Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரக்கர் உலகையே அலறவைத்த சுட்டிச் சிறுமி! #MonstersInc #MovieRewind

MonstersInc

அரக்கர்களின் உலகில் நுழைந்து அவர்களை அலற வைக்கும் ஒரு சுட்டிச் சிறுமியைப் பற்றிய Monsters, Inc சுல்லிவன் என்கிற பூதத்திற்கும் ‘Boo’ என்கிற சிறுமிக்கும் இடையில் உருவாகும் அன்பு மற்றும் பிரிவுணர்ச்சியை நெகிழ்வுடன் சித்திரிக்கிறது. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோ உருவாக்கியுள்ள இந்தப் படைப்பு, அகாதமி விருதில் பல்வேறு பிரிவுகளில் நாமினேஷன் ஆனதோடு, "If I Didn't Have You" என்கிற பாடல் விருதும் பெற்றது. 

அரக்கர்களின் உலகம் அது. Monsters, Inc என்கிற நிறுவனம்தான் அங்கு மின்சார விநியோகம் செய்கிறது. மின்சாரத்தைத் தயாரிப்பதற்காக அந்த நிறுவனம் செய்யும்முறை விநோதமானது. மனிதக் குழந்தைகளைப் பயமுறுத்தி கத்தச் செய்து அந்த ஒலியின் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. (இது எப்படிச் சாத்தியம் என்றெல்லாம் கேட்கக் கூடாது. கதைக்குக் கால்கள் கிடையாது).

அங்குள்ள பணியாளர்களில் சுல்லிவன் என்கிற பயங்கர உருவம்தான் முன்னணி வரிசையில் உள்ளது. குழந்தைகளைப் பயமுறுத்தி கத்த வைப்பதில் அது கில்லாடி. ஆனால், ரேண்டால் என்கிற பச்சோந்தி இதற்குக் கடுமையான போட்டியாக இருக்கிறது. யார் முன்னணியில் இருப்பது என்கிற சண்டை இருவருக்கும் இடையே அடிக்கடி நிகழும்.

MonstersInc


குழந்தைகளை வீறிட வைப்பது இந்த நிறுவனத்திற்கு லாபகரமானதாக இருக்கும் அதே வேளையில் மனிதக் குழந்தைகள் என்றால் இவர்களுக்கு பயங்கர அலர்ஜி. குழந்தைகள் மட்டுமல்ல, அவர்கள் உபயோகப்படுத்தும் பொருள்களின் ஒரு துளி கூட அங்கு உள்ளே வரக் கூடாது. அதன் மூலம் கடுமையான தொற்று நோய் பரவும் என்கிற (மூட) நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. ஏதோ ஒரு குழந்தையின் காலணி உறை தவறுதலாக அந்தத் தொழிற்சாலைக்குள் வந்துவிடுகிறது. அவ்வளவுதான். அந்த இடமே அதகளமாகி விடுகிறது. பாதுகாப்பு வீரர்கள் எங்கிருந்தோ விரைந்து வருகிறார்கள். அந்த உறை எரித்துச் சாம்பலாக்கப்பட்டு உடனே அப்புறப்படுத்தப்படுகிறது. அவ்வளவு பயம், ஒவ்வாமை.. அவர்களுக்கு.

இந்த நிலையில் – தன்னுடைய பணியில் இருக்கும் சுல்லிவன் ஒரு சிறுமியைப் பயமுறுத்தி விட்டு திரும்பும்போது அந்தச் சுட்டிப் பெண்ணும் சுல்லிவனின் முதுகில் ஒட்டிக்கொண்டு தொழிற்சாலைக்குள் வந்து விடுகிறது. வெளியிலிருந்து காலணி உறை வந்தாலே கலாட்டா ஆகும் போது முழுதாக ஒரு சிறுமி வந்தால் என்னவாகும்? மற்றவர்களைப் பயமுறுத்தி பழக்கப்பட்ட சுல்லிவனே இப்போது பயந்து அலறுகிறது. மற்றவர்கள் பார்க்கும் முன், குறிப்பாக நிறுவனத்தின் முதலாளியான வாட்டர்நூஸ் பார்ப்பதற்குள் சுட்டிச் சிறுமியைப் பழைய படி அதன் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட வேண்டும். அதிலும் சகப் போட்டியாளனான ரேண்டால் கண்ணில் படாமல் இதைச் செய்து முடிக்க வேண்டும். 

தன்னைப் பார்த்து களங்கமில்லாமல் சிரிக்கும் ‘Boo’ என்கிற சிறுமியை, பூதமான சுல்லிவனால் காப்பாற்ற முடிந்ததா, ரேண்டால் இதற்கு என்னவெல்லாம் இடையூறு செய்தது.. என்பதையெல்லாம் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 

MonstersInc

அரக்கர்களின் உலகில், நாலைந்து கண்கள், நீள உடம்பு, ஒரு கண், என்று விதம்விதமாக இருக்கும் பூத உருவங்கள் பார்ப்பதற்குச் சுவாரஸ்யமானதாக இருக்கின்றன. சிறிய உடல், பச்சை நிறம், ஒற்றைக் கண் என்கிற நகைச்சுவையான தோற்றத்துடன் சுல்லிவனின் ஆருயிர் நண்பனாக இருக்கும் மைக் வஸோவ்ஸ்கியின் லூட்டிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. சுல்லிவனின் பிரம்மாண்டமான உருவத்திற்கு முன்னால் பொடிசாக இருக்கிறது இந்த மைக். சிறுமி ‘Boo’விற்கு குரல் தந்திருக்கும் மேரி கிப்ஸின் பங்களிப்பு அட்டகாசம். சுட்டிச் சிறுமியின் அழகும் சிரிப்பும் சுல்லிவனை அலைய வைக்கும் நகைச்சுவையும் நம்மைக் கவர்கின்றன. 

பச்சோந்தியான ரேண்டாலைத் தவிர எந்தவோர் அரக்க உருவத்திற்கும் பயப்படாத ‘boo”, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சுல்லிவன் பயங்கரமாக உறுமுவதைக் கண்டு அஞ்சி ஒதுங்குவதும், சுல்லிவன் அதைக் கண்டு வருந்தி சிறுமியுடனான நட்பைப் புதுப்பிக்க தவிப்பதும் நெகிழ்வான காட்சிகள். இடத்திற்கேற்ப சட்டென்று உருவம் மாறும் பச்சோந்தியின் சாகசங்கள் வியக்கவைக்கின்றன. தான் தப்பிக்க சந்தர்ப்பம் கிடைத்தும் சிறுமியை விட்டுக் கொடுக்காமல் அதற்காக பல இன்னல்களையும் எதிர்கொள்ளும் சுல்லிவனின் தியாகவுணர்வும் பாசமும் கலங்க வைக்கின்றன. மைக்கிற்கும் செக்ரட்டரியான சீலியாவிற்கும் இடையிலான காதல் கலாட்டாக்கள் சிரிக்கவைக்கின்றன. 

இறுதிப்பகுதியில் சுல்லிவனின் பொறுப்பில் நிறுவனம் கைமாறும் போது குழந்தைகளைப் பயமுறுத்தி கத்தவைக்காமல் அவர்களைச் சிரிக்க வைப்பதின் மூலம் மின்சேகரிப்பை அமைப்பது ஆக்கபூர்வமான மாற்றத்தை உணர்த்துகிறது. Randy Newman-ன் அற்புதமான பின்னணி இசை இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. சுல்லிவன் அவதியுறும் பனிப் பிரதேசக் காட்சிகள், ரோலர் கோஸ்டர் போல நகரும் கதவுகளின் இடையே சிறுமியைச் சுமந்துகொண்டு சாகசம் போன்ற காட்சிகளின் உருவாக்கம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 

Pete Docter இயக்கிய இந்த அனிமேஷன் திரைப்படத்தின் prequel பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு 2013-ல் ‘Monsters University’ என்கிற தலைப்பில் வெளிவந்தது.

 

 

சுல்லிவன் மற்றும் ‘Boo’வின் பாசக் காட்சிகளுக்காக குழந்தைகளுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் ‘Monsters, Inc.’
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்