அழ வைத்தார் இயக்குநர் ராம்... கற்றுக் கொடுத்தார் தம்பி ராமையா! 'பசங்க' ஶ்ரீராம் சொல்லும் ஷூட்டிங் சீக்ரெட்ஸ் | sreeraam vajram thambirammaiah, ஸ்ரீராம், வஜ்ரம், பசங்க, தம்பிராமையா

வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (26/02/2015)

கடைசி தொடர்பு:19:21 (26/02/2015)

அழ வைத்தார் இயக்குநர் ராம்... கற்றுக் கொடுத்தார் தம்பி ராமையா! 'பசங்க' ஶ்ரீராம் சொல்லும் ஷூட்டிங் சீக்ரெட்ஸ்

பசங்களுக்கான படங்கள் அதிகம் சமீபத்தில் வர ஆரம்பித்திருக்கிறது. நான் சொன்னது 'பசங்க' படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், குட்டிமணி, பாண்டி - இந்த நால்வரின் கூட்டணியில் வரும் படங்கள். இந்த நான்கு பேரும் 'பசங்க', 'கோலிசோடா'வைத் தொடர்ந்து 'வஜ்ரம்' படத்திலும் இணைந்திருக்கிறார்கள். 
 
ரமேஷ் செல்வன் இயக்கத்தில் தம்பி ராமையா, ஜெயபிரகாஷ், மயில்சாமி மற்றும் பவானி ரெட்டி (ஹீரோயின்) ஆகியோரின் நடிப்பில் 27-ம் தேதி வெளிவருகிறது 'வஜ்ரம்'. பட ரிலீஸையொட்டி பரபரப்பாக சுற்றி வந்தார் ஸ்ரீராம். 'பசங்க' படத்தில் 'ஜீவா நித்யானந்தம் சி.எம்.' கதாபாத்திரத்தில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற ஸ்ரீராமைப் பிடித்துப் பேசினோம்,
 
'வஜ்ரம்' படத்தைப் பற்றி பேச்சை ஆரம்பித்தார் ஸ்ரீராம். ''எல்லோருக்கும் கல்வி போய் சேரணும்னு நினைக்கிற வாத்தியார், அவரோட மாணவர்களா நாங்க, கல்வி சொல்லிக் கொடுக்குறதுல ஏற்படுகிற பிரச்னை, அதை எதிர்த்து வாத்தியாரோட சேர்ந்து நாங்க போராடி, கடைசில ஜெயிச்சோமா இல்லையாகிறதுதான் கதை. இந்தப் படத்துலயும் எங்களுக்கு சண்டைக் காட்சிகள் இருக்குது. படம் சூப்பரா வந்துருக்கு" என்று சிரித்தார் ஸ்ரீராம்.
 
''முதல் படம் 'கற்றது தமிழ்' அனுபவத்தைச் சொல்லுங்க...'' என்று கேட்டதும், இன்னும் குஷியாகி பேசுவதைத் தொடர்ந்தார். ''எனக்கு சொந்த ஊரு கும்பகோணம். ராம் சார் நடிக்க சிறுவர்களை தேடிட்டு இருந்தாங்க. அப்போ அவருக்கு என்னோட போட்டோவை அனுப்பினேன். ஆறு மாதம் கழிச்சு கூப்பிட்டாங்க. போட்டோ ஷூட், டயலாக்லாம் கொடுத்தாங்க. அதுதான் என்னோட பிள்ளையார் சுழி. ராம் சார்தான் என்னை சினிமாவுக்கே அறிமுகப்படுத்துனார். அப்போ ஒரு சீன்ல எனக்கு அழற மாதிரி காட்சி. ஆனா, எனக்கு அழுகையே வரல. உடனே 'நீ நடிக்கல... உனக்கு சாப்பாடு கிடையாது'னு ராம் சார் சும்மா சொன்னாரு. ஆனா, உண்மைக்கும்னு நினைச்சே அழுதுட்டேன். அந்த சீனும் நல்லா வந்துருச்சி. அதுக்கப்புறம் வந்து கொஞ்சி கொஞ்சி பேசுனதை இன்னமும் மறக்க முடியல என்னால" என்றவர் தொடர்ந்து வஜ்ரம் படத்தில் தம்பி ராமையாவுடனான கெமிஸ்ரியைச் சொல்ல ஆரம்பித்தார். 
 
''படத்தோட முக்கியமான ஒரு காட்சி 4.20 நிமிஷம் ஒரே ஷாட்ல எடுக்கலாம்னு ப்ளான் பண்ணாங்க. ஆனா எங்கலால முடியாதோனு நினைக்கும்போது, தம்பி ராமையா சார்தான் அதிகமா ஊக்கப்படுத்தி ஒரே ஷாட்ல எடுக்க வைச்சாங்க. அதை மறக்கவே முடியாது. இந்தப் படத்துல அதிகமா கத்துக்கிட்டோம். எப்படிலாம் நடிக்கணும், பேசணும்னு எல்லாம் எங்களுக்கு தம்பி ராமையா சார்தான் சொல்லிக் கொடுத்தாரு. அவர் ஒரு புத்தகம் மாதிரி... கத்துக்க நிறைய இருக்கு.''
 
''ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் பத்தி சொல்லுங்க?''
 
"பசங்க படத்துலயே நாங்க நாலு பேரும் அவ்ளோ க்ளோஸ். 'வஜ்ரம்' படத்துலயும் பேசிட்டும் விளையாடிட்டுமே இருப்போம். அதுக்கு நடுவுல நடிப்புலேயும் பின்னி பெடலெடுப்போம்ல. எங்க நாலு பேருக்குள்ளயும் ஒரு ஒற்றுமை இருக்கும். அது மட்டும்தான் எங்களை சேர்ந்து அடுத்தடுத்து நடிக்க வைக்குது."
 
'' 'பசங்க', 'கோலிசோடா', 'வஜ்ரம்' எல்லாமே நாலு எழுத்து. நீங்களும் நாலு பேரு எப்படி ப்ளான் பண்ணி செஞ்சீங்களா?''
 
"அட ஆமால... எதுவுமே ப்ளான் பண்ணல... நாங்க முடிவு பண்ணி படத்துக்கு தலைப்பு வெச்சிட முடியுமா? நாங்க நாலு பேரும் அடுத்தடுத்து நடிக்கிறதுகூட அதுவா அமைஞ்சது."
 
''அடுத்த ப்ளான்ஸ்?'' 
 
''ப்ளஸ் டூ முடிஞ்சது. காலேஜ் சேர்ந்து படிக்கணும். ஆனா, நடிப்பையும் விடமாட்டேன். 'வஜ்ரம்' அடுத்து
“கமர்கட்டு” படம் வெளிவருது, கமல்ஹாசன் சாரோட 'பாபநாசம்' படத்துலேயும்  கேபிள் பாய் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். அடுத்து 'பைசா' படத்துல ஹீரோவா முதன்முதலா நடிக்கப்போறேன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறோம். என்னோட உழைப்பை நான் எப்போவும் கொடுக்க ரெடியா இருக்கேன். நல்லா நடிச்சா போதும். விருதுலாம் வேணாம். வஜ்ரமும் நல்லா நடிச்சிருக்கேன். மக்களோட விடைக்காக எதிர்பார்த்துட்டு இருக்கேன். ஐ அம் வெயிட்டிங்...'' - உற்சாகமாகச் சொல்லி சிரிக்கிறார் ஶ்ரீராம்.
 
பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்