Published:Updated:

''கேவலமா படம் எடுத்து சம்பாதிக்கிறாங்க... நல்ல படம் எடுத்து நஷ்டப்படுறாங்க..!" - கந்துவட்டி தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? அத்தியாயம்-6

கே.ஜி.மணிகண்டன்
''கேவலமா படம் எடுத்து சம்பாதிக்கிறாங்க... நல்ல படம் எடுத்து நஷ்டப்படுறாங்க..!" - கந்துவட்டி தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? அத்தியாயம்-6
''கேவலமா படம் எடுத்து சம்பாதிக்கிறாங்க... நல்ல படம் எடுத்து நஷ்டப்படுறாங்க..!" - கந்துவட்டி தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? அத்தியாயம்-6

'சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன் மீதான புகாரை விசாரிக்க காவல்துறைக்கு டிசம்பர் 29-ஆம் தேதி வரை விசாரணை நடத்த தடை' என உத்தவிட்டிருக்கிறது, நீதிமன்றம். அன்புச்செழியன் - அசோக்குமார் விவகாரத்தின் இப்போதைய நிலை இது. சரி... தமிழ்சினிமாவின் கந்துவட்டிப் பிரச்னைகளுக்குள் வருவோம்.

''படைப்பாளியின் வலி தற்காலிகமானது; படைப்பு நிரந்தரமானது" - திரைப்பட இயக்குநர்களின் வலி குறித்து, அமெரிக்க இயக்குநர் ஜான் மிலியஸ் என்பவரின் கூற்று இது. தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை, ''தயாரிப்பாளர்களின் வலி நிரந்தரமானது; அவரது படைப்பு தற்காலிகமானது'' என தாராளமாகச் சொல்லலாம். ப்ரீ ப்ரொடக்‌ஷன் - ஷூட்டிங் - போஸ்ட் ப்ரொடக்‌ஷன் - ரிலீஸ் என நான்கு நிலைகளில், பணத்தைப் பதம் பார்க்கும் தவறுகள் சிறிய அளவில் நடந்தாலும் பொருளாதார ரீதியாக முதல் அடி தயாரிப்பாளருக்குத்தான். தவிர, கந்துவட்டிக்குப் பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு, அது பெருத்த அடி! ஆனால், 'இங்கே தயாரிப்பாளர்கள் விரும்பித்தான் கந்துவட்டிக்குப் பணம் வாங்குகிறார்கள்' என்கிறார், இயக்குநர் ஒருவர். 

"தமிழ்சினிமாவுல எல்லோருக்கும் தெரிஞ்ச தயாரிப்பாளர் அவர். அவர்கிட்ட இல்லாத பணமானு நானும் சமயத்துல நினைச்சிருக்கேன். ஆனா, அவங்க கந்துவட்டிக்குப் பணம் வாங்கித்தான் படம் எடுக்குறாங்க. ஒரு படத்துக்கு பட்ஜெட் போடும்போதே, வட்டிக்கும் சேர்த்தே பட்ஜெட் பிளான் பண்றாங்க. வட்டி கட்டவேண்டிய பணத்தையும் ரசிகர்கள்கிட்ட இருந்துதான் சம்பாதிக்கணும்னு, மோசமான படத்தையும் நல்லா விளம்பரப்படுத்துறாங்க. 'ஏன் இப்படிப் பண்றாங்க?'னு எனக்குத் தெரிஞ்சுக்க, அந்தத் தயாரிப்பு நிறுவனத்தோட நிர்வாகிகள்ல ஒருத்தரைப் பிடிச்சுக் கேட்டேன். 'லாபமா கிடைக்கிற பணத்தையெல்லாம் வேற வேற தொழில்ல இன்வெஸ்ட் பண்ணுவாங்களே தவிர, சினிமாவுல இறக்கமாட்டாங்க. நிலம் வாங்கிப்போட்டா, ரெண்டு வருடத்துல நாலு மடங்கு பணமாகும். சினிமா அப்படிக் கிடையாது தம்பி. இங்கே ரொட்டேஷன்ல வாங்கி விட்டாதான், படத்துக்கும் நல்லது, நமக்கும் நல்லது' என மையமான ஒரு பதிலைச் சொன்னார்." என்கிறார், அந்த இயக்குநர். 

'கந்துவட்டிக்குப் பணம் வாங்குவது ஏன்?' என்ற கேள்விக்கு, கூட்டாக ஒரு பாட்டு பாடுகிறார்கள் இன்னும் சிலர். ''வட்டிக்குப் பணம் வாங்கிதான் படம் எடுக்கணும்ங்கிறது தமிழ்சினிமாவோட கலாச்சாரம். தொன்றுதொட்டு இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு... இனியும் அப்படித்தான் நடக்கும். ஏன்னா, எல்லாத்துக்கும் ஒரு 'கால்குலேஷன்' இருக்கு. தவிர, கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தாதான், அதுக்கான வியாபாரம் குறைந்தபட்ச நேர்மையா இருக்கும். ஏன்னா, பணம் கொடுக்கிற அதே ஆட்கள்தான், வியாபாரம் ஆகுற இடத்துலேயும் கூடாரம் கட்டியிருப்பாங்க!" என்கிறார்கள். 

ஆனால், இன்றைய வியாபார சூழல் மாறிக்கொண்டிருக்கிறது என்பதைக் கடந்த பகுதிகளில் பார்த்தோம். அதை இன்னும் தீவிரமான பார்வைகளோடு முன்வைக்கிறார், இளம் இயக்குநர் ஒருவர். 'துப்பாக்கி'யை மையப்படுத்தி முதல் படத்தைக் கொடுத்தவர், வளர்ந்து வரும் வாரிசு நடிகரை வைத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறார். அவர், "வட்டிக்கொடுமை இங்கே ரொம்ப டூ மச் பிரதர். ஒரு படம் ரெடியாகி, ரிலீஸுக்கு ஒரு மாசம் லேட் ஆனாலும், அதுக்கான வட்டியைக் கட்டவேண்டிய சூழல் இங்கே இருக்கு. இதுக்கு, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மட்டுமே காரணமா இருக்கிறதில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்துல இருந்து 'சிறுபட்ஜெட் படங்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுப்போம். இனி, பெரிய படங்கள் விழாக்காலங்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும்'னு என்னைக்கோ ஒருநாள் சொன்னாங்க. ஆனா, இப்போவரைக்கும் ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகுற படங்கள் முட்டிமோதிக்கிட்டுதான் வருது. ஒரு மனுஷன் வாரத்துல ரெண்டு படம் பார்க்கலாம், மூணு படம் பார்க்கலாம்... பத்து படங்களைப் பார்க்கமுடியுமா, நிச்சயம் முடியாது. ஆனா, அதுதான் எதார்த்தத்துல நடக்குது." என்றவர், ''தவிர, அரசாங்கம் எவ்வளவோ நல்ல விஷயங்களைப் பண்ணலாம் பிரதர். கந்துவட்டியை முறைப்படுத்தலாம், வங்கிகள் கடன் தரலாம். இதையெல்லாம் அரசு கண்டுக்காம இருக்கிறதுனாலதான், தமிழ்சினிமா தனிநபர்கள் கைக்குப் போயிடுச்சு. அதோட விளைவுகள் எவ்ளோ மோசமா இருக்கும்ங்கிறதுக்கு உதாரணம்தான், அசோக்குமாரின் மரணம். தவிர, இப்போதைய தமிழ்சினிமா மிக மிக மோசமான சூழல்ல இருக்குனு என்னைமாதிரி புது இயக்குநர்களாலகூட ஈஸியா உணரமுடியுது. இங்கே எல்லோரும் சுயநலவாதிகளா இருக்கிறதுதான் பெரும் பிரச்னையாவும் இருக்கு, பணம் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமா இருக்கு. அதை நான் கண்கூடாவே பார்க்குறேன். தமிழ்சினிமாவுல ரெண்டுவிதமான தயாரிப்பாளர்கள் பிரிவைப் பார்க்குறேன். ஒரு பிரிவினர், என்னமாதிரியான படம் எடுத்தாலும், அவங்களுக்கு தியேட்டர்கள் ஈஸியா கிடைக்குது, வியாபாரம் ஈஸியா நடக்குது. எந்தப் பிரச்னையும் இல்லாம படம் ரிலீஸ் ஆகுது, நல்ல லாபமும் பார்க்குறாங்க. இன்னொரு பிரிவினர், நல்ல படங்களை எடுத்தாலும் தியேட்டர் கிடைக்கிறதில்லை. வியாபாரமும் ஆகுறதில்லை. இந்த நிலைமை எவ்ளோ சீக்கிரம் மாறுதோ, அவ்ளோ சீக்கிரம் மாறணும்!" என வேண்டுதளோடு முடிக்கிறார்.

தயாரிப்பாளர்களின் பணத்தைப் பதம் பார்க்கும் வேலையை 'கந்துவட்டி'க்காரர்கள் மட்டும் செய்வதில்லை. சினிமாவுக்குள்ளேயே ஏராளமான சுரண்டல்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான சில பிரச்னைகள் இதோ...

"ஒரு திரைப்படத்திற்கான மிக முக்கியமான வருமான ஆதாரம், திரையரங்குகளின் டிக்கெட்தான்! ஆனால், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும், அரசியல் பின்புலம் சார்ந்த சிலருக்கும் நியாயமான 'டிக்கெட் கணக்கு'களை சமர்ப்பிக்கும் திரையரங்க உரிமையாளர்கள், புதிய தயாரிப்பாளர்களிடம் நேர்மையாக இருப்பதில்லை."

" 'வாங்கி வெளியிடும்' முறையை இப்போது வேறு மாதிரி மாற்றிவிட்டார்கள். பத்து கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, 11 கோடி அல்லது 12 கோடி ரூபாய்க்குப் பெற்றுக்கொண்டு, திரையரங்குகளில் வெளியிட்டு வரும் வருமானத்தை எடுத்துக்கொள்வது 'வாங்கி வெளியிடும்' முறையாக இருந்தது. இன்று, திரையரங்குகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிலர், 'திரையரங்குகளில் ரிலீஸ் செய்து தருகிறேன்' என ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, தயாரிப்பாளரின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது, 'வாங்கி வெளியிடும்' நல்லவருக்கு 'லாபம்' எவ்வளவு என்பது மட்டுமே குறிக்கோள். தவிர, 'இத்தனை திரையரங்குகளில் வெளியிட்டுத் தருவேன்' எனச் சொல்லும் அவர்கள், திரையரங்குகளைக் குறைத்துவிட்டு, அதிலும் கமிஷன் பார்ப்பதுதான் உச்சகட்ட கொடுமை!."

"திரையரங்குகள் குறிப்பிட்ட சிலரின் கன்ட்ரோலில் இருப்பதால், அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது. பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருப்பதற்கு, ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போவதற்கு, ரிலீஸான சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து நீக்கப்படுவதற்கு... எனப் பல பிரச்னைகளுக்கு, திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிலர்தான் காரணம்." 

''சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் வெற்றிகரமாக ஒரு நல்ல படத்தை எடுத்து முடித்தாலும், அதை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய குறிப்பிட்ட சில நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலை இங்கே இருக்கிறது. இதனால், பல சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வசூலைப் பெற்றாலும், 'நியாயமான தொகை' தயாரிப்பாளருக்குக் கிடைப்பதில்லை!."

'மல்டிபிளெக்ஸ்' திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதிகள் இருப்பதால், படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை, வசூலாகும் தொகையை அப்படத்தின் தயாரிப்பாளரே டிராக் பண்ணமுடியும். தமிழ்நாட்டுல இருக்கிற தியேட்டர்களின் எண்ணிக்கை சில ஆயிரம்தான். அத்தனை திரையரங்குகளையும் ஒரே குடையின் கீழ் இணைச்சு வசூலைக் கண்காணிக்கிறது, டெக்னாலஜி யுகத்துல ஈஸியான வழி. ஆனா, அது நடந்துடக்கூடாதுனு நினைக்கிறாங்க, நடக்கவும் விடமாட்டாங்க!."

"தயாரிப்பாளருக்குக் கந்துவட்டிப் பிரச்னை அல்லது வேறுசில பிரச்னைனு வைங்க... இங்கே இருக்கிற சங்கங்கள் என்ன பண்ணனும்? அதுக்கான ஒரு முடிவை சொல்லணும். ஆனா, அன்புச்செழியன் - அசோக்குமார் விவகாரத்துல என்ன நடந்தது... ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களைப் பொதுவெளியில சொல்றது, ஆதரவு/எதிர்ப்பு இப்படி ரெண்டு பிரிவா பிரிஞ்சு நிற்கிறதுமாதானே இருந்தாங்க! சினிமாவுக்காக இயங்குற சங்கங்கள் பொறுப்புணர்ச்சியோட நடந்துக்கணும். ஒரு பிரச்னை முளைச்சா, குறைந்தபட்சம் இருதரப்பையும் கூப்பிட்டுப் பேசி, காம்ப்ரமைஸ் பண்ணிவைக்கலாம். அதுகூட இங்கே நடக்குறதில்லை."

இன்னும் பலரின் குரல்கள் பலவிதமாக இருக்கிறது. ஆனால், எல்லாப் பிரச்னைகளையும் கடந்து 'பண ரீதியான' பாதுகாப்பைப் பெற தயாரிப்பாளர்கள் தினம் தினம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்; சினிமாவின் பலதரப்பட்ட சந்தைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயமும், அதற்கான காரணங்களும் நிறைய இருக்கிறது. அதைப் பிறகு பார்க்காலாம்.