வேர்ல்டு க்ளாஸ் சினிமாஸ்-5; தவறான வழியில் செல்லும் தாயால் திருடனாக மாறும் மகனின் சோகமே தி 400 ப்ளோஸ்! | World Classic Cinemas - 5

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (18/08/2015)

கடைசி தொடர்பு:13:37 (18/08/2015)

வேர்ல்டு க்ளாஸ் சினிமாஸ்-5; தவறான வழியில் செல்லும் தாயால் திருடனாக மாறும் மகனின் சோகமே தி 400 ப்ளோஸ்!

குழந்தைகளின் மனம் கள்ளங்கபடமற்றது என்று சொல்கிறோம் .ஆனால் அந்த கள்ளங்கபடமற்ற மனம் கூட சிதைந்து  விடுகிற  அளவிற்கு நம் சூழல் மாறியிருக்கிறது. விளையாட்டு கூட மனிதர்களுடன் இல்லாமல் வீடியோ கேம்ஸ் ,கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று இயந்திரங்களுடன் இயந்திரமாக மாறிவிட்டார்கள் நம் குழந்தைகள்.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால்  இயல்பாகக் கிடைக்க வேண்டிய அன்பும் ஆதரவும், கவனிப்பும் இல்லாமலே குழந்தைகள் வளர்கின்றனர்..

வியாபாரம் ஆகிவிட்ட  கல்வி மேலும் அவர்களின் மகிழ்ச்சியை ,குழந்தைப் பருவத்தைச் சீர்குலைப்பதாகத் தான் இருக்கிறது. பெற்றோர் தங்களின் குழந்தைகளைச் சரியாகக் கவனிக்காமல் ,பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் குழந்தைகளின் வாழ்க்கை என்னவாகும் என்பதை அற்புதமாகச் சித்தரிக்கிறது “தி 400 ப்ளோஸ்” திரைப்படம்.

படத்தின் கதையைப் பார்ப்போம்  . பதினான்கு வயதே நிரம்பிய அந்தோனியன் வீட்டுக்கு அருகிலிருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான்..

அவன் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்..அந்தோனியன் மீது அன்போ, கவனிப்போ அவர்கள்  காட்டுவதில்லை ...மேலும் அந்தோனியனின் அம்மாவிற்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருக்கிறது.

ஒருநாள் அந்தோனியன் தன் அம்மா வேறு ஒரு நபருடன் இருப்பதைப் பார்த்துவிடுகிறான் ..அதிலிருந்து அந்த அம்மாவிற்கு அந்தோனியனைக் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை ..அந்தோனியன் பள்ளி செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தன்னைப்  போலவே பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் வாடும் இன்னொரு சிறுவனுடன் சேர்ந்து சினிமா, விளையாட்டு என்று சுற்றித் திரிகிறான்.

அந்தோனியன் பள்ளி செல்லாமல் சுற்றித்திரிவது வீட்டுக்குத் தெரியவருகிறது. அதனால், அந்தோனியன் வீட்டுக்குச் செல்லாமல் தன் நண்பனுடன் வெளியிலேயே  தங்குகிறான் ..ஆரம்பத்தில் பசிக்காக பால் பாட்டிலை திருடுகிறான் .. நாளடைவில் சினிமா, ஊர் சுற்ற திருட ஆரம்பிக்கிறான்

இறுதியில் தன் தந்தையின் அலுவலகத்தில் உள்ள தட்டச்சு இயந்திரத்தைத் திருடுகிறான் .. பிறகு  பயந்து  போய் திருடிய தட்டச்சு இயந்திரத்தை இருந்த இடத்திலேயே திரும்ப  வைக்கப் போகும் போது  வசமாக மாட்டிக்கொள்கிறான்.

அவனுடைய இந்த நிலைக்குக் காரணமான பெற்றோரே, அவனை சிறுவர் சிறையில் அடைக்கச் சொல்கின்றனர் ... சிறையில் அடைபட்ட  அந்தோனியன் சரியான நேரம் பார்த்து  சிறையிலிருந்து   தப்பித்துச் செல்வதோடு படம் முடிகிறது .

அந்தோனியன் சிறையில் இருக்கும் போது மனநல மருத்துவரிடம் அவன் சொல்லும் வார்த்தைகள் நம்மைக்  கலங்க வைக்கிறது.அந்தோனியன்  " நான் எப்போதும் உண்மையே பேசுவேன் ,ஆனால் என் பெற்றோர் நான் பேசுவதைப் பொய் என்று தான் சொல்வார்கள் அதிலிருந்து நான் உண்மையே பேசுவதில்லை . எனக்கு என் பெற்றோரைப் பிடிக்காது அவர்கள் எப்போதுமே வீட்டில் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்" என்பான் .

குழந்தைகளின் மனச்சிதைவுக்கு முக்கியக் காரணமாகப் பெற்றோரே  பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பதையும் ,அவர்களின் பொறுப்பு இன்மையே முக்கியக் காரணமாகவும் இருக்கிறது என்பதையும்  மனதில் ஆணி அடிப்பதைப் போல சொல்கின்ற நிகழ்வு அது.

பள்ளியில்,  ஆசிரியர்   மாணவர்களிடம்  தங்களைப் பாதித்த நிகழ்வை  ஒரு கட்டுரையாக எழுதச் சொல்லுவார் .. அந்தோனியன் பால் சாக்கின் கட்டுரை ஒன்றை எழுதித் தருவான் , (பால் சாக் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பிரஞ்ச் எழுத்தாளர்) ஆசிரியர் படித்த உடனே இது பால் சாக்கின் கட்டுரை என்று கண்டு பிடித்துவிடுவார்..

பிறகு  அந்தோனியனை தண்டிக்கவும் செய்வார்.. இந்தக்  காட்சி நம்மை  மிகவும் வியக்க வைக்கிறது  அந்தோனியன் வீட்டில் இருக்கும் போது பால்சாக்கின் நாவலைப் படித்துக் கொண்டு இருப்பான்..பால் சாக்கின்  படத்தை ஒரு கடவுள் படத்தைப் போல வைத்திருப்பான். அவரை அந்நாட்டில் வாழும் எல்லோரும் தெரிந்து வைத்து இருப்பது மட்டுமில்லாமல் அவரின் படைப்புகளை சிறுவன் முதற்கொண்டு எல்லோரும் படிப்பது கூட  ஆச்சர்யமாக இருக்கிறது ..

நண்பனாக வருபவனும் ஒருவகையில்  அந்தோனியனின்   நிலைக்குக்   காரணமாக இருக்கிறான் ... அந்தோனியனை சினிமாவிற்கும் மற்ற இடங்களுக்கும் அழைத்துச்செல்வது அந்த நண்பன் தான்..அவன் பெற்றோரும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர்கள் தான். 

செலவுக்குத்  தேவைப்படும் பணத்தை  தன் அம்மாவுக்குத் தெரியாமல்   அவன்  திருடுகிறான் .அதைப் பார்த்த அந்தோனியனும் திருட ஆரம்பிக்கிறான். இதன்மூலம், வாழ்க்கையில் நண்பர்களைத்  தேர்ந்து  எடுப்பது எவ்வளவு முக்கியமானது எனபதையும் இப்படம் உணர்த்துகிறது

1959 இல்  பிரஞ்ச் மொழியில் வெளியான  இப்படத்தை இயக்கியவர் பிரான்சிஸ் த்ரூபோ . தன்னுடைய குழந்தைப் பருவ அனுபவங்களைத் தான் த்ரூபோ "தி 400 ப்ளோஸ்" படமாக நமக்குத் தந்திருக்கிறார்.

இன்றையச் சூழலில் ஒவ்வொரு பெற்றோரும்   கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.

-சக்திவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்