திரைக்கடல் - உலகத்தின் கடைசி தினம்.

'உலகம் எப்போது அழியும் என்கிறார்கள்.  அது தினமும் நூறு... ஆயிரம்... லட்சக்கணக்கான தடவை அழிந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு மனிதன் இறக்கும்போது அவனைப் பொருத்தமட்டில்  உலகமும் அழிந்து போய் விடுகிறது'. -  ஜென்.

'வாழவே பிடிக்கவில்லை, செத்துப் போய்விடலாம் போல் இருக்கிறது' என்று  வேதனைப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை.  ஆனால்.. வெள்ளம் வந்தோ, பிரளயம் வந்தோ கூட்டமாக அழிவது என்றால் மரணத்தை வரவேற்க அவர்கள் ரெடி.  ஒட்டுமொத்தமாக உலகமே அழியும் என்றால் அது இன்னும் சூப்பர்.   இன்றைய தேதியில் இது ஒரு யூகம் மட்டுமே.  ஒருவேளை.. ஒருநாள் நிஜமாகவே உலகம் அழிந்தால்.. அப்போது நம் மனநிலை என்னவாய் இருக்கும்?...
 
'முன்னொரு காலத்தில் உலகம் என்று ஒன்று இருந்தது' என்கிற ரேஞ்சுக்கு உலகம் அழிந்ததற்குப் பின் கற்பனை ராக்கெட்டை ஒளி வேகத்தில் ஓட்டி பல படங்கள் வந்திருக்கின்றன.  உலகம் அழியப்போவதாய் பில்ட்அப் கொடுத்து, பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடாமல் கடைசி வினாடியில் உலகம் பிழைத்துக் கொள்ளும் படங்களும் பல வந்திருக்கின்றன.  ஆனால் இந்த MELANCHOLIA படத்தில் நிஜமாகவே உலகம் அழிந்து விடுகிறது.  ஆயிரக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அங்குமிங்கும் ஓடி, வானளாவிய கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி, கடல் பொங்கி,  திக்கட்டும் தீ பரவி.. இப்படி ஏதும் நிகழவில்லை... இரண்டு சகோதரிகளின் உள்ளக் குமுறலில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் உலகம் அழிவதை ஒரு கவிதையாகக் காட்டியிருக்கிறார்கள்.

அக்கா  கிளேர். தங்கை ஜஸ்டின்.  இவர்களின் பெற்றோர் டைவர்ஸ் வாங்கி பிரிந்து வாழ்கின்றனர்.  அக்கா கிளேருக்கு கல்யாணம் ஆகிவிட்டது.  கணவன் ஜான் வானவியல் விஞ்ஞானி.  ஐந்து வயதில் ஒரு பையன்.  பெயர் லியோ.  மலையுச்சியில், ஆளரவமற்ற தனிமையில் ஓர் அழகிய பங்களாவில் வசிக்கின்றனர்.  தங்கை ஜஸ்டின் ஒரு அதிசயப் பிறவி.  எல்லோரையும் போல இயல்பாக சாதாரணமாக இருப்பவள், திடீரென விநோதமாக நடந்து கொள்வாள்.  எப்போது, எப்படி மாறுவாள் என்று சொல்லவே முடியாது. அப்படிபட்ட ஜஸ்டின் ஒரு விளம்பர கம்பனியில் வேலை பார்க்கிறாள். விளம்பரங்களுக்கு வாசகம் எழுதுகிற வேலை.  அந்த கம்பனி முதலாளி மகன் மைக்கேல்.  மைக்கேலுக்கு ஜஸ்டினைப் பிடித்துப்போக இருவருக்கும் திருமணமும் முடிந்து விட்டது.  

இதோ.. இன்றிரவு மலையுச்சி பங்களாவில் அக்கா கிளேரும் அவள் கணவனும் புது மணத்தம்பதிக்கு பார்ட்டியும் விருந்தும் தருகிறார்கள்.  மணமக்கள் கிளேரின் பங்களாவுக்கு காரில் போவதில் படம் ஆரம்பமாகிறது.

முதல் பாகம் ஜஸ்டின்.  விருந்துக்கு எல்லோரும் வந்து காத்திருகின்றனர்.  மணமக்கள் இரண்டு மணி நேரம் லேட்.  கிளேர் தங்கையை கடிந்து கொள்கிறாள். பார்ட்டி ஹாலினுள்  நுழைவதற்கு முன் ஜஸ்டின் சின்னக் குழந்தை போல் ஓடிப்போய் குதிரை ஆப்ரஹாமை தட்டிக் கொடுக்கிறாள். வானத்தில் தெரியும் ஒரு நட்சத்திரத்தைக் காட்டி அதைப்பற்றி விசாரிக்கிறாள்.  'அது ஆண்டரேஸ் நட்சத்திரம்' என்கிறான் அக்கா கணவன் ஜான்.  பார்ட்டி நல்லபடியாக நடந்து முடியவேண்டும்.  ஜஸ்டின் எதுவும் எசகுபிசகாக நடந்துகொள்ளக் கூடாது என்று கிளேரும் ஜானும் டென்ஷனாகவே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பயந்த மாதிரியே எல்லாம் நடக்கிறது.  அக்கா மகன் லியோவை தூங்க வைக்கிறேன் என்று பாதி பார்ட்டியில் ஜஸ்டின் அவனை தூக்கிக் கொண்டு போகிறாள். போனவள் கொஞ்ச நேரம் அவளும் படுத்துத் தூங்கிவிடுகிறாள்.  அக்கா கிளேர் போய் அவளை எழுப்பி அழைத்து வருகிறாள். அடுத்ததாக குளிக்கிறேன் என்று பாத்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறாள்.  நடனம் நடக்கையில் அங்கிருந்து நழுவி பேட்டரி வண்டியேறி கோல்ப்  மைதானத்திற்குப்  போய் சிறுநீர் கழித்துவிட்டு  வருகிறாள்.  கல்யாண கேக் வெட்ட அத்தனை பேரையும் காக்க வைக்கிறாள்.

'உன்னிடம் கொஞ்ச நேரம் தனிமையில் பேச வேண்டும்' என்று கணவன் மைக்கேல் அவளை அழைத்துப் போய் தன் கல்யாணப் பரிசாய் அவள் பெயரில் தான் வாங்கி இருக்கிற ஆப்பிள் தோட்டத்தின் போடோவைக் காட்ட, சந்தோசத்தில் கண்ணீர் பெருக்கும் ஜஸ்டின், அடுத்த நிமிடமே அந்த போட்டோவை அலட்சியமாகப் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட, ஆடிப்போகிறான் மைக்கேல்.  விளம்பர வாசகம் என்னாச்சு என்று ஜஸ்டினின் மாமனார் ஆபிஸ் வேலையை அவளுக்கு ஞாபகப்படுத்த ' போயா நீயும் ஆச்சு.. உன் வேலையும் ஆச்சு' என்று  அவரையும்  எடுத்தெறிந்து பேசுகிறாள்.  'ஊஹூம்.. இவள் இதற்கு சரிப்பட்டு வரமாட்டாள்' என்று மைக்கேல் இந்தக் கல்யாணம் செல்லாது என்று அனைவரிடமும் விடைபெற்று தன் அப்பாவுடன் வெளியேறுகிறான்.  இப்படியா ஒரு பெண் ஒரே நாளில்  தன்  வாழ்வை தானே அழித்துக்கொள்வாள்?  ஜஸ்டின் ஏன் அப்படி நடந்து கொண்டாள்?  இந்தப் புதிருக்கு பதில் இரண்டாம் பாகத்தில் கிடைக்கிறது.

இரண்டாம் பாகம் கிளேர்.  ஜஸ்டின் கல்யாணப் பார்ட்டி நடந்து சில மாதங்கள் முடிந்து விட்டன.  கிளேர் மலை உச்சியில் இருக்கும் அந்த தனிமையான பங்களாவில் பெரும் மனக் கொந்தளிப்பில் இருக்கிறாள்.  காரணம்.. இன்னும் சில தினங்களில் உலகம் அழியப் போகிறது.  மெலன்கலியா என்கிற கிரகம்.. சூரியனுக்குப் பின்னால் இத்தனை கோடி ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த கிரகம்.. இப்போது வெளிப்பட்டு, பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது பூமி மீது ஒரு செல்ல இடி இடித்துவிட்டு அதுபாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும்.  ஆனால் அது இடித்த அடுத்த வினாடி இந்த உலகம் இருக்காது. 'அப்படியெல்லாம்  ஏதும் நடக்காது. மெலன்கலியா பூமியை விட்டு விலகி வேறு பாதையில் போய்விடும்' என்கிறான் விஞ்ஞானியான கணவன் ஜான்.

இப்போது அந்த வீட்டிற்கு ஜஸ்டினும் வந்து சேர்கிறாள்.  ஆச்சரியம்.. ஜஸ்டின் நிச்சலனமாக காணப்படுகிறாள்.  நிதானமாக செயல்படுகிறாள்.  அவளிடம் பயமோ, பதற்றமோ ஏதும் இல்லை.  'உன் அக்காவைப் பார்.. ரொம்பவும் பயந்து சாகிறாள். நீயாவது அவளுக்கு புத்தி சொல்' என்கிறான் ஜான்.  ஜஸ்டின் வானத்தில் தென்பட்ட ஆண்டரேஸ் நட்சத்திரம் காணமல் போய்விட்டதை சுட்டிக்காட்ட அதை மெலன்கலியா மோதி அழித்து விட்டதாக கிளேர் இன்னும் பீதி கொள்கிறாள்.  மெலன்கலியா பற்றிய இன்டெர்நெட் தகவல்களைத் திரட்டி அதையெல்லாம் படித்து பயப்படுகிற கிளேரை ஜான் திட்டி அந்த காகிதங்களை அவளிடம் இருந்து பிடுங்கி வீசி எறிகிறான்.

பூமியை நெருங்க நெருங்க தோற்றத்தில் பெரிதாகிற மெலன்கலியாவிடம் இப்போது மாற்றம்.  அதன் உருவம் சிறிதாக ஆரம்பிக்கிறது.  ' பார்.. மெலன்கலியா பாதை மாறி விட்டது.  இனி அது வேறு திசையில் போய் விடும்.  பூமியை நெருங்காது' என்கிறான் ஜான்.  கிளேருக்கு நம்பிக்கை வருகிறது. மெல்ல அவள் பயம் அகன்று உற்சாகம் அடைகிறாள்.

ஆனால் அடுத்த நாளே மெலன்கலியா பழையபடியே பெரிதாகத் தெரிய ஜான் அதிர்ச்சி அடைகிறான்.  விஞ்ஞானிகளின் கணக்கு பொய்த்து விட்டது. மெலன்கலியா பாதையை மாற்றிக் கொண்டு மறுபடியும் பூமியின் பக்கம் திரும்பி விட்டது.  நாளை அல்லது மறுநாள்.. அது பூமியை முத்தமிட்டு விடும். நல்ல சுவையான விருந்து சமைத்து, சாப்பிடுவதற்கு ஜானைத் தேடும் கிளேருக்கு அதிர்ச்சி.  குதிரைக் கொட்டகையில் ஜான் குப்புற கிடக்கிறான்.. பிணமாக.  உலகம் அழியும் தினமன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள  கிளேர் வாங்கி வைத்திருந்த விஷத்தைக் குடித்து ஜான் உயிரை விட்டுவிட்டான்.  

ஜஸ்டினோ பூமியை நெருங்கும் மெலன்கலியா வெளிச்சத்தில் பரவசமாய் நிர்வாணக் குளியல் எடுக்கிறாள்.  ' கல்யாணப் பார்ட்டியில் ஒரு பாட்டிலில் பீன்ஸ் விதைகளைக் கொட்டி அதன் எண்ணிகையை கேட்டார்கள்.  சரியான விடை யாராலும் சொல்ல முடியவில்லை.. சொல்லவும் முடியாது.  ஆனால் எனக்குத்  தெரியும். அதிலிருந்தது 678 பீன்ஸ் விதைகள்.  அது போலவே உலகம் அழியப் போவதைப் பற்றியும் எனக்கு ஏற்கனவே தெரியும் ' என்று அக்கா கிளேரிடம் முதல்முதலாக ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறாள் ஜஸ்டின்.  தன் மாமனாரின் விளம்பரப் படத்திற்கு வாசகமாய் 'ஒன்றுமில்லை' என்று அவள் சொன்னதற்குப் பொருளும்.. இத்தனை நாள் அவள் நடத்தைக்கான விளக்கமும் அப்போதுதான் தெரிய வருகிறது.  

'ஒரு குகைக்குள் சென்று நாமெல்லாம் தப்பித்துக் கொள்ளலாம்' என்கிறான் சிறுவன் லியோ. ' ஓ.. அதை தாரளமாகச் செய்யலாமே'  என்று ஜஸ்டின் வெட்டவெளி கோல்ப் மைதானத்தில் நான்கு மூங்கில்களை நட்டு, இது தான் குகை என்று அக்காவுடனும் அவள் மகனுடனும் அமர்ந்துகொள்ள.. நெருங்கி வரும்  மெலன்கலியா வானமெங்கும் நிறைந்து அவர்களைத் தீண்ட.. அடுத்த நொடி.. ஒருநாள் உலகம் அழிந்தால் அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்படுபவர்கள் உடனே MELANCHOLIAவைப் பாருங்கள்.

இந்த டேனிஷ் படம் வெளியான ஆண்டு 2011.  இதன் இயக்குனர் LARS VON TRIER.  இவரின்  DANCER IN THE DARK, ANTI CHRIST போன்றவை புயலைக் கிளப்பிய படங்கள்.  கேன்ஸ் திரைப்பட விழாவில் MELANCHOLIA கலந்து கொண்டபோது  ஜஸ்டினாக நடித்த KRISTEN DUNSTக்கு  சிறந்த நடிகை விருது கிடைத்தது.  உலகத்தின் அழிவை... அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமில்லாமல் சித்தரித்த விதத்தில் MELANCHOLIA ஒரு வித்தியாசமான படம்தான்.

படத்தின் TRAILER: http://www.youtube.com/watch?v=wzD0U841LRM

ருபேந்தர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!