Published:Updated:

`பேயை விட பயங்கரமானவன் யார்?' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல்! #Ghoul #PartThree

நித்திஷ்

உள்ளிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகமாய்ப் பார்த்துக்கொள்கிறார்கள். இங்கே இருக்கும் யாரோ ஒருவரின் உருவத்தில்தான் கெளல் இருக்கிறது. அறைக்குள் ஜில்லென பயம் பரவுகிறது. 

`பேயை விட பயங்கரமானவன் யார்?' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல்! #Ghoul #PartThree
`பேயை விட பயங்கரமானவன் யார்?' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல்! #Ghoul #PartThree

முந்தைய பாகங்கள்:    பாகம் 1         பாகம் 2

விசாரணை அறைக்குள் பவுலத்தை விட்டுவிட்டு மற்ற அதிகாரிகள் வெளியே செல்கிறார்கள். உள்ளே எலும்புகள் உடைபடும் சத்தம் வெளியே வராண்டாவில் எதிரொலிக்கிறது. அதே சமயத்தில் நீடா சயீத்தின் கூட்டாளியிடம் `உண்மையைச் சொல்லு, இது அலி சயீத்தானா... இல்ல வேற எதுவுமா?' எனக் கேட்கிறார். `எப்படியும் நான் சொல்றதை நீங்க நம்பப்போறதில்ல. நீங்க வேணும்னு நினைக்கிற பதில் வர்றவரை என்னை அடிக்கப்போறீங்க' என வலியோடு முனங்குகிறார் வயதான சயீத்தின் கூட்டாளி. `நீ இப்போ உண்மையைச் சொல்லலனா உன்னோட நண்பர்கள் பேரை தீவிரவாதிங்க லிஸ்ட்ல சேர்த்துடுவேன்' என்கிறார் நீடா. 

`அந்தச் சிறைல இருக்கிறது அலி சயீத் இல்ல. கெளல். இந்து புராணங்கள்ல சொல்றமாதிரினா ராட்சஷன். கெளல் ஒரு கண்ணாடி மாதிரி. நாம பண்ண தப்புகளை வச்சு நமக்குக் குற்றவுணர்ச்சியைத் தூண்டும். அதை வச்சே நம்மளை சாகடிக்கும். அது கடைசியா யாரோட சதையைச் சாப்பிடுதோ அவங்களோட உருவத்துக்கு மாறிடும். அலி சயீத்தை கொன்னுட்டு அதோட உருவத்துல கெளல் இங்கே வந்திருக்கு. இங்கே இருக்கிற யாரோ ஒருத்தர்தான் அதைக் கூப்பிட்டிருக்காங்க. அதைக் கூப்பிட்டவர் சொன்ன வேலையை முடிக்காம அது போகாது' என நடுங்கும் குரலில் அவர் சொல்ல நீடாவும் மற்ற கைதிகளும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.

அதே சமயம் மேல்தளத்தில் கலோனல் சுனிலின் வயர்லெஸ்ஸுக்கு ஒரு செய்தி வருகிறது. `அலி சயீத்தோட உடல் மீட்கப்பட்டிருக்கு. அதை எதோ சாப்பிட்ட மாதிரி பாதி சிதைஞ்சிருக்கு' எனக் கரகரப்பாகப் பதிவு செய்கிறது அந்த வயர்லெஸ். `அப்ப இங்கே இருக்கிறது?' என அதிகாரிகள் மாறி மாறி பார்த்துக்கொள்கிறார்கள். தூரத்தில் ஒரு மரண ஓலம் கேட்கிறது. கைதிகள் சிறைக்கம்பிகளோடு ஒண்டிக்கொள்கிறார்கள். கீழ்த்தளத்தில் தனியே நிற்கிறார் நீடா.

மெதுவாக விசாரணை அறையின் கதவு திறக்கிறது. சுவர் மறைவில் ஒளிந்துகொண்டு நடப்பதைப் பார்க்கிறார் நீடா. அறையிலிருந்து வெளியே வரும் பவுலத் சிங் மெதுவாக நடைபோட்டு ஒவ்வொரு பூட்டாகத் திறந்து கைதிகளை விடுவிக்கிறார். இந்த இடைவெளியில் விசாரணை அறைக்குள் எட்டிப்பார்க்கிறார் நீடா. அங்கே பவுலத்தின் பிணம் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.

பயத்தில் உறையும் நீடாவை தூரத்திலிருந்து பார்க்கும் கெளல் மெதுவாக அவரை நெருங்கத் தொடங்குகிறது. அலறியபடி ஓடி மேல்தளத்தை அடைகிறார் நீடா. அங்கிருப்பவர்கள் அவர் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள். சுனில் தலைமையில் சிலர் கீழே வந்து பவுலத்தின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். நீடா மேல் சுனிலுக்கு நம்பிக்கை வருகிறது. ஆனால், கெளலின் சுவடே தற்போது காணவில்லை. 

இதனால், லஷ்மிதாஸ் உள்ளிட்டவர்கள் இதற்குக் காரணம் நீடாதான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். `இவளும் தீவிரவாதியோட மகள்தானே. அதனால்தான் பவுலத்தைக் கொன்னுட்டு சயீத்தையும் மற்ற கைதிகளையும் தப்பிக்கவிட்டிருக்கா' என அவர்களின் பேச்சு இருக்கிறது. சுனிலும் நீடாவும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சந்தேகத்தின் பலன் லஷ்மிதாஸுக்குக் கிடைக்க அவர் கன்ட்ரோலின் கீழ் வருகிறது விசாரணை மையம். 

நீடாவை ஓர் அறைக்குள் அடைக்கிறார்கள். அந்த அறைக்குள்தான் மற்ற கைதிகளும் ஒளிந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்கிறார் நீடா. அவர்களோடு பேசுகையில் சவுத்ரியும் குப்தாவும் சுட்டுக்கொன்ற அம்மாவும் மகளும் அங்கே இருக்கும் ஒரு வாய்பேச இயலாத கைதியின் மனைவியும் மகளும் என்பதை அறிந்துகொள்கிறார். `இங்கே கொண்டுவரப்படும் அனைவரும் கொல்லப்படுவார்கள், அதில் அப்பாவிகளும் அடக்கம்' என்ற உண்மை அவர் முகத்திலறைகிறது. கூடவே ஒரு பதற்றமும். நீடாவின் அப்பாவும் இங்கேதான் கொண்டுவரப்பட்டார். அப்படியானால்...?

`வேற எங்கயுமே யாருமில்ல, இந்த அறைக்குள்ளதான் அப்ப எல்லாரும் இருக்கணும்' என வெளியே அதிகாரிகள் பேசும் குரல் கேட்கிறது. `யாருமே இல்ல என்றால்...? அதில் பவுலத்தும் அடக்கம்தானே? இங்கேயும் பவுலத் இல்லை. அப்போ?' உள்ளிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகமாய்ப் பார்த்துக்கொள்கிறார்கள். இங்கே இருக்கும் யாரோ ஒருவரின் உருவத்தில்தான் கெளல் இருக்கிறது. அறைக்குள் ஜில்லென பயம் பரவுகிறது. 

நீடா தன்னோடு அந்த வாய் பேச இயலாத கைதியை மட்டும் அழைத்துக்கொண்டு அறைக்குள் இருக்கும் புகைபோக்கி வழியே தப்பிக்க முயற்சி செய்கிறார். அதே சமயத்தில் கைதி உருவத்திலிருக்கும் கெளலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு மற்ற கைதிகளை கொல்லத் தொடங்குகிறது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருகிறார்கள் அதிகாரிகள்.

கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்குகிறது. யார் கெளல், யார் மனிதர் எனத் தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருபக்கம் ஓடுகிறார்கள். ஓட்டத்தின் நடுவே ஒரு பெரிய உண்மை நீடாவுக்குத் தெரிய வருகிறது. கெளலை அழைத்தது யார் என்ற உண்மை. ஆனால், தேசபக்தி என்ற பெயரில் சுனில் தலைமையில் அப்பாவிகள் கொல்லப்படுவதும் அதற்குத் தான் உட்பட நிறைய பேர் தெரியாமலேயே துணை போவதையும் விட அந்த உண்மை அதிர்ச்சியானதாக இல்லை நீடாவுக்கு! 

கடைசியாக எஞ்சியிருப்பது நீடாவும் கலோனல் சுனிலும். ஒரே ஒரு துப்பாக்கி எஞ்சியிருக்கிறது. அதுவும் நீடா கையில். `நான் கெளல் இல்ல, சுனில்தான். கெளலை நான் கொன்னுட்டேன். நம்பு! சுட்டுடாத..' என்கிறார் சுனில். குழப்பத்தில் தயங்கி நிற்கிறார் நீடா. `நம்பு, நான் கெளல் இல்ல. நான் கலோனல் சுனில் தாக்கூன்ஹா' எனச் சொல்கிறார் சுனில். துப்பாக்கி வெடிக்கிறது. இரத்தவெள்ளத்தில் சாய்கிறார் சுனில். `நீ மனுஷன் இல்ல, ராட்சஷன்' என்கிறார் நீடா. அவர் சொன்னது கெளலையா சுனிலையா. ஒருவேளை அது கெளலாக இருந்திருந்தால் அவர் சுட்டிருக்கமாட்டாரோ? - இதற்கான பதில்களை பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறது கெளல்.

என்னைக் கேட்கிறீர்களா? மதவெறி பிடித்த மனிதனைவிட ஆபத்தான ராட்சஷன் இங்கே இல்லை என்றுதான் சொல்வேன்.