Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் படம்-வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்-6;

அடெல் என்ற இளம் பெண்ணின் தனிமையை, அவளின் மென்மையான உணர்வுகளை, அவளின் காமம் சார்ந்த ஆசைகளை, அவளுக்கும் இன்னொரு பெண்ணிற்கும் இடையேயான காதலை, ஏமாற்றத்தை, பிரிவை ரத்தமும் சதையுமாக நம் முன் வைக்கிறது ப்ளூ இஸ் த வார்மஸ்ட் கலர் என்ற பிரெஞ்ச் திரைப்படம்.

படத்தின் கதையைப் பார்ப்போம் .பிரான்ஸ் தேசத்தின் ஓர் அழகிய நகரில் பெற்றோருடன் வசித்து வருகிறாள் பதினாறு வயதே ஆன அடெல்,  பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சீனியர் மாணவனுடன் காதல் ஏற்பட்டு அவனுடன் பாலுறவு வரை சென்று அந்தக்  காதலில் திருப்தியடையாமல் அவனைவிட்டு பிரிந்து தனிமையில் வாடுகிறாள் .தன்னுடன் படிக்கும் சக மாணவியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதை வெளிப்படுத்தும்போது நிராகரிப்புக்கு ஆளாகிறாள். அவளுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்ற ஒரே ஒரு நண்பன் மட்டும் இருக்கிறான். வீடு ,பள்ளி ,தனிமை என்று அடெலின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு நாள் நீல நிற தலை முடியை கொண்ட எம்மா என்ற பெண்ணை ஏதேச்சையாக சாலையில் பார்க்கிறாள். அந்த முதல் பார்வையிலேயே அடெலுக்கு எம்மாவின் மீது பெரிய ஈர்ப்பு உண்டாகிறது. இரவில் எம்மாவுடன் பாலுறவில் லயிப்பதைப் போல சுய இன்பம் காண்கிறாள்.

முன்பின் தெரியாத எம்மா வால் அடெலின் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகிறது. ஒரு லெஸ்பியன் பாரில் எம்மாவை மறுபடியும் சந்திக்கும் அடெல் அவளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்கிறாள். அவளின் கனவு,காதல், கட்டுக்கடங்காத காமத்தை எம்மா பூர்த்தி செய்கிறாள். ஆரம்பத்தில் காமத்தை மட்டுமே எம்மாவிடம் பகிர்ந்து கொண்ட அடெல் தன் வாழ்க்கையில் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத பல விசயங்களையும,அன்பையும் எம்மாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். எம்மாவிற்கும் அடெலுக்கும் இடையேயான உறவு தெரிய வர அடெலை லெஸ்பியன் என்று பள்ளியில் படிக்கும் சக மாணவிகள் அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எம்மாவுடனான உறவை அடெல் தொடர்கிறாள்.

காலங்கள் ஓடுகிறது .எம்மாவும் அடெலும் ஒரே வீட்டில் கணவன் மனைவியைப் போல வாழ்ந்துவருகிறார்கள். அடெல் தன் விருப்பமான நர்சரி பள்ளியின் ஆசிரியை ஆகிவிடுகிறாள். எம்மாவிற்கும் அடெலுக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்படும் விதமாக எம்மா தன்னுடைய பழைய காதலியை ஒரு விருந்தில் சந்திக்கிறாள். எம்மாவும் அவளின் பழைய காதலியும் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் அடெலின் மனதுக்குள் ஒரு வித பயம் பற்றிக்கொள்கிறது. முன்பு போல் எம்மா அடெலுடன்
அதிக நேரம் இருப்பதில்லை. மீண்டும் தனிமைப்படுத்தப்படும் அடெல் தனிமையிலிருந்து விடுபட தன்னுடன் பணியாற்றும் ஒருவனை நாடி செல்கிறாள். இந்த விசயம் எம்மாவிற்கு தெரிய வர அடெலை விபச்சாரி என்று அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்திவிடுகிறாள்.

பள்ளியில் குழந்தைகளுக்கு  பாடம் சொல்லிக்கொடுத்தாலும் ,அவர்களுடன் சேர்ந்து விளையாடினாலும் எம்மாவின் மீதான ஏக்கம்,அவளை பிரிந்து வாழும்
தனிமைத்துயரம் அடெலை வாட்டி எடுக்கிறது. இனிமேல் எம்மாவுடன் சேரவேமுடியாது என்ற எதார்த்தத்தையும்  தனக்கென்று யாருமே இல்லாத தனிமையையும், தன் நிலையையும் புரிந்து கொள்கிறாள் அடெல்.

இனி வரும் காலத்தை ,வாழ்க்கையை.  எம்மா இல்லாத வெறுமையை எப்படி அடெல் எதிர்கொள்ளப் போகிறாள் என்ற மர்மத்தை சொல்லும் விதமாக  வெதுவெதுப்பான நீல நிற உடையணிந்த அடெல்  தன்னந்தனியாக சாலையில் நடந்து செல்வதுடன் படம் நிறைவடைகிறது. அடெல் எம்மாவிடம் மட்டும்தான் சுதந்திரமாக உணர்கிறாள் .மனம்விட்டு வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுகிறாள் .உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையடைகிறாள் .இந்த உலகில் அவள் வாழ்வதற்கு எம்மாவை தவிர யாருமே தேவையில்லை.

எம்மாவும் அடெலிடம் நல்லபடியாக ,அன்பாக நடந்து கொண்டாலும் இருவருக்கிடையில் ஏற்படுகின்ற பிரிவு ,எம்மா வேறு பெண்ணுடன் கொள்கின்ற உறவு, ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான காமம் சார்ந்த உறவின் நிலையற்ற தன்மையை ,சிக்கலை ஆழமாக  நமக்கு உணர்த்துகிறது வெளிப்படையான நீண்ட நேர லெஸ்பியன் காட்சிகளும் , செக்ஸ் சம்பந்தமான பெரும்பாலான உரையாடல்களும் பிரான்ஸ் தேசத்தின் கலை சுதந்திரத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது

ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையிலான லெஸ்பியன் உறவு காதலாக மலர்வதை பார்வையாளன்  உணர்ந்து  அங்கீகரிக்கும்படி படமாக்கியிருப்பது
சிறப்பானது  இந்தப் படத்தைப பார்க்கும் பெண் என்ன நினைக்கிறாள் என்பதே எனக்கு முக்கியம் என்று சொன்ன 30 வயதே ஆன ஜூலி மோரா என்ற பெண் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குனர் கேச்சிசேவுக்கும் எம்மா ,அடெலாக  வாழ்ந்து காட்டிய  இரு நடிகைகளுக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதன்மையான விருது பகிர்ந்து  கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-சக்திவேல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்