வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்-4;மரணத்தைவிட வலி மிகுந்தது பாலியல் பழிச்சொல்! | World Classic Cinemas - 4

வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (11/08/2015)

கடைசி தொடர்பு:19:02 (11/08/2015)

வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்-4;மரணத்தைவிட வலி மிகுந்தது பாலியல் பழிச்சொல்!

நவீன வாழ்க்கை முறை மாற்றத்தாலும்,பெற்றோர்களின் சரியான கவனிப்பின்மையினாலும் குழந்தைகளின் மனதுக்குள் உருவாகின்ற சிக்கல்களையும், ஒரு குழந்தை எதேச்சையாக சொன்ன பொய் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப்  புரட்டிப் போடுகிறது  என்பதையும்  விரிவாக அலசுகிறது   தாமஸ் வின்டர்பெர்க்  இயக்கிய   தி ஹன்ட்  திரைப்படம்.

படத்தின் கதை எளிமையானது.டென்மார்க்கின் இயற்கை எழிலை தன்வசம் வளைத்துப் போட்டிருக்கும் ஏரிகளும்,செடி கொடிகளும் வண்ணமயமான மலர்களும் நிரம்பி வழியும்  ஒரு கிராமம். அங்கு இருக்கும்  நர்சரி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்  லுகாஸ் என்ற வெள்ளந்தியான மனிதன் . அவருக்கு கிறிஸ்டன் என்ற மனைவியும், தோளுக்கு மேல் வளர்ந்த மார்கஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.மனைவியைப்  பிரிந்த பின்  லுகாஸ் தனியாக வாழ்ந்து வருகிறார்.

நர்சரி பள்ளியில் படிக்கும்  குழந்தைகளுடன்  மிகுந்த நேசத்துடனும் ,அக்கறையுடனும் பழகி வரும் அவருக்கு  ஆறுதலாக இருப்பது அருகில் இருக்கும் நண்பர்களும்,பள்ளியில் படிக்கும்  குழந்தைகளும் ,அங்கே வேலை செய்யும் ஒரு பெண் தோழியும் தான்.

லுகாசின்  நெருங்கிய நண்பன் .தியோவின் மகள் கிளாரா கூட  அந்த நர்சரி பள்ளியில் தான் படித்து வருகிறாள். கிளாராவிற்கு பெற்றோர்களை விட லுகாசிடம் ஒரு நண்பனைப் போன்ற நல்ல உறவு இருக்கிறது. ஒருநாள்  கிளாரா வீட்டில் இருக்கும் போது அவளின் அண்ணனும் , அவனின் நண்பனும்  ஐ பேடில் ஓடிக் கொண்டிருக்கும்  ஆபாசப் படத்தை  கிளாராவிடம் விளையாட்டாகக் காட்டிவிடுகிறார்கள். அந்த ஆபாசப் படத்தில் ஒரு ஆண் உறுப்பு  விறைத்து காணப்படுகிறது.அதை கம்பி என்று அண்ணனின் நண்பன் கிளாராவிடம் சொல்கிறான்.

அடுத்த நாள் கிளாரா  பள்ளி விட்ட பிறகும் வீட்டிற்குப் போகாமல் பள்ளியிலே இருந்து விடுகிறாள். பள்ளியின் முதல்வர் தனியாக உட்கார்ந்து இருக்கும் கிளாராவிடம் பேச்சுக் கொடுக்கிறார்   கிளாரா சம்பந்தமில்லாமல் லுகாஸ் முட்டாள், அசிங்கமானவன் ,அவனை நான் வெறுக்கிறேன் அவனுக்கு ஆண் உறுப்பு  இருக்கிறது என்று முதல்வரிடம் எதை எதையோ சொல்கிறாள்.

முதல்வரும் ஆண்களுக்கு இருப்பதுதானே என்று கிளாராவிடம் சொல்கிறார்  .ஆனால் கிளாரா லுகாசின் ஆண் உறுப்பு  கம்பியை போல நீட்டிகிட்டு இருந்தது என்றும், அவன் தனக்கு ஒரு பரிசு கொடுத்ததாக ஒரு இதய வடிவத்தையும் காட்டுகிறாள் ,அது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் சொல்கிறாள்,முதல்வர் அதிர்ச்சி அடைகிறார் .

கிளாராவிடம்  விசாரணை நடத்துகின்றனர் ,     கிளாரா சொல்வதெல்லாம்  உண்மை என்று எல்லோரும் நம்ப ஆரம்பிக்கிறார்கள் . பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது . லுகாஸ் மீது கிளாராவிடம் பாலியில் ரீதியாக தவறாக நடந்து கொண்டவன் என்ற பழிச்சொல் விழுகிறது.

நெருங்கிய நண்பன் தியோ உட்பட எல்லோரும் லுகாசை   வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அவரின்  நாய் அடித்து கொல்லப்படுகிறது .வீட்டின் ஜன்னல் கற்களால் உடைக்கப்படுகிறது .அவரின் மகனும் விரட்டியடிக்கப்படுகிறான் .கடைகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.மீறி நுழைந்தால் அடித்து  நொறுக்கப்படுகிறார் .அவரின் வாழ்க்கை அவமதிப்புகளாலும்,நிராகரிப்புகளாலும் நிரம்பி வழிகிறது

காலம் ஓடுகிறது.. நண்பர்களும்  ,சுற்றியிருப்பவர்களும்  அவரை  விரட்டி அடித்தவர்களும், நாயைக் கொன்றவர்களும் மெல்ல மெல்ல லுகாஸ் எந்தத் தவறும் செய்யாதவர் என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள் .. வருந்துகிறார்கள்,அழுகிறார்கள் லுகாசின் வாழ்க்கை இயல்புக்கு திரும்புகிறது. இறுதியில் லுகாசின் மகனுக்கு வேட்டையாடுவதற்கான உரிமம் கிடைத்த பிறகு நண்பர்களும் ,லுகாசும்,அவரின் மகனும் காட்டிற்குள் வேட்டையாடப் போவார்கள்.

எங்கிருந்தோ வருகின்ற துப்பாக்கிக் குண்டு லூகாஸின் தோள் பட்டையை உரசிக் கொண்டு செல்லும். லுகாசிற்கு நேரெதிரே நின்று கொண்டு ஒருவன் லுகாசை சுடுவதற்கு துப்பாக்கியை தயார் செய்வது போன்ற ஒரு தோற்றம் மாயமாகத் தோன்றும்.

அப்போது லூகாஸின் கண்களில் இருந்து வெளிப்படுகிற பார்வை ஒருவன் மீது விழுந்த பழிச்சொல்லை எந்த காலத்திலும் அழிக்க முடியாது என்பதையும், லூகாஸின்  மனதிற்குள் அனாமதேயமாக ஓடுகின்ற பயத்தையும் ,இனி அந்த ஊரில் அவருக்காக காத்திருக்கிற நாட்களையும் ,தவறே செய்யாமல் நண்பர்களால் ,மக்களால் தண்டிக்கப்பட்டதால் தன் மனதிற்குள் உருவான சிதைவையும் ,சமூகமும் ,நண்பர்களும் மறந்துவிட்டாலும் தன்னால் ஒருபோதும் அந்த பழிச்சொல்லை   மறக்க முடியவில்லை என்பதையும் பிரதிபலிப்பதாக  பல பரிமாணங்களுடன் அமைந்த அந்தக்  காட்சியுடன் படம் நிறைவடைகிறது

கிளாராவின் வழியாக இன்றைய நவீன சூழலில் குழந்தைகள் சரியாக  கவனிக்கப்படுவதில்லை. பெரியவர்களை போல அவர்களும் உளச்சிக்கல்களுக்குள் மாட்டி தவிக்கிறார்கள்  என்பதையும், ஆபாசப் படங்கள் கிளாராவின் அண்ணன் போன்ற சிறுவர்கள் கையில் கிடைக்கும் அளவிற்கு அரசு  பொய்த்துப் போயிருக்கிறது என்பதையும் , குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற பொதுப்புத்தியை தீவிர    விசாரணைக்கு உட்படுத்தி அதைப் பார்வையாளன் உணர்ந்து கொள்ளும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்..

பலசரக்குக் கடையிலும் ,அன்பையும்,மன்னிப்பையும் போதிக்கும் தேவலாயத்திலும் சாதுவான லுகாசிற்குள் அதுவரைக்கும் மௌனமாக இருந்த இயலாமை ,ஆவேசத்துடன் வன்முறையாக வெடிப்பது மிகுந்த கவனததுக்குரியது.

கேன்ஸ் உள்பட பல விருதுகளைப் பெற்ற இப்படத்தில்   .மாறிப்போன மக்களின் வாழ்க்கையையும் ,நவீன சமூக குடும்பச் சூழலையும் ,மனித மனங்களுக்குள் ,குறிப்பாகக் குழந்தைகளின் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் அழகாகக் காட்சிப் படுத்திய இயக்குனரையும், லுகாஸாக ,கிளாராவாக நடித்தவர்களின் நடிப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

-சக்திவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close