வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்: தி ரெட் பலூனுடன் ஓர் அறிமுகம்!

சினிமா ஓர் உன்னத கலை. மனிதர்களுக்கும் சினிமாவிற்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. நாம் நினைத்தவை, நினைக்க முடியாதவை உள்ளிட்ட பலவற்றையும் காட்சிப் பொருளாக்கி நம் கண்களில் கலக்கும் அற்புதப் படைப்பே  ஆரோக்கிய சினிமாக்கள். அவற்றைத் தொகுத்து வாரா வாரம் செவ்வாய் அன்று உங்களுக்காகத் தரவிருக்கும் புதிய பகுதியே “ வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்” தொடர். 

இந்த வாழ்வின் மீது நம்பிக்கையிழந்து சோர்வுடன் இருக்கும் தருணங்களிலும்,தனிமைச் சிறையை நொடிகள் நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையிலும் ,மனம் முழுவதும் நிரம்பிவழியும் கடந்த காலத்தின் இழப்புகளையும்,துயரங்களையும் திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும் நாட்களிலும்,காலச் சூழலால் அதீத நேசத்திற்கு உரியவர்களை இழந்து தவிக்கிற சந்தர்ப்பங்களிலும் சில திரைப்படங்களைப் பாருங்கள் .

அந்தத் திரைப்படங்களில் உங்களின்  கடந்தகாலங்களை கரைத்து நம்பிக்கையுடன் ,மகிழ்ச்சியுடன் கூடிய
புதிய மனிதனாக உயிர்பெறுவீர்கள் . இந்த மாதிரியான உணர்வை சில படங்களே நமக்கு தருகிறது . அந்த மாதிரியான ஒரு படம் தான் தி ரெட் பலூன் ..

1950 களின் ஆரம்பத்தில் பாரிஸ் நகரின் வளைந்து ,நெளிந்து குறுக்கு வெட்டாக அமைந்திருக்கும் தெருக்களின் ஒதுக்குப்புறத்தில் அமைத்திருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் பெற்றோருடன்  ஒரு சிறுவன் வசித்து வருகிறான் . அவன் அருகிலிருக்கும் பள்ளியில் படித்து வருகிறான் .  அந்தச் சிறுவனுக்குநண்பர்கள் என்று யாருமில்லை.

ஒருநாள் எதேச்சையாக சிகப்பு பலூன்  ஒன்று அவனுக்குக் கிடைக்கிறது.ஆரம்பத்தில் பலூனை ஒரு  விளையாட்டுப் பொருளாக மட்டும் சிறுவன்  பார்க்கிறான்  .நாளடைவில் பலூனும் அவனும் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்.  பலூனுடனான நேசத்தால் தன்னைப் போலவே பலூனுக்கும் மனதும்,உயிரும் இருக்கிறது என அவன் நம்புகிறான்.

பள்ளிக்குச் சிறுவனும் பலூனும் சேர்ந்தே செல்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் சாலை நெடுகிலும்  பலூனுக்கும்,சிறுவனுக்கும் இடையே உயிர்ப்புடன் கூடிய உரையாடல்  நடந்து கொண்டே இருக்கிறது  .நண்பர்கள் யாருமற்ற சிறுவனின் உணர்வை,நட்பை ,அன்பை பதிலளிக்க முடியாத பலூன் உணர்ந்து கொள்கிறது .

இருவரும் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் செல்கிற  காட்சிகளைக் காணும் பெரியவர்கள் வியப்பில் தோய்ந்து போகின்றனர் .அந்தச் சிறுவனின்  வயதை ஒத்த மற்ற சிறுவர்கள் பொறாமைப் படுகின்றனர்

நாளுக்கு நாள் பலூனுக்கும் சிறுவனுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் . பொறாமையால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் பாரிஸ் நகரின் சந்து பொந்து விடாமல் சிறுவனைத் துரத்திப் பிடித்துப் பலூனை அபகரித்துக் குரூரமாக பலூனைக் காலால் மிதித்து உடைத்து விடுகின்றனர் . தன்னுடைய நண்பனை இழந்த சிறுவன் கதறி அழுகிறான்

சிறுவனின் அழுகையைக் கேட்டு   நூற்றுக்கணக்கான வண்ணமயமான பலூன்கள் கூட்டாகக் கிளம்பி அவன் இருக்கும் இடத்தை நோக்கி வானில் பறந்து வருகிறது  , நூற்றுக்கணக்கான பலூன்கள் தன்னை நோக்கி வருவதைக் காணும் சிறுவன் மகிழ்ச்சியால் சிரிக்க ஆரம்பிக்கிறான். எல்லாப் பலூன்களின் கயிரை ஒன்றாகப் பிடிக்கிறான் . அந்தப் பலூன்கள் வானத்தை நோக்கி அவனைத் தூக்கிச் செல்கின்றன .

ஒரு நண்பனை இழந்து தவித்துக்கொண்டிருந்த சிறுவன் ,தன்னைத் தேடி வந்த நூற்றுகணக்கான நண்பர்களுடன் , நண்பனைப் பறித்தவர்கள் எல்லாம் வியப்புடன் பார்க்க பரவசத்துடன் வானில் பறந்து செல்வதோடு படம் நிறைவடைகிறது .

முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தையாவது நிச்சயம் பெறுவோம் என்று  உறுதியாகச் சொல்ல முடியும்.

1956 இல் வெளியான இக்குறும்படம் 34 நிமிடங்களே ஓடக்கூடியது. கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இக்குறும்படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்.

-சக்திவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!