வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்: ரெனாட்டோவின் மறக்கமுடியாத காதலி “மெலினா” (2000)

“காலங்கள் கடந்தது. நான் காதலித்த பெண்கள்  எப்போதுமே என்னை ஞாபகத்தில் வைத்திருப்பாயா என்று என்னிடம் கேட்பார்கள். நானும் ஆமாம் என்று சொல்வேன் ஆனால் என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாத மெலினா என்னிடம் அப்படிக் கேட்டதேயில்லை” ரெனாட்டோ

நம் வாழ்வில் சிறு தோல்வி ஏற்பட்டாலே அதை நினைத்து வருந்தி அவமானப்பட்டு,சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர் .அவமான உணர்வு மனிதனை நிலை குலையச் செய்து அவனை முடக்கிவிடுகிறது,ஆனால் பல்வேறு அவமானங்கள்,கடினங்களுக்கு  மத்தியில் எவ்வாறு ஒரு பெண் துணிச்சலுடன் தன் வாழ்வை, அவமதிப்பிற்கு உள்ளான இடத்திலேயே எதிர்கொள்கிறாள் என்பதை அற்புதமாகச் சொல்லும் படம் மெலினா

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம்,இத்தாலியின் சிசிலி நகரின் தெருவொன்றில் வயசுப் பசங்களிலிருந்து நரைவிழுந்து முகமெல்லாம் சுருங்கிப் போயிருக்கும் கிழவன் வரை அனைவரையும் வாயைப்பிளக்க வைக்கும் அழகியான மெலினா தன்னந்தனியாக ஒரு வீட்டில்  வாழ்ந்து வருகிறாள். அவள் தெருவில் இறங்கி நடந்தாலே எல்லோரின் பார்வையும் அவள் மீதுதான் இருக்கும். அவள் கணவன் போருக்குச் சென்றிருக்கிறான். தந்தை இருந்தும் இல்லாதது மாதிரி தனியாக மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள்.

அவளின் தன்னந்தனியான நிலையை அறிந்த ஆண்கள் அவளை எப்படியாவது அடைந்துவிட முயல்கிறார்கள், எல்லா ஆண்களும் மெலினாவை விரும்புவதால் பெண்களுக்கு அவள் மீது பொறாமை ஏற்படுகிறது. தங்கள் கணவர்களின் தவறை எண்ணாமல் மெலினாவால் தான் அவர்கள் கெட்டுப்போய்விட்டார்கள் என்று பெண்கள் மெலினா மீது குற்றம் சுமத்துகிறார்கள், ஆனால் மெலினா தன் கணவனைத் தவிர வேறு யாரையும் மனதளவில் கூட நினைப்பதில்லை
 
நாட்கள் செல்கிறது, போரில் கணவன் இறந்து விட்டதாகச் செய்தி கிடைக்கிறது. தந்தையும் இறந்துவிடுகிறார். தனிமையுடன் சேர்ந்து மெலினாவை வறுமையும் வாட்டுகிறது. மெலினா வயிற்றுப் பிழைப்புக்காக வேறு வழியில்லாமல் விபச்சாரியாக மாறுகிறாள்
 
சரியான சந்தர்ப்பம் கிடைத்த போது பெண்கள் எல்லோரும் சேர்ந்து மெலினாவை அடித்து உதைத்து அவமானப்படுத்தி ஊரை விட்டே துரத்தி விடுகிறார்கள்.சில நாட்கள் கழித்துப் போரில் இறந்துபோனதாகச் சொல்லப்பட்ட கணவன் உயிருடன் திரும்பிவருகிறான் .அவனிடம் மெலினாவை பற்றிக் கேவலமாகச் சொல்லி அவனையும் அவமானப் படுத்துகிறார்கள் .அப்போது அவனுக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது .அந்தக் கடிதத்தை யார் எழுதினார் என்று குறிப்பிடவில்லை.அதில் மெலினா ரொம்ப நல்லவள்,அவள் கடைசி வரைக்கும் உன்னைத் தான் நினைத்துக் கொண்டிருந்தாள் என்றும் அவள் இப்போது இருக்கும் இடத்தைப் பற்றியும் அக்கடிதத்தில்  எழுதப்பட்டிருக்கிறது .

கடிதத்தைப் படித்து ஆறுதல் அடைந்த அவன் மெலினாவை தேடிச் செல்கிறான் .சில வருடங்கள் கழித்து மெலினா தன் கணவனுடன் தான் அவமானத்துக்குள்ளான இடத்திற்கே துணிச்சலுடன்  வாழவருவதோடு படம் நிறைவடைகிறது
 
ரெனாட்டோ என்ற 12 வயது சிறுவனின் பார்வையில் தான் கதை சொல்லப்படுகிறது.ஆரம்பத்தில் ரெனாட்டோவிற்கு மெலினா மீது ஏற்படும் காமம் சார்ந்த ஈர்ப்பு நாளடைவில் அவளின் நிலையை உணர்ந்தபின் மாறிவிடுகிறது .அவளுக்காகக் கடவுளிடம் வேண்டுகிறான். அவளை மற்ற ஆண்களிடமிருந்து பாதுகாக்க முயல்கிறான். மெலினாவின் உண்மை நிலையைப் பற்றி அவளுடைய கணவனுக்குக் கடிதம் எழுதியதே ரெனாட்டோ தான். அந்தக் கடிதம் தான் மெலினாவை கணவனுடன் மீண்டும் சேர்த்து வைக்கிறது.

போர்ச்சூழல், நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாத நிலையற்ற வாழ்க்கை ,வீடுகளின் மீது குண்டு பொழிவுக்கு மத்தியிலும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், எந்த துணையுமின்றி  தனியாக இருக்கும் மெலினாவை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்பதிலேயே ஆண்கள் குறியாக இருக்கிறார்கள் .அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள் ,இது கணவனை பிரிந்து தன்னந்தனியாக இருக்கும் பெண்ணின் மீதான ஆண்களின்  பார்வை எந்த இடத்திலும் எந்த சூழலிலும் ஒரே மாதிரியாக இருப்பதை சொல்லாமல் சொல்கிறது .

மெலினா ஒரு தேவதையைப் போல நமக்கு ஒரு பாடத்தை கறறுத் தருகிறாள் .மெலினா தன் கணவன் உயிருடன் திரும்பிய பின் வேறு ஊரிலேயே வாழ்ந்து இருந்தால் அவமானம் ஏற்பட்ட ஊரில் மெலினா ஒரு விபச்சாரியாகவே இருந்திருப்பாள் ,அந்த ஊர் பெண்களும் தங்களின் கணவர்கள் உத்தமர்கள் என்றும்,மெலினாவால் தான் அவர்கள் சீரழிந்து போனார்கள் என்றும்  கட்டுக்கதை கட்டிக்கொண்டே இருப்பார்கள் .எந்த தவறுமே செய்யாத மெலினா தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து வருந்தி தற்கொலையோ வேறு எதாவது தவறான முடிவோ எடுக்காமல் போரிலிருந்து உயிருடன் திரும்பிய கணவருடன் தான் அவமானப்பட்ட இடத்துக்கே துணிவுடன் வாழ்ந்து காட்ட வருகிறாள் .துணிவு மிகுந்த மெலினாவின் வருகை அவளை அவமானத்திற்கு உள்ளாக்கியவர்களை திகைக்க வைக்கிறது .அதுமட்டுமில்லாமல் அவள் இழந்த மரியாதையை மீட்டு தருகிறது .ஆனால் மெலினா தன்னைப் பற்றி அறியாமல் அவமானப்படுத்தியவர்களை ஒரு புன்னகையின் மூலம் மன்னித்துவிடுகிறாள் .

இந்தப் படத்தைப் பார்த்து முடித்த பின் தனியாக இருக்கும்  பெண்களின் கடினமான நிலையை புரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் .மெலினாவின் துணிச்சல் நம்மையும் பற்றிக்கொள்ளும். இத்தாலி மொழியில் வெளியான இப்படத்தை இயக்கியவர் சினிமா பாரடைசோ என்ற உலகப் புகழ்பெற்ற படத்தை இயக்கிய .குயிஸ்பி தர்னத்தோர் Giuseppe tornatore .மெலினாவாக நடித்தவர் மோனிகா பெல்லுச்சி .

-சக்திவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!