பறவைகளோட குணமே சுதந்திரமா பறப்பதுதானே! #ChickenRun #MovieRewind

Chicken Run

கூண்டில் அடைபட்டிருக்கும் பறவைக்குத்தான் சுதந்திரத்தின் அருமை அதிகமாகத் தெரியும் என்பார்கள். தாங்கள் கூண்டில் அடைபட்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கும் அரசியல் உணர்வற்ற மனிதர்களுக்கு இடையில், சுதந்திரத்தைப் பெறுவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்யும் பறவைகள் பற்றிய சுவாரஸ்யமான திரைப்படம் Chicken Run. 

அது ஒரு கோழிப் பண்ணை. அதை நடத்துபவர்கள் திரு மற்றும் திருமதி. ட்வீடி. கணவர் முட்டாள் எனில், மனைவியோ லாப வெறிகொண்ட கொடுமைக்காரர். எந்தவொரு கோழியாவது தொடர்ந்து முட்டையிடாமல் இருந்தால், உடனே கசாப்புக் கடைக்கு அனுப்பப்படும். வாரத்துக்கு ஒருமுறை இது சார்ந்த கணக்கெடுப்பு நடக்கும்போது, ‘யாருடைய உயிர் இன்று போகப்போகிறதோ’ என்று அனைத்துக் கோழிகளும் பயந்து நடுங்கும். இந்தக் கூட்டத்தில்தான் 'ஜிஞ்சர்' என்கிற புத்திசாலி கோழியும் இருக்கிறது. 

 கடுமையான கண்காணிப்பும் அடக்குமுறையும் நிறைந்த அந்தப் பண்ணையிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து அது தொடர்ந்து யோசிக்கிறது. அதற்காக அது முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் ட்வீடியிடமும் வேட்டை நாய்களிடமும் பிடிபட்டு தண்டனையைப் பெறுவது வழக்கம். தொடர்ந்து தண்டனை பெற்றாலும், தப்பிப்பது குறித்த சிந்தனையைக் கைவிடுவதேயில்லை. தான் மட்டுமல்லாது, தனது நண்பர்களையும் அங்கிருந்து விடுவிக்க வேண்டும் என்பது அதன் லட்சியம். தொலைதூரத்தில் தெரியும் மலைப்பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது அதன் கனவு. இதற்காக, பல திட்டங்களைத் தீட்டி, ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிகிறது. 

இந்நிலையில் முதலாளி அம்மாவான ட்வீடிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. ‘இந்தக் கோழிகள் போடும் முட்டைகளைத் தினமும் பொறுக்கிச் சேமித்து விற்று என்றைக்குப் பணக்காரியாவது? அதற்குப் பதிலாக, மொத்தமாகக் கொன்று மாமிசத் தின்பண்டங்களை தயார்செய்தால், விரைவில் பணம் சேர்க்கலாம்' என நினைக்கிறார். இது தொடர்பான இயந்திரங்களையும் வரவழைக்கிறார். 

தாங்கள் மொத்தமாக அழியப்போகும் தகவலை அறிந்த ஜிஞ்சர், எப்படியாவது தப்பிக்க வேண்டுமே என்று பதறுகிறது. அப்போது, பறக்கும் சேவல் ஒன்று விபத்தில் சிக்கி, இந்தப் பண்ணைப் பிரதேசத்துக்குள் வந்து விழுகிறது. சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரியும் அந்தச் சேவலைத் தேடி கம்பெனிக்காரர்கள் வருகிறார்கள். அவர்களிடமிருந்து சேவலை ஒளித்துவைத்துக் காப்பாற்றும் ஜிஞ்சர், பிரதிபலனாக ஒரு வாக்குறுதியைக் கேட்கிறது. “எங்களுக்குப் பறக்க கற்றுத்தா. உன் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்” என்கிறது. ராக்கி என்கிற பெயர்கொண்ட அந்தச் சேவலும் ஒப்புக்கொள்கிறது. 

ஒருபுறம் கோழி இறைச்சி இயந்திரங்கள் வந்துசேர்ந்து தொழிற்சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. இன்னொருபுறம் கோழிகள் பறப்பதற்கான பயிற்சி நடைபெறுகிறது. தொழிற்சாலை இயங்க ஆரம்பிக்கும் முன்பு கோழிகள் அங்கிருந்து பறந்துவிட வேண்டும். கோழிகள் கொடுமைக்காரப் பண்ணையிலிருந்து தப்பித்தனவா? ஜிஞ்சரின் திட்டங்கள் எவ்வாறு இருந்தன? ராக்கி எவ்வாறு இவர்களுக்கு உதவியது? 

‘ஸ்டாப்மோஷன்’ நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படங்கள் வரிசையில், வணிக ரீதியாகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் இது. ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றதே இத்திரைப்படத்தின் சிறப்பை எளிதில் விளக்கிவிடும். பல சர்வதேச விழாக்களிலும் விருதுகளை வென்றுள்ளது. 

Chicken Run

ஜிஞ்சரின் புத்திசாலித்தனமும் பண்ணையிலிருந்து தப்பிப்பதற்காக போடும் திட்டங்களும், அதற்காக தன் தோழர்களுக்குத் தரும் உத்வேகங்களும், ராக்கியைப் பயன்படுத்தும் ஜாலியான தந்திரங்களும், அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போய், மரணத்தின் எல்லையில் எடுக்கும் கடைசி ஆயுதமும்… எனப் பல காட்சிகள் மிக சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளன. ‘விமான வீரராகப் பணிபுரிந்தேன்’ என்கிற பழம்பெருமையில் மற்றவர்களை அதட்டிக்கொண்டே இருக்கும் வயதான கோழி, பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் ஸ்வெட்டர் பின்னுவதைக் கைவிடாத கோழி எனப் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் படம் முழுவதும் கவர்கின்றன. தங்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக ராக்கியை இதரக் கோழிகள் கருதுவது, அது பொய்த்துப்போன ஏமாற்றம், வேடம் கலைந்துபோன ராக்கி இவர்களைக் கைவிட்டுச் சென்று, பின்பு சரியான சமயத்தில் திரும்பிவருவது என அற்புதமான சம்பவங்களுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

தங்களின் சகாக்கள் கொல்லப்படுவதைக் கண்டு கோழிகளுக்கு உண்டாகும் அச்சம் மற்றும் ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்நோக்கும் காட்சிகள் நம்முள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பழுதடைந்த தொழிற்சாலை சரிசெய்யப்படும் காட்சி ஒருபுறமும், அதற்குள் தப்பிக்க கோழிகள் செயல்படுத்தும் திட்டங்கள் இன்னொருபுறமும் என இதன் உச்சக் காட்சிகள் மிக மிகப் பரபரப்பான சம்பவங்களால் நிறைந்துள்ளன. 

 

 

Aardman Animations உருவாக்கிய முதல் முழுநீள அனிமேஷன் திரைப்படம் இது. ராக்கி பாத்திரத்துக்கு நடிகர் மெல்கிப்சன் குரல் தந்துள்ளார். இதர நட்சத்திரங்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர். Peter Lord மற்றும் Nick Park இயக்கியிருக்கும் இத்திரைப்படம், குழந்தைகளுடன் இணைந்து கண்டுகளிக்க சிறந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!