மேடையில் இருக்கும் கண்ணாடித் திரைக்குள் நுழைந்துவிடுகிறாள்.  குடிகாரனும் அவளைத் துரத்திக் கொண்டு அந்தத் திரைக்குள் போய்விடுகிறான்.  உள்ளே அவன் பார்பதுவோ ஒரு வினோத உலகம்.  கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு கனவு உலகம்.  மேடையேறியவன் திரும்பி வராததால் கூட்டத்தில் கூச்சல்  குழப்பம்.  அவ்வழியே வரும் ரோந்து போலீஸ் கண்ணாடித் திரையை பரிசோதிக்க அதன் பின்னால் ஒன்றும் இல்லை.  நாடகக் குழு உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல, வழியில் ஓடும் லாரியிலிருந்து அந்த குடிகாரன் வீதியில் வந்து விழுகிறான்.  ஒரு விஷயம் தெளிவாகிறது.   டாக்டர் பர்நாசாஸ் நாடகக் குழுவில் எதோ ஒரு விசித்திரம்.. புதிர் இருக்கிறது.  அது என்ன?.
 
டாக்டர் பர்நாசஸ் ஒரு அதிசயமான ஆசாமி.  அவர் சாகாவரம்  பெற்றவர்.  அவருக்கு மரணம் என்பதே கிடையாது.  சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இமயமலைச் சாரலில், தன் சிஷ்யகோடிகளுடன் இந்த உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் அவர்.  எப்படித் தெரியுமா?  மிதக்கும் பாய்களில் அமர்ந்து, இடைவிடாது.. ஓயாது கதை சொல்லிக் கொண்டு.  அப்படி அவர்கள் கதை சொல்வதை நிறுத்தினால் அடுத்த நிமிடம் உலகம் அழிந்து போய்விடுமென்று நம்பினார்கள்.  அப்படி ஒரு நாள் எப்போதும் போல கதை சொல்லிக் கொண்டிருந்த போது.. கோட் சூட் அணிந்து, வாயில் பைப்   புகைய அங்கு வருகிற நிக் "அட முட்டாள்களே.. நீங்கள் கதை சொல்லாவிட்டாலும் இந்த உலகம் இயங்கும்" என்கிறான்.  அந்த நிக் வேறு யாரும் அல்ல..  அவன்தான் சாத்தான்.  தீமையின் மறு  வடிவம்.  கதை சொல்லிகள் அத்தனை பேரின் வாயையும் தன் சக்தியால் கட்டிப் போடுபவன்  "நீங்கள் கதை சொல்லவில்லை. இப்போதென்ன உலகம் அழிந்தா விட்டது?" என்கிறான்.  "எங்களைப் போல இன்னும் வேறு சிலர்  எங்கோ கதைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் உலகம் அழியவில்லை" என்று இப்போதும் அப்பாவியாய் சொல்கிறார் பர்நாசஸ்.  பிறகு நிக் பர்நாசஸிடம் ஒரு பந்தயம் வைக்கிறான்.  மனிதர்களை... அவர்களின் ஆன்மாவை வெற்றி கொள்ளும் பந்தயம்.  மனிதர்கள் நன்மையின் பக்கமா.. தீமையின் பக்கமா... கடவுளின் பக்கமா... சாத்தானின் பக்கமா.. பந்தயத்தில் மதகுரு பர்நாசஸ்  ஜெயிக்கிறார்.   அதற்கு பரிசாக நிக், பர்நாசஸுக்கு சாகாவரத்தைத் தருகிறான். அந்த மதகுரு பர்நாசஸ்தான் இந்த 2010ல் நாடகக் குழுவோடு லாரியில் ஊர் ஊராக போய்க் கொண்டிருக்கிறார்.
 
ஓடுகிற நாடக லாரியில் ஒருவன் ஓடி வந்து ஏறிக் கொள்கிறான்.  'யாரது?' என்று அதட்டுகிற பர்நாசஸின் எதிரில் வந்து நிற்பவன் வேறு யாருமல்ல.. நிக். வந்தவன் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறான்,  "பர்நாசாஸ்!.. வேலன்டினாவுக்கு இன்னும் சில நாட்களில் 16 வயது ஆகப்போகிறது.  நம் ஒப்பந்தப்படி அவளின் 16வது வயதில் நீ அவளை என்னிடம் ஒப்படைத்தாக வேண்டும்.  அதை உனக்கு ஞாபகப்படுத்தவே வந்தேன்.  தயாராக இரு"  என்று சொல்லிவிட்டு நிக் வழியில் இறங்கிப் போய்விட.. இடிந்து போய் விடுகிறார் பர்நாசஸ்.
 
பபூனாக நடிக்கிற, டாக்டர் பர்நாசஸுக்கு பல விதங்களிலும் உதவியாக இருக்கிற இளைஞன் ஆண்டனுக்கு வேலன்டினாவின் மீது அளவில்லாத காதல். வேலன்டினாவுக்கு அது புரியவும் செய்கிறது.  ஆனால் ஆண்டனைக் கட்டிக் கொண்டு மறுபடியும் ஊர் ஊராக டிராமா போட்டுக் கொண்டு போக  விருப்பம் இல்லை அவளுக்கு.  நல்ல பணக்காரனாக, ஆண்டனை விட இன்னும் அழகானவனாக எவனாவது ஒரு பெரும்புள்ளி கிடைத்தால்.. அவனை வளைத்துப் போட்டு இந்த நரகத்தை விட்டுப் போய்விட வேண்டும்.  இது அவளுடைய கனவு.  ஆனால் அவள் அப்படி போய்விடாமல் இருக்க பர்நாசஸ், அவள் காலில் ஒரு வளையத்தை மாட்டி  வைத்திருக்கிறார்.  அந்த வளையத்தை எப்படியாவது கழட்டி எறிந்து விடவேண்டும்.  இதுவும் வேலன்டினாவின் கவலை.  
 
ஒருநாள் இரவு... பலத்த மழை பெய்யப் போவதற்கான அறிகுறிகள்.  அப்படி ஒரு மின்னல்.  லண்டன் பாலத்துக்கு அடியில் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கும் ஒரு மனிதனைப் பார்க்கிறார்கள் வேலன்டினாவும்  ஆண்டனும்.   உடனே இருவரும் அவனைக் காப்பாற்றுகிறார்கள்.  தொண்டையில் ஒரு தங்கக் குழாயை மறைத்து வைத்து அதன் மூலம் சுவாசித்தபடி உயிரோடு இருக்கிறான் அவன்.  அவன் ஒரு ரஷியன்.  அவன் பெயர் டோனி.  பர்நாசஸ் ஒரு சீட்டுக்கட்டு வைத்திருக்கிறார்... அதிர்ஷ்ட சீட்டுக்கட்டு.  அதிலே ஒரு சீட்டு..  தூக்குக் கயிற்றில் தலைகீழாகத் தொங்கும் மனிதன்.  சீட்டு நிஜமானதில் டோனியைப் பார்த்து உற்சாகமாகிறார் பர்நாசஸ்.  'வந்தவனால் தன் பிரச்சனைக்கு ஒரு விடிவு வருமோ'... ஆனால் டோனியோ ஒரு மகா மோசடிப் பேர்வழி.  குழந்தைகளைக் காப்பாற்ற நலத் திட்டமென்று கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப்  ஆனவன்.  அவனிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள்,  அவனைத்  தூக்கிலிட்டு கொல்லப் பார்த்த போதுதான் கில்லாடியாக  தொண்டையில் குழாயைச் சொருகி தப்பி விட்டான்.  அவனை தேடப் படும் குற்றவாளியாக போட்டோ போட்டு வந்திருக்கும் நியூஸ் பேப்பரையும்..  சாமர்த்தியமாய்  தீயில் போட்டு எரித்து விட்டு நாடகக் குழுவிடம் நல்லவன்போல் நடிக்கிறான்.  
 
சாத்தான் நிக் மறுபடியும் வருகிறான். "டாக்டர் பர்நாசஸ்..  இன்னும் மூன்று தினங்களே உள்ளன, வேலன்டினாவுக்கு 16 வயது ஆவதற்கு".  "என் ஒரே மகளை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்காதே" என்று கண்ணீர் விடுகிறான் பர்நாசஸ்.  "நல்லது... மறுபடியும் ஒரு பந்தயம் வைப்போம். ஐந்து ஆன்மாக்களை வெற்றி கொள்ள  வேண்டும்.  நீயா..நானா.. நீ ஜெயித்தால் வேலன்டினா உனக்கு, நான் ஜெயித்தால் வேலன்டினா எனக்கு". பர்நாசஸ் பந்தயத்துக்கு ஒத்து கொள்கிறார்.  
 
ஐந்து ஆன்மாக்கள்.. தீமையைப் புறந்தள்ளி, நல்லதை விரும்பும் ஐந்து ஆன்மாக்கள்.  நாடகம் பார்க்கத் திரளும் நபர்களில் சிலரை தந்திரமாக கண்ணாடித்  திரைக்குள் போக வைக்க வேண்டும்.  உள்ளே விரியும் டாக்டர் பர்நாசஸின் கற்பனை உலகில்...  நிக் வீசும் மாய வலை, தூண்டிலுக்கு மாட்டிக் கொள்ளாமல் அந்த நபர்கள் நல்லதையே நாட வேண்டும்.  நன்மையின் பக்கமே சாய வேண்டும்.  அப்படி ஐந்து பேரைப் பிடித்துவிட்டால் பந்தயப்படி வேலன்டினாவை நிக்கிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை.  எல்லாம் சரி..நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள்,  செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் படம் பார்த்து  ரசிப்பவர்கள் அந்தரத்தில் மிதக்கும் சாமியார் நாடகத்தை பார்க்க நிற்பதாவது?...  அப்படியே நின்றாலும் அவர்களை மேடையேற்றி  கண்ணாடித் திரைக்குள்  நுழைத்து, நன்மையின் பக்கம் சாய வைத்து... இதெல்லாம் நடக்கிற காரியமா.  "இப்படி நாடகம் போட்டால் நடக்காது.  நாம் கான்செப்டை மாற்றுவோம்.  காலத்துக்கேற்ற நாடகம்.. கவர்ச்சி நாடகம்..  கலர்புல் நாடகம்"  இது டோனியின் யோசனை.  இது நல்ல பலன் அளிக்கிறது.  சிலர் நாடகத்தைப் பார்க்கக்  கூடுகிறார்கள்.  அவர்களில் சில பெண்களை டோனி தன் வசீகரப் பேச்சால் கவர்ந்து கண்ணாடித்  திரைக்குள்ளும் அனுப்பி வைக்கிறான்.  அவரவர் ஆசை,  கற்பனைக்கு ஏற்ப அங்கே டாக்டர் பர்நாசாஸ் ஒரு மாய உலகை சிருஷ்டித்துக் காட்டுக்கிறார். அதிலே மயங்கி சொக்கிப்போய் அவர்கள் நன்மையின் பக்கம் சாய.. இதோ பர்நாசஸ் நான்கு ஆன்மாக்களை வென்று விட்டார்.  இன்னும் ஒன்றே ஒன்றுதான் பாக்கி.  அதற்குள் நாடகம் பார்க்க வந்து நிற்கும்  ரஷ்யர்கள் டோனியை அடையாளம் தெரிந்து கொண்டு அவனைப் பிடிக்க மேடையேறிப்  பாய்கின்றனர்.  அவர்களிடமிருந்து தப்பிக்க டோனி கண்ணாடித் திரைக்குள் நுழைந்து விடுகிறான்.  இப்போது ரஷியர்களும் உள்ளே நுழைந்து விடுகின்றனர்.  அந்த ரஷியர்களை நிக் வெற்றிக் கொள்ளுகிறான்.  கூடவே நிக் இன்னொரு தந்திரமும் செய்து.. ஆண்டனுக்கு டோனி யாரென்பதையும் புரிய வைத்து விடுகிறான்.
 
ஐந்தாவது ஆன்மா வேண்டும்.  அதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.  பர்நாசஸ் இப்போது மகள் வேலன்டினாவிடம் உண்மையைச் சொல்லி விடுகிறார்.  "சாகாவரம் பெற்றவனான நான்..  உன் அம்மாவைப் பார்த்ததும் காதல் கொண்டேன்.  தேவதை.. பேரழகி அவள்.  இந்தக் கிழவனை எப்படி விரும்புவாள்?.  அப்போது நிக் என் உதவிக்கு வந்தான்.  "நீ ஆசைப் பட்டவள் உன்னைக் காதலிப்பாள், உனக்கு மனைவியும் ஆவாள்.  பதிலுக்கு நீ எனக்கு ஒன்று செய்ய வேண்டும்.  உனக்கு பிறக்கும் மகளை, அவளின் 16வது வயதில் நீயெனக்குக் கொடுத்துவிட வேண்டும்".  நடந்த கதையைச் சொல்லி அழுகிற தன் அப்பாவும், ஆயிரம் வருசத்துக்கு மேற்பட்ட கிழவனுமான பர்நாசஸ்  மீது மகள் வேலன்டினாவுக்கு அனுதாபம் வரவில்லை.  வெறுப்பும் கோபமும்தான் வருகிறது.  'சே.. நான் என்ன பந்தயப் பொருளா?'.  இந்த கதையையெல்லாம் கேட்டுவிடும் டோனி,  ஐந்தாவது ஆன்மாவாக கண்ணாடித் திரைக்குள் தானே போகத் தயாராகிறான்.  அதற்குள் ஆண்டன்,  டோனி ஒரு மோசடிப் பேர்வழி என்பதை போட்டு உடைத்துவிட வேலன்டினா உன்னைப்போய் காதலித்தேனே என்று குமுற.. இப்போது டோனி அவளையும் இழுத்துக்கொண்டு கண்ணாடித் திரைக்குள் பாய்ந்து விடுகிறான்.  டோனியின் கற்பனை உலகம்... வேலன்டினாவுடன் இரவு இனிமையாக கழிகிறது.  மறுநாள்.. குழந்தைகள் நலனுக்கு அவன் வசூலித்த பணத்தில் பல நலத்திட்டங்களை துவக்கி வைக்க நாட்டின் அதிபர் வருகை தருகிறார்.  அந்த மேடையில் திடீர்க் குழப்பம்.  ஆண்டன் ஒரு சிறுவனாக மாறி டோனியை நம்பாதீர்கள்..  அவன் ஏமாற்று பேர்வழி.. என்று கத்தியபடி அவனுடன் கட்டிப் புரண்டு சண்டை போடுகிறான்.  முடிவில் ஆண்டன் வேலன்டினாவின் கண் முன்னால் இறந்து போகிறான்.  தான் காதலித்தவன் அயோக்கியன்.. தன்னைக் காதலித்தவன் இறந்து விட்டான்.. இந்த விரக்தியில் வேலன்டினா தானே முன்வந்து தன்னை நிக்கிடம் ஒப்படைத்து விடுகிறாள்.
 
மகளை இழந்து விட்ட பர்நாசஸ் நிர்க்கதியாக துடிக்கிறார்.  மறுபடியும் பந்தயத்துக்கு அழைக்கிறான் நிக்.  "உன் மகளை உனக்கு தருகிறேன்.  பதிலுக்கு நீ டோனியைக் கொன்று விடு".  சம்மதிக்கிறார் பர்நாசஸ்.  டோனியிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள் அவனைக் கொல்லத் துரத்துகின்றனர்.  வழக்கம் போல டோனி தன் தொண்டைக் குழியில் தங்க குழாயைச் சொருகி தந்திரமாக தப்பிக்கப் பார்க்கிறான். ஆனால் பர்நாசஸ் தங்கக் குழாயை தகரக் குழாயாக மாற்றிவிட.. டோனி கழுத்து முறிந்து சாகிறான்.  நிக்.. தான் கொடுத்த வாக்குப்படி வேலன்டினாவை விட்டு விடுகிறான்.  ஆனால் டாக்டர் பர்நாசஸை அவரது கனவுலகிலேயே சுற்றி அலையைச் செய்து விடுகிறான்.  ஒருவழியாக பர்நாசஸ் அதிலிருந்து விடுபட்டு வெளி உலகம் திரும்ப.. காலில் வளையம் மாட்டிய பெண்ணொருத்தி,  ஒரு ஹோட்டலினுள் நுழைவதைப்  பார்த்து..  ஆர்வமாக அவளைப் பின்தொடர்ந்து செல்கிறார்.  அங்கே வேலன்டினா தன் கணவன் ஆண்டன் மற்றும் குழந்தையுடன் சந்தோசமாய் சிரித்துப் பேசியபடி உணவருந்தும் காட்சியைப் பார்க்கிறார்.  பெற்ற தந்தைக்கு இதைவிட வேறென்ன ஆனந்தம் வேண்டும்.  ஆயிரம் ஆண்டுகளாய்  நிழல் போல டாகடர் பர்நாசஸை பின்தொடரும் சித்திரக் குள்ளன் பெர்சி இப்போது அவரின் பின்னாலிருந்து... "சரி குருவே!.. கிளம்பலாமா" என அழைக்க டாக்டரின் பயணம் மறுபடியும் ஆரம்பிக்கிறது.  இப்போது பெரிய லாரிக்கு பதிலாக மினி லாரி.. நாடகத்துக்கு பதில் பொம்மலாட்டம்.  ஒரு நாள் ஷோ முடிந்து ஓய்வாக அமர.. "என்னையா பர்நாசஸ்!.. இன்னொரு பந்தயம் வைக்கலாமா?" என்றபடி நிக் அவரெதிரே வந்து  நிற்கிறான்.  "அட போயா.. உனக்கு வேற  இல்லை" என்று பர்நாசஸ் அலுத்துக்கொள்ள படம் முடிகிறது.

TERRY GILLIAM இப்படத்தின் இயக்குனர்.  THE MONTY PYTHON AND THE HOLY GRAIL, BRAZIL போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களை இயக்கியவர்.  இப்படத்தில் டோனியாக நடித்தவர் CHRISTOPHER NOLANன் THE DARK KNIGHTல் ஜோக்கராக நடித்து ஆஸ்கரை வென்ற HEATH LEDGER.  இவர் பாதிலேயே இறந்து போக... ஒரு வருடம் படப்பிடிப்பு நிகழாமல் படம் தடைப்பட்டு போனது.  கண்ணாடித் திரைக்குள் டோனி நுழைந்த பின் நிகழும் காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். கனவுலகில் டோனியின் முகத்தை மாற்றினார்கள்.  ஒரு டோனிக்கு பதில் மூன்று டோனி.  நடித்தவர்கள்  JOHNNY DEPP, JUDE LAW, COLIN FARRELL  போன்ற தல.. தளபதிகள்.  TOM CRUISEம் நடிக்க ஆசைப்பட்ட போது நோ வேகன்சி.
 
இப்படியாக வேண்டும்.. அப்படியாக வேண்டுமென்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் ஆசைகள்.. கற்பனைகள்.  நம் கனவுலகை நிஜமாக்க நாம் அனைவருமே போராடுகிறோம்,  சிலர் கடவுளின் பக்கம் சேர்ந்து கொண்டு... சிலர் சாத்தானின் பக்கம் சேர்ந்து கொண்டு.  இப்படியான தத்துவ விளக்கங்கள் இப்படத்திற்கு ஏராளமாக சொல்லலாம்.  தத்துவமெல்லாம் யாருக்கு வேண்டும்.. எனத் தூக்கிப் போட்டுவிட்டு, இதை வெறும் கதையாகப் பார்த்தாலும் சிறிதும் அலுப்பூட்டாமல்.. மிகுந்த செய்நேர்த்தி.. சீரிய தொழில்நுட்ப சாகசங்களுடன் மிரட்டுகிறது படம்.

டாக்டர் பர்நாசஸின் கண்ணாடித் திரைக்குள்..  அவரவர் விருப்பு வெறுப்புகேற்ற  ஒரு கனவுலகு விரிகிறது.  அதே போல் இப்படத்தை பார்க்கும் பார்வையாளனின் ரசனைக்கு ஏற்பவும் ஒரு கதையுலகு விரியலாம்.  இந்தப் படத்தை நீங்கள் பார்த்துவிட்டு இதற்கு வேறு ஒரு கதை சொன்னாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

படத்தின் trailer : https://www.youtube.com/watch?v=j1Hkve3FSE4

ருபேந்தர்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்