ஒரு தந்தையின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் மகள்: ஆஸ்கரைத் தட்டிய ’ஃபாதர் அண்ட் டாட்டர் ‘குறும்படம்!

ப்பா மகள் உறவை மிக எளிமையாக, அதே சமயம் மனது கணக்க சொல்லியிருக்கும் படம் தான் ‘ஃபாதர் அண்ட் டாட்டர்’ . 2000த்தில் மைக்கேல் டியூடோக் டி  விட் இயக்கத்தில் வெளியான டட்ச் நாட்டு குறும்படம். 8 நிமிடங்கள் 30 நொடிகள் ஓடும் இப்படம் 2000ம் ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கரைத் தட்டியது. 

இவைத் தவிர்த்து பல உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள படம். சின்னக் கதை, எளிமையான நடை, வசனங்கள், ஏன் வண்ணமயமான அனிமேஷன் வேலைகள் கூட இல்லாமல் உணர்வுகளை சற்றே அசைத்துப் பார்க்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் படமே ‘ஃபாதர் அண்ட் டாட்டர்’. 

கதை இதுதான் , ஒரு அப்பாவும் மகளும் சைக்கிளில் வருகிறார்கள். மகளிடம் விடைபெற்றுவிட்டு ஒரு சின்ன படகில் ஏறி அப்பா எங்கேயோ கிளம்புகிறார். அவருக்கு டாட்டா காட்டிவிட்டு சின்ன சைக்கிளில் சென்று விடுகிறாள் மகள். தினமும் அப்பாவுக்காக அதே இடத்திற்கு வந்து சிறிது நேரம் காத்திருந்துவிட்டு செல்கிறாள் அந்தச் சிறுமி. காலங்கள் ஓடுகின்றன. பள்ளி , கல்லூரி, என சிறுமி பெரியவளாக மாறுகிறாள். எனினும் அப்பா மட்டும் வரவே இல்லை. 

நாள் தவறாமல் அவளது அப்பாவை அதே ஏரிக்கரையில் பார்க்க வரும் அவள் , கணவன், பின் குழந்தைகள் சகிதமாகவும் வந்து நிற்கிறாள். கடைசியாக முதுமை தள்ளாத வயதிலும் வந்து நிற்க , தன் கடமைகள் யாவும் முடிந்தவிட்ட நிலையில் ஏரியில் இறங்கி அந்தக் கரைக்குச் சென்று பார்க்கும் வேளையில் தான் உண்மை புரிகிறது. அவளது அப்பா வந்த படகு அக்கரையில் பாதி மண்ணில் புதைந்த நிலையில் கிடப்பது. அந்த படகின் மீது படுத்துக் கொள்ளும் மகள் சிறிது நேரத்தில் எதையோ பார்த்துவிட்டு ஓடுகிறாள். அப்படியே சிறு வயதாக மாறி நிற்க எதிரே அவளது அப்பா. அப்படியே அப்பவைக் கட்டிக்கொள்ள படம் முடிகிறது. 

வசனங்கள் இன்றி ஏன் முகங்கள் கூட தெளிவில்லாத உருவங்கள் மட்டுமே. இதில் இயக்குநருக்குப் பிறகு மிக முக்கிய பங்கு இசையமைப்பாளர்கள் நோர்மன் ரோகர், மற்றும் டெனிஸ் எல் சாட்ரெண்ட்டுக்குத்தான். இசையில் காட்சியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர். 

 

குறும்படத்தைக் காண :  

 

- ஷாலினி நியூட்டன் - 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!