Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றும் ‘தவளை’ இளவரசி! #ThePrincessAndTheFrog

 The Princess and the frog

சூனியக்காரியின் சாபத்தால் தவளையாக இருந்த இளவரசன், ஓர் இளவரசியால் முத்தமிடப்பட்டதும், தன் உண்மையான உருவத்துக்குத் திரும்பும் கதை. ஜெர்மனி ஆய்வாளர்களான கிரிம் சகோதரர்கள் தொகுத்த நாட்டுப்புறக் கதைகளில் இது உள்ளது. பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்தக் கதையையொட்டி ஈ.டி.பேக்கர் (Elizabeth Dawson Baker) எழுதிய நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம், The Princess and the Frog. 

நிறவெறி பாரபட்சம் உள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலிருந்து, கருப்பின பெண்ணை பிரதான பாத்திரமாக்கி உருவாக்கப்பட்டதே, இந்தத் திரைப்படத்தின் முக்கியமான அம்சம். அழகிய இளவரசியாக உருவாக்கப்பட்ட அந்தப் புனைவுப் பாத்திரத்தின் பெயர், ‘டியானா’. வால்ட் டிஸ்னியின் தயாரிப்பு இது என்பது கூடுதல் சிறப்பு. வண்ணமிகு காட்சிகளும் இனிமையான இசையும் பாடல்களும் திரைப்படத்தை உன்னதமாக்குகின்றன. 

டியானா என்கிற கருப்பின சிறுமிக்கு அவளின் தாய் ‘தவளை இளவரசி’ கதையை வாசித்துக் காட்டுகிறாள். தவளை என்றாலே டியானாவுக்கு அருவருப்பு. ‘என் உயிரே போனாலும் நிஜத்தில் ஒரு தவளையை நான் முத்தமிடவே மாட்டேன்’ என்று வெறுப்புடன் கூறுகிறாள். அவளுடைய தோழி கார்லோட், “ஓர் இளவரசனைத் திருமணம் செய்துகொள்ள முடியுமென்றால், நான் தவளையை நிச்சயம் முத்தமிடுவேன்” என்று உற்சாகமாகக் கூறுகிறாள். 

அவள் தந்தை பணக்காரர். அடம்பிடிக்கும் மகளுக்காக எதையும் வாங்கித் தருபவர். டியானாவின் தந்தையோ உணவகத்தில் பணிபுரியும் சமையற்காரர். சொந்தமாக உணவகம் ஒன்றைத் திறந்து சுவையான உணவை மக்களுக்கு அளித்து, மகிழ்ச்சி நிரம்பிய அந்த முகங்களைக் காணவேண்டும் என்பது அவரது கனவு. எனவே, டியானாவுக்கும் இளம் வயதிலேயே சுவையான உணவுகளைத் தயாரிக்கும் திறமை உருவாகிவிடுகிறது. தந்தையுடன் தானும் இணைந்து உதவுவதாக உற்சாகமாகக் கூறுகிறாள். ‘டியானா பேலஸ்’ எனும் உணவகத்தை நடத்துவதுபோல கனவு காண்கிறார்கள். உறங்குவதற்கு முன்னால் தன் கனவைப் பற்றி வானத்து நட்சத்திரத்திடம் சொல்கிறாள் டியானா. அப்போது, ஜன்னலில் வந்து நிற்கிறது ஒரு தவளை. அதைப் பார்த்ததும் கீறீச் என்று கத்தியபடி ஓடுகிறாள். 

வருடங்கள் கடக்கின்றன. தந்தையின் மறைவுக்குப் பிறகு கூடுதலாக உழைக்கிறாள் டியானா. இப்போது அவள் ஓர் இளம்பெண். தந்தையின் கனவோடு தன் கனவையும் சாத்தியமாக்குவதான் அவளின் வாழ்நாள் லட்சியம். “ஓர் உணவகத்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும்’ என்பதே அது. 

இந்நிலையில், நவீன் என்கிற இளவரசன் அந்த ஊருக்கு வருகிறான். அவன் ஓர் உதவாக்கரை. பெற்றோர்களால் விரட்டியடிக்கப்பட்டவன். எந்தப் பணக்காரப் பெண்ணையாவது திருமணம் செய்துகொண்டு, செல்வந்தன் ஆகிவிட வேண்டும் என்பதே அவனது நோக்கம். அதற்காக, அந்த ஊருக்கு வந்திருக்கிறான். இதை அறியாத, டியானாவின் தோழி கார்லெட், தன் தந்தையை வற்புறுத்தி இளவரசனுக்காக விருந்தை ஏற்பாடு செய்கிறாள். அந்த விருந்துக்கான உணவு வகைகளை டியானா தயாரிப்பாள் என்றொரு ஏற்பாடு. தன் ரெஸ்டாரன்ட் கனவுக்காக ஒப்புக்கொள்கிறாள் டியானா. 

 The Princess and the frog

அதே ஊரில் டாக்டர் ஃபேசிலிர் என்கிற மந்திரவாதி இருக்கிறான். தனது மந்திரத் திறமையால் அந்த ஊரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவனுடைய கெட்ட ஆசை. இளவரசன் நவீனைச் சந்திக்கும் அவன், ‘நான் உன்னைப் பணக்காரன் ஆக்குகிறேன். நான் சொன்னபடி செய்ய வேண்டும்’ என்கிறான். இளவரசனைத் தவளையாகவும் ஆக்கிவிடுகிறான். “பணக்காரப் பெண் உன்னை முத்தமிடுவாள். அப்போது, நீ இளவரசனாகி திருமணம் செய்து சொகுசாக வாழலாம்” என்று ஆசை காட்டுகிறான். 

ஆனால், மந்திரவாதியின் திட்டம் வேறு. இளவரசனைத் தவளையாக்கி விரட்டிவிட்டு, இளவரசனின் வயதான உதவியாளனை இளவரசனாக மாற்றுவது. செல்வந்தனின் மகளைத் திருமணம் செய்யவைத்து, அந்தச் சொத்துகளை இருவரும் பங்கு போட்டுக்கொள்வது என்று திட்டமிடுகிறார்கள். விருந்து நாள் வருகிறது. தன் ரெஸ்டாரன்ட் கனவு நிஜமாகப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறாள் டியானா. ஆனால், அவள் பார்த்துவைத்திருக்கும் இடத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேறு ஒருவர் தயாராக இருப்பதாகத் தகவல் கேட்டு சோர்ந்துப்போகிறாள். அப்போது, தவளை உருவத்தில் இருக்கும் இளவரசன் வருகிறான். விருந்துக்காக, பணக்கார உடையில் கீரிடத்துடன் இருக்கும் டியானாவை இளவரசி எனத் தவறாக நினைத்து, ‘என்னை முத்தமிட்டால் உன் கனவு நனவாகும்” என்கிறான். 

தவளை என்றாலே அருவருப்புடன் பார்க்கும் டியானா, சம்மதிக்க மறுக்கிறாள். பிறகு, வேறு வழியில்லாமல் தவளையை முத்தமிடுகிறாள். தவளையாக இருக்கும் இளவரசன் உண்மை உருவத்துக்கு மாறுவதற்குப் பதில், டியானாவும் தவளையாக மாறிவிடுகிறாள். இரண்டு தவளைகளையும் ஒரு பாம்பு துரத்துகிறது. உயிர் தப்பிக்க பயந்து ஓடுகிறார்கள். ‘உன்னால்தான் இந்த நிலைமை’ என்று பரஸ்பரம் குற்றம்சாட்டி சண்டையிடுகிறார்கள். அப்போது, சாக்ஸ்போன் இசைக்கருவியைத் திறமையாக வாசிக்கும் முதலை ஒன்று வழியில் தென்படுகிறது. தன்னைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால், தான் ஒரு மனிதனாக மாறி தன் இசைத்திறமையை ஊருக்குக் காட்ட வேண்டும் என்று அதற்கு ஆசை. ‘விலங்கினங்களை மனிதராக மாற்றும் ஒரு மந்திரக் கிழவியை எனக்குத் தெரியும். அங்கே செல்லலாம்” என்கிறது முதலை. மூவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள். 

டியானாவின் ரெஸ்டாரன்ட் கனவு என்னவானது? அவள் மறுபடியும் பெண்ணாக மாறினாளா? இளவரசன் என்னவாகிறான்? இவர்களை ஏமாற்றிய மந்திரவாதியின் நிலைமை என்ன? இதற்கான பதில்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

கறுப்பினத்தவர்களின் பின்னணிக் காட்சிகள் அதிகம் உள்ளதால், படம் முழுவதும் ஜாஸ் உள்ளிட்ட அட்டகாசமான இசை பொங்கி வழிகிறது. தன் வாழ்நாள் கனவான சொந்த ரெஸ்டாரன்டுக்காக ஓர் இடத்தைப் பார்க்கும் டியானா, அந்த இடத்தை தன் தாயுடன் இணைந்து சுத்தப்படுத்தியவாறு பாடும் ‘Almost There’ என்கிற பாடலும், காட்சிப்படுத்தப்பட்ட விதமும் அருமை. இதனுடன் Down in New Orleans என்கிற இன்னொரு பாடலும், ஆஸ்கர் விருதின் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை ராண்டி நியூமேன் (Randy Newman). 

தவளைகளின் உருவில் இருக்கும் டியானாவும், இளவரசன் நவீனும் முதலில் தங்களுக்குள் அடித்துக்கொண்டாலும், பிறகு ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்குகிறார்கள். அந்தக் காதலை வெளிப்படுத்தத் தயங்குவது உணர்வுபூர்வமான காட்சியமைப்புகள். சாக்ஸ்போன் கலைஞராக வரும் முதலை லூயிஸ் செய்யும் ரகளைகள், விழுந்து விழுந்து சிரிக்கவைக்கிறது. நட்சத்திரத்தைத் திருமணம் செய்ய விரும்பும் ரே என்கிற எறும்பின் காதலும், இறுதியில் அது செய்யும் தியாகமும் நெகிழவைக்கின்றன. 

பிரபல அமெரிக்க பாடகியும் நடிகையுமான அனிகா நானி ரோஸ் (Anika Noni Rose), டியானா பாத்திரத்துக்கு அற்புதமாகக் குரல் தந்து உயிரூட்டியிருக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் அசாதாரணமான உழைப்பு மற்றும் கற்பனைவளம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்குவதில் திறமைசாலிகளான Ron Clements மற்றும் John Musker இணைந்து இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். குழந்தைகளுடன் கண்டுகளிக்க வேண்டிய அற்புதமான திரைப்படம் இது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்