Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பண்ணையாளார்களின் கொலைத் திட்டத்திலிருந்து நரி தப்பியது எப்படி? #FantasticMrFox #MovieRewind

Fantastic Mr Fox

குழந்தைகள் விரும்பி வாசிக்கும் ஏராளமான புதினங்களை எழுதியவர், ரோல்டு தால். அவற்றில் ஒரு சுவாரசியமான புதினம், ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ் ( Fantastic Mr.Fox). இதன் அடிப்படையில் உருவான திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளியானது. வெஸ் ஆண்டர்சன் இயக்கிய முதல் அனிமேஷன் திரைப்படமான இது, ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. புத்திசாலித்தனமான ஒரு நரிக் குடும்பத்தைப் பற்றிய திரைப்படம் இது. தங்களைக் கொல்லவரும் மனிதர்களிடமிருந்து அவை எப்படி சாமர்த்தியமாகத் தப்பிக்கின்றன என்பது தொடர்பான காட்சிகள் மிக மிக சுவாரசியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களோடு மேலும் சில விஷயங்களை இணைத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார், வெஸ் ஆண்டர்சன்.

அது ஒரு வனம். அங்குள்ள பொந்துகள் ஒன்றில் மறைந்து வாழ்கிறது ஒரு நரிக் குடும்பம். திருவாளர் நரி காட்டிலிருந்து, மனிதர்கள் வாழும் இடத்துக்குச் சென்று கோழி, வாத்து போன்றவற்றைத் திருடி வருவார். உதவிக்குத் திருமதி நரியும் செல்லும். அப்படிச் சென்ற ஒரு தருணத்தில், மனிதர்களின் பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.

திருவாளர் நரி அடிப்படையில் புத்திசாலியே என்றாலும், சமயங்களில் முந்திரிக்கொட்டைத்தனமாக செய்யும் காரியங்களால் வம்பை விலைக்கு வாங்கிக்கொள்வார். பறவையைத் திருடினோமா, சமர்த்தாக வீட்டுக்கு வந்து சேர்ந்தோமோ என்றில்லாமல், அங்கிருந்த ஒரு லிவரைப் பிடித்து இழுத்ததில் கூண்டுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போதுதான் அந்தத் தகவலைச் சொல்கிறார் திருமதி நரி. “நான் கர்ப்பமாக இருக்கிறேன்”.

Fantastic Mr Fox

சில வருடங்கள் கடக்கின்றன. அவர்களுக்கு இப்போது ஒரு மகன். ‘உயிருக்கு ஆபத்தைத் தரும் திருட்டுத் தொழிலை இனி செய்ய வேண்டாம்’ என்று திருமதி நரி கேட்டுக்கொள்வதால், திருவாளர் நரி பத்திரிகையாளராக மாறிவிடுகிறார். வறுமை இருந்தாலும் குடும்ப வாழ்க்கை ஓரளவுக்கு இனிமையாகக் கழிகிறது. இடுக்கான ஒரு பொந்தில் வாழ்வது திருவாளர் நரிக்குப் பிடிக்கவில்லை. சற்று வசதியான இடத்துக்கு மாற நினைக்கிறார். விற்பனைக்கு வரும் ஒரு பெரிய மரத்தை விலைக்கு வாங்கலாம் என்று எண்ணம். வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்கிறார். “அந்த இடம் பாதுகாப்பு இல்லாதது. போகிஸ், பன்ஸ், பீன் என்கிற மூன்று பண்ணையாளர்கள் அந்த இடத்தைச் சுற்றி வாழ்கிறார்கள். அவர்கள் கோக்குமாக்கான ஆசாமிகள். எனவே, வேறு இடம் பாருங்கள்'’ என்கிறார் வழக்கறிஞர்.

ஆனால், அந்த ஆலோசனையைத் திருவாளர் நரி நிராகரிக்கிறார். பிடிவாதத்துடன் அந்த மரப்பொந்தை விலைக்கு வாங்கிக் குடியேறுகிறார்கள். பத்திரிகையாளராக மாறிவிட்டாலும் திருவாளர் நரிக்குப் பழைய திருட்டுத் தொழிலின் மீதான ருசி குறைவதில்லை. எனவே, திருமதி நரிக்குத் தெரியாமல், தன் முட்டாள் நண்பன் ஒருவனோடு இணைந்து இரவில் திருட்டுத் தொழிலிலும் ஈடுபடுகிறார். பண்ணையாளர்களின் வீடுகளில் பலத்த பாதுகாப்பையும் மீறி அவர்களின் கோழி, வாத்து, ஆப்பிள் சாறு போன்றவற்றைச் சாமர்த்தியமாக ‘லபக்' செய்து வருகிறார்.

கடுமையான கண்காணிப்பையும் மீறி தங்களின் உடைமைகள் திருட்டுப்போவதால் பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அருகிலிருக்கும் நரிதான் இதற்குக் காரணம் என்றும் கண்டுபிடிக்கிறார்கள். ‘எப்படியாவது அந்த நரியைக் கொல்ல வேண்டும்’ என்று வீர சபதம் எடுக்கிறார்கள். அவர்களின் சில முயற்சிகள் தோல்வி அடைவதால், கொலைவெறி இன்னமும் ஏறுகிறது. பல்வேறு கருவிகளால் மரத்தைச் சுற்றி ஆழமான பள்ளம் தோண்டுகிறார்கள். இந்தத் திடீர் ஆபத்தால் பதறும் நரிக் குடும்பம், பள்ளத்தை தோண்டி இன்னமும் ஆழத்துக்குச் செல்கின்றன. பண்ணையார்களும் அசறாமல் இரவு பகலாக கொலைவெறியுடன் தோண்டுகிறார்கள். ‘போச்சு.. நாம் பட்டினியால் இங்கேயே சமாதியாக வேண்டியதுதான்” என்று நரிக் குடும்பம் பதறுகிறது. இவர்களுக்கு மட்டுமின்றி, அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் இதனால் ஆபத்து ஏற்படுகிறது. நரிக் குடும்பமும் இதர விலங்குகளும் ஆபத்திலிருந்து தப்பியதா இல்லையா என்பதைப் பதற்றமும் சுவாரசியமும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

Fantastic Mr Fox

இருப்பதிலேயே கடினமான உத்தியான ‘ஸ்டாப்மோஷன்’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படத்தில், காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. மூன்று வேளையும் கோழியை உண்ணும் பண்ணையாளர், தன் வீட்டில் அமைந்த பரிசோதனைக்கூடத்தின் மூலம் ஆப்பிள் சாறு உருவாக்கி அருந்தும் பண்ணையாளர், நரிகளின் வீட்டில் விருந்தாளியாக வரும் உறவுக்காரச் சிறுவன், தாழ்வுமனப்பான்மையால் அவனுடன் போட்டியிடும் நரியின் மகன், விசில் அடித்து நாக்கால் சப்தமிடும் விநோதமான மேனரிசத்தால் கவரும் திருவாளர் நரி, அவருடைய முட்டாள் கூட்டாளி என ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளுனி, திருவாளர் நரி பாத்திரத்துக்கு அற்புதமாகக் குரல் கொடுத்துள்ளார். மனைவியின் அறிவுரையைக் கேட்காமல் மறுபடியும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு தன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தைத் தேடித்தரும் திருவாளர் நரி, தனது தவற்றை உணர்ந்து தப்பிக்கும் முயற்சியில் இனிய ஆச்சரியங்களைச் சந்திப்பதே கிளைமாக்ஸ். 

நரிகள் தந்திரமானவை, திருட்டுத்தனமானவை போன்ற கற்பிதங்களை விலங்குகளின் மீது ஏற்றும் தன்மையை இந்தக் கதையாடலும் பின்பற்றுகிறது என்கிற நெருடல் தவிர, மிக சுவாரசியமான திரைப்படமே.  பின்னணி இசையும் பாடல்களும் கதையோட்டத்துக்கு உறுதுணையாக உள்ளன.

 

 

குழந்தைகளோடு காணவேண்டிய அருமையான அனிமேஷன் திரைப்படம் இது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்