பூதம் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ரகசிய வழி! #MyNeighborTotoro #MovieRewind

 My Neighbor Totoro

My Neighbor Totoro - இந்த ஜப்பானிய அனிமேஷன் திரைப்படத்தின் சிறப்பைச் சொல்ல, இதன் இயக்குநர் பெயரை சொன்னாலே போதும்... ஹயோ மியசாகி. 

இவரது உருவாக்கப் பாணியை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். கணினி நுட்பம் பிரமாண்டமாக வளர்ந்திருந்தாலும், கையால் வரையப்பட்ட சித்திரங்களால் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். இவரது திரைப்படங்களுக்கு தனித்துவத்தையும் பெருமையையும் ஈட்டித்தருவது இதுவே. இவர் உருவாக்கும் காட்சிகளின் வண்ணமும் அசைவுகளும் மிக மிக வசீகரம் நிறைந்தது. 

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும், ஜப்பானிய உருவாக்கங்களுக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஹாலிவுட் படைப்புகள்போல திணிக்கப்பட்ட பரபரப்போ, செயற்கையான சுவாரசியங்களோ இருக்காது. குடும்ப உறவின் அன்பு, நாட்டார் கதைகளை நினைவுபடுத்தும் பாணி, ஜப்பானிய கலாச்சார அடையாளங்கள் ஆகியவற்றுடன், நீரோடையின் மெல்லிய நகர்வுடன் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கும். My Neighbor Totoro திரைப்படமும் அப்படி ஓர் உன்னத அனுபவத்தைத் தருகிறது. 

பல்கலைக்கழக பேராசிரியரான டாட்சு குஸாகபி (Tatsuo Kusakabe), தனது இரண்டு மகள்களுடன் ஒரு கிராமத்து வீட்டுக்கு இடம்பெயர்கிறார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரின் மனைவி, நகரத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்கை சூழ்நிலையில் கிராமத்து வீட்டில் வாழ்வதற்கு விருப்பமுள்ள பேராசிரியர், அவ்வப்போது தன் மனைவியைப் பார்த்துவிட்டு வருவார். 

அவரின் மகள்கள் சட்சுகி மற்றும் மேய் (Mei). கிராமத்தின் பசுமை, விவசாய நிலங்கள், மரங்கள், விலங்குகள் போன்றவற்றைக் கண்டதும், மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்கள் வசிப்பது ஒரு பழமையான வீடு. அதுவும் பிடித்துப்போக, ‘ஓ’வென்று கத்திக்கொண்டே வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார்கள். ஆங்காங்கே கருவாலிக் கொட்டைகளைக் கண்டு வியக்கிறார்கள். ‘இங்கே அணில்கள் இருக்கும்போல’ என்கிறார் தந்தை. 

சிறுமிகள் இருவரும் ஓர் அறையைத் திறந்ததும், ஏராளமான கருப்பு உருண்டை பூச்சிகள் இருளில் மறைகின்றன. வியப்பும் திகைப்புமாக அவற்றைப் பார்க்கிறார்கள். அவை ஆளில்லாத வீடுகளில் இருக்கும் நல்ல ஆவிகள் எனச் சொல்லப்படுகிறது. அந்த வீடுகளில் குடியேறுபவர்கள் மகிழ்ச்சியாக சிரிக்கும்போது, அவை தாமாக வெளியேறிவிடும் என்று நம்பிக்கை. இரண்டு சிறுமிகளும் மகிழ்ச்சியாகச் சிரிப்பதால், அவை வானத்தை நோக்கிப் பயணித்து மறைகின்றன. 

ஒரு நாள் அக்கா பள்ளிக்குச் சென்றுவிட, தங்கையான மேய் வெளியே சுற்றிப் பார்க்கச் செல்கிறாள். அப்போது, முயல் போன்ற தோற்றத்தில் இரண்டு சிறிய உருவங்கள் நகர்ந்துசெல்வதைக் காணும் சிறுமி, மகிழ்ச்சியுடன் அவற்றைத் துரத்திச்சென்று, வழிதவறி ஒரு ரகசியப் பாதையினுள் விழுகிறாள். 

 My Neighbor Totoro

அங்கே ஒரு பெரிய உருவம் படுத்துள்ளது. ஆனால், பயமின்றி அதன்மீது படுத்து விளையாடுகிறாள் மேய். தான் கதைகளில் கேள்விப்பட்ட ‘டோட்டோரோ’ என்பது அதுதான் எனத் தீவிரமாக நம்புகிறாள். அந்த உருவத்துடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு உறங்கிவிடுகிறாள். சிறுமியைக் காணாமல் அவள் தந்தையும் அக்காவும் ஊரெங்கும் தேடுகிறார்கள். ஒருவழியாக உறங்கிக்கொண்டிருக்கும் அவளைக் கண்டுபிடிக்கிறார்கள். சிறுமி எழும்போது அந்தப் பெரிய உருவம் இல்லை. நடந்தவற்றை சொல்கிறாள். ‘நான் சொல்வதை நம்புங்கள்’ என்கிறாள். 'அது காவல் தேவதையாக இருக்கலாம்’ என்கிறார் தந்தை. 

சில பல சம்பவங்களுக்குப் பிறகு தன் தாய் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதை அறியும் சிறுமி, தனியாக நகரத்துக்குக் கிளம்பி, வழி தெரியாமல் சிக்கிக்கொள்கிறாள். அந்தச் சிறுமிக்கு என்னவானது, அந்தப் பெரிய உருவம் என்ன? அது என்னவெல்லாம் செய்தது என்பதை விவரிக்கிறது திரைப்படம். 

அக்காவும் தங்கையும் மிக உற்சாகத்துடன் கிராமத்தில் நுழையும் ஆரம்ப காட்சியிலேயே, அவர்களின் மகிழ்ச்சி நமக்குள்ளும் பரவுகிறது. குறிப்பாக, இளைய சகோதரியான மேய் செய்யும் குறும்புகள், போலிக் கோபங்கள், ‘நான்தான் முதலில் தலைவாரிக்கொள்வேன்’ என்று அம்மாவின் அன்பைப் பெற முந்தும் பாசம், பயமின்றி பூதம் போன்ற உருவத்துடன் பழகும் அழகு என நம்மைச் சுண்டி இழுக்கிறாள். தாய்க்கு ஆபத்து என்று கேள்விப்பட்டதும், தன்னை அழைத்துச்செல்ல யாரும் இல்லையென கோபித்துக்கொண்டு, தானே கிளம்பிச் செல்லும் பிடிவாதம்கூட கொள்ளை அழகு. ஒரு அக்காவுக்கே உரிய பொறுப்புடனும் பாசத்துடனும் நடந்துகொள்கிறாள் பெரிய சிறுமி. 

இவர்களுக்கு உதவி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பக்கத்து வீட்டுப் பாட்டியின் அன்பும் உதவியும் நெகிழவைக்கிறது. அவர்கள் வீட்டுச் சிறுவன் அதிகம் பேசாத சிடுமூஞ்சியாக இருக்கிறான். ஆனால், இரண்டு சிறுமிகளுக்கும் தொடர்ந்து உதவிக்கொண்டே இருக்கிறான். இதுபோன்ற பாத்திரங்களை நம் அன்றாட வாழ்க்கையிலும் பார்த்திருப்போம் என்பதால், இது புனைவு என்றே தோன்றாமல், எவரோ ஒருவரின் வாழ்க்கையைப் பார்க்கும் உணர்வு தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் இயல்பும் நம்பகத்தன்மையும் மிளிர்கிறது. 

இந்தத் திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட ‘டோட்டோரோ’ என்கிற உருவம், புகழ்பெற்ற அனிமேஷன் கதாபாத்திரம் ஆகிவிட்டது. வால்ட் டிஸ்னி உருவாக்கிய 'மிக்கி மவுஸ்’ போல, கலை இயக்குநர் ஓகா உருவாக்கிய இந்த உருவம், ஜப்பானிய சிறார்களை மிகவும் கவர்ந்துவிட்டது. சர்வதேச அளவில் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கான வரிசையில் டோட்டோரோவுக்கு தனி இடமும் புகழும் உண்டு. நம் நாட்டார் கதைகளில் வரும் கிராமத்து காவல் தெய்வங்களையும் நல்ல தேவதைகளையும் இந்தப் பாத்திரம் நினைவுபடுத்துகிறது. 

கிராமத்து நிலவெளிகளின் பின்னணியில் நிகழும் திரைப்படம் என்பதால், அது தொடர்பான காட்சிகள் மிகுந்த அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ளன. டோட்டோரா மாதிரியான உருவங்கள் பயணம் செய்வதற்காக, பூனை உருவில் வரும் பேருந்து அற்புதன். வெளிச்சத்தை உமிழ்ந்தபடி இரவில் வரும் இந்தப் பேருந்தில் நாமும் ஏறி பயணம் செய்யலாமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. 

 

 

இந்த அனிமேஷன் திரைப்படத்தை காட்சிகளின் வழியாக அறிந்துகொள்வதே, மியசாகியின் அசாதாரணமான உழைப்புக்கும் கற்பனைத்திறனுக்கும் மரியாதை செலுத்துவதாக இருக்கும். Joe Hisaish உருவாக்கிய அற்புதமான பின்னணி இசை, காட்சிகளின் இயல்புத்தன்மையோடு ஒத்திசைத்து ஒலிக்கிறது. ஆங்கில மொழியிலும் இதன் வடிவம் உள்ளதுதான் என்றாலும், ஜப்பான் மொழியின் இனிமையான ஒலியைக் கேட்டு ரசிப்பதுதான் சிறந்தது. 

ரசித்துப் பார்க்கவேண்டிய அற்புதமான படம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!