ஆஸ்கார் 2015; சிறந்த படம் உள்ளிட்ட நான்கு விருதுகளை பெற்ற “பேர்டு மேன்” ஒரு பார்வை!

நீங்கள் சினிமாவில் புகழ்பெற்ற ஒரு ஹீரோ என வைத்துக்கொள்வோம். 15 வருடங்கள் கழித்து தற்போது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறீர்கள். முன்னர் உங்களுக்குக் கிடைத்த புகழ் போதையை, இப்போது வேறொரு நடிகர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். என்ன செய்வீர்கள்? இதுதான் 'பேர்டு மேன்’ படத்தின் கதை! 

அலிஜண்ட்ரோ இயக்கத்தில் மைக்கேல் கீட்டன் நடிப்பில் 'பிளாக் காமெடி’ வகை படமாக மிரட்டுகிறது படம்.

ஊரே கொண்டாடிய 'பேர்டு மேன்’ எனும் சூப்பர் ஹீரோ படத்தில் நடித்துப் பிரபலமான நடிகர், ரிக்கன் தாமஸ். நடித்து நடித்தே இளைமையைப் போக்கியவருக்கு முதுமையில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. ஒரு சிறுகதையை நாடகமாக எழுதி, இயக்கி ஒரு சிறு வேடத்தில் நடித்துவருகிறார். கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று... ரிக்கன்; இன்னொன்று ரிக்கனின் மனசாட்சி. ரிக்கன் நடித்த 'பேர்டு மேன்’ பட கதாபாத்திரம்தான் அவருடைய மனசாட்சி. நிஜத்தில் ரிக்கன் உளவியல்ரீதியான பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார். அதாவது தன்னால் அந்தரத்தில் மிதக்க முடியும், விரலை அசைத்து பொருட்களை நகர்த்த முடியும் என நம்புகிறார். இதில் அவரின் மனசாட்சியான பேர்டு மேன், 'ஹேய் உன்னை மக்கள் இன்னும் மறக்கல.. நீ மறுபடி பேர்டு மேனா நடி’ என நச்சரிக்கிறது. இதோடு இன்னொரு பிரச்னையும் சேர்ந்துகொள்கிறது. ரிக்கன் நடத்தும் நாடகத்தில் நடிக்க வருகிறார் மைக் என்கிற புகழ்பெற்ற நாடக நடிகர். ரிக்கனுக்குக் கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச பாராட்டுக்களையும் தன் பக்கம் திருப்பிக்கொள்கிறார் மைக். ஒரு சினிமா நடிகராகத் தோற்று, இப்போது நாடக நடிகராகவும் தோற்றுப்போன ரிக்கன் என்ன செய்கிறார் என்பது செம எமோஷனல் கதை.

ரிக்கனாக நடித்திருக்கும் மைக்கேல் கீட்டன் யார் தெரியுமா? சூப்பர் ஹீரோ படமான 'பேட் மேன்’ படத்தில் பேட் மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர்! நிஜமும் நிழலும் பின்னிப் பிணைந்த கதையான 'பேர்டு மேன்’ படத்தில் கீட்டனின் நடிப்பு... அசத்தல்; ஆசம். படத்தில் ஒரு காட்சி. ரிக்கன் சில நிமிடங்களில் மேடையில் இருக்க வேண்டும். நாடக அரங்கத்தின் பின்பக்க வாயிலில் இருந்து கீட்டன் பதற்றமாக வெளியே வரும்போது எதிர்பாராதவிதமாக கதவு சாத்திக்கொள்கிறது. அதில் அவரது கோட் மாட்டிக்கொள்கிறது. எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியவில்லை. நாடகம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன. எனவே, கோட்டைக் கழட்டிப் போட்டுவிட்டு உள்ளாடையுடன் ஓடுகிறார். அந்தப் பரபரப்பிலும் அவரிடம் ஒருவன் ஆட்டோகிராப் கேட்க, அவர் ஓடிக்கொண்டே ஆட்டோகிராப் போடுவது... கண்கலங்க வைக்கும் காமெடி!

பா.ஜான்ஸன்

“ஆஸ்கார் விருது” முழுமையான பட்டியலுக்கு: http://cinema.vikatan.com/articles/news/8/8951

Do you like the story?

Please Appreciate the Author by clapping!