தமிழ் சினிமா முன்னோடிகள்(7): இயக்குனர் ஆர்.பிரகாஷ் | Tamil Cinema Celebrites Rewind - 7

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (02/09/2015)

கடைசி தொடர்பு:14:33 (02/09/2015)

தமிழ் சினிமா முன்னோடிகள்(7): இயக்குனர் ஆர்.பிரகாஷ்

சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர் ஆர். பிரகாஷ்

சென்னையின் முதல் சினிமா  தியேட்டரைத் தொடங்கிய ஆர்.வெங்கையாவின் மூத்த மகனான இவர், சிறந்த தியேட்டர் அதிபராக விளங்கினார். 

சினிமாடோகிராபி' கலையை ஒரு கல்விப்படிப்பாக லண்டனிலும், ஹாலிவுட்டிலும் கற்றவர். மேலை நாட்டிலிருந்து நாடு திரும்பியவுடன் தமது தந்தையாரின் விருப்பத்திற்கிணங்க 'ஸ்டார் ஆப் ஈஸ்ட் பிலிம்ஸ்' ஸ்டூடியோவை சென்னையில் ஆரம்பித்து, 'கஜேந்திர மோட்சம்', 'மச்சாவதாரம்', 'நந்தனார்', 'பீஷமர் பிரதிக்ஞை' ஆகிய மௌனப் படங்களைத் தயாரித்தார். 

பின்னாளில் சிறந்த டைரக்டர்களாக விளங்கிய சி.புல்லையா, ஒய்.வி.ராவ் ஆகியோர் இவரிடம்தான் இக்காலகட்டத்தில் வேலை செய்து வந்தனர். சினிமாக் கலையைப் பற்றிய ஆரம்ப பாடமே இவரிடம்தான் இவர்கள் கற்றதாக சொல்லலாம். 

தென்னிந்திய பிலிம் தொழிலின் தந்தை என அழைக்கப்பட்ட காலஞ்சென்ற ஏ.நாராயணன், 'பீஷ்மர் பிரதிக்ஞை' (ஆர்.பிரகாஷினால் தயாரிக்கப்பட்டது) திரைப்படத்தில் சிறிய பாகமேற்று நடித்ததாகக் கூறப்படுகிறது. 

1929- ல் இவர் ஒரு எழுத்தாளரானார். தண்டையார்பேட்டையில் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற ஸ்டூடியோவின் உரிமையாளரான ஏ.நாராயணனுடன் இணைந்து சினிமா தொழிலில் ஈடுபட்டார். 

ஆர். பிரகாஷ், நாராயணன் தயாரித்த படங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டும், சில படங்களை இயக்கவும் செய்தார். அதில் குறிப்பிடத்தக்க படங்கள்  'பாண்டவ நிர்வாகன்', 'விசுவாமித்ரா', 'மாயா மதுசூதன்', 'ராஜஸ்தான் ரோஜா', 'மங்கிரேலிய நட்சத்திரம்', 'போஜ ராஜன்' போன்ற படங்கள்.

பேசும் படங்கள் தயாரிக்கப்பட ஆரம்பித்தபின் 'சவுண்டு ஸிடி' நிறுவனத்தில் பணியாற்றினார். (.ஏ.நாராயணனால் அமைக்கப்பட்டது). பின் சீனிவாசா சினிடோன் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்ட 'இந்திர சபா'வை டைரக்ட் செய்தார். 1935-ஆம் ஆண்டில் சுந்தரம் சவுண்டு ஸ்டூடியோவுக்காக 'கிருஷ்ண நாரதி'யை டைரக்ட் செய்தார். 1936-ல் இவரது இயக்கத்தில் 'நளாயினி' வெளிவந்தது.  

1937-ஆம் ஆண்டு ஏ.எம்.கம்பெனிக்காக சீனிவாசா மூவிடோனில் தயாரிக்கப்பட்ட 'சிப்பாயின் மனைவி' என்ற படத்தையும், ஜூபிடரின் 'அநாதைப் பெண்' என்ற படத்தையும் டைரக்ட் செய்தார். இந்தப்படத்தில் பியு சின்னப்பாவுடன் இணைந்து எம்.கே ராதா நடித்திருந்தார். 

1938-ஆம் ஆண்டு ராஜகோபால் டாக்கீஸாருக்காக 'கிருஷ்ணன் தூது' திரைப்படத்தினை இயக்கினார். 

இப்படத்தின் மூலம்தான் பிரபல தெலுங்கு நடிகையான கண்ணாம்பா தமிழ்த்திரையுலகிற்குள் நுழைந்தார். 

இதே ஆண்டில் 'பாரிஸ்டர் பார்வதீஸம்' என்ற தெலுங்குப் படத்தை மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷனுக் காகத் தயாரித்தார். 1939 ஆம் ஆண்டு பவானி புரொடக்‌ஷன்ஸ் 'சண்டிகா' (தெலுங்கு)வை டைரக்ட் செய்தார். 

தமது சொந்த கம்பெனி மூலம் 'தாரா சசாங்கம்' (தெலுங்கு) படத்தைத் தயாரித்தார். பிறகு 'மாயபில்லா' படத்தைத் தயாரித்தார். 

1956-ஆம் ஆண்டுத் தமிழ்ப் படமான 'மூன்று பெண்கள் படத்தை டைரக்ட் செய்தத்தோடு, முனாஸ் தயாரித்த 'தேவ சுந்தரி' படத்தின் தெலுங்குப் பதிப்பை டைரக்ட் செய்யப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தப் பட தயாராப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரகாஷ், 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். 

தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்த ஜாம்பவான் என அழைக்கப்பட்ட டைரக்டர் ஆர்.பிரகாஷ், பல டாகுமெண்டரி படங்களை சென்னையில் தயாரித்தார். சென்னையில் மூன்று தியேட்டர்களுக்கு உரிமையாளராக இருந்த பிரகாஷ், தான் தயாரித்த படங்களை இவற்றில் திரையிட்டார்.

'வெலிங்டன்' பாலத் திறப்பு விழாவை ஒரு டாக்குமெண்டரியாக தயாரித்து இவர் வெளியிட்டார். பிறகு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 'காலரா நோயை  தடுப்பது எப்படி?' என்ற படத்தை எடுத்து வெளியிட்டார்.

டைரக்டர் ஆர்.பிரகாஷ் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் சென்னையில் தொடங்கிய 'தி ஸ்டார் ஆஃப் ஈஸ்ட் கம்பெனி' சில ஆண்டுகளிலேயே கடனில் மூழ்கி அழிந்தது. இவர் கம்பெனியில் வேலை பார்த்தவர்களில் சிலர் செய்த நம்பிக்கைத் துரோகம், அதீதக்கடன் போன்ற விஷயங்கள் இவரின் சினிமாக் கம்பெனியின் மூடுவிழாவிற்கு காரணமானது.

அரசாங்கம் இவரது சினிமா ஸ்டுடியோவை எடுத்துக் கொண்டது. எனினும் அரசாங்கத்திடமிருந்து சினிமா காமிராவை வாடகைக்கு எடுத்து, அக்காலத்தில் தளரா முயற்சியுடன் துண்டுப் படங்கள் எடுத்தார் டைரக்டர் ஆர்.பிரகாஷ்.

தமிழ்சினிமா உலகம் நன்றியோடு நினைவு கூறப்படவேண்டியவர்களில் தமிழ்சினிமா முன்னோடியான ஆர்.பிரகாஷ் முக்கியமானவர்!

                                                                                                              - பேரா. வா.பாலகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close