நல்வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் அகிராவின் கனவுகள்-வேர்ல்டு க்ளாஸ் சினிமாஸ்-7; | World Classic Cinemas - 7

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (01/09/2015)

கடைசி தொடர்பு:16:18 (01/09/2015)

நல்வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் அகிராவின் கனவுகள்-வேர்ல்டு க்ளாஸ் சினிமாஸ்-7;

ஒரு புள்ளியில் இணையும் எட்டு விதமான கனவுகளின் தொகுப்பு தான் ட்ரீம்ஸ் திரைப்படம்  அந்த எட்டுக் கனவுகளையும் பார்ப்போம்.

முதல் கனவு Sunshine Through The Rain

அழகான காலை வேளையில் வெயிலுடன் மழை பெய்துகொண்டிருக்கிறது. வீட்டின் வாசலில் வந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன் . அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் அவன் அம்மா வெயிலுடன் மழை பெய்வதால் நரிக்குத் திருமணம் நடக்குமென்றும் , அதனால் வெளியே எங்கேயும் போய் நரியின் கண்ணில் அகப்பட்டு அதன் கோபத்திற்கு ஆளாகிவிடாதே என்றும்  எச்சரிக்கிறாள் . அம்மாவின் பேச்சைக்கேட்காமல் நரியால்  நம்மை என்ன செய்துவிட முடியும் , ஒரு கை பார்த்துவிடலாம் என்ற தைரியத்தில் காட்டுக்குள் செல்கிறான். 

நரிக்குத் திருமணம் நடந்து தனது கூட்டத்துடன் காட்டுக்குள்  ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் ஓரத்தில் ஒளிந்திருந்து நரியின் திருமணக் கொண்டாட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் நரிகள் தன்னைப் பார்ப்பதை அச்சிறுவன் கவனித்து விடுகிறான். ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி  வரும் போது வாசலில் அம்மா கையில் கத்தியுடன் காத்திருக்கிறாள். நரியின் திருமணத்தை பார்த்ததால் அவை கோபத்துடன் உன்னை தேடி  வீட்டுக்கு வந்ததாகவும் , உன்னை நீயே குத்திக் கொள்ள கத்தியைக் கொடுத்துவிட்டு சென்றதாகவும் சொல்கிறாள்.

சிறுவன் பயந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் அழ ஆரம்பிக்கிறான்.நரியிடம் சென்று செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்குமாறு சிறுவனிடம் சொல்கிறாள் அம்மா  . நரிகளின் இருப்பிடத்தைத் தேடி வானவில்லிற்கு கீழ் அழகான அந்த மலர்த் தோட்டத்திற்குள் சிறுவன் செல்வதோடு முதல் கனவு முடிவடைகிறது.

இரண்டாம் கனவு  The Peach Orchard


தனது குடும்பத்துடன் பொம்மைத் திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். இத்திருவிழா பாரம்பரியமாக பீச் மரங்கள் பூத்துக்குலுங்கும்  வசந்தகாலத்தில் கொண்டாடப்படுகிறது.. கொண்டாட்டத்தின் போது ஒரு சிறுமி அங்கே வருகிறாள். அவள் அச்சிறுவனுக்கு மட்டுமே தெரிகிறாள். மற்றவர்களின் பார்வைக்கு அவள் அகப்படுவதில்லை.  அவள் அருகிலிருக்கும்  ஓர் அடர்ந்த காட்டிற்குள் ஓடுகிறாள்.

அவளைப் பின்தொடர்ந்து அச்சிறுவனும் அந்தக் காட்டிற்குள் செல்கிறான். அச்சிறுவனின்  வீட்டிலிருந்த பொம்மைகளைப் போன்ற தோற்றம் கொண்ட பீச் மரத்தின் ஆன்மாக்கள் அந்த காட்டுக்குள் அவனை பழிவாங்கக் காத்திருக்கின்றன. இந்தப் பகுதியில் இருந்த பீச் மரங்கள் அடியோடு அழிந்து போக உன்னுடைய குடும்பம் தான் காரணம்  என்றும் அதனால் உன்னை நாங்கள் தண்டிக்கப் போகிறோம் என்றும் அவை அச்சிறுவனிடன் சொல்கின்றன. இதைக் கேட்ட சிறுவன் அழுதுகொண்டே நான் எந்தத்தவறும் செய்யவில்லை என்றும் பீச் மரத்தின் மீது தனக்கிருக்கும் காதலையும் சொல்கிறான்.

சிறுவன் சொல்வதைக் கேட்டு நெகிழ்ந்து போன  அந்த ஆன்மாக்கள் அவனை மகிழ்விக்க நடனமாடுகின்றன. தாங்கள் வெட்டப்படுவதற்கு முன்பிருந்த அந்த அழகான மலர்கள் நிரம்பிய தோற்றத்தை சிறுவனுக்காகக் காண்பிக்கின்றன. சிறுவன்  நெகிழ்ந்து போகிறான்.  மீண்டும் வெட்டப்பட்ட நிலைக்கே பீச் மரங்கள் திரும்பும் உணர்ச்சி பெருமிதத்தோடு கனவு நிறைவடைகிறது.

மூன்றாம் கனவு  The Blizzard

கடுமையான பனிப்புயல் வீசுகிறது. ராணுவ வீரர்கள் சிலர் தங்கள் இருப்பிடத்திற்கு கடுமையான குளிரின் நடுவே சென்று கொண்டு இருக்கின்றனர். இரவு ஆகிவிடுகிறது எல்லோருமே குளிரில் விறைத்து இறந்துவிடுவோம் என்று நடுங்கிக் கொண்டிருக்கின்றனர், யாருக்கும் எதுவுமே ஆவதில்லை. எல்லோரும் உறங்கிய பின் பனிதேவதை அங்கே வந்து தளபதியை எழுப்புகிறாள்.

தளபதியிடம் பனிக்கட்டிகள் எல்லாம் தன்னிலையில் இல்லை எல்லாமும் இப்போது சூடாகி விட்டது  என்றும் .யாருமே குளிரில் இறப்பதில்லை என்றும்  சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுகிறாள். காலையில் வீரர்கள் எழுந்த போது தங்களின் இருப்பிடம் அருகில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். .மனிதன்  குளிர் பிரதேசத்தைக் கூட தன் அறிவியலின்  துணையால் பாலைவனமாக்கிவிட்டானே என்று புலம்பச்செய்கிற கனவிது.

நான்காம் கனவு  The Tunnel

இறந்து போன இராணுவ  வீரன் தன்  மரணத்திற்குக் காரணமான தளபதியிடம் நான் என் வீட்டிற்குச் செல்ல வேண்டும் அங்கே எனக்காக என்னோட அம்மாவும் அப்பாவும் காத்திருக்கிறார்கள் என்று புலம்புகிறான். தளபதி மிகுந்த குற்ற உணர்வில் அவனிடம் என்ன சொல்வது என்று அறியாமல் நீ இறந்துவிட்டாய் அங்கே போக முடியாது நீ இப்போது உயிரோடு இல்லை என்கிறான். தளபதியை குற்ற உணர்வு கடுமையாக வாட்டி எடுக்கிறது தன்னோட கட்டளை தான் அவனை சாகடித்து விட்டது. போர் எவ்வளவு முட்டாள் தனம் என்று தளபதி கதறுகிறான்.

இன்னும் ஏராளமான இறந்து போன ராணுவ வீரர்கள் தளபதிக்கு மரியாதை செலுத்த வருகிறார்கள் .தளபதி குற்ற உணர்வில் நிலைகுலைந்து போகிறார், பார்வையாளனுக்குள் போர் மீதான வெறுப்பை ஆழமாக பதிய வைப்பதோடு இக்கனவு முடிகிறது

ஐந்தாம் கனவு  Crows

இயற்கைத்  தாயின் தவப்புதல்வன் வான்காவை சந்திக்க இளைஞன் ஒருவன் வருகிறான். வான்காவின்  ஓவியங்களைப் பார்வையிடும் போது  அந்த இளைஞனுக்குள் நிகழ்கின்ற பேரனுபவம் தான் இக்கனவு. வார்த்தைகளால் விவரிக்க இயலாத அற்புதமான காட்சிக் கோர்வைகளாலும்  அரங்க அமைப்புகளாலும் தைக்கப் பட்டது இக்கனவு .

ஆறாம் கனவு  Mount Fuji in Red

அணு உலை  வெடித்துச் சிதறினால் அதைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு நிகழப்போகின்ற  அழிவுகளை ,விபரீதங்களை, கொடூரங்களை ,நோய்களை சித்தரிப்பதாக இருக்கிறது இக்கனவு .

ஏழாம் கனவு The Weeping Demon

மனித நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் தலையில் கொம்புடன் பிசாசைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒருவனை சந்திக்கிறான் ஓரிளைஞன். அப்பகுதியில் பூக்களும்  செடி கொடிகளும் கூட தங்களின் இயல்பை மீறி குரூரமாக ராட்சச தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை. ஒருவனை ஒருவன் அடித்து சாப்பிடுகிற ஒரு நிலை அங்கே நிலவுகிறது..

பிசாசைப் போன்ற தோற்றம் கொண்ட அவன் ஒரு காலத்தில் விவசாயியாக இருந்தவன், அணு சக்தியால் இப்பகுதி முற்றிலும் அழிந்துவிட்டதோடு அல்லாமல் அதன் பாதிப்பால் எங்களுக்குக் கொம்பும் முளைத்துவிட்டது , முகமும் உடலும் பிசாசைப் போல மாறிவிட்டது என்றும் , பசிக்கு சாப்பிட எதுவும் கிடைக்காமல் எங்கள் மக்கள் இன்னமும் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த இளைஞனிடம் சொல்கிறான் .அங்கே கேட்கிற அழுகை பார்வையாளனுக்குள் நாமும் இதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையை ஆழமாக விதைக்கிறது.

எட்டாவது கனவு  Village of the Watermills

மனிதன் இழந்து விட்ட ,  இழந்து கொண்டிருக்கிற இயற்கையோடு ,விலங்குகளோடு ,சக மனிதர்களோடு  ஒட்டு மொத்த பிரபஞ்சத்தோடு பிணைந்த அசலான  வாழ்க்கையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது   இந்தக்  கனவு.   அழகான ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் பெயர் கூட கிராமம் தான் என்கிறார் 103 வயதாகியும் இன்னும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த முதியவர். அங்கே இரவு இயற்கையாக இருள் நிறைந்து தான் காணப்படும் மின்சாரத்தை கொண்டு செயற்கையாக இரவை பகலாக்கும் வேலைஅங்கேயில்லை ..இருள் தானே இரவுக்கு அழகு என்று வாழும் மனிதர்கள் ..

தூய்மையான தண்ணீர் , தூய்மையான சூழல், தூய்மையான காற்று அதனால் அவர்களின் இதயம் கூட தூய்மையானது .. அந்த ஊருக்கு வந்த  வழிப்போக்கர் ஒருவர்  எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார் அந்த பெயர் அறியாத பயணிக்கு கூட நினைவிடம் ..இறந்து பல ஆண்டுகள் ஆனாலும் தினந்தோறும் அந்த நினைவிடத்திற்கு மலர்களை கொண்டு அஞ்சலி செலுத்துகிற குழந்தைகள், அனைவரின் முகங்களிலும் புத்துணர்வு, மகிழ்ச்சி, அன்பு அங்கே  வரும் நகரத்து இளைஞன் முதியவரை சந்திக்கிறான். அவரிடம் கிராமத்தைப் பற்றி கேட்டு, சுற்றியிருப்பதையெல்லாம் பார்த்து திகைத்துப் போகிறான்.

இருண்டு போன அவன் முகத்திலும் மகிழ்ச்சியும் புத்துணர்வும் மலர்கிறது. அப்போது அற்புதமான இசை கேட்கிறது .அந்த இசை எங்கிருந்து வருகிறது அது என்ன என்று அந்த இளைஞன் முதியவரிடம் கேட்கிறான்.அதற்கு அவர் ஒரு பெண் இறந்துவிட்டாள் அவளை அடக்கம் செய்ய போய்க்கொண்டிருக்கிறார்கள்.. அதுதான் கேட்கிறது என்கிறார்.  நானும் செல்ல வேண்டும் என்கிறார்.

அதற்கு அந்த இளைஞன் அந்த பெண்ணிற்கு வயதென்ன என்று கேட்கிறான் . முதியவர் யோசித்தவாறே 99 என்கிறார் அதோடு மட்டுமில்லாமல் சற்று வெட்கத்துடன் அவள் என்னோட முதல் காதலி என்கிறார். இதைக் கேட்டு மெலிதாக சிரிக்கும் அந்த இளைஞன் தானும் வரட்டுமா என்கிறான் . முதியவர் சரி என்கிறார். மரண ஊர்வலத்தை நெருங்குகிறார்கள். அங்கே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சந்தோசமாக நடனமாடி சென்று கொண்டிருக்கின்றனர். அங்கே மரணம் கூட பெரிய கொண்டாட்டம் தான். முதியவரும் நடனமாட ஆயத்தமாகிறார். அவர் இளைஞனிடம் குழந்தையோ இல்லை சிறுவயதிலோ யாராவது இறந்துவிட்டால் தான் இங்கே எல்லோரும் துக்கமாக இருப்போம்..

மற்றபடி வாழ்ந்து முடித்தவர்களை  மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம் என்கிறார். இறுதியில் அந்த இளைஞன் வழிப்போக்கரின் நினைவிடத்தில் மலர்களை வைப்பதோடு படமும், கனவு நிறைவடைகிறது, செயற்கையான தொழில் நுட்பங்களும்  அறிவியலும்  அதனால் உண்டான சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் மனிதனின் ஆன்மாவை அசுத்தமாக்கி இயற்கையான உணவுகளை விஷமாக்கி எதுவுமே  ஜீவிக்க வழியில்லாமல்   மனிதனை மனிதனே சாப்பிடும் நிலைக்கு தள்ளப்போகிறது என்ற எச்சரிக்கையையும். 

இந்த மாபெரும் அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயற்கையை அதன் அற்புதத்தை அதன் கருணையை நாடுவதைத் தவிர வேறு நாதி இல்லை என்பதையும் நமக்குள் ஆழமாகச் செலுத்துகிறது உலகப் புகழ்பெற்ற இயக்குனர் அகிரா குரோசவா இயக்கத்தில் 1990 இல் வெளிவந்த ட்ரீம்ஸ் என்ற இந்த  ஜப்பானியத்  திரைப்படம். ஒரு உண்மையான கலைஞன்  மனிதர்களின் அக புற நெருக்கடிகளை எதிர்காலத்தில், நிகழ்காலத்தில் அவர்களுக்காக காத்திருக்கும் ஆபத்துக்களை, அழிவுகளை தன்னுடைய சொந்த பிரச்சனையாக பார்க்கிறான் ..

அந்த பிரச்னையிலிருந்து ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை விடுவிக்க கலையை ஆயுதமாக ஏந்துகிறான். அவன் படைப்புகள் முழுவதும் தான் உலகிற்கு சொல்ல வந்த அறத்தையே சாரமாக கொண்டுள்ளன.அவன் கனவுகள் கூட இந்த உலகத்தின் மீதும் மனிதர்கள் மீதும் சிறு சிறு உயிர்கள் மீதும் செடி கொடிகள் மீதும் உள்ள அன்பிலிருந்தும் அக்கறையிலிருந்தும்  பிறக்கின்றன.

அவன் கனவுகள் எப்போதுமே சுயநலம்  சார்ந்தது அல்ல.இந்த பிரபஞ்சத்திற்கானது. அவனின் கலையும்  கூட கலைக்கோ, பணத்திற்கோ  ஆனது அல்ல. அதுவும் இந்த பிரபஞ்சத்திற்கானது இந்த மக்களுக்கானது. தன் கனவுகள்  படத்தின் வழியே இந்த பிரபஞ்சத்தின் மீதும் மக்களின் மீதும் தான் எவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்கிறார் அகிரா. உண்மையில் இக்கனவுகள் அகிரா கண்ட கனவுகளாகக் கூட இருக்கலாம்.

:-சக்திவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close