தங்கநிறக் கூந்தல் இளவரசியும் அவளுக்கு உதவும் திருடனும்! #Tangled

Tangled


வால்ட் டிஸ்னியின் உருவாக்கத்தில் வெளியான ஐம்பதாவது திரைப்படம் Tangled. அனிமேஷன்  திரைப்பட வரலாற்றிலேயே மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படைப்பு. ஜெர்மனி நாட்டுப்புறக் கதையான Rapunzel-யை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. தங்க நிறத்தில் ஒளிரும் நீண்ட கூந்தலையுடைய இளவரசிக்கும் ஒரு திருடனுக்கும் இடையிலான காதலும்; அதன் மூலம் இளவரசியின் சிக்கல் தீர்வதும் இத்திரைப்படத்தின் மையம். கதையின் அசலான வடிவம், திரைக்கதைக்காக மாற்றம் செய்யப்பட்டது. 

பல ஆண்டுகளுக்கு முன்பு சூரியனின் ஒரு துளி வானிலிருந்து கீழே விழுந்து ஒரு மலராக மாறுகிறது. எவ்வித நோயையும் குணமாக்கும் அபூர்வமான தன்மையைக் கொண்ட அந்த மலரை, ஒரு சூன்யக்காரக் கிழவி கண்டெடுக்கிறாள். அந்த மலரின் மருத்துவக் குணத்தின் மூலம் இழந்த தன் இளமையைப் பல வருடங்களுக்குப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறாள். 

கிழவி வசிக்கும் இடத்தின் அருகே ஒரு பேரரசு இருக்கிறது. ராணி கர்ப்பமுற்றிருக்கிறார். ஆனால், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ‘ராணியைக் குணப்படுத்த ஏதாவது செய்யுங்கள்’ என்று வீரர்களுக்கு உத்தரவிடுகிறார் ராஜா. அவர்கள் நாலாபக்கமும் சென்று தேடுகிறார்கள். கிழவி கவனக்குறைவாக இருந்த சமயத்தில் அபூர்வ மலரைக் காணும் அவர்கள், அதைப் பறித்துச் சென்று அரண்மனையில் தருகிறார்கள். அந்த மலரின் மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவ நீரை ராணி அருந்த உடல்நலம் குணமாவதோடு, அழகான பெண் குழந்தையொன்றும் பிறக்கிறது. அதன் தலைமுடி தங்கநிறத்தில் ஜொலிக்கிறது. 

தன்னிடமிருந்த அபூர்வ மலர் பறிபோனதால் முதுமையை எட்டும் சூன்யக்காரி, ஆத்திரத்துடன் நள்ளிரவில் அரண்மணைக்கு ரகசியமாக வருகிறாள். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் தலைமுடியை தொட்டவுடன் அவளது இளமை திரும்புகிறது. எனவே, குழந்தையின் தலைமுடியைச் சற்று கத்தரிக்கிறாள். ஆனால், முடியை வெட்டியவுடன் அதன் சக்தி பறிபோகிறது. மீண்டும் முதுமையை அடைகிறாள். எனவே குழந்தையைக் கடத்திக் கொண்டு சென்று, எவரும் எளிதில் நெருங்க முடியாத உயரமான ஒரு கோட்டையில் வைத்து ரகசியமாக வளர்க்கிறாள். 

Tangled

குழந்தையின் தலைமுடியை வெட்டினால் அதன் சக்தி போய் விடும் என்பதால் முடியை வெட்டாமல் வளர்க்கிறாள். மிக நீளமான பொன்னிறக்கூந்தலோடு சிறுமி வளர்கிறாள். “இந்த இடத்தை விட்டுச் சென்றால் மிகவும் ஆபத்து. பகைவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சிறுமியைப் பயமுறுத்தி வைத்திருக்கிறாள் சூன்யக்காரி. அவள்தான் தன் தாய் என நினைத்து சிறுமி வளர்கிறாள். அவளுடைய பெயர்தான் ரபுன்செல். 

தங்களின் குழந்தையை எங்கு தேடியும் காணாத ராஜாவும் ராணியும் மனம் உடைந்து போகிறார்கள். ஒவ்வொரு வருடமும் குழந்தையின் பிறந்தநாளன்று கண்ணாடி விளக்குகளை வானில் பறக்க விடுகிறார்கள். அதைப் பார்த்து தன் மகள் திரும்பி வருவாள் என்பது அவர்களின் நம்பிக்கை.

சூன்யக்காரியிடம் வளரும் சிறுமி ரபுன்செல் வானில் பறந்து வரும் விளக்குகளை ஒவ்வொரு வருடமும் தொலைவிலிருந்து பார்க்கிறாள். அதை நட்சத்திரங்கள் என எண்ணிக்கொள்கிறாள். அவற்றை அருகில் சென்று பார்க்க ஆசையிருந்தாலும் தாயின் கட்டுப்பாடு காரணமாகச் செல்ல முடியவில்லை. 

ரைடர் என்கிற புனைப்பெயர் கொண்ட இளைஞன் ஒரு திருடன். இரண்டு முரட்டுத் தடியர்களுடன் இணைந்து அரண்மனைக்குள் புகுந்து தங்க கீரிடத்தைத் திருடுகிறான். அரண்மனை காவலாளிகள் துரத்தி வருகிறார்கள். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து, முரடர்களையும் ஏமாற்றி விட்டு கீரிடத்துடன் தப்பிக்க நினைக்கிறான். ஆனால், அரண்மனை குதிரையான மேக்ஸிமஸ், மிகுந்த ஆக்ரோஷத்துடன் இவனைத் துரத்துகிறது. அதனிடமிருந்து தப்பிக்க எங்கெங்கோ ஓடுகிறான் ரைடர். 

அவ்வாறான சமயத்தில்தான் மறைவிடத்தில் உள்ள உயரமான அந்தக் கோட்டையைப் பார்க்கிறான். குதிரையிடமிருந்து தப்பிப்பதற்காக அதன்மீது எப்படியோ சிரமப்பட்டு ஏறி விடுகிறான். வீட்டின் உள்ளே தனிமையில் இருக்கும் ரபுன்செல். இவனைக் கண்டு பயந்து தாக்குகிறாள். இவன் மயங்கி விழுகிறான். தன்னுடைய கூந்தலால் ரைடரை கட்டிப் போடும் ரபுன்செல், அவன் திருடி வந்திருக்கும் கீரிடத்தை எடுத்து வைத்துக் கொள்கிறாள். 

அவன் விழித்து எழுந்ததும் “யார் நீ?” என்று விசாரிக்கிறாள். நடந்ததைச் சொல்கிறான் ரைடர். முதலில், அவனை நம்ப மறுக்கும் ரபுன்செல், அவனுடைய அப்பாவித்தனத்தைப் பார்த்து நம்புகிறாள். இருவருக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்படுகிறது. “வானில் பறந்து வரும் கண்ணாடி விளக்குகளை அருகில் சென்று நான் பார்க்க வேண்டும். நீ என்னை அழைத்துச் சென்று மறுபடியும் இங்குப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதற்கு நீ உதவ வேண்டும். அப்படிச் செய்தால் உன்னுடைய கீரிடத்தைத் திருப்பித் தருகிறேன்” என்கிறாள். வேறு வழியில்லாத நிலையில் ரைடர் இதற்கு ஒப்புக் கொள்கிறான். 

Tangled

வெளியூர் சென்றிருக்கும் தன் தாய் திரும்பி வருவதற்குள், தானும் திரும்பி வந்து விடலாம் என்று நினைக்கும் ரபுன்செல், இளைஞனுடன் கிளம்புகிறாள். கோட்டைக்குத் திரும்பி வரும் சூன்யக்காரி, மகளை நோக்கி குரல் தருகிறாள். “ரபுன்செல். உன் கூந்தலை அவிழ்த்து விடு. நான் மேலே ஏறி வர வேண்டும்”. எந்தப் பதிலும் வருவதில்லை. சந்தேகமடையும் சூன்யக்காரி ரகசிய வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்து ரபுன்செல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். ஆனால், அங்கிருக்கும் தடயங்களைக் கொண்டு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்கிறாள். ரபுன்செல்லை மீட்டுக் கொண்டு வரும் ஆவேசத்தோடு அவர்களைப் பின்தொடர்கிறாள். ரைடரால் ஏமாற்றப்பட்ட முரடர்களையும் துணைக்குச் சேர்த்துக் கொள்கிறாள். 

அப்பாவியான ரபுன்செல் இந்த ஆபத்திலிருந்து தப்பித்தாளா, தன் நீண்ட கால விருப்பத்தின் படி கண்ணாடி விளக்குகளைச் சென்று பார்த்தாளா, ரைடர் அவளுக்கு எவ்வாறு உதவினான், ரபுன்செல் இளவரசியாக அரண்மனைக்குத் திரும்பினாளா... என்பதையெல்லாம் வண்ணமிகு காட்சிகளாகவும் அருமையான பாடல்களின் மூலமாகவும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படத்தைக் காணும்போது அனிமேஷன் என்கிற உணர்வு அல்லாமல் அசலான காட்சிளைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. நவீன நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பிரேமும் அத்தனை கச்சிதமாகவும் ரசிக்கத்தக்க அசைவுகளுடனும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இளவரசி ரபுன்செல்லின் உருவம் அத்தனை வசீகரமானதாக இருக்கிறது. குறிப்பாக அவளது நீண்ட, தங்கநிற தலைமுடியைக் கொண்டு அவள் செய்யும் சாகசங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இளவரசிக்கும் திருடனுக்கும் முதலில் ஏற்படும் மோதலும் பிறகு ஏற்படும் காதலும் ரசிக்க வைக்கின்றன. மேக்ஸிமஸ் எனப் பெயரிடப்பட்ட குதிரையும் கோபமும், இளவரசியின் அன்பைக் கண்டு பிறகு உதவுவதும் சிரிக்கவும் நெகிழவும் வைக்கின்றன. 

இன்னொரு வகையில் இது மியூசிக்கல் திரைப்படமும் கூட. ஒவ்வொரு பாடலும் கேட்க இனிமையானதாக இருப்பதோடு, அட்டகாசமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரைடரின் உதவியோடு இளவரசி ரபுன்செல், பறக்கும் விளக்குகளைக் காணும் காட்சியில் பாடப்படும் ‘I See the Light’ உருவாக்கப்பட்ட விதம் அற்புதம். வண்ணமயமான விளக்குகள் வானில் ஒளிர, கண்விரிய ரபுன்செல் அவற்றை ரசித்துப் பாடுவது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. 

Nathan Greno, Byron Howard ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிச் சொற்களில் வாசிப்பதை விடவும் காட்சி வடிவத்தில் கண்டு ரசிப்பதே மேலதிக உத்தமமான செயலாக இருக்கும். குழந்தைகள் ரசித்துப் பார்ப்பார்கள்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!