தமிழ் சினிமா முன்னோடிகள் (4) : ஆர். நடராஜ முதலியார் | Tamil Cinema Celebrites Rewind - 4

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (12/08/2015)

கடைசி தொடர்பு:11:36 (12/08/2015)

தமிழ் சினிமா முன்னோடிகள் (4) : ஆர். நடராஜ முதலியார்

தென்னிந்தியாவின் முதல் சலனப்படத்தை தயாரித்த தமிழர்- 'தமிழ் சினிமாவின் தந்தை' நடராஜ முதலியார்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் சினிமா, மௌனப்பட உருவில் சென்னையில் ஜனனம் ஆனது. தென்னாட்டின் முதல் சலனப்படமான கீசக வதம்  1916 ஆம் ஆண்டு சென்னையில் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவின் முதல் சலனப்படத்தை தயாரித்தவர் வேலூரைச் சார்ந்த ஆர்.நடராஜ முதலியார். இச்சாதனையை நிகழ்த்திய முதலியாரே 'தென்னிந்திய சினிமாவின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.

கீசக வதம்

இந்தியாவின் முதல் முழு நீளக்கதைப் படமான புண்டாலிக் , 1912-ம் ஆண்டு ஆர்.ஜி.டோர்னி என்ற ஐரோப்பியரால் திரையிடப்பட்டது. இதுவே இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட துண்டு படமாகும். இதை தயாரித்தவர் வெளிநாட்டவர் என்பதால்,  இந்தியாவின் முதல் திரைப்படம் என்ற தகுதியை பெற இப்படம் தவறிவிட்டது. இந்தியாவின் முதல் சலனப்படமானஹரிச்சந்திரா 1913-ஆம் ஆண்டு, துண்டிராஜ் கோவிந்தபால்கே என்ற மராத்தியரால் தயாரிக்கப்பட்டு, மும்பை காரனேஷன் தியேட்டரில் வெளியிடப்பட்டது. 

இப்படத்தை வெளியிட்டதன் மூலம், தாதாசாகிப் பால்கே இந்திய திரைப்பட தந்தை என்று போற்றி புகழப்படுகிறார். இவர் தயாரித்த ஹரிச்சந்திரா என்ற சலனப்படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் 1914-ம் ஆண்டு திரையிடப்பட்டது. 

இப்படத்தை சென்னையில் மோட்டார் கார் வியாபாரம் செய்து வந்த இளைஞர் ஒருவர் சென்னை கெயிட்டி தியேட்டருக்கு சென்று பார்த்தார். விளைவு, தான் நடத்தி வந்த மோட்டார் கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்று, அதில் கிடைத்த வருவாயில் சலனப்படம் தயாரிக்க ஆர்வம் கொண்டார். அந்த இளைஞரின் பெயர் ஆர். நடராஜ முதலியார். 

ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து மிதிவண்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வந்தவர் நடராஜ முதலியார். பின்னர், தொழிலில் ஏற்றம் அடைந்தபின், கார்களை இறக்குமதி செய்யும் தொழிலில் இறங்கினார். 

தொழிலை கைவிட்டார், சினிமா எடுத்தார்!


கார் இறக்குமதி தொழிலில் வெற்றிகரமாக இயங்கிவந்தபோதுதான் ஹரிச்சந்திரா படம், அவருக்குள் சினிமா ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தனது மோட்டார் கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்றுவிட்டு, தீவிரமாக இறங்கினார்.  

சலனப்பட தொழில் நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகியிருந்த வேளையில், அதை முழுமையாக அறிந்துகொள்ள, அதில் தேர்ந்த நிபுணர் ஒருவரைத்தேடி அலைந்தார். இவருக்கு உதவியவர் அப்பொழுது சென்னையில் 'ஸ்டுட்பேக்கர்' என்ற மோட்டார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர். இந்த ஆங்கிலேயர், நடராஜ முதலியாரை பூனாவில் உள்ள 'ஸ்மித்' என்ற ஆங்கிலேயே புகைப்பட நிபுணரிடம் அனுப்பி வைத்தார். ஸ்மித், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பணியாற்றிய கர்சன் பிரபுவின் டெல்லி அலுவலகத்தில், சிறப்பு புகைப்படக் கலைஞராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 

இவர் கர்சன் பிரபுவின் டெல்லி ஆட்சி நிர்வாகத்தை துண்டுப் படமாக தயாரித்து புகழ் பெற்றார். எனவே ஸ்மித்திடம் சலனப்பட தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டி, 1915-ஆம் ஆண்டு பூனா நகருக்கு முதலியார் பயணம் மேற்கொண்டார்.

முதலியாரின் ஆர்வத்தை பாராட்டிய ஸ்மித், சினிமா ஒளிப்பதிவு நுணுக்கங்களை முதலியாருக்கு சொல்லி கொடுத்தார். முதல் நாள் பயிற்சியிலேயே, மூவி கேமராவை எப்படி கையால் கழற்றி சீராக இயக்குவது என்பது பற்றிய தொழில் நுட்பங்களை, முதலியாருக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார் ஸ்மித். பின்னர் தனது கேமிராவை முதலியர் கையில் கொடுத்து, துண்டு படம் ஒன்றை தயாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஸ்மித்தின் ஆலோசனையை ஏற்று, ஒரு துண்டு படத்தை முதலியார் பூனாவில் தயாரித்து, தன் குருவான ஸ்மித்திடம் ஒப்படைத்தார்.

தோல்வியில் முடிந்த முதல்முயற்சி 

ஸ்மித் வீட்டில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தின் போது அப்படம் திரையிடப்பட்டது. ஸ்மித்தும் அவரது மனைவியும், முதலியாருடன் அமர்ந்து அப்படத்தை பார்த்தனர். திரையிடப்பட்ட அப்படத்தில் தோன்றிய நபர்களின் நடையும், அசைவுகளும் ஒரே சீராக அமையாமல் விந்தையாகவும், கோமாளித்தனமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. படத்தை பார்த்த ஸ்மித் தம்பதியினர், கேலியாக சிரித்து மகிழ்ந்தனர். 

படம் சரியாக அமையாதது கண்டு மனம் தளர்ந்த முதலியாரை, ஸ்மித் தேற்றி உற்சாகப்படுத்தினார். சில மாதங்கள் பூனாவில் தங்கி பயிற்சியை தொடரும்படி கேட்டுக்கொண்டார். முதன்முறை ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியால், இந்த முறை கேமிராவை சரியாக இயக்குவதற்கான பயிற்சியை முதலியார் முழுமையாக கற்றறிந்தார்.

பூரண பயிற்சிக்கு பின், பூனாவிலிருந்து சென்னை திரும்பினார் நடராஜ முதலியார். சென்னை திரும்பிய அவர், தனது புதிய படப்பிடிப்பு நிலையத்தை சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் அமைந்த 'டவர் ஹவுஸ்' என்ற பங்களாவில் 1916-ஆம் ஆண்டு தொடங்கினார். தான் துவங்கிய ஸ்டுடியோவிற்கு 'இந்தியா பிலிம் கம்பெனி' என்று பெயர் வைத்தார். இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சினிமா ஸ்டுடியோ என்பது வரலாற்றுச் செய்தி. 

ஸ்டுடியோவை ஸ்தாபிதம் செய்த முதலியார், சென்னையில் மௌனப்படம் தயாரிக்க விரும்பினார். அதற்கு தேவைப்பட்ட கச்சா பிலிமை லண்டனுக்கு தந்தி கொடுத்து, இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு இறக்குமதி செய்தார். கச்சா பிலிமை இறக்குமதி செய்வதற்கு, பாம்பே கோட்டக் பிலிம் கம்பெனியில் வேலை பார்த்த 'கார்பென்டர்' என்ற ஆங்கிலேயே நண்பர் உதவி புரிந்தார். படப்பிடிப்பு கேமராவை, பூனாவிலேயே ஸ்மித்திடம் இருந்து விலைக்கு வாங்கியிருந்ததினால், கேமிராவை புதிதாக வாங்க வேண்டிய அவசியம் முதலியாருக்கு ஏற்படவில்லை.

சலனப் படமெடுக்கும் முயற்சியை, 1916- ஆம் ஆண்டு சென்னையில் முதலியார் தொடங்கினார். படத்தில் நடிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க, சுகுனவிலாச நாடகச் சபையில் அப்போது ஸ்திரிபார்ட்டாக நடித்து வந்த ரங்கவடிவேலு என்ற புகழ்பெற்ற நாடக நடிகரை அமர்த்திக்கொண்டார். தன்னால் எடுக்கப்பட்ட நெகடிவ் பிலிம் ரோலை டெவலப் செய்து கொள்வதற்கு வசதியாக, பிலிம் லேபாரட்டரி ஒன்றை பெங்களூரில் நிர்மாணித்துக்கொண்டார்.

எம்.கந்தசாமி முதலியாரை நிராகரித்த நடராஜ முதலியார்

லேபாரட்டரியில் வேலை செய்வதற்காக நாராயணசாமி என்பவரை பணியில் அமர்த்தினார். படப்பிடிப்பின் போது தனக்கு உதவியாளராக பணியாற்ற ஜெகநாத ஆசாரி என்ற நபரையும் அமர்த்திக் கொண்டார். பிரபல நாடக ஆசிரியரான எம்.கந்தசாமி முதலியார், இவரது மௌனப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு அணுகி, நடராஜ முதலியார் அதை நிராகரித்ததாகவும் சொல்வார்கள்.

1916-ஆம் ஆண்டு கீசக வதம் என்ற மகாபாரதத்தின் கிளைக்க கதையை மௌனப் படமாக சென்னையில் தயாரித்தார். இதற்கு முன்பே 1913 களில் துவங்கி, தொடர்ந்து மராட்டியத்தில் தாதா சாஹேப் பால்கே மவுனப்படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தார். அந்த கணக்கின் அடிப்படையிலதான் சினிமா நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 

மராட்டியத்தை அடுத்து இந்தியாவில் இரண்டாவதாக மவுனப்படத்தை தயாரித்த மாநிலம் தமிழ்நாடு. அதை தயாரித்தவர் ஒரு தமிழர், அவர் நடராஜ முதலியார். நடராஜ முதலியாரால் எடுக்கப்பட்ட கீசக வதம் தான் தென்னிந்தியாவில் தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட முதல் சலனப்படம். கீசக வதம் படத்திற்கான படப்பிடிப்பு,  சென்னையில் 35 நாட்கள் நடைபெற்றன. இவரே தமிழ் சினிமாவின் முதல் இயக்குனர் என்றும் சொல்லலாம். 6000 அடி நீளத்தில், 35,000 ரூபாய் செலவில் கீசக வதம் 1916-ம் ஆண்டில் வெளியானது. 

அடுத்தடுத்து தனது தயாரிப்பில் 6 படங்களை தயாரித்தார் நடராஜ முதலியார். பின் சில காரணங்களால் திரைத்துறையின் மீது கசப்பு கொண்டு திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

நடராஜா முதலியார் 1917ல் எடுத்த தனது இரண்டாவது படமான திரௌபதி வச்திராபுராணம்படத்தில் மரின் ஹில் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை கதாநாயகியாய் நடிக்க வைத்தார். இவருக்கு லியோச்சனா என பெயர் சூட்டினார். 

மௌனப்படங்களில் அதிக சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயர் இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் முதல் வெளிப்புற படப்பிடிப்பையும் செய்தவரும் நடராஜா முதலியாரே.மயில்ராவணா, மார்க்கண்டேயா போன்ற படங்களுக்கு தனது சொந்த ஊரான வேலூர் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தினார். 

மவுனப்பட தயாரிப்புகளில் நடராஜ முதலியார் பரபரப்பாக இயங்கிவந்த நேரத்தில், 1923 ஆம் ஆண்டு அவரது சினிமா ஸ்டுடீயோ எதிர்பாராதவிதமாக தீக்கிரையானது. அதே ஆண்டு அவருடைய மகன் இறந்தார்.

மேலும் அவரது சினிமா தொழிலுக்கான ஆதரவு சில காரணங்களால் கிடைக்காததும், தொடர்ந்த நஷ்டம் காரணமாகவும் சினிமாத் தொழிலை விட்டு  விலகினார் நடராஜ முதலியார். தமிழ் படத் தயாரிப்புக்கு கால்கோள் செய்த நடராஜ முதலியார், தமிழ்சினிமா வரலாற்றில் தனிப்பெரும் சாதனைக்குரிய மனிதர்.

தனது சினிமா தொழில் அனுபவம் குறித்து 1970-ஆம் ஆண்டு பிரபல தமிழ் சினிமா பத்திரிகை ஒன்றுக்கு நடராஜ முதலியார் பேட்டி அளித்தார். அந்த பேட்டி...


உங்கள் சினிமா அனுபவம் பற்றி கூறுங்கள்...

அப்பொதெல்லாம் சினிமாவில் நடிக்க நடிக, நடிகைகள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது. நாடக நடிகர்கள் சினிமாவில் நடிக்க தகுதியற்றவர்களாக இருந்தார்கள். முக்கியமாக பெண்கள் படத்தில் நடிப்பதை அறவே வெறுத்தனர். இதனால் படம் எடுப்பதில் சில சங்கடங்கள் எனக்கு ஏற்பட்டது.

நீங்கள் எத்தனை படங்கள் தயாரித்தீர்கள்?

நான், திரௌபதி வஸ்திராபரணம், கீசக வதம், லவகுசா, ருக்மணி சத்யமாமா, மார்கண்டேயா, காளிங்கமர்தனம்ஆகிய படங்களை தயாரித்தேன். இப்படங்களின் வடநாட்டு வினியோக உரிமையை கல்கத்தாவில் இருந்த மதன் கம்பெனியாரும், பம்பாய் வினியோக உரிமையை ஆதிர்ஷ் ஈரானி என்பவரும் விலைக்கு வாங்கிக் கொண்டனர். இவ்வாறாக என்னுடைய படங்கள் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டிருக்கின்றன.

நீங்கள் எப்படி நடிகர்களை தேர்ந்தெடுத்தீர்கள்?

நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைத்தான் நான் என் திரைப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தேன். அந்த காலத்தில் பெண்கள் சினிமாவில் நடிக்க முன்வர வில்லை. விலைமாதர்கள் கூட சினிமாவில் நடிப்பதை ஓர் அவமதிப்பாக கருதினார்கள். அதனால் என்னுடைய திரௌபதி வஸ்திராபரணம் படத்தில் திரௌபதியாக நடிப்பதற்கு ஒரு ஆங்கிலேயே பெண்மணியைதான் நான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. 

அந்த ஆங்கிலேய பெண்மணிக்கு படக்காட்சிகளை ஆங்கிலத்தில் விளக்கி கூற வேண்டி, ரயில்வேயில் வேலை பார்த்து வந்த ரங்க சாமிப்பிள்ளை என்பவரை நான் நியமித்தேன். அவரே துச்சாதனனாக அப்படத்தில் வேடமேற்று நடித்தார்.

நீங்கள் விரும்பிய படங்கள்?

நான் எடுத்த படங்களிலேயே நான் விரும்பிய படம் திரௌபதி வஸ்திராபரணம். 

நீங்கள் ஏன் தொடர்ந்து படம் தயாரிக்கவில்லை?

அந்நிய நாட்டு துணி வகைகளை இந்தியாவில் விற்பனை செய்வதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பகிஷ்காரம் செய்வது பற்றி ஒரு துண்டு படம் எடுக்க விரும்பினேன். அத்துண்டுப்பட தயாரிப்பிற்கு நிதி உதவி வேண்டி பம்பாய் மில் அதிபர்களின் சங்கத்தில் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்த 'மோடி',  'மெலோனி' என்ற இரு தொழில் அதிபர்களை பம்பாயில் சந்தித்து, நிதி உதவி கேட்டேன். படம் எடுக்கும் என் திட்டத்தை புகழ்ந்த அவர்கள், பண உதவி செய்ய மறுத்துவிட்டார்கள். 

தொடர்ந்து ஸ்டோன்  என்ற ஐரோப்பியரிடமும் நிதி உதவி கேட்டேன். படம் எடுக்கும் முயற்சியை பாராட்டிய ஸ்டோன், நான் திட்டமிட்டிருந்த திரைப்படம் தன் தாய் நாட்டிற்கு விரோதமாக அமைய வாய்ப்பு உள்ளதாக கூறி, பண உதவி செய்ய மறுத்து விட்டார். அன்னிய துணி பகிஷ்கார போராட்டத்தை சினிமா மூலம் பிரசாரம் செய்ய நான் திட்டமிட்டேன். அதற்காக டாக்குமென்டரி ஒன்று தயாரிக்க முயற்சி செய்தேன். என் முயற்சிகள் தோல்வியுற்றன. அத்துடன் திரைப்படத் தொழிலிலிருந்து விலகிக்கொண்டேன்.

இன்றைய திரைப்படத் துறையைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

முதலில் திரைப்படங்கலில் கவர்ச்சியை காட்டி மக்களிடம் பணம் வசூலிப்பதை நான் அறவே வெறுக்கிறேன். அதனால் இளம் சந்ததிகளின் கலாச்சாரம், பண்பு இவை பறிபோகிறது என்பது என் எண்ணம்.

காதல் காட்சிகள் கூட கௌரவமான முறையிலே தூய்மையோட படமாக்கப்பட வேண்டும். நல்லவைகளையும், தீயவைகளையும் மக்களிடையே பரப்ப சினிமா ஒரு முக்கிய சாதனமாக பயன்படுகிறது. ஆகவே தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் மக்களின் பண்புள்ள எதிர்கால வாழ்க்கைக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடிய சாதனமாக இத்துறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேச துரோக செயல்களையும், இனக்கலவரங்களையும், சமூக விரோதிகளின் தீவைப்பு அட்டூழியங்களையும் அறவே ஒழித்து மக்களிடையே அமைதியை நிலைநாட்ட சினிமாவைத் தவிர வேறு சாதனம் கிடையாது என்பது என் அபிப்பிராயம்

இவ்வாறு பொறுப்புள்ள ஒரு சினிமா கலைஞராக அந்த பத்திரிக்கை பேட்டியில் மிளிர்ந்தார் நடராஜ முதலியார்.

தமிழ்சினிமா மரியாதை

நடராஜ முதலியாரின் திரைத்துறை சாதனையை கவுரவித்து, சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1970-ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில், 'தென்னிந்திய சினிமா டெக்னீஷியன்கள் சங்கம்' பாராட்டு விழா நடத்தியது. இவ்விழாவில் முதலியாரின் சாதனைகளை பாராட்டி வெள்ளி பதக்கம் பரிசளித்தனர்.

தென்னிந்தியாவின் முதல் சலனப்படத்தை தயாரித்த தமிழரான ஆர். நடராஜ முதலியார், சினிமா அதிபர் ஏ.வி.மெய்யப்பன் உட்பட 36 பேர்களுக்கு அன்றைய மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சர் ஒய்.பி.சவான் வெள்ளிப் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். இதை தவிர வேறு எந்த ஒரு பாராட்டு விழாவும் தமிழகத்தில் இவருக்காக சிறப்பாக நடத்தப்பட்டதாக தகவல்கள் இல்லை. வழக்கம்போல் தமிழக சினிமாத்துறை மறந்த தமிழர்களில் ஒருவரானார் நடராஜ முதலியார். 

1885 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த நடராஜ முதலியார், 87 வயது வரை வாழ்ந்தார். தனது இறுதிக் காலத்தை சென்னை அயனாவரத்திலிருந்த தன் மகள் ராதாபாய் வீட்டில் தங்கி அமைதியாக கழித்தார். தன் இறுதி காலத்தில் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து உருவாக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது ஆச்சர்யமான தகவல்.

மறைவு


தனது தள்ளாத வயதிலும் சினிமா பிரக்ஞையோடு வாழ்ந்த முதலியார், திடீரென சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்றார். சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி சென்னை பொது மருத்துவமனையிலேயே 1971- ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நள்ளிரவு 12.50 மணிக்கு மரணமடைந்தார்.

மறைந்த அந்த சினிமா மேதையின் உடலை, சென்னை அண்ணாநகர் இடுகாட்டில் தகனம் செய்தார்கள். ஆரவாரம், ஆர்ப்பாட்டம் ஏதுவுமின்றி நடந்தது அவரது இறுதி ஊர்வலம். சினிமாத்துறையினர் எவரும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. 

தமிழ் சினிமா வழக்கம்போல் தன் மூதாதையர் ஒருவரை புறக்கணித்து, தன்னை 'பெருமை'ப்படுத்திக் கொண்டது. இதில் வருத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள்தானே தவிர, நடராஜ முதலியார் அல்ல. 

தமிழ்சினிமா பிரபலங்கள் நடராஜ முதலியாரை மறந்தாலும், சினிமாவை நேசித்து இத்துறையில் கால்பதிக்க அணிவகுத்து வரும் இன்றைய இளைஞர்களின் வரிசையில் கடைசி இளைஞன் உள்ளவரை, முதலியாரின் புகழ் நிலைத்திருக்கும்.

                                                                                                  - பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்