வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (02/09/2015)

கடைசி தொடர்பு:14:30 (02/09/2015)

தமிழ் சினிமா முன்னோடிகள்( 6): சிவகங்கை ஏ.நாராயணன்

   சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் படத்தின் தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன்

 மிழ்சினிமாவின் ஆளுமைகள் பற்றிய இந்த கட்டுரைகளில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளமுடியும். அறிவியல் வளர்ச்சியின் ஆரம்பநாளில் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா காமிரா, உலக மக்கள் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. மேலைநாடுகளில் மக்களின் இந்த ஆச்சர்யத்தை, வணிகநோக்கில் பயன்படுத்தி வெற்றிக்கண்டனர் பலர். 

ஆனால் தென்னிந்தியாவில் அதை கலையம்சமாக கருதி கையாண்டனர். மக்கள் மத்தியில், சினிமா வெற்றிகரமான வியாபாரம் என்று தெரிந்த பின்னரும், அதை கலைநோக்கில்தான் அணுகினர் நம்மவர்கள். இதுதான் இன்றைய சினிமாபெற்ற வெற்றிக்கு அடித்தளம்.

ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த அக்காலத்தில், ஒரு முழு நீள ஊமை படத்தை தயாரிப்பதற்கான அன்றைய செலவு, அதிகபட்சம் ரூ.5000 முதல் 6000/- வரை. ஆனால் திரைப்படங்களின் மீது காதல் கொண்டு திரிந்த ஒருவர்,  தான் விரும்பியபடி படம் தயாரிக்க அதிகட்சமாக செலவிட்டார். 

''ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலாஎன்ற 20 ரீல்கள் கொண்ட திரைப்படம், முழுக்க முழுக்க சென்னையில் தயாரிக்கப்பட்டது. இதற்காக அதன் தயாரிப்பாளர் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?... ரூ.75,000/- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊமைப் படங்கள் எதற்கும், இவ்வளவு தொகை செலவிடப்பட்டதாக புள்ளிவிவரம் இல்லை. அந்த தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன். முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்த பெருமைக்குரியவர்.

இன்சூரன்ஸ் ஏஜென்ட்

சிவகங்கையில் ஜனவரி 1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்த ஏ.நாராயணன், ஒரு பி.ஏ.பட்டதாரி. சினிமா தொழிலுக்கு வருவதற்கு முன்னர் பம்பாயில் ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக பணியாற்றியவர். ஆங்கிலப் படங்களின் விநியோகஸ்தர்களான கே.டி.சகோதரர்களோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. 1922-ஆம் ஆண்டு கல்கத்தாவில் 'க்வின்ஸ் சினிமா' என்ற டாக்கீஸை நடத்தினார். பின்னர் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் இவர் பாப்புலர் சினிமாவை (ஸ்டார் டாக்கீஸ்) நடத்தினார். 
 

அதே சமயத்தில் ஆங்கில மொழி துண்டுப் படங்களையும், டிராமாக்களையும் சென்னையில்,  தான் நடத்தி வந்த 'எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ், சென்னை' என்ற கம்பெனி மூலம் விநியோகம் செய்து வந்தார். 1927 ஆம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், 'ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சினிமா ஸ்டுடியோவை துவக்கினார். மூன்று ஆண்டுகளில் (1927-30) இவர் 20 க்கும் மேற்பட்ட ஊமைப் படங்களைத் தயாரித்ததாக தெரிகிறது. தென்னிந்திய பிலிம் தொழிலின் தந்தை என ஏ.நாராயணன் அழைப்படுகிறார். 

நாராயணன் தமது படங்களை, தம் சொந்தக் கம்பெனியான எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ் மூலமாகவும், அதன் பம்பாய், டில்லி, ரங்கூன், சிங்கப்பூர் கிளைகள் மூலமாகவும் விநியோகம் செய்தார். கல்கத்தாவில் அரோரா பிலிம் கார்ப்பரேஷன், வங்காள விநியோகத்தை மேற்கொண்டது. 1928 ல் ஹாலிவுட் சென்றார். 

இந்த நாளில்தான் மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா 20 ரீல்களில் சென்னையில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் சென்னை வெலிங்டன் தியேட்டரிலும், பம்பாய் சூப்பர் சினிமாவிலும், ரங்கூன் சினிமா டி-பாரிஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு 6 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த வெற்றி படமாகும். நேர்த்தியான இதன் தயாரிப்பிற்காக நாராயணன், பத்திரிக்கைகளால் அந்நாளில் பெரிதும் பாராட்டப்பட்டார். 

1929-ல் நாராயணன் கோவலனும் காற்சிலம்பும் என்ற ஒரு ஊமைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கான வெளிப்புறக் காட்சிகள் சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டன.

விவசாய உணர்வு என்ற 8000 அடி துண்டு படத்தை, இம்பீரியல் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டிற்காக இவர் தயாரித்தார். பிரசவமும குழந்தை நலனும், மேக நோய் (பால்வினை நோய்) ஆகிய டாக்குமென்ட்ரி படங்களை சென்னை பொது சுகாதார இலாகாவிற்காக தயாரித்து கொடுத்தார். 1929-ல் சென்னையில் செயல்பட்டுவந்த வர்மா எண்ணெய் கம்பெனிக் கிடங்கு தீப்பற்றி பலமணிநேரம் எரிந்தது. இதை டாகுமெண்டரி படமாக எடுத்து வெளியிட்டார் ஏ.நாராயணன்.

தென்னகத்தின் முதல் ஸ்டுடியோ சீனிவாஸ் சினிடோன்

1930களில் தென்னிந்தியர்கள் தங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க பம்பாய்க்கும், கோலாப்பூருக்கும், கல்கத்தாவுக்கும், நடிக நடிகையர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களோடும், பல மாதங்கள் தங்கி படத்தை முடித்துக் கொண்டு வரத் தேவையான மூட்டை முடிச்சுகளோடு போய்க் கொண்டிருந்தார்கள்.  இந்த நிலையைப் போக்க எண்ணிய நாராயணன், தென்னகத்தின் முதல்பேசும் பட ஸ்டுடியோவை 1934-ல் சென்னையில் உருவாக்கினார். சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் நிறுவப்பட்ட அந்த ஸ்டுடியோவின் பெயர் சவுண்ட் சிட்டி என்கிற சீனிவாஸ் சினிடோன். 

வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற அளவில் தன் சினிமா ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாத ஏ. நாராயணன், 'ஹிந்து' நாளேட்டில் சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டு, மக்கள் மத்தியில் மௌனப் படத்தின் கலை நுணுக்கங்களை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியவர். 

முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை வெளிநாட்டில் திரையிட்ட பெருமையும் ஏ.நாராயணனையே சாரும். அனார்கலி என்ற மௌனப் படத்தை எடுத்து சென்று அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் அமெரிக்கர்களுக்கு திரையிட்டு காட்டினார். 

1931-க்கு பின் பேசும் படங்கள் சென்னையில் வெளிவர ஆரம்பித்தன. இவரால் ஆரம்பிக்கப்பட்ட 'சவுண்ட் சிட்டி ஸ்டுடியோ' வில் சென்னையில் தயாரிக்கப்பட்ட தமிழின் முதல் பேசும் படமான சீனிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து "தூக்கு தூக்கி", "தாராசசாங்கம்", "ஞானசுந்தரி", "துளசிபிருந்தா", "விக்கிரமாதித்தன்", "ராஜாம்பாள்", "விசுவாமித்ரா", "சிப்பாய் மனைவி", "விப்ரநாராயணா", "கிருஷ்ண துலாபாரம்", "ராமானுஜர்", ஆகிய படங்களை தயாரித்தார். 

இவர் தயாரித்த சிப்பாய் மனைவி என்ற படத்தின் கதாநாயகன், ஓர் போர்வீரன். அவன் போருக்கு போய்விட்டுத் திரும்பி வருவதற்குள், அவனுடைய மனைவியை ஓர் உயர் அதிகாரி 'பெண்டாள' நினைப்பார். படத்தில் இடம் பெற்றிருந்த இக்காட்சிக்கு பெரும் எதிர்ப்பு தோன்றியது. அந்த நாளில் இப்படம் பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மட சாம்பிராணி என்ற பெயரில் ஒரு நகைச்சுவை துண்டுப் படம் இவரால் தயாரிக்கப்பட்டது. ஏ.நாராயணனின் சீனிவாஸ் சினிடோனின் படம் மட சாம்பிராணி அல்லது அச்சுபிச்சு இதில் ஒரு பாடல்; கிச்சு பாடுகிறான்...

மாமனாராத்தைப்போல்
ஆனந்தம் வேறில்லை!
மாட்டுக் கொட்டாய் சாணி 
வாசனைக்கீடில்லை!"
பலே! - 

அந்தக் காலத்தில் சராசரி இளைஞனின் மாமனார் வீட்டைப் பற்றிய கருத்து இது! 

இப்படத்தின் ராமுலு-சீனு என்ற இரண்டு நடிகர்கள் அச்சு, பிச்சு என்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தனர். நகரத்தின் நாகரீக மோகத்தில் சிக்கி, அச்சு பிச்சு இருவரும் தங்களின் பூணூல்களைக் கூட கழற்றி வீசி எறிந்துவிடுவார்கள். இறுதியில் நகரத்தில் கஷ்டப்பட்டு, மீண்டும் சொந்த ஊருக்குப் போய்விடுவார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை துண்டுபடமான  இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. 

நாராயணனுக்கு ஈடான திறமையும், சினிமா மீது பெரிதும் ஆர்வமும் கொண்டவரான அவரது துணைவியார் மீனாம்பாள், ஐந்து படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தவர் என்பது வரலாறு நினைவுபடுத்தாமல் விட்ட செய்தி. சினிமா படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்திய பெண்மணி மீனாம்பாள் நாராயணன்.

சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கிய ஏ.நாராயணனிடம் பயிற்சி பெற்று பின்னாளில் பிரபல டைரக்டர்களாக உருவெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஆர்.பிரகாஷ், ஜித்தன் பானர்ஜி, பி.சி.புல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவர் தயாரித்த மௌன படங்களின் விவரம் (இயக்குனர் பெயர் அடைப்புக்குறிக்குள்)


படத்தின் பெயர் (டைரக்டர்கள்)
1. தர்மபத்தினி (ஏ.நாராயணன்)
2. ஞானசௌந்தரி (ஏ.நாராயணன்)
3. கோவலன் (ஏ.நாராயணன்)
4. கருட கர்வபங்கம் (ஏ.நாராயணன்)
5. லங்கா தகனம் (ஆர்.பிரகாஷ்)
6. பாண்டவ நிர்வாகன் (ஒய்.வி.ராவ்)
7. கஜேந்திர மோட்சம் (ஆர்.பிரகாஷ்)
8. சாரங்கதாரா (ஒய்.வி.ராவ்)
9. காந்தாரி வதம் (ஆர்.பிரகாஷ்)
10. பிரமீளா அர்ஜூனன் (எஸ்.கோபாலன்)
11. போஜராஜன் (ஒய்.வி.ராவ்)
12. பாண்டவ அஞ்ஞான வாசம் (ஒய்.வி.ராவ்)
13. ராஜஸ்தான் ரோஜா (ஆர்.பிரகாஷ்)
14. நரநாராயணன் (ஆர்.பிரகாஷ்)
15. விசவாமித்ரா (ஜிதன் பானர்ஜி)
16. பவழராணி (ஆ.பிரகாஷ்)
17. மாயா மதுசூதனன் (ஜிதன் பானர்ஜி)
18. மிங்கிரேல்லியத்தாரகை அல்லது லைலா (ஆர்.பிரகாஷ்)
19. பீஷ்மர் பிரதிக்ஞை (ஆர்.பிரகாஷ்)
20. மச்சாவதாரம் (ஆர்.பிரகாஷ்)

சென்னையில் தயாரான முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்த பெருமைக்குரிய ஏ.நாராயணன், தமிழ் சினிமா உலகம் மறந்த ஒரு முன்னோடி. 1939 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள் எதிர்பாராதவிதமாக மறைந்தார்.

இவர் தயாரித்த எந்த மௌனப்படங்கள் இன்று காட்சிக்கு கிடைக்கவில்லை. இந்தியர்களின் அலட்சியத் தால் நாராயணனின் மௌனப்படங்களில் எதுவும் மிஞ்சவில்லை; அனைத்தும் அழிந்து போயின. தமிழ்சினிமாவின் சாபக் கேடுகளில் ஒன்று தங்கள் முன்னவர்களின் படைப்புகளை பாதுகாக்காதது. அவர்களின் புகழை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லாதது. 

ஹாலிவுட்டுக்கு போய் சினிமா "ரகசியங்களை அறிந்து கொண்டு வந்த சில இந்தியர்களில் இவரும் ஒருவர். இவர் தொடங்கிய 'சீனிவாஸ் ஸினிடோன்' என்ற ஸ்டுடியோவிற்கு 'சப்த நகரம்' என்று கூட பெயர் உண்டு. "தமிழ் சினிமா பிரபஞ்சத்தின் ஆதிகர்த்தா மிஸ்டர் (ஏ) நாராயணன் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்“ என ஏ.நாராயணனுக்கு புகழ் வார்த்தைகளால் அஞ்சலி செலுத்தியது ஆனந்த விகடன் - 1939 ஆம் வருட இதழ்.

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்