வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (02/09/2015)

கடைசி தொடர்பு:14:27 (02/09/2015)

தமிழ் சினிமா முன்னோடிகள்- 5: ஆரம்ப கால டைரக்டர் ஒய்.வி.ராவ்!

டத்தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர், படவிநியோகஸ்தர், சினிமா எடிட்டர் என்ற பன்முக ஆற்றல் படைத்த கலைஞர் ஒய்.வி.ராவ். வெற்றிகரமான டைரக்டராக விளங்கிய ஒய்.வி.ராவின் சினிமா சாதனைகளை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க முடியாது. 

1903- ஆண்டு ஆந்திர பிரதேச நெல்லூர் நகரில் பிறந்தவர் இவர். நெல்லூரிலிருந்த உயர்நிலைப் பள்ளியில் படித்து பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் வேலை தேடி சென்னை வந்தார். கலை ஆர்வம் கொண்டிருந்த அவர், மௌனப் படங்களை பார்த்து நாடக நடிப்பில் அக்கறை கொண்டு நடிப்பு கற்றுக் கொண்டார். 

1920-ஆம் ஆண்டு சென்னையில் மௌனப் படங்களை தயாரித்து வந்த ரகுபதி பிரகாஷ் என்ற படத் தயாரிப்பாளரை சந்தித்தார். மௌனப் படங்களை டைரக்ட் செய்துவந்த ரகுபதி பிரகாஷும், ஏ.நாராயணன் என்பவரும், ஒய்.வி. ராவை தங்களின் மௌனப் படங்களில் நடிக்க வைத்தார்கள். 

கருட கர்வ பங்கம் என்ற மௌனப் படத்தில் கதாநாயகனாக நடித்து, ராவ் தன் திரைப்பயணத்தை துவங்கினார். 

பின்னர் சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ராவ், இயக்குனராக பொறுப்பேற்று பாண்டவ நிர்வாணம்,பாண்டவ அஞ்ஞான வாசம், ஹரி மாயா போன்ற மௌனப் படங்களை சென்னையில் தயாரித்து வெளியிட்டார். ஹரி மாயா என்ற படத்தை தயாரித்தவர் கர்நாடக நாடக மேடையின் ஜாம்பவானாக திகழ்ந்த குப்பி வீரண்ணா. 

பின்னாளில் ராஜம் என்ற நடிகையை இவர் மணந்து கொண்டார். ராஜமும், ராவும் இணைந்து அக்கால மௌனப் படங்களில் நடித்தார்கள். இயக்கத்தில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கப்பெறாத ராவ், பம்பாய்க்கு பயணமானார். 

அங்கு "லட்சுமி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தில் நடிகராக சேர்ந்தார். இது நடந்தது 1925- ம் ஆண்டு. பம்பாயில் சௌத்ரி என்பவர் தயாரித்த ஊமைப் படமான மீரா வில் இவர் நடித்தார். பின்பு பம்பாய் ராயல் ஆர்ட்ஸ் என்ற ஸ்டுடியோ தயாரித்த பாவத்தின் கூலி என்ற ஊமைப் படத்திற்கு சீனரியோ (Scenerio) எழுதினார். 

அக்காலத்தில் புராணப் படங்களில் கிருஷ்ண பகவான் வேடம் ஏற்று நடிப்பதில் வெற்றிகரமாக விளங் கினார். பின்னர் "பாப்புலர் பிக்சர்ஸ்" என்ற பெயர் கொண்ட படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் மௌனப் படங்களை விநியோகம் செய்துவந்தார். 

பெங்களூரிலிருந்த "மைசூர் பிலிம் கம்பெனி" என்ற நிறுவனத்தில் நடிகராகவும், அவர்களது தயாரிப்பில் வெளியான சில படங்களின் டைரக்டராகவும் பணியாற்றினார். சதி சுலோசனாஎன்ற கன்னட  படத்தை டைரக்ட் செய்தார். சதி சுலோசனா படத்தில் ஒரு நடிகராகவும் ராவ் இடம்பெற்றார். இப்படம், "கோலாப்பூர் மகாராஷ்டிர சினிடோன்" என்ற ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. பின்னர் கோலாப்பூர் சாம்ராட் சினிடோன் நிறுவனத்திற்காக நாகானந்த்என்ற படத்தை டைரக்ட் செய்தார்.

1937- ம் ஆண்டு மதுரை ராயல் டாக்கிஸாரின் சிந்தாமணி என்ற திரைப்படம் ஒய்.வி.ராவால் டைரக்ட் செய்யப்பட்டது. எம்.கே.டி.பாகவதர் நடித்த இப்படம் சென்னையில் ஒரே தியேட்டரில் ஓராண்டுக்கு மேல் ஒடிய சாதனைப் படைத்தது திரையுலகை அறிந்த யாவருக்கும் தெரிந்த சேதி.

சிந்தாமணி படத்தை டைரக்ட் செய்த ஒய்.வி.ராவ், அப்படத்தில் நடித்தும் உள்ளார். மதுரை ராயல் டாக்கிஸாரின் மற்றொரு படம் பாமா பரிணயம் . இதை டைரக்ட் செய்த ஒய்.வி.ராவ் தொடர்ந்து பக்த மீரா, சுவர்ணலதா ஆகிய படங்களை டைரக்ட் செய்து வெளியிட்டார். சொந்தமாக "ஶ்ரீஜெகதீஷ்" பிலிம்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கி மள்ளி வெள்ளி, விசுவ மோகினி, சத்யபாமா, தாசில்தார் ஆகிய தெலுங்குப் படங்களை தயாரித்தார். 

லவங்கி என்ற தமிழ்ப்படத்தை தயாரித்த ராவ், அதனை இந்தியிலும் தயாரித்து வெளியிட்டார்.

இவர் டைரக்ட் செய்து வெற்றிகரமாக ஓடிய படங்கள்சாவித்திரி, மஞ்சரி, மானவதி, பாக்ய சக்கரம், கிருஷ்ண காருடி போன்றவையாகும். புகழ்பெற்ற நடிகர்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், அசுவத்தம்மா, டி.பி.ராஜலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சாந்தா ஆப்தே, காஞ்சன மாலா செருகளத்தூர் போன்றவர்கள் இவரது டைரக்‌ஷனில் படங்களில் நடித்து புகழ் பெற்றார்கள். 

தெலுங்கு, தமிழ், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கில ஆகிய பல மொழிகளை கற்ற ராவ், முற்போக்கு சிந்தனை கொண்டவர். திறமைமிக்க முன்னோடி கலைஞர். ஆரம்பக்கால தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர். 

தன் இளமை தாண்டிய வயதில், ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான ஶ்ரீவள்ளி படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை குமாரி ருக்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது திருமணமும் திருப்திகரமானதாக அமையவில்லை. 

குமாரி ருக்மணியுடனான திருமண வாழ்க்கை துயரத்தில் முடிந்தது. ஒய்.வி.ராவ் கடந்த 13.2.1973-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ம் தேதி உடல்நிலை குன்றி  மரணமடைந்தார்.

தனது உழைப்பால் பங்களிப்பு செய்து தமிழ் சினிமாவை வளர்த்த ஒய்.வி.ராவ், தமிழ் சினிமாவின் தொடக்கப் புள்ளி என்பதை எவரும் நிராகரிக்க இயலாது. 

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்