வயது பேதமின்றி பேரின்பத்தில் திளைக்கும் மனிதர்கள் - வேர்ல்டு க்ளாஸ் சினிமாஸ்-8; | World Class Cinemas - 9; The Perfume

வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (19/09/2015)

கடைசி தொடர்பு:16:16 (19/09/2015)

வயது பேதமின்றி பேரின்பத்தில் திளைக்கும் மனிதர்கள் - வேர்ல்டு க்ளாஸ் சினிமாஸ்-8;

திரைப்படங்கள் பார்வையாளர்களை இந்த உலகிலிருந்து இன்னொரு உலகிற்கு அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்த வேண்டும். குறிப்பாக நம் தனிமையிலிருந்தும்,வாழ்க்கை தருகிற வெறுமையிலிருந்தும் விடுதலை அடையச் செய்து  கதையுடன் நம்மை ஒன்றிணைக்க வேண்டும், இந்த மாதிரி நம்மை மறந்து பார்க்கிற படங்கள் சிலவற்றில் முதன்மையானது  பெர்ஃப்யூம் : தி ஸ்டோரி ஆஃப் த மர்டரர்.

துர்நாற்றமும் ,சாக்கடையும் சகதியும் நிறைந்த இடத்தில் பிறந்த ஒருவன் ,தன் உடலில் ஒரு துளி கூட நறுமணமே இல்லாததை உணர்ந்த ஒருவன் பேரின்பத்தை தருகிற சொர்க்கத்தைப் போன்ற ஒரு இடத்தை பூமிக்கு கொண்டுவருகிற வாசனை திரவியத்தைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளும் பயணமும், பரிசோதனைகளும் ,தன் இலட்சியத்திற்காக   அவன் கொலையாளியாக மாற நேரிடுவதும் தான் பெர்ஃப்யூம்  திரைப்படத்தின் கதை.

இறைச்சியின் ,சாக்கடையின் துர்நாற்றம் நிறைந்த இடத்தில் இயற்கையிலேயே தன்னைச்  சுற்றியிருக்கும் எல்லாப் பொருட்களின் வாசனையையும் நுகர்கின்ற அசாத்தியமான திறனுடன் பிறக்கிறான் கிரானில்.

பிறந்த உடனே தாயை இழக்கும் அவன் அனாதை விடுதியில் வளர்கிறான்.அனாதை விடுதியிலிருந்து  தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு விற்கப்படுகிறான்.அவன் எங்கு சென்றாலும் சுற்றியிருக்கும் வாசனையை நுகர்வதைத் தவிர வேறு எதையும் அவன் செய்வதில்லை.

எங்கிருந்தோ வந்த வாசனை  அவனை மயக்கத்தில் ஆழ்த்த  அந்த வாசனை வந்த திசையை நோக்கிச்  செல்கிறான். பழங்களை விற்பனை செய்யும் அழகான பெண்ணிடமிருந்து அந்த வாசனை வருகிறது என்பதை உணர்ந்து அவளைப் பின் தொடர்ந்து சென்று எதிர்பாராத விதமாக அவளைக் கொன்று விடுகிறான்.

பிறகு வாசனை திரவியம் விற்கும் ஒரு கடை முதலாளியைச்  சந்தித்து தன்னுடைய திறமையைக் காட்டி அந்த ஊரிலே அதிக வாசனையைத் தருகின்ற  வாசனை திரவியத்தை உருவாக்குகிறான். அந்த முதலாளியிடம் வாசனை திரவியத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறான்.

சொர்க்கத்தை பூமிக்குக் கொண்டு வருகிற ஒரு வாசனை திரவியத்தைக் கண்டுபிடிக்க வேறு ஊருக்குச் செல்கிறான். கன்னிப் பெண்களின் உடலில் இருந்து பெறப்படுகின்ற வாசனையைக் கொண்டுதான் உலகிலேயே சிறந்த வாசனைத் திரவியத்தை உருவாக்க முடியும் என்பதை அறிந்த அவன் தன் இலட்சியத்திற்காக பத்துக்கும் மேற்பட்ட அழகான கன்னிப் பெண்களைக் கொலை செய்து அதிலிருந்து பெறப்பட்ட வாசனையைக் கொண்டு உலகிலேயே சிறந்த வாசனை திரவியத்தைக் கண்டுபிடிக்கிறான்.

எவ்வளவு தான் நுணுக்கமாக  யாருக்கும் தெரியாமல் பெண்களைக்  கொலை செய்த போதிலும் இறுதியில் காவல் துறையிடம் அகப்பட்டு  மரண தண்டனை பெறுகிறான். மக்கள் அவனைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள்.

மரண தண்டனையை நிறைவேற்றப் போகும் போது, தான் கண்டுபிடித்த வாசனை திரவியத்தைத்  தன் மீது தெளித்துக் கொண்டு வருகிறான். அந்த வாசனையை நுகர்கிற மக்கள் அவனை அப்பாவி, தேவதை என்று அழைக்கிறார்கள். தன் மகளைப் பறிகொடுத்த தந்தை அவனை மகன் என்று அழைக்கிறார். மரண தண்டனையை நிறைவேற்ற வந்தவன் மண்டியிடுகிறான்.

ஒரு துணியில் அந்த வாசனை திரவியத்தைத் தெளித்து மக்கள் மத்தியில் வீசுகிறான் . ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ஈகோவை மறந்து   ஆண், பெண் வயது பேதமின்றி  நிர்வாணமாகி ஒருவருடன் ஒருவர்  பேரின்பத்தில் திளைக்கிறார்கள்.

பெண்களைக்  கொலை செய்தவன் என்று யாரோ ஒருவன் தூக்கிலிடப்படுகிறான். கிரானில் தான் பிறந்த இடத்திற்குச் செல்கிறான் . அந்த வாசனை திரவியத்தைத் தலையில் ஊற்றிக்கொள்கிறான். சுற்றியிருக்கும் மக்கள் அவனை தேவதை என்று அழைத்து அவனை இறுக்கி தின்று விடுகின்றனர். இறுதியில் அந்த வாசனை திரவியம் அடைக்கப்பட்ட குடுவையிலிருந்த கடைசி துளி மண்ணில் விழுவதோடு படம் நிறைவடைகின்றது.

கிரானில் தூக்கு மேடையில் நின்று கொண்டு, தான் முதன்முதலாகக் கொலை செய்த பெண்ணை நினைத்துக் கண்ணீர் விடுவது உணர்வுப்பூர்வமான ஒன்று. அந்தக் கண்ணீரில்,  கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் யாரையும் கொல்லவில்லை என்பது வெளிப்படும்.

கிரானிலாக நடித்தவரின் நடிப்பும் , படத்தில் இசையும் உண்மையிலே சிறப்பானது. தாயிலிருந்து ,கடை முதலாளி வரை கிரானில் யாரையெல்லாம் சார்ந்திருந்தானோ அவர்கள் எல்லோரும் மரணத்தை தழுவுகின்றனர். அவன் தனித்து விடப்படுகிறான்.

நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது எதுவும் செய்யத் துணிவோம் என்பதற்கு கிரானில் செய்கின்ற கொலைகள் சிறந்த உதாரணம்.

எல்லோரும் தங்களின் ஈகோவை தூக்கி எறிந்துவிட்டு எந்தவித பாரபட்சமுமின்றி ஒருவரை ஒருவர் பேரன்பினால் ஆரத் தழுவிக் கொண்டால் இந்த பூமியே பேரின்பத்தைத்  தருகிற சொர்க்கமாக மாறிவிடும் அந்த சொர்க்கத்தை வாசனை திரவியத்தின் வழியாக பூமிக்குக் கொண்டுவருகிறான் கிரானில் .

பெண்களிடமிருந்து வருகின்ற வாசனையைச்  சேகரிக்க அவன் கொலை செய்கிறான். அவன் சேகரித்த வாசனையிலிருந்து உருவான திரவியத்தை தன் மீது ஊற்றும்போது மக்கள் ஹனிபாலைப் போல அவனைத் தின்றே விடுகின்றனர்.

அதீத கற்பனையாக இருந்தாலும் நம்மை மெய்மறக்கச் செய்கின்ற படைப்பு இது. பாட்ரிக் சஷ்கிந்த் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தை இயக்கியவர் டாம் டைக்வர்.

-சக்திவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்