Published:Updated:

'மூன்று முட்டாள்களின் வீர சாகசங்கள்' - #MickeyDonaldGoofyTheThreeMusketeers #MovieRewind

சுரேஷ் கண்ணன்
'மூன்று முட்டாள்களின் வீர சாகசங்கள்' - #MickeyDonaldGoofyTheThreeMusketeers #MovieRewind
'மூன்று முட்டாள்களின் வீர சாகசங்கள்' - #MickeyDonaldGoofyTheThreeMusketeers #MovieRewind
'மூன்று முட்டாள்களின் வீர சாகசங்கள்' - #MickeyDonaldGoofyTheThreeMusketeers #MovieRewind

வால்ட் டிஸ்னி உருவாக்கிய புகழ்பெற்ற கற்பனை பாத்திரங்களான மிக்கி மவுஸ், டோனால்டு டக் மற்றும் ஸ்கூபி ஆகியவை அனிமேஷன் திரைப்படத்தில் தனித்தனியாக வந்தாலே நகைச்சுவை தெறிக்கும். இவர்கள் மூவரும் இணைந்து வந்தால் எப்படி இருக்கும்? அப்பாவிகளாகவும் முட்டாள்களாகவும் உள்ள இந்த மூன்று பாத்திரங்களும், தங்களின் நட்பின் ஒற்றுமையால் உத்வேகம் பெற்று, சாகசங்களின் வழியாக ஓர் இளவரசியைக் காப்பாற்றுவதுதான் கதை. சுவாரஸ்யம், நகைச்சுவை, பரபரப்பும் இணைந்த காட்சிகள் Mickey, Donald, Goofy: The Three Musketeers திரைப்படத்தின் காணனுபவத்தை உன்னதமாக்குகின்றன. 

பாடுவதில் விருப்பமுள்ள ஓர் ஆமை வாய்ப்புக்காக ஒரு கதை சொல்லியிடம் கெஞ்சுகிறது. ஆமைக்குத் தந்த வாக்குறுதியை அலட்சியப்படுத்தும் அவர், கவனக்குறைவாக நடந்துசென்று பள்ளத்தில் விழுந்துவிட, கேமிராவின் முன்பு கதை சொல்லும் அதிர்ஷ்டம் ஆமைக்கு தற்செயலாக கிடைக்கிறது. மகிழ்ச்சியில் திகைத்துப்போகும் ஆமை சுதாரித்துக் கொண்டு, அப்போது கையில் கிடைக்கும் ‘The Three Musketeers’ என்ற புத்தகத்திலிருந்து உற்சாகமாகக் கதை சொல்கிறது. அதன் வழியாக விரிகிறது இந்தத் திரைப்படம். 

மிக்கி மவுஸ், டோனால்டு டக், ஸ்கூபி மற்றும் அவர்களின் வளர்ப்பு நாயான புளூட்டோ ஆகியவை சாலையில் வசிக்கும் சிறு உருவங்களாக இருக்கின்றன. சில கெட்டவர்கள் அவர்களை தொந்தரவு செய்ய, ராயல் மஸ்கிடியர்ஸ் வந்து காப்பாற்றுகிறார்கள். அதில் ஒருவர், மிக்கிக்கு தனது தொப்பியைப் பரிசாக அளிக்கிறார். 

‘அவர்களைப்போல வீரர்களாக வளரவேண்டும்’ என்கிற கனவும் லட்சியமும் நம் நண்பர்களுக்குள் உருவாகிறது. தங்களை வீரர்களாக கருதிக்கொண்டாலும் அடிப்படையில் அவர்கள் கோழைகளாகவும் முட்டாள்களாகவும் இருப்பதால், பரிகாசங்களுக்கு உள்ளாகிறார்கள். அரண்மனையில் வாயிற்காப்போர்களாகப் பணிபுரியும் இவர்கள் செய்யும் குளறுபடிகளால், ‘நீங்கள் எந்த வேலையையும் உருப்படியாக செய்யத் தெரியாத அறிவில்லாதவர்கள்’ என்று திட்டுகிறார் கேப்டன் பீட். 

'மூன்று முட்டாள்களின் வீர சாகசங்கள்' - #MickeyDonaldGoofyTheThreeMusketeers #MovieRewind

இளவரசியைக் கடத்திச்சென்று எங்காவது விட்டுவிட்டு தானே அந்த ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்கிற ரகசிய விருப்பமும் சதி திட்டங்களும் கேப்டன் பீட்டிடம் உண்டு. இளவரசியான மின்னி, (இதுவும் ஒரு மிக்கி மவுஸ்) காதல் சார்ந்த கற்பனைகளில் இருக்கிறாள். 'என் வருங்கால காதலனை முதல் பார்வையிலேயே கண்டுகொள்ள முடியும். அது சார்ந்த துல்லியமான அடையாளங்கள் என் மனதில் இருக்கின்றன’ என்று தோழியிடம் கூறுகிறாள். ‘ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒருவன்தானே உங்களுக்கு மணமகனாக வர முடியும்?’ என்கிற தோழியின் ஆட்சேபம் மின்னியின் காதில் விழுவதில்லை.

இந்நிலையில், பீட் அனுப்பிய அடியாட்களால் இளவரசிக்கு ஆபத்து ஏற்பட்டு தற்செயலாக அதிலிருந்து மீள்கிறாள். ‘எனக்குப் பாதுகாவலர்கள் வேண்டும்’ என்று கேப்டனிடம் கறாராக கூறுகிறாள் இளவரசி. 'அந்த மூன்று முட்டாள்களையும் இவளுக்குப் பாதுகாவலர்களாக நியமித்தால், தனது திட்டத்தில் இடையூறும் இருக்காது' என நினைக்கிறார் பீட். 

ராயல் மஸ்கிட்டியர் பரிசாக வழங்கிய தொப்பியை அணிந்துவரும் மிக்கி மவுஸை காணும் இளவரசி, முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறாள். ‘தன் காதல் இளவரசன் வந்துவிட்டான்’ என்று உற்சாகம் அடைகிறாள். இதனால், அவர்களின் முட்டாள்தனங்களை இவளால் உணரமுடிவதில்லை. 

இளவரசியைப் பாதுகாப்பதற்காகவே கேப்டன் தங்களை நியமித்திருக்கிறார் என்று மூவரும் நினைத்துக்கொண்டிருக்க, 'இந்த முட்டாள்களை எளிதாக அப்புறப்படுத்தி இளவரசியைக் கடத்தும் திட்டத்தை நிறைவேற்றலாம்' என்கிற கனவில் இருக்கிறார் பீட். 

'மூன்று முட்டாள்களின் வீர சாகசங்கள்' - #MickeyDonaldGoofyTheThreeMusketeers #MovieRewind

கேப்டனின் நோக்கம் நிறைவேற்றியதா? கோழைகளான மூன்று பேரால் இளவரசியைக் காப்பாற்ற முடிந்ததா? இளவரசிக்கு என்னவாயிற்று என்பதையெல்லாம் ஜாலியான கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள். 

அலெக்சாண்டர் டூமா எழுதிய ‘தி திரீ மஸ்கிடியர்ஸ்’ நாவலை அடிப்படையில் மூன்று கார்ட்டூன் பாத்திரங்களை இணைத்த இதன் திரைக்கதை சுவாரசியமாக அமைந்துள்ளது. கதை சொல்லியான ஆமையும், கதையின் இடையிடையே வந்து பொருத்தமான பாடல்களைப் பாடுவது அருமை. 

கேப்டனின் அடியாட்களால் எளிதாக வீழ்த்தப்படும் மூன்று உருவங்களும், தங்களின் நீண்ட கால நட்பின் அடிப்படையில் மீண்டும் ஒன்றிணைந்து, இளவரசியைக் காப்பாற்ற முடிவுசெய்வதும், நகைச்சுவையான சாகசங்களின் மூலம் அதைச் செயலாக்குவதும் அருமையான காட்சிகள். இவர்களை எளிதாக எடைபோட்ட கேப்டன், இவர்கள் ஒன்றாக இருந்தால் வீழ்த்துவது சிரமம் என்பதைத் தாமதமாக உணர்கிறார். அவர்களை தனித்தனியாக பிரித்துப் பயமுறுத்தி துரத்துவதும், அச்சம் காரணமாக பிரிந்து நிற்கும் இவர்கள், ‘All For One and One For All’ என்கிற பாடலின் மூலம் உத்வேகம் பெற்று நேரடியாக கேப்டனுடன் மோதி வெல்வதும் அபாரமான கிளைமாக்ஸ். 

நேரடி வீடியோவாக தயாரிக்கப்பட்டது இந்த அனிமேஷன் திரைப்படம். வால்ட் டிஸ்னியின் உருவாக்கம் என்பதால், ஒவ்வொரு பிரேமும் வசீகரமான வண்ணங்களுடனும் அபாரமான கற்பனை வளத்துடனும் உள்ளது. Bruce Broughton இசையும் பாடல்களும் இந்த அனுபவத்தை மேலதிக தரத்துக்கு இட்டுச்செல்கின்றன. திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறர் டோனோவன் குக் (Donovan Cook). 

குழந்தைகளுடன் காண்பதற்கு அற்புதமான இந்த அனிமேஷன் படைப்பை தவறவிடாதீர்கள். 
 

சுரேஷ் கண்ணன்