Published:Updated:

``ராணுவமய இந்தியாவில் ஒரு ஹாரர் அனுபவம்!" - நெட்ஃபிளிக்ஸின் `கெளல்' மினி சீரிஸ் எப்படி? #Ghoul

ர.முகமது இல்யாஸ்

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் `கெளல்' மினி சீரிஸ் எப்படி இருக்கிறது? #Ghoul

``ராணுவமய இந்தியாவில் ஒரு ஹாரர் அனுபவம்!" - நெட்ஃபிளிக்ஸின் `கெளல்' மினி சீரிஸ் எப்படி? #Ghoul
``ராணுவமய இந்தியாவில் ஒரு ஹாரர் அனுபவம்!" - நெட்ஃபிளிக்ஸின் `கெளல்' மினி சீரிஸ் எப்படி? #Ghoul

ரேபிய நாடோடிக் கதைகளில் `கெளல்’ (Ghoul) என்ற பேய், மனிதர்களின் மனங்களில் இருக்கும் குற்றவுணர்வை இரையாகக் கொண்டு, அவர்களை வேட்டையாடுவதாகவும், வேட்டையாடப்பட்டு இறந்துபோன மனிதர்களின் உருவத்துக்கு மாறும் ஆற்றல் அதற்கு உள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அரேபிய நாடோடி இலக்கியத்திலிருந்து இந்தக் கதாபாத்திரத்தை எடுத்து வேறு சூழலுக்குப் பொறுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது, நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் `கெளல்’ சீரிஸ்.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தால் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு, பிரிட்டிஷ் இயக்குநர் பேட்ரிக் கிரஹாம் அவர்களால் இயக்கப்பட்டிருக்கிறது இந்த சீரிஸ். ராதிகா ஆப்தே முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த மினி சீரிஸ் இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கிறது.

எதிர்காலத்தில் எங்கோ நடைபெறும் கதை என்ற அறிவிப்போடு தொடங்குகிறது `கெளல்’. `ஜாக்கிரதை! நம்மைச் சுற்றித் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்’ என்ற அறிவிப்புப் பலகை மிகச் சாதாரணமாக மக்கள் உலவும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் ராணுவ மயமாக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் `குறிப்பிட்ட மதத்தவர்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நகருக்கு வெளியே தனிக் குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ளனர். அதீத தேச பக்தி ராணுவத்தினரால் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் முதலானவை மூடப்பட்டுவிட்டன. குழந்தைகளின் புத்தகங்கள் உட்பட மக்களிடமிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டுவிட்டன.

அரசும் இராணுவமும் விதித்த சட்டத்தைத் துளியளவு மீறினாலும், கைது செய்யப்பட்டு `வாபஸி’ அதாவது, `இயல்பு நிலைக்குத் திரும்புதல்’ என்ற சடங்கு நடத்தப்படுகிறது. இத்தகைய சூழலில், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த நிடா ரஹீம் (ராதிகா ஆப்தே) இராணுவத்தில் விசாரணை அதிகாரிக்கான பயிற்சி மாணவியாக இருக்கிறார். தான் சார்ந்திருக்கும் மதத்தையும், தன் குடும்பத்தையும்விட தேசம் முக்கியமானது என்ற நம்பிக்கையில் வாழ்கிறார், நிடா.

நிடாவின் தந்தை ஆசிரியராக இருக்கிறார். அரசு விதித்திருக்கும் பாடத் திட்டத்தை மீறி மாணவர்களுக்குக் கற்பித்ததை நிடா அறிகிறார். அதைத் தன் மூத்த அதிகாரிகளிடம் புகாராகக் கூற, நிடாவின் தந்தை கைது செய்யப்படுகிறார். நிடாவின் தேசபக்தி போற்றப்பட்டு, பயிற்சி முடிவதற்கு முன்பே விசாரணைக் கூடம் ஒன்றிற்கு அனுப்பப்படுகிறார். 

`மெக்தூத் 31’ என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் மிகச்சில ராணுவ அதிகாரிகளுடன் இயங்கி வருகிறது அந்த விசாரணைக் கூடம். தான் சார்ந்திருந்திருக்கும் மதத்தின் காரணமாக, நிடா மீதான வெறுப்பு அந்த விசாரணைக் கூடத்திலும் கட்டமைக்கப்படுகிறது. பல குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்து, ஐந்து ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாதி அலி சயீத் அந்த விசாரணைக் கூடத்துக்கு அழைத்து வரப்படுகிறான். அவனது வருகைக்குப் பிறகு, மெக்தூத் 31-ல் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறத் தொடங்குகின்றன. ராணுவ அதிகாரிகள் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்குகின்றனர். `கெளல்’ என்ற பேய் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகு என்ன ஆனது என்பதும், ராதிகா ஆப்தே அந்தப் பேயிடமிருந்து தப்பித்தாரா என்பதும் மீதிக் கதை.

பெயர் சொல்லப்படாத நாட்டில் நடைபெறுவதாக எழுதப்பட்டிருக்கும் கதையின் சூழல், இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலவரங்களின் நீட்சியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் பாசிஸ்ட் அரசு ஒன்று உருவானால், இப்படித்தான் இருக்கும் என்று நேரடியாகச் சுட்டிக்காட்டுகிறது, `கெளல்’. 

நெட்ஃபிளிக்ஸ் வெளியிடும் இந்தியத் திரைப்படங்கள் அனைத்திலும் நடித்திருக்கும் ராதிகா ஆப்தே, இதிலும் நடித்திருக்கிறார். அவருக்கான ஸ்கோப் இதிலும் கைகூடியிருக்கிறது. இதுவரை வழக்கமான நடிப்பு அவரிடம் வெளிப்பட்டாலும், இந்த சீரிஸின் கதைக்களம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. `கெளல்’ மனிதர்களின் குற்றவுணர்வை உணவாகக் கொள்ளும் பேய் எனக் கூறப்படுகிறது. ராதிகா ஆப்தேவைப் போல, மற்றவர்களின் கதைகளும் நேரடியாகச் சொல்லப்பட்டிருந்தால், இன்னும் திகிலாக இருந்திருக்கும். 

`கெளல்’ சிரீஸின் சிறப்பம்சம், `மெக்தூத் 31’ இடத்தின் செட். அதன் உருவாக்கமும், அதனை ஜே ஓசாவின் (Jay Oza) கேமரா படமாக்கிய விதமும் பதற்றத்தை உண்டாக்குகின்றன. நிதின் பைத்தின் படத்தொகுப்பு மிகச் சரியான இடங்களில் அடுத்தடுத்த பாகங்களுக்கான விறுவிறுப்பைக் கூட்டுகிறது. 

ஹாரர் என்பது வெறும் பேய்களையோ, அமானுஷ்யங்களையோ மட்டும் காட்டுவதல்ல; அது ஒரு நாட்டில் நிகழ்காலத்தில் நடக்கும் கொடூரங்களை கணக்கில்கொண்டு, அதன் பலனாய் ஒரு கொடுமையான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை சமிக்ஞைகளாகக் காட்டுவதிலும் இருக்கிறது என்று புதியதோர் கோணம் பிடிக்கிறது இந்த `கெளல்’.