திரைக்கடல் : அடுத்த அப்பாய்ன்ட்மெண்ட்... ' நீ உன்னைக் கொல்ல வேண்டும் '. | திரைக்கடல்

வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (27/07/2013)

கடைசி தொடர்பு:14:02 (27/07/2013)

திரைக்கடல் : அடுத்த அப்பாய்ன்ட்மெண்ட்... ' நீ உன்னைக் கொல்ல வேண்டும் '.

' நான் எப்போதும் உண்மையைத்தான் சொல்கிறேன்.. பொய் சொல்லும்போதுகூட' - நடிகர் அல் பாசினோ.

சினிமாவுக்கு இலக்கணம் என்று எதுவும் கிடையாது.  உருவாகியிருக்கும் ஒன்றிரண்டு விதிகளையும், கோட்பாடுகளையும் உடைத்தெறிந்துவிட்டே புது சினிமா உருவாகிறது.  நவசினிமா, புதுஅலை சினிமா.. நமக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம்.  பிரான்சில் அது பிரசித்தம்.  புதுஅலைப்  படங்களிலேயே புழங்கி வரும் அவர்கள், நம்முடைய மசாலா சினிமாவைப் பார்த்தால், உச்சி மண்டை சுர்ரென்று ஆகி.. 'நியோ புது ரிய சினிமா' என்று புதுப்பெயர் வைத்து கொண்டாட ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நம்மூர் சினிமாவின் எளிய விதி- சொல்ல வருவதை ஆடியன்ஸ் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  இங்கே படம் பார்ப்பவனின் புரிதல் அவ்வளவு முக்கியம்.  இதற்கு உதாரணம், இண்டர்வல் முடிந்து தொடங்கும் காட்சி மெயின் கதையோடு ஒட்டாத.. சாதாரண காட்சியாக இருக்கும். பாப்கார்ன் ,கோக் ,பாத்ரூம் கியூவில் நின்றுவிட்டு லேட்டாக வரும் பார்வையாளன் அந்தக் காட்சியைப் பார்க்காவிட்டாலும், படத்தின் கதைப்போக்கு கெடக்கூடாது.  அப்படிப்பட்ட ஒரு காட்சிக்கு ரொம்பவுமே மெனக்கெடுவார்கள்.  ஆனால் புதியஅலைப் படங்களில் கதையைப் புரிந்து கொள்ள பார்வையாளன் தலை முடியை பிய்த்துக் கொள்ள வேண்டும்.  படம் என்ன சொல்ல வருகிறது என்று அவன் தனியே நாலு நாள் ரூம் போட்டு யோசிக்க வேண்டும், அல்லது நாலு செமினார் கலந்து கொள்ள வேண்டும்.  பார்வையாளனின் பங்களிப்பை கோருபவை அவ்வகைப் படங்கள்.  

உயரிய தொழில்நுட்பத்துடன்,  கலை மேதைமையுடன்,  ஒரு சிலை போல அந்தப் படத்தை பார்த்து பார்த்து செதுக்குவார்கள்.  உங்களுக்கு கலைக்கண் இருந்தால் அந்தப் படம் கடவுள் மாதிரி.  இந்த மாதிரிப் படங்களைப் பார்ப்பதற்கென்றே உலக அளவில் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அப்படி கடந்த வருடம் 2012ல் வெளியாகி, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பரவலாக பேசப்பட்ட பிரெஞ்சுப் படம்  HOLY MOTORS.  இதன் இயக்குநர் LEOS CARAX.

அதிகாலை.  55 வயது ஆஸ்கார் வேலைக்குச் செல்வதற்காக தன் வீட்டை விட்டு கிளம்பி வெளியே வருகிறான்.  மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவன் குழந்தைகள் அவனுக்கு டாட்டா காட்டி விடைகொடுக்கின்றனர்.  சற்று தூரத்தில் செலீன் என்கிற பெண்மணி... அவளுக்கும் 50 வயதிருக்கும்.. ஒரு காருடன் காத்திருக்கிறாள்.  ' குட் மார்னிங் செலீன் '.. ' குட் மார்னிங் ஆஸ்கார் '..  காரில் ஆஸ்கார் ஏறி அமர்ந்துகொள்ள, செலீன் காரை கிளப்புகிறாள்.  அது ரொம்ப வித்தியாசமான கார்.  அளவில் பெரிதான மிக நீளமான கார்.  உள்ளே.. சாப்பிட, படுத்துத் தூங்க,  பாத்ரூம் போக.. ஒரு ஹோட்டல் அறை போல, அந்தக் கார் சகல வசதிகளுடனும் இருக்கிறது.  ' இன்று நிறைய அப்பாயின்ட்மெண்ட்.  முதல் அப்பாயின்ட்மெண்ட் பற்றிய ஃபைல் உங்கள் அருகில் இருக்கிறது '  என்று செலீன் சொல்ல..  சற்றே அலுப்புடன் ஆஸ்கார் அந்த ஃபைலை எடுத்துப் புரட்டுகிறான்.  பிறகு அங்கிருக்கும் ஆளுயரக் கண்ணாடி முன் அமர்ந்து தனக்குத் தானே மேக்அப் போட்டுக்கொள்ள ஆரம்பிக்கிறான்.  

அந்தக் கார் இப்போது வாகன நெரிசலும் ஜன நடமாட்டமும் உள்ள பாரிசின் மிகப் பெரிய பாலத்தின் மீது வந்து நிற்கிறது.  செலீன் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி, கார்க் கதவை திறந்து விடுகிறாள்.  மிகவும் வயதான, பார்ப்பவரை பரிதாபப்பட வைக்கிற கூன் விழுந்த பிச்சைக்கார மூதாட்டி ஒருத்தி காரிலிருந்து இறங்குகிறாள்.  அது ஆஸ்கார்தான்.  அதுதான் அவனுடைய முதல் அப்பாயின்ட்மெண்ட்.  அந்தப் பாலத்தின் மீது அவன் அரை மணி நேரம் பிச்சை எடுக்க வேண்டும்.  போவோர் வருவோரிடம் அவன் நீட்டும் ஒடுங்கிய தகரக் குவளையில் சில பிச்சைக் காசுகள் விழவும் செய்கின்றன.  அரை மணி நேரம் முடிந்ததும் ஆஸ்கார் மீண்டும் போய் காரில் ஏறிக்கொள்ள.. கார் கிளம்புகிறது.

ஆஸ்கார் தன் பிச்சைக்காரி கெட்அப்பை களைந்து அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கான வேஷத்தை போட்டுக்கொள்ள ஆரம்பிக்கிறான்.  கார் இப்போது ஒரு கட்டிடத்தின் முன் வந்து நிற்க, ஒரு அக்ரோபாட்டாக மாறியிருக்கும் ஆஸ்கார் காரிலிருந்து இறங்குகிறான்.  அவன் அந்தக் கட்டிடத்தின் உள்ளே செல்லச் செல்ல.. அது பிரம்மாண்ட அரங்கமாக மாறுகிறது.  அங்கிருக்கும் ஒரு மேடையில் அக்ரோபாட் ஆஸ்கார் காற்றில் தாவுகிறான்,  கரணம் போடுகிறான், வாள் வீசி வித்தைகள் பல செய்கிறான்.  கூட இன்னொரு அக்ரோபாட் பெண்ணும் வந்து சேர்ந்துகொள்ள இருவரும் களிநடனம் புரிகின்றனர்.  
கார் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது.  அக்ரோபாட் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆஸ்கார் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.  ' அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கு லேட் ஆகி விட்டது ' என்கிறாள் செலீன்.  ' பரவாயில்லை.. நேரத்தை சரிக்கட்டிக் கொள்ளலாம் ' என்கிற ஆஸ்காரின் கையில் அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கான ஸ்கிரிப்ட்.  இம்முறை பைத்தியக்காரன் வேஷம்.  காரில் இருந்து இறங்குபவன் ஒரு ட்ரைனேஜ் மேன்ஹோலைத் திறந்து, பாதாள சாக்கடையில் வெகுதூரம் நடந்து, இன்னொரு மேன்ஹோல் வழியாக வெளியேறுகிற இடம் ஒரு சுடுகாடு.  கல்லைறை மேல் கிடக்கும் மாலைகளின் பூக்களை பிய்த்துத் தின்றபடி பைத்தியகாரன் ஆஸ்கார் ஒரு பெரிய மைதானத்திற்குள் வருகிறான்.  எதிர் வரும் நபர்கள் இவன் தோற்றத்தைப் பார்த்து பயந்து தெறித்து ஓடுகின்றனர்.  மைதானத்தில் ஒரு விளம்பரப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.  நகரின் பிரபலமான மாடலும், அழகு தேவதையுமான அந்த நடிகையை ஒருவர் ஷூட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  ' அழகு.. பேரழகு ' என்று கேமராவும் கையுமாக நடிகையை ஜொள்விட்டுக் கொண்டிருக்கும் அவரின் முன்னே போய் ஆஸ்கார் நிற்க.. ' விசித்திரம்.. விசித்திரம்.. உன்னை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளட்டுமா? ' என்று அந்த நபரின் கவனம் ஆஸ்காரின் மீது போகிறது.  ஆஸ்காரோ அந்த நடிகையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு  ஓட ஆரம்பிக்கிறான்.  மொத்த கூட்டமும் பயந்துபோய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.  ஆஸ்கார் அந்த நடிகையை ஒரு தனிமையான இடத்துக்கு தூக்கிக் கொண்டு வருகிறான்.  மிக வினோதமாக நடந்து கொள்கிறான்.  அவள் தலைமுடியை கத்தரித்துத் தின்கிறான்.  கலைந்திருக்கும் அவள் ஆடையை சரி செய்கிறான்.  பிறகு நிர்வாணமாக அவள் மடியில் படுத்துக் கொள்கிறான்.

இரவாகி விட்டது.  அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்காக ஆஸ்கார் போய்க் கொண்டிருக்கிறான்.  கார் அதற்கான இடத்தை அடைந்ததும், ஆஸ்காருக்கு இன்னொரு கார் தயாராக இருக்கிறது.  அதில் ஏறித் தானே அந்தக் காரை ஓட்டிச் செல்கிறான்.  இப்போது அவனொரு பொறுப்புமிக்க தந்தை.   ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ள சிநேகிதியின் வீட்டிற்கு வந்திருக்கும் தன் மகளை பிக்அப் பண்ண வந்திருக்கான் அவன்.  பார்ட்டி நடக்கும் வீட்டின் முன் காரைக் கொண்டு போய் நிறுத்த, சற்று நேரத்தில் மகள் வந்து காரில் ஏறிக்கொள்கிறாள்.  ' இப்போதெல்லாம்  நீ என்னிடம் அதிகம் பொய் சொல்கிறாய்.. தயவுசெய்து இப்படி நடந்து கொள்ளாதே.  அப்புறம்.. உனக்கு தாழ்வு மனப்பான்மை என்பது கூடவே கூடாது '  என்று மகளைக் கண்டித்தும் நெகிழ்ச்சியுடனும் பேசுகிறான்.

அடுத்த வேஷம்.. நகரின் சப்வேயில் ஆர்கன் போன்ற ஒரு இசைக்கருவியை துள்ளி குதித்து ஆனந்தமாக வாசித்து செல்லும் ஆஸ்காரின் பின்னால் ஒரு வாத்திய கோஷ்டியே செல்கிறது.  

காரில் அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கு ஒப்பனை மாற்றி தயாராகிக் கொண்டிருக்கிறான் ஆஸ்கார்.   '  தியோவைக் கொல்ல வேண்டும்.  அதற்கான ஆயுதம் இதோ..' என்று ஃபைலில் எழுதி இருப்பதைப் படிக்கிறான்.  நல்ல பளபள கத்தி ரெடியாக இருக்கிறது.  எடுத்து இடுப்பில் மறைத்து வைத்துக் கொள்கிறான்.  கார் நிற்கிறது.  தியோவை தேடிப் போகிறான்.  அதோ. தியோ.  ஆஸ்கார் போலவே இருக்கும் தியோ.  கத்தியை எடுத்து அவன்  கழுத்தில் ஒரே சொருகு.. தியோ மல்லாந்து விட்டான்.  கிளம்பும் சமயம் தியோ அதே கத்தியால் ஆஸ்காரின் கழுத்தைக் குதறிவிட, ரத்தம் பீறிட.. தன் கார் முன் வந்து சரிய, செலீன் அவனை இழுத்துப் போட்டுக் கொண்டு காரை கிளப்புகிறாள்.

கார் போய்க் கொண்டிருக்கிறது.  கழுத்தறுபட்ட ஆஸ்கார் சரியாகி, அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கும் தயாராகி விட்டான்.  காரின் பின் சீட்டில் கூலிங் கிளாஸ் அணிந்து ஒரு கனவான் போன்ற தோரணையில் அமர்ந்திருபவரை நோக்கி ' நான் நடிக்கிற இந்த காட்சிகளை யார் படம்பிடிப்பது.. எந்த பார்வையாளனுக்காக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் '  என்கிறான் ஆஸ்கார்.  ' அது உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை உன் தொழில் நடிப்பு உன் தொழிலை நேசி.. அர்ப்பணிப்புடன் நடி... அதுதான் உனக்கு நல்லது ' என்கிறார் கனவான்.  

அதற்குள் கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை  நெருங்கிவிட, காரை நிறுத்தச் சொல்லி ஆஸ்கார் அலறி அடித்துக்கொண்டு, காரை விட்டு இறங்கி ஹோட்டலின் உள்ளே ஓடுகிறான்.  ஹாலில் ஒரு தொழிலதிபர் தன் கூட்டாளிகளுடன் வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறார்.  அந்த தொழிலதிபர் வேறு  யாரும் இல்லை.. ஆஸ்கார் தான்.  அவரை ஒரு வினாடி பார்க்கிற ஆஸ்கார் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் துப்பாக்கியை எடுத்து  அவரை சுட்டுக் கொல்கிறான்.   அடுத்த நொடி மெய்க்காப்பாளர்களின் மூன்று புல்லட்டுகள்  ஆஸ்காரின் நெஞ்சைத் துளைக்கின்றன.  செலீன் ஓடி வந்து.. தவறு நடந்து விட்டதாக சுற்றியிருப்பவர்களிடம் மனிப்பு கோரி.. நடிகன் ஆஸ்காரை அள்ளிக்கொண்டு போகிறாள்.

ஓடுகிற காரில் ஆஸ்கார் ஒரு தொண்டு கிழவனாக தன் அடுத்த வேஷத்தை போட்டுக் கொண்டிருக்கிறான்.  இம்முறை ஒரு ஹோட்டல் அறையில் ஆஸ்கார் மரணப் படுக்கையில் கிடக்கிறான்.  அவனை மிகவும் நேசிக்கும் ஒரு இளம் பெண் அவன் நிலைக்காக அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுகிறாள்.  ' நான் இங்கு வெகு நேரம் இருக்க முடியாது, எனக்கு இன்னும் சில அப்பாயின்ட்மெண்ட்கள்  இருக்கின்றன ' என  கண்ணீருடன் அழுகிறான் ஆஸ்கார்.  ' என் நிலையும் அதுதான் ' என்கிறாள் அந்தப் பெண்.  ஆஸ்கார் எழுந்து விடைபெற்று செல்லும்போது அவள் பெயரை விசாரித்துவிட்டுச் செல்கிறான்.  

அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கு போகும் வழியில் ஆஸ்கார் செல்லும் கார் இன்னொரு காருடன் மோதி விடுகிறது.  அதுவும் இதே போன்ற நீளமான கார். அதில் அமர்ந்திருக்கும் பெண்மணி ஜீன்னைப் பார்த்ததும் ஆஸ்காரின் விழிகள் விரிகின்றன.  அவளும் இவன் ஜாதிதான்.  கார் டிரைவர்கள் சண்டை போட்டுக் கொள்ள..  ஆஸ்கார் இறங்கி ஜீன்னை நெருங்குகிறான்.  ' எனக்கு இன்னும் 20 நிமிடம் இருக்கிறது. வா, இருவரும் கொஞ்ச நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருப்போம் ' என்று ஜீன் அவனை ஒரு வெகு உயரமான ஹோட்டல் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்து சொல்கிறாள்.  இருவரும் ஏதும் பேசிக்கொள்வதில்லை  மௌனமே பாஷையாகிறது.  ஜீன் துயரம் ததும்பும் பாடம் ஒன்றை அவர்கள் இருவருக்குமாக சேர்ந்து பாடுகிறாள்.  ' சரி.. உன்னுடைய ஆள் வந்து விடுவான்.  நான் கிளம்புகிறேன் ' என்று ஆஸ்கார் அவளை அந்த மொட்டை மாடியிலேயே விட்டுவிட்டு புறப்படுகிறான்.  ஹோட்டல் படியிறங்கி  வரும்போது ஜீன்னை தேடி வருபவன் எதிரே வர.. அவன் தன்னைப் பார்த்துவிடாமல்  ஆஸ்கார் மறைந்து கொள்கிறான். ஜீன்னோ மொட்டை மாடியின் அபாயகரமான முனைக்கு நகர்ந்து அங்கிருந்து கீழே பார்க்கிறாள்.  ஹோட்டலை விட்டு வெளியே வரும் ஆஸ்காருக்கு அதிர்ச்சி. ஜீன்னும் அந்த அவனும் தரையில் ரத்தம் சிதறி பிணமாகக் கிடக்கின்றனர்.      

அதைப் பார்த்து கதறியபடி ஓடிவந்து காரில் ஏறிக்கொள்கிறான் ஆஸ்கார்.  கார் கிளம்பிப் போகிறது.  ' குடித்தது போதும் ஆஸ்கார்.. இன்னொரு அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது ' என்று அவனுக்கு நினைவு படுத்துகிறாள் செலீன்.  ' இன்னொரு வாழ்கை இருக்குமா.. அதனால் முடிந்தவரை இப்போதே சிரித்துக் கொள்வோம் ' என்று தத்துவார்த்தமாக பேசுகிற ஆஸ்கார், செலீனை தன்னுடன் நடனமாட அழைக்கிறான்.  ' இப்போது வேண்டாம்.. இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோம்.  ஆஸ்கார்! உங்களுக்குத் தெரியுமா நான் முன்னொரு காலத்தில் பிரபலமான டான்சர் ' என்று செலீன் சொல்ல.. ' நீ டான்சரா ' என்று அந்தக் கிழவியைப் பார்த்து வாய்விட்டு சிரிக்கிறான் ஆஸ்கார்.  

நள்ளிரவு தாண்டி பொழுது விடியத் துவங்கும் நேரம்.  கடைசி அப்பாயின்ட்மெண்ட்டாக ஒரு பெரிய குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டு முன் கார் வந்து நிற்கிறது.  ' போ ஆஸ்கார்..  நன்றாக ஓய்வெடுத்து நாளை இதே நேரம் தயாராக இரு.. வந்து உன்னை பிக்அப் பண்ணிக் கொள்கிறேன் ' என்று செலீன் அவனை இறக்கி  விட்டுச் செல்கிறாள். அவன் வீடு போலவே அந்த குடியிருப்பில் பல வீடுகள்.  ஆஸ்கார் தன் வீட்டுக் கதவைத் திறந்து.. உள்ளே நுழைந்து ' டார்லிங் ' என்று மனைவியை அழைக்க, மனைவி வருகிறாள்.  கூடவே அவர்களின் மகனோ.. மகளோ.  டார்லிங் என்றும் டாடி என்றும் அழைத்துக் கொண்டு வந்து நிற்கும் இரண்டு சிம்பன்சிகளையும் அன்பாய்.. ஆசையாய்.. கட்டிக் கொள்கிறான் ஆஸ்கார்.

காரை ஓட்டிச் செல்லும் செலீன், தன் அலுவலகக் கட்டிடத்தை அடைகிறாள்.  முகப்பில் ' ஹோலி மோட்டார்ஸ் ' என்கிற அந்த கம்பனியின் பெயர். கீழ்த்தளத்தில் இருக்கும் விஸ்தாரமான கார் பார்க்கிங் இடத்திற்கு தன் காரை கொண்டு வந்து செலீன் நிறுத்துகிறாள்.  ஏற்கனவே அது போல் நூற்றுக் கணக்கான கார்கள் அங்கு நின்று கொண்டிருக்கின்றன.  இன்னும் சில கார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.  ஒரு மாஸ்க்கை எடுத்து தன் முகத்தில் பொருத்திக்கொள்ளும் செலீன், ' வந்து சேர்ந்துவிட்டேன் ' என்று யாருக்கோ போன் செய்துவிட்டு, இறங்கிச் செல்கிறாள்.  இப்போது அணிவகுத்து நிற்கும் கார்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள படம் முடிகிறது.

மொத்தப் படமுமே ஒரு திரை அரங்கில் பார்வையாளர்கள் பார்க்கும் படமாக காட்டப் படுகிறது.  ஆனால் விசித்திரம்.. பார்வையாளர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருகின்றனர்.  மனிதன் இன்று தன் சுயத்தை இழந்து விட்டான்.  வயிறு வளர்க்க, வசதி பெருக்க விதவித வேஷம் போடுகிறான்.  தினமும் செத்துப் போகிறான்.  பிறரை சாகடிக்கிறான்.  அழுகிறான்,  மற்றவர்களை அழவைக்கிறான்.  உலகமே ஒரு நாடக மேடை; அதில் நாம் எல்லோருமே நடிகர்கள் என்கிற எளிய கதையைத்தான் டைரக்டர் இப்படியெல்லாம் சொல்லி இருக்கிறாரோ?.  இல்லை.. சீரியசாக வேறு ஏதாவது சொல்லி வருகிறாரா?.. இப்படியெல்லாம் சிந்தனை விரிகிறது.  திரும்பத் திரும்ப இதே படத்தை பார்த்தால் வேறு சில தளங்களும் கண்ணுக்கு புலப்படலாம்.  

எப்படியோ.. ஏழெட்டு செமினார் நடத்தி விவாதம் செய்யும் அளவு படத்தில் விஷயங்கள் இருக்கின்றன.  எல்லாவற்றையும் மீறி படத்தில் குறிப்பிடத் தகுந்த விசயம்- ஆஸ்காராக நடித்திருக்கும் DENIS LAVANTன் நடிப்பு.

சினிமா நடிகர் ஆவதற்காக.. கூத்துப் பட்டறை நோக்கி போய்க் கொண்டிருபவர்களும், போய்விட்டு வந்தவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இந்த HOLY MOTORS.   

படத்தின் TRAILER : http://www.youtube.com/watch?v=99esSdHv-Ks

ருபேந்தர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்